Published:Updated:

மதுரைத் தெருக்களின் வழியே 18: வட்டாரப் பெருமை, சாதியப் பெருமைகளைக் கேள்வி கேட்கும் கலைஞன் வடிவேலு!

வடிவேலு

நகைச்சுவையில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள வடிவேலு, நகைச்சுவையில் தனக்கெனத் தனி முறைமையை ஏற்படுத்திக்கொண்டு பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கிறார். ஆனால், வெறுமனே சிரிக்க வைப்பது மட்டும் அவருடைய நோக்கமல்ல.

மதுரைத் தெருக்களின் வழியே 18: வட்டாரப் பெருமை, சாதியப் பெருமைகளைக் கேள்வி கேட்கும் கலைஞன் வடிவேலு!

நகைச்சுவையில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள வடிவேலு, நகைச்சுவையில் தனக்கெனத் தனி முறைமையை ஏற்படுத்திக்கொண்டு பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கிறார். ஆனால், வெறுமனே சிரிக்க வைப்பது மட்டும் அவருடைய நோக்கமல்ல.

Published:Updated:
வடிவேலு

'மதுரைத் தெருக்களின் வழியே' தொடரில் வடிவேலு குறித்த முந்தைய கட்டுரையைப் படிக்க...

பொதுவாகத் திரைக்கதையின் விவரிப்புமூலம் தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனின் இடம் வலுவானதாகப் புனையப்படும். திரைப்பட உருவாக்கத்தில் கறிவேப்பிலை போலப் பயன்படுத்தப்படுகிற நகைச்சுவை நடிகர், தன்னுடைய இருப்பை வெளிப்படுத்திடக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். பெரும்பாலான திரைப்படங்கள் கதாநாயகனை முன்வைத்தே காட்சிப்படுத்தியபோது, தொடக்கக்காலத்தில் வடிவேலு தன்னை நிலைநிறுத்திடக் கடுமையாக உழைத்திருப்பார். தமிழர்களின் நகைச்சுவை மனோபாவத்தை நன்கு அறிந்திருந்த காரணத்தினால் உடல், மொழி, பாவம், தோற்றம் மூலம் நகைச்சுவையை இயல்பாக வெளிப்படுத்தி ரசிகர்களை எப்பொழுதும் சிரிக்க வைத்தார்.

நகைச்சுவை நடிகருக்குச் சரியான நேரத்தில் பேசுகிற வசனமும் முகபாவனையும், உடல் மொழியும் மிக முக்கியமானவை என்பது வடிவேலுக்கு நன்கு தெரியும்.
வடிவேலு
வடிவேலு

நகைச்சுவை என்பது ஒருவரின் இயல்பிலே இருக்க வேண்டியது அவசியம். இருவருக்கு இடையில் நிகழ்கிற உரையாடலின்போது, எதிராளியைச் சிரிக்க வைப்பது ஒருவகையில் சவால்தான். வடிவேலு திரைப்படத்தில் பேசிய வசனங்கள் பல்லாண்டுகள் கழிந்த பின்னரும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிலைத்திருக்கின்றன. 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று திருவள்ளுவர் சொல்லியதைப் பின்பற்றுவதுபோலப் பெரும்பான்மைத் தமிழர்கள் அன்றாட வாழ்வில் வடிவேலுவின் திரைப்பட வசனங்களைச் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். துயரமான நேரத்தில்கூட நகைச்சுவை உணர்வை ஏற்படுத்திடும் வல்லமையுடையன வடிவேலுவின் நகைச்சுவை மொழிகள். வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளில் பேசிய சொற்கள், கதாநாயகர்களின் பன்ச் டயலாக்கைப் புறந்தள்ளிவிட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குழந்தைகளுக்கும் வடிவேலு பேசிய நகைச்சுவை வசனங்கள் உற்சாகம் அளிக்கின்றன. காமெடியனாக நடிக்கிற வடிவேலு ஒட்டுமொத்தத் தமிழர்களின் அபிமானத்திற்குரியவர் என்ற பெருமை, அவர் பெற்ற விருதுகளைவிட உன்னதமானது.

