சினிமா
தொடர்கள்
Published:Updated:

வலைவிரிக்கும் யூடியூப் மீனவர்கள்

சக்திவேல்
பிரீமியம் ஸ்டோரி
News
சக்திவேல்

வேலை பாத்துக்கிட்டே போன்ல வீடியோ எடுக்க கஷ்டமா இருந்ததால, புதுசா கோப்ரோ கேமரா வாங்கி, அதுல வீடியோ எடுத்துப் போட்டுட்டு இருக்கேன்.

கடல், எத்தனையோ விந்தைகளையும் விசித்திரங்களையும், பேரழகுகளையும் பேராபத்துகளையும் உள்ளடக்கியிருக்கும் நீலப் பிரதேசம். இவை அத்தனையையும் கடந்து வாழ்க்கை நடத்தும் நீர்வெளி வீரன்தான் மீனவன். இப்பூவுலகம் முழுக்கக் கடலால் சூழப்பட்டிருந்தாலும் கடலோடிகளின் வாழ்க்கைமுறையை உலகின் பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தடைகளை உடைத்து, கடல் ஒளித்து வைத்திருக்கும் மாய உலகையும், அரிய உயிரினங்களையும், கடலோடிகளின் இன்ப துன்ப வாழ்க்கைமுறைகளையும் யூடியூப் சேனல் வழியே கொண்டுவந்து காட்டுகிறார்கள் நம்மூர் மீனவர்கள் சிலர். மீனவர் டு யூடியூபராக மாறிய அவர்களின் கதையை அவர்களே சொல்கிறார்கள், கேட்போமே!

வலைவிரிக்கும் யூடியூப் மீனவர்கள்

உங்கள் மீனவன், கிங்ஸ்டன், மூக்கையூர், ராமநாதபுரம்.

``குடும்பச் சூழ்நிலையினால பத்து வயசுலயே படிப்ப பாதியில நிறுத்திட்டு, கடல் தொழிலுக்கு வந்தேன். நான் நிலத்துல இருக்குறதைவிட கடல்ல இருக்குற நாள்கள்தான் அதிகம். புயல், மழை, சீற்றம், கொந்தளிப்புன்னு எல்லாப் பிரச்னைகளையும் சமாளிச்சு உப்புத்தண்ணியில வாழ்க்கையை ஓட்டின சூழ்நிலையிலதான், ஒரு சம்பவம் நடந்துச்சு. 2018-ம் ஆண்டுல பொழுதுபோக்குக்காக சினிமா வசனங்களுக்கு வாயசைச்சு டிக் டாக்ல வீடியோ போட்டுட்டு இருந்தேன். ஒருநாள் எதேச்சையா நாங்க பிடிச்ச சுறாமீனை என் கழுத்துல போட்டுக்கிட்டு `கொம்பன் சுறா வேட்டையாடும் கடல்ராசா நான்' பாட்டுக்கு போஸ் கொடுக்க, அந்த வீடியோவுக்கு அவ்ளோ லைக்ஸ், வியூஸ்! கமெண்ட்ஸ் செக்‌ஷன்ல `இதேமாதிரி இன்னும் நிறைய வீடியோ போடுங்க'ன்னு ஃபாலோயர்ஸ் உசுப்பேத்தி விட்டாங்க. நிறைய மீன்பிடி சம்மந்தமான வீடியோ போட ஆரம்பிச்சேன். எல்லாமே ஹிட். `அப்படியே யூடியூப்லயும் வீடியோ போடுங்க'ன்னு பலர் சொல்ல, `உங்கள் மீனவன்'னு யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன்.

`நம்ம நாட்டுக் கடல்லயுமா இந்த மீனெல்லாம் இருக்கு?'ன்னு எல்லாரும் ஆச்சரியப்படுற மாதிரி டால்பின், சுறா, திமிங்கலம், ஆக்டோபஸ், ஜெல்லி மீன்கள்னு எல்லா அரியவகை மீன்களையும் கடல்லேருந்து நேரடியா வீடியோ எடுத்துக் காட்டினேன். நடுக்கடல்ல மீன் பிடிச்சிக்கிட்டே மொபைல் போன்ல வீடியோ எடுத்துட்டு, கரைக்கு வந்ததும் துணியக்கூட மாத்தாம, வீடியோ அப்லோடு பண்றதுக்காக எங்க ஊர்லேருந்து தொலைவுல இருக்குற சாயல்குடிக்குப் போவேன். அங்கதான் நெட்வொர்க் கிடைக்கும். அங்க ஒரு டீக்கடையில 3 மணி நேரத்துக்கும்மேல உக்கார்ந்துதான் வீடியோ அப்லோடு பண்ணுவேன். கஷ்டமா இருந்தாலும் அதைப் பத்திலாம் யோசிக்காம தொடர்ந்து வீடியோ பண்ணினேன்.

கூடவே, நாங்க பிடிக்குற மீன்கள் என்ன வகை, எவ்ளோ ருசியா இருக்கும்னு அனுபவத்துல கத்துக்கிட்டதையும் சொல்ல ஆரம்பிச்சேன். படகுலயே சமைச்சும் சாப்பிட்டேன். டிஸ்கவரி சேனல்காரன் மாதிரி வியூவர்ஸ் வியந்து பார்த்தாங்க. அப்படியே ஒவ்வொரு வீடியோவும் ஹிட் அடிக்க, 1.17 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸோட, மீனவர்கள் யூடியூப் சேனல்லயே நம்பர் ஒன் இடத்துக்கு வந்தேன்.

கமெண்ட்ஸ்ல நிறைய பேர், `நீங்க மட்டுமே இவ்ளோ ஃப்ரஷ்ஷா மீன்பிடிச்சு சாப்பிடறீங்களே, அப்போ எங்களுக்கு?'ன்னு கேட்டது என்னை யோசிக்க வச்சுது! `எங்களுக்கு இந்த மீனு வேணும்'னு கேட்டு எங்க அட்ரஸுக்கே பலர் வந்துட்டாங்க. அந்தச் சமயத்துலதான் திருப்பூர்லேருந்து சேதுன்னு நம்ம சப்ஸ்கிரைபர் நண்பர் ஒருவர், `நான் முதலீடு பண்றேன், உங்க மீனைக் கொடுங்க. பார்ட்னர்ஷிப்ல கடை ஆரம்பிக்கலாம்'னு யோசனை சொன்னாரு. உங்கள் மீனவனோட முதல் கடைய திருப்பூர்ல தொடங்கினோம். எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு.அப்படியே வளர்ந்து, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, சென்னை, திருச்சின்னு தமிழ்நாடு முழுக்கக் கடைகளைத் திறந்தோம். ஊருக்குப் பக்கத்துலயே ஒரு நிலத்தை வாடகைக்கு எடுத்து, மீன்களை பேக்கிங், சப்ளை பண்ற கம்பெனி கட்டினோம். நேரடியாவும் மறைமுகமாவும் 200 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தந்திருக்கோம். இப்போ வருஷத்துக்கு 15 கோடி ரூபாய் வியாபாரம் பண்றோம்.

மீன் பிடிக்குறதுக்கு `உங்கள் மீனவன் மூக்கையூர்' சேனல், மீனை சமைச்சு சாப்பிடுறது எப்படின்னு சொல்றதுக்கு `உங்கள் மீனவன் உணவகம்'னு தனித்தனி சேனல் உருவாக்கியிருக்கோம். இப்போது மசாலா, மிக்ஸிங்லாம் நாங்களே தயாரிச்சு கடைகள்ல விற்கப்போறோம். மாலைநேர பொரிச்ச மீன் கடைகளையும் தொடங்கப் போறோம். எங்களோட அடுத்த திட்டமே, தமிழ்நாடு முழுக்க `உங்கள் மீனவன் உணவகம்’ திறக்கணும்ங்குறதுதான்.’’

சக்திவேல்
சக்திவேல்

தூத்துக்குடி மீனவன், சக்திவேல், தூத்துக்குடி.