மதுரை நகரவாசிகள் தங்களுக்குள் இயல்பாகவே கேலியும் கிண்டலும் பகடியும் கலந்து பேசுகின்றனர். மதுரையில் பேருந்து நடத்துநர், சுமை தூக்குகிறவர், கல்லூரி மாணவர், தெருவோர வியாபாரி எனப் பேதம் இல்லாமல் பலரும் பகடியாகப் பேசுவது இன்றைக்கும் வழக்கமாக உள்ளது. இரண்டாயிரமாண்டுகளாக நிலைத்திருக்கிற நகரத்தில் வாழ்கிற பெருமிதம் மதுரைக்காரர்களின் குருதியில் கலந்திருக்கிறது. எந்தவொரு சூழலிலும் முன்பின் அறிமுகவில்லாதவரைக்கூட கேலி செய்தாலும் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
வடிவேலு , கோவை சரளா, விந்தியா
வடிவேலு , கோவை சரளா, விந்தியா

ஒரு சம்பவத்தைச் சொன்னால், மதுரைக்காரர்களின் மனநிலை புரியும் என நினைக்கிறேன். நகரப் பேருந்தில் ஏறுவதற்காகப் படிக்கட்டின் கம்பியைப் பிடித்துக்கொண்டு ஒரு நடுத்தர வயதுப் பெண் ஏதோ ஒரு ஊரின் பெயரைச் சொல்லி, அங்கே போகுமா என்று நடத்துநரிடம் கேட்டார். நடத்துநர், அந்த ஊருக்கு பஸ் போகாது, விலகி நில்லுங்க என்று பதில் அளித்தார். அந்தப் பெண் மிண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டவுடன் நடத்துநர், “பஸ் கம்பியை விடும்மா, பஸ் கிளம்பணும், ரொம்ப நேரமா பஸ் வெயிலில் நிற்குது” என்று சொன்னவுடன் பேருந்தில் இருந்த எல்லோரும் சிரித்தனர். அந்தப் பெண்னும் சிரித்தவாறு கையைக் கம்பியில் இருந்து எடுத்தார். இதுபோன்ற பகடிகள் மதுரை வாழ்க்கையில் சகஜம். இந்தச் சம்பவத்துக்கும் வடிவேலு சித்திரிக்கிற நகைச்சுவைக்கும் தொடர்புள்ளது. வடிவேலுவின் பெரும்பாலான நகைச்சுவைகள் மக்களின் வாழ்க்கையில் இருந்து தேர்ந்தெடுத்துப் புனையப்பட்டவை.

எண்பதுகளில்கூட மதுரையில் ஒருவிதமாக உதார் காட்டுகிறவர்கள் சிலர் இருந்தனர். அந்த அனுபவத்தில்தான் வடிவேலு ஒரு படத்தில், “நாங்கள் எல்லாம் அரிவாளை எடுத்தால் கீழே வைக்க மாட்டோம்” என்று ஜூ காட்டுவார். ’டர்ராயிட்டான்’ என்று யாரையாவது மட்டப்படுத்திச் சிரிப்பது, நண்பர்கள் கூடியிருக்கிற ’தாப்பில்’ இயல்பாக நடைபெறும். 'கருப்பசாமி குத்தகைதாரர்' படத்தில் மதுரையில் படித்துறைப் பாண்டி என்று வடிவேலு சித்திரித்துள்ள கதாபாத்திரம் அட்டகாசமானது. ஏமாற்றுவதைக் கலையாகச் செய்கிற படித்துறைப் பாண்டியின் முகமும் தலைமுடியும் ஒருவகையில் ரசனைக்குரியவை. பிறரை ஏமாற்றி ஆட்டையப் போட்டுப் பணத்தையும் பொருளையும் அபேஸ் பண்ணுகிற வடிவேலுவின் செயல்களில் பொதிந்துள்ள மெல்லிய நகைச்சுவை எழுபதுகள் காலகட்டத்திய மதுரையின் இன்னொரு பக்கம்தான்.

வடிவேலு
வடிவேலு

இன்னொரு படத்தில் சண்டை போடுகிற இருவரை விலக்கப் போகிற வடிவேலுவை ஓரத்தில் ஒதுங்கியிருக்கிறவர், போக வேண்டாம் எனத் தடுப்பார். அதை மீறிச் சென்று, சண்டையிடுகிறவர்களிடம் அடி வாங்கி, ரத்தக் காயத்துடன் திரும்புகிற வடிவேலுவைப் பார்த்து, ஒதுக்கியிருந்தவர், "நம்ம மதுரைக்காரனுக சொல்ற பேச்சை என்னைக்குக் கேட்டிருக்கானுக” என்பார். அந்தக் காட்சிக்கு மதுரை தியேட்டரில் ஒரே சிரிப்பு. ஒரு வட்டாரத்தில் பல்லாண்டுகளாக வாழ்கிறவர்கள் தங்களைச் சுய விமர்சனம் செய்துகொள்ள பகடியும் கிண்டலும் அவசியம். வடிவேலுவின் மதுரை பற்றிய பகடிகள் ஒருவகையில் சமூக விமர்சனமாகத் தமிழ்நாடு முழுக்கப் பொருந்தும். அற்பத்தனமும் கசடுகளும் வீண்பெருமையும் வறட்டுக் கௌரவமும் மேலோங்கிடும் காலகட்டத்தில் அவை குறித்த விமர்சனத்தை நேரடியாகச் சொல்வதுடன், இன்னொருபுறம் எள்ளல்மூலம் சுயவிமர்சனம் செய்வது அவசியம். அந்தப் பணியை வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் நுட்பமாகச் செய்கின்றன.

வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள வடிவேலு, நகைச்சுவையில் தனக்கெனத் தனி முறைமையை ஏற்படுத்திக்கொண்டு பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கிறார். ஆனால், வெறுமனே சிரிக்க வைப்பது மட்டும் அவருடைய நோக்கமல்ல. இப்படியெல்லாம் ஏன் மனிதர்கள் இருக்கின்றனர் என்ற கேள்வியை வடிவேலுவின் நகைச்சுவைகள் பார்வையாளர்களிடம் எழுப்புகின்றன. வடிவேலு பதின்பருவத்தில் மதுரைத் தெருக்களில் திரிந்தபோது சந்தித்த அல்லது மோதிய மனிதர்களை முன்வைத்துச் சித்திரித்த நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கும்போது, அவர்கள் ரசிகர்களின் நினைவுகளில் இருந்து வெளியேறித் தெருக்களில் உயிரோட்டத்துடன் திரிகின்றனர்.

வடிவேலு நடித்த வண்டு முருகன், சுனாபானா, பிச்சுமணி, கைப்புள்ள, நாய் சேகர், படித்துறைப் பாண்டி, என்கவுன்டர் ஏகாம்பரம், கீரிப்புள்ளே, சுண்டி மோதிரம், கந்து வட்டி கருப்பு, அலார்ட் ஆறுமுகம், புல்லட் பாண்டி போன்ற கதைமாந்தர்கள் திரையிலிருந்து வெளியேறி யதார்த்த உலகில் உலாவுவதை அறிய முடிகிறது. வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியில் எல்லாம் தெரிந்த நினைப்பில் எல்லோரையும் எடுத்தெறிந்து சவடாலுடன் பேசுகிற ஆள் முக்கியமானவர். அந்தக் கதாபாத்திரங்கள் எல்லாம் வடிவேலு மதுரைத் தெருக்களில் எதிர்கொண்டவை. ஒவ்வொரு வட்டாரத்திலும் ஏதோவொரு தேநீர்க் கடை வாசலில் கூடிநிற்கின்ற கும்பல் எல்லோரையும் கேலி செய்யும்; லந்தைக் கொடுக்கும்.

சுந்தர்.சி & வடிவேலு
சுந்தர்.சி & வடிவேலு
எல்லாம் தெரிந்தவர், வெட்டிக் கும்பலுடன் திரிகிறவர், வீண்வம்பு இழுத்து அடிவாங்குகிறவர், தவறு செய்பவர்களைத் தட்டிக்கேட்கிறவர், அசட்டுத் திருடன், ஏமாற்றுக்காரர், உதார்ப் பேர்வழி, வெளியே வீராப்புடன் பேசுகிறவர், மனைவியிடம் அடி வாங்குகிறவர், மூடர்களை நண்பர்களாகக் கொண்டிருப்பவர், டுபாக்கூர் அரசியல்வாதி போன்ற கதைமாந்தர்களில் வெளிப்படும் வடிவேலுவின் பல்வேறுபட்ட தோற்றங்கள் கவனத்திற்குரியன. 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' திரைப்படத்தில் புலிகேசி, உக்கிரபுத்திரன் ஆகிய இரு கதாபாத்திரங்களும் எதிரிணையாக வடிவேலுவின் நடிப்புத்திறனை வெளிப்படுத்தின.

தியேட்டரிலிருந்து வெளியே வந்தவுடன் திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் மறந்துபோவது இயல்பு. ஆனால், வடிவேலுவின் பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகளும் வசனங்களும் காலங்கடந்து நிலைத்திருக்கின்றன. குறிப்பாகச் சமூக வலைதளங்களில் நடப்புச் சமூக, அரசியலை விமர்சிக்கும்வகையில் வெளியாகிற மீம்களில் பெரிய எண்ணிக்கையில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இடம் பெறுகின்றன. ஏதோவொரு திரைப்படத்தில் காட்சியளித்த வடிவேலுவின் முகத் தோற்றம்கூட ஃபேஸ்புக்கில் யாரோ ஒருவரைப் பகடி செய்யவும் விமர்சிப்பதற்கும் பயன்படுகிறது.