``தூத்துக்குடித் துறைமுகம் பக்கத்துல இருக்குற மீனவர் காலனிதான் சொந்த ஊர். நான் 12-வது படிக்குற வரைக்குமே எங்க ஊர்ல கரன்ட் கிடையாது. சுனாமி வந்து எங்க வீடெல்லாம் அழிஞ்சுபோன சமயத்துலதான் கான்க்ரீட் வீடு கட்டிக்கொடுத்து கரன்ட் இணைப்பும் கொடுத்தாங்க. பி.ஏ. எக்கனாமிக்ஸ் படிச்சேன். படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கல. விவரம் தெரிஞ்ச வயசிலிருந்தே கடலுக்குப் போய்ட்டு இருக்கேன். சரி, நம்மகிட்டதான் சொந்தத் தொழில் இருக்கேன்னு, மீன்பிடி தொழில்ல முழுசா இறங்கினேன். அப்போ எங்க அப்பா, `தாத்தா காலத்துல மீன்பிடி அதிகமா இருந்துச்சு, என் காலத்துல குறைஞ்சிட்டு வருது, உன் காலத்துல எவ்ளோ மீன்பிடி இருக்கும்னே தெரியலடா'ன்னு சொல்லி வருத்தப்பட்டாரு. `நான் இன்னைக்கு பிடிக்குற மீன்களெல்லாம் அழியுறதுக்குள்ள, அடுத்த தலைமுறை குறைந்தபட்சம் பார்க்கட்டுமே'ன்னு நினைச்சு, அதை ஆவணப்படுத்தி வைக்குறதுக்காக யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன். திடீர்னு ஒருநாள், நான் எடுத்திருந்த விலாங்கு மீன் வீடியோ 1.5 மில்லியன் வியூஸ் தாண்டி வைரலாச்சு. வருமானமும் கிடைச்சது. என் நண்பனோட கோப்ரோ கேமிரா மூலம் எடுத்த, `சங்கு குளித்தல்' வீடியோ வைரலாகி என் சேனலுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்துச்சு. எம்.பி. கனிமொழி அக்கா என்னைத் தேடி எங்க ஊருக்கே வந்துட்டாங்க. எங்களுக்கு என்ன பண்றதுனே தெரியல. அவங்களுக்குப் பிடிச்ச மீன், இறால், நண்டுன்னு சமைச்சு எடுத்துக்கிட்டு, எங்க போட்லயே அவங்கள கூட்டிட்டுப் போனோம். ஊர் மக்களுக்கெல்லாம் `கலைஞர் மகளையே நம்ம ஊருக்கு வரவச்சி, நம்ம சாப்பாட சாப்பிட வச்சிட்டானே'ன்னு ஒரே சந்தோஷம்.

ஆரம்பத்துல நான் வீடியோ எடுக்கும்போது, சொந்தக்காரங்கெல்லாம் நிறைய அவமானப்படுத்தி யிருக்காங்க. இப்போ அவங்க வலையில புதுசா மீன் சிக்குனா, ‘இன்னைக்கு சக்திவேல் வராம போய்ட்டானே, இருந்திருந்தா நல்லாருக்கும்'னு சொல்ற அளவுக்கு மாறியிருக்கு. சேனல்ல 1.4 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் வச்சிருக்கேன். என் சேனல் சப்ஸ்கிரைபர்ஸும் நானும் சேர்ந்து, கரன்ட் இல்லாத எங்க பக்கத்து கிராமத்தோட 15 வீடுகளுக்கு சோலார் மின்வசதி செஞ்சி கொடுத்திருக்கோம். என் வருமானத்துல கொஞ்சம் பணத்தை சம்பளமா கொடுத்து, 50 குழந்தைகளுக்கு இலவச டியூஷன் படிக்க ஏற்பாடு பண்ணிருக்கேன். `நாம கஷ்டப்பட்ட மாதிரி யாரும் கஷ்டப்படக் கூடாது'ங்குறது தான் எண்ணம். ஊர்ல நல்ல பெயரோட, கடனே இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கேன்.’’

வலைவிரிக்கும் யூடியூப் மீனவர்கள்

இந்தியப்பெருங்கடல் மீனவன், ராபர்ட், தூத்துக்குடி.

``கொஞ்சம் கஷ்டப்படுற குடும்பம்தான். ஒரு தம்பி, ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. வீட்ல நான்தான் மூத்த பையன். பி.எஸ்ஸி. படிச்சிட்டு வேலை தேடினேன். படிச்ச படிப்புக்கு வேலை கெடைக்காம, மாசம் ரூ. 8,000 சம்பளத்துக்கு ஒரு பிஸ்கட் கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். வாங்குற சம்பளத்துல டீ, பெட்ரோல், வீட்டுச் செலவுன்னு போக கையில ஒத்த ரூபாய் மிஞ்சாது. அதேநேரத்துல, என்னோடு ஸ்கூல் படிச்சிட்டுப் பாதியிலயே படிப்பை விட்ட பிரண்ட்ஸ்லாம், கடலுக்குப் போய் மீன்பிடிச்சி ஒரு நாளைக்கே ரெண்டாயிரம், மூவாயிரம் சம்பாதிச்சிட்டு இருந்தாங்க. `படிச்சிருக்கோம், கடல் வேலைக்குப் போகக்கூடாது'ன்னு விடாப்பிடியா இருந்த நான், வேற வழியில்லாம கடல்தொழிலுக்குப் போனேன்.

ஒருநாள் யூடியூப்ல குக்கிங் சேனல் பாத்துட்டிருக்கும்போது, ஒரு ஃபுட் ரிவியூ சேனல் ஆரம்பிக்கற ஐடியா வந்துச்சு. எதிர்பார்த்த மாதிரி அதுல வியூஸ் வரல. ‘கடல் தொழிலுக்குப் போறோம், அதையே வீடியோ எடுத்துப் போடலாம்'னு நினைச்சு, கடலுக்கடியில `சங்கு குளித்தல்' பத்தி ஒரு வீடியோ போட்டேன். அது வைரல் ஆகி ரெண்டு லட்சம் வியூஸ் போச்சு. சப்ஸ்கிரைபர்ஸ் அதிகரிச்சாங்க. வருமானமும் வந்தது.

வேலை பாத்துக்கிட்டே போன்ல வீடியோ எடுக்க கஷ்டமா இருந்ததால, புதுசா கோப்ரோ கேமரா வாங்கி, அதுல வீடியோ எடுத்துப் போட்டுட்டு இருக்கேன். விசைப்படகுல போய் ஆழ்கடல்ல தங்கி மீன்பிடிக்குற விதத்தை வீடியோவா நான் எடுத்துப் போடுறது மக்கள்கிட்ட நல்ல வரவேற்பை ஏற்படுத்தியிருக்கு. இன்னும் நிறைய இடங்களுக்குப் பயணிக்கணும், மக்கள் பாக்கமுடியாத விஷயங்களை அவங்க கண்ணு முன்னால கொண்டுவந்து காட்டணும்! அவ்ளோதான் என் ஆசை.’’

வலைவிரிக்கும் யூடியூப் மீனவர்கள்

தமிழ் மீனவன், அருள், சோலைநகர், பாண்டிச்சேரி.