கடந்த பத்தாண்டுகளில் வடிவேலு நடித்த திரைப்படங்கள் குறைந்த எண்ணிக்கையில் வெளியானாலும், சமூக வலைதளங்களில் வடிவேலுவின் திரைப்படத் தோற்றங்களும் வசனங்களும் அதிக எண்ணிக்கையில் வெளியாகின்றன. அவை, சமகால அரசியலையும் அரசியல்வாதிகளையும் கேலியும் கண்டனமும் செய்கின்றன. இன்னும் பத்தாண்டுகள் கடந்தாலும் சமூக வலைதளத்தில் வடிவேலுவின் நகைச்சுவைகள் செல்வாக்குச் செலுத்தும் வல்லமையுடையன.
வடிவேலு - அர்ஜுன்
வடிவேலு - அர்ஜுன்

வடிவேலுவின் நகைச்சுவை வசனங்கள் சினிமா ரசிகர்களிடம் மட்டுமன்றி பெரும்பான்மைத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. என்னுடைய இலக்கிய நண்பர்களில் தீவிரமாக எழுதுகிற படைப்பாளர்கள்கூட அவ்வப்போது வடிவேலுவின் பிரபலமான காமெடி வசனங்களைப் பொருத்தமான நேரங்களில் ஆர்வமுடன் சொல்கின்றனர். இளைய தலைமுறையினர் வடிவேலுவின் காமெடி வசனங்களைச் சொல்லி மகிழ்ச்சி அடைகின்றனர். வடிவேலு திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் பேசிய வசனங்களில் சில:

‘நாங்கெல்லாம் ரொம்பப் பேருக்கு யோசனை சொல்றவங்க, எங்க கிட்டேயேவா?’

‘பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்டு வீக்கு’

‘ஓப்பனிங் நல்லாதான் இருக்கு, ஆனா பினிஷிங் சரியில்லயேப்பா’

‘ரிஸ்க் எடுக்கிறதெல்லாம்தான் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி'

'ஏன்! நல்லாத்தானே போயிட்டிருக்கு’

‘நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்’

‘பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு’

‘ரைட்டு, விடு'

‘இந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்'

‘எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா, ரொம்ப நல்லவன்டா’

‘சண்டையில கிழியாத சட்ட எங்க இருக்கு’

‘எதையுமே பிளான் பண்ணிப் பண்ணணும்’

'ஏன்டா, இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’

‘என்ன, சின்னப் புள்ளத்தனமா இருக்கு’

'போங்க தம்பி, நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது'

‘நானும் ரௌடி நானும் ரௌடி, நா ஜெயிலுக்குப் போறேன் நா ஜெயிலுக்குப் போறேன்’

'பேச்சு பேச்சாதான் இருக்கணும்'

'ஆகா, ஒரு குரூப்பாத்தான் அலையிராங்கய்யா’

'வந்துட்டான்யா வந்துட்டான்யா'

‘இப்பவே கண்ணக் கட்டுதே'

‘மாப்பு, வெச்சிட்டாங்கையா ஆப்பு'

‘ஆணியே புடுங்க வேண்டாம்’

நெல்லை மாநகரக் காவல்துறையினர் சமூக வலைதளங்களில் வடிவேலுவின் காமெடி மீம்ஸ்களைக்கொண்டு மக்களிடையே ஹெல்மெட், ஏ.டி.எம் பாஸ்வேர்டு திருட்டு போன்றவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட முயலுகின்றனர். ஒரு திரைப்படத்தில் வடிவேலுவிடம் நடிகர் போண்டா மணி, “போலீஸ் என்ன தொரத்திட்டு வருது, நா என்ன சொன்னேன்னு கேட்பாங்க, எதையுமே சொல்லிடாதீங்க, அடிச்சுக் கேட்டாலும் சொல்லிடாதீங்க” என்று சொல்கிற பிரபலமான நகைச்சுவைக் காட்சி உண்டு. அந்தக் காட்சியைப் பயன்படுத்தி, ஏ.டி.எம் பாஸ்வேர்டு பற்றி அடிச்சுக் கேட்டாலும் சொல்லாதீங்க என்று காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியுள்ளது.