``சின்ன வயசிலிருந்தே கடலுக்குப் போய்ட்டு இருக்குறதால கடலைப் பாத்து எப்போதுமே பயந்தது இல்ல. வெளிநாட்டு வேலைக்குப் போகலாம்னு ஐ.டி.ஐ. படிச்சேன். ஆனால், அது சரிப்பட்டு வரல. அப்புறம் கடல்தொழிலயே முழுசா பாக்க ஆரம்பிச்சேன். ஒருநாள் என் பிரெண்டு யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம்னு ஐடியா கொடுத்தான். யூடியூப் பத்தி எதுவுமே தெரியாம 2019-ல `தமிழ் மீனவன்'னு சேனல் ஆரம்பிச்சேன். தமிழ்ல பேசி வீடியோ போட்டா இங்க உள்ளவங்களுக்கு மட்டும்தான் ரீச் ஆகும். எல்லா வெளிநாட்டுக்காரங்களையும் டார்கெட் பண்ணி வாய்ஸ் ஓவர் இல்லாம வீடியோ போட ஆரம்பிச்சேன். தூண்டில்ல மீன் பிடிக்குறதுதான் என்னோட ஸ்டைல் வீடியோ. ஒருதடவை தூண்டில்ல விலாங்கு மீன் பிடிச்ச வீடியோ செம வைரல் ஆகவும், சேனலுக்கு ரீச் கிடைச்சது. பணம் சேமிக்க முடியலன்னாலும், கடன் வாங்காம நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கேன். கடல் பயணம் பிடிக்கும். பழவேற்காட்டிலிருந்து தூத்துக்குடி வரைக்கும் டிராவல் பண்ணுவேன்.

என் லட்சியம், கடலைக் காப்பாத்தணும். கோழிக்குக்கூட தீனிபோடணும், ஆனால் கடல் மட்டும்தான் நாம எதுவுமே கொடுக்காம நமக்கு எல்லாமே கொடுக்குது. அது எப்படி நமக்கு ஃபிரஷ்ஷான மீன் கொடுக்குதோ, அதேமாதிரி நாமளும் கழிவுநீர், சாக்கடை எல்லாம் கலக்கவிட்டு மாசுபடுத்தாம, கடலை சுத்தமா வச்சிக்கணும்.’’

வலைவிரிக்கும் யூடியூப் மீனவர்கள்

ஷார்க் பாய்ஸ் ஃபிஷ்ஷிங், தீபக், சின்னக்குப்பம், செங்கல்பட்டு.

``குடிப்பழக்கத்துக்கு அடிமையான அப்பா, அவரால தினமும் கஷ்டப்பட்ட அம்மா, குடும்பச் சூழ்நிலையால படிப்பைப் பாதியில நிறுத்துன ரெண்டு அண்ணன்ங்கனு துயரமான வாழ்க்கை என்னோடது. குடி அதிகமாகி அப்பாவும் இறந்துபோக, கடன் வாங்கியும், கூடையில மீன்சுமந்து வீதிவீதியா வித்தும்தான் அம்மா எங்கள ஆளாக்கினாங்க. அண்ணனுங்க வளர்ந்த பின்னாடி, கடல் தொழிலுக்குப் போய் என்னைப் படிக்க வச்சாங்க. இன்ஜினீயரிங் முடிச்சிட்டு, வேலைக்குப் போனாலும் மீன்பிடிக்குற மாதிரி ஒரு திருப்தி எங்கயும் கிடைக்கல. முழுசா கடல் தொழில்லயே இறங்கிட்டேன். ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து அதையே வீடியோ எடுத்துப் போட்டேன். 100 கிலோவுல ஒரு பெரிய திருக்கை மீன் பிடிச்ச வீடியோ 2.5 மில்லியன் வியூஸ் தாண்டி வைரலாச்சு. அப்படியே நல்ல வளர்ச்சி. அக்கறையா ஒருத்தர், `இவ்ளோ படிச்சிட்டு திரும்பவும் எதுக்குடா மீன்பிடி தொழிலுக்கு வந்த? நாளைக்கு உன்னைப் பார்த்து உன் பிள்ளைங்களும் இப்படி ஆகிடு வாங்களே'ன்னு கேட்டாரு. அது என்னை ரொம்பவே பாதிச்சுது. பசங்களுக்கு முன்னுதாரணமா இருக்கணும்ங்கிற முடிவுக்கு வந்தேன். இப்போ கல்பாக்கம் பவர் ஸ்டேஷன் கம்பெனியில வேலைக்குச் சேர்ந்திருக்கேன். ஆனாலும், லீவு நாள்ல கடலுக்குப் போய் வீடியோ எடுக்கறேன். படிச்சது, பிடிச்சது ரெண்டையும் பார்த்துக்கிறதால இப்போ ரொம்பவே திருப்தியா இருக்கேன்.’’