வடிவேலு
வடிவேலு

நகைச்சுவை வசனங்கள், வசன உச்சரிப்பு, உடல் மொழி போன்றவை வடிவேலுவின் ஒவ்வொரு படத்திலும் தனித்து வெளிப்படுகின்றன. இதுதான் வடிவேலுவைப் பிற நகைச்சுவை நடிகர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. இதுவரை 250-க்கும் கூடுதலான திரைப்படங்களில் நடித்துள்ள வடிவேலுக்கு 'வைகைப் புயல்' என்ற பட்டம் பொருத்தமானது. வடிவேலு நகைச்சுவை நடிப்பிற்காகச் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதினை ஐந்து தடவை பெற்றுள்ளார். அவை, காலம் மாறிப் போச்சு (1996), வெற்றிக் கொடி கட்டு (2000), தவசி (2001), இம்சை அரசன் 23ம் புலிகேசி (2006), காத்தவராயன் (2008). சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதைச் சந்திரமுகி திரைப்படத்திற்காகவும் விஜய் தொலைக்காட்சி விருதை ‘மருதமலை', 'ஆதவன்’ போன்ற திரைப்படங்களுக்காகவும் பெற்றுள்ளார்.

தமிழர் வாழ்க்கை, தமிழ்ப் பண்பாடு குறித்து ஆழமான கேள்விகளை எழுப்புகிற வடிவேலு என்ற காமெடி நடிகரின் ஆளுமை தனித்துவமானது. கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பாக விரிந்திடும் வரலாறு என்பது, நுண்ணரசியல் பின்புலமுடையது. ஒரு குறிப்பிட்ட காலவெளியில் மனிதர்கள் இப்படியெல்லாம் இருந்தனர் எனச் சித்திரிக்கப்படுகிற விவரணையில், தனிமனிதர்களின் செயல்பாடுகள், பல்வேறு நிலைகளில் இயங்குகின்றன. சமூகத் தேவையின்பொருட்டு வரலாறு தேர்ந்தெடுத்து உருவாக்குகிற மாபெரும் ஆளுமைகள், எப்பொழுதும் தனிச்சிறப்புடையவர்கள். இன்னொரு நிலையில் சமூக வரலாற்றில் பாத்திரமாக உருவாகி, ஒரு காலகட்டத்தின் சமூகச் செயல்பாடுகள்மீது ஆதிக்கம் செலுத்துகிற ஆளுமைகள், ஒரு கட்டத்தில் வரலாற்றை உருவாக்குகிறவர்களாக மாறுகின்றனர். வரலாற்றுத் தேவையினால் கட்டமைக்கப்படும் நாயகர்கள், வேறுபட்ட தளங்களில் சமூகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் சூழலில், தனிமனிதனாகச் செய்கிற சாதனைகள், காலங்கடந்த சிறப்பினை முன்னிறுத்துகின்றன. தமிழை முன்னிறுத்தித் தமிழ்த் திரைப்படத் துறையில் காத்திரமாகச் செயல்பட்ட வடிவேலுவின் நகைச்சுவைச் செயல்பாடுகள் ஒப்பீடு அற்றவை.

வடிவேலு - விஜயகாந்த்
வடிவேலு - விஜயகாந்த்

ஒருவிதமான வட்டாரப் பெருமை, சாதியப் பெருமை, சாதிய மேலாதிக்கம், பெண்ணடிமைத்தனம், அற்பத்தனம், மேனாமினுகித்தனம், அதிகாரத்தின் குரல் நிலவுகிற நடப்புத் தமிழர் வாழ்க்கையை வடிவேலுவின் திரைப்பட நகைச்சுவைக் காட்சிகள் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. அவை, ஒருவகையில் தமிழ்ச் சமூகம் தன்னுடைய இருப்பைச் சுயவிமர்சனம் செய்துகொள்ளத் தூண்டுகின்றன. இரண்டாயிரமாண்டுப் பாரம்பாரியமும் பண்பாடும் தொடர்கின்ற தமிழ்ச் சமூகத்தில் இதுவரை கெட்டிதட்டிப் போயிருக்கிற சமூக மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்கியுள்ள வடிவேலு ஒருவகையில் கலகக்காரர்.

தமிழக வரலாற்றுப் போக்குகளைக் கேலிக்குள்ளாக்குகிற வடிவேலுவின் நகைச்சுவைகள், அவரை வரலாற்றை உருவாக்குகிறவராக மாற்றியமைத்துள்ளன. தமிழக வரலாற்றில் தனிநபரின் பாத்திரம் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு அடையாளமாக விளங்குகிற நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை தோய்ந்த ஆளுமை உருவாக்கத்தில் மதுரை நகர் பின்புலமாக இருக்கிறது. அதுவே அவருடைய பலம்.

- வலம் வருவோம்