Published:Updated:

மதுரைத் தெருக்களின் வழியே 17: வடிவேலு - போட்டோ கடையில் பிரேம் போட்டவர் நம்பர் ஒன் காமெடியனான கதை!

வடிவேலு

ஒரு திரைப்படத்தில் இரு வேறு காட்சிகளில் நடிக்கும்போது வடிவேலுடைய உடல் மொழியும் உச்சரிப்பும் அலட்டலும் தனித்து விளங்கின. ’அரசு’ திரைப்படத்தில் கோவிலில் மணியடிக்கிற பிச்சுமணியும் பின்னர் அரசாங்க வேலை கிடைத்தவுடன் கோட்டு, சூட் அணிந்த பிச்சுமணியும் வெவ்வேறு அல்லவா?

மதுரைத் தெருக்களின் வழியே 17: வடிவேலு - போட்டோ கடையில் பிரேம் போட்டவர் நம்பர் ஒன் காமெடியனான கதை!

ஒரு திரைப்படத்தில் இரு வேறு காட்சிகளில் நடிக்கும்போது வடிவேலுடைய உடல் மொழியும் உச்சரிப்பும் அலட்டலும் தனித்து விளங்கின. ’அரசு’ திரைப்படத்தில் கோவிலில் மணியடிக்கிற பிச்சுமணியும் பின்னர் அரசாங்க வேலை கிடைத்தவுடன் கோட்டு, சூட் அணிந்த பிச்சுமணியும் வெவ்வேறு அல்லவா?

Published:Updated:
வடிவேலு

வரலாற்றின் தடங்கள் காலந்தோறும் பதிவாகித் தொடர்கின்ற இன்றைய மதுரை நகரில் வாழ்கிற மனிதர்களின் நடப்பு வாழ்க்கை முக்கியமானது. லட்சக்கணக்கான மக்கள் வசிக்கிற மதுரை நகரின் புறநகர்ப் பகுதிகள் நாளும் விரிவடைந்தாலும் நகரவாசிகள் பெரிய கிராமத்தில் வாழ்கிற உணர்வுடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். பொதுவாக வளமான நிலமும் நீரும் நிரம்பிய வட்டாரத்தில் கலைகள் செழித்தோங்கிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

மதுரை நகரைத் தலைநகராகக்கொண்டு ஆண்ட மன்னர்களின் ஆதரவு, மீனாட்சி அம்மன் கோவில் விழாக்கள் காரணமாக நிகழ்த்துகலைகளும் இசைக் கச்சேரிகளும் நகரமெங்கும் பரவலாக நடைபெற்றன. எம்.எஸ். சச்சிதானந்தன் பிள்ளையால் தொடங்கப்பட்ட மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனி (1910) தமிழ் நாடக மேடையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது.

வடிவேலு
வடிவேலு

மதுரை நகருக்குப் பெருமை சேர்க்கின்ற மதுரை மணி ஐயர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதுரை சோமு, டி.எம்.சௌந்திரராஜன், சேஷகோபாலன், ஜி.எஸ். மணி போன்ற இசைக் கலைஞர்களின் பட்டியல் இன்றும் தொடர்கிறது. சேதுராமன் பொன்னுச்சாமி போன்ற நாகஸ்வர வித்துவான்கள் புகழ் எங்கும் பரவியிருந்தது. சங்கரதாஸ் நாடகங்களை நடிக்கிற பிரபலமான நடிகர்கள், புகழ் பெற்ற கரகாட்டக் கலைஞர்கள், தேவாரட்டம், ஒயிலாட்டம் போன்ற நாட்டார் நிகழ்த்துகலை ஆட்டக்காரர்கள் எனக் கலையின் பிடிக்குள் சிக்கியிருந்த மதுரை நகரின் முகம் 90களில் பெரிதும் மாறிவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திரைப்படம் என்ற ஒளியில் ஒளிர்ந்திடும் கலையின் பிடிக்குள் சிக்கிய மதுரை நகரத் தெருக்களின் வழியே திரையிசை எங்கும் ஒலிக்கிறது. தமிழ்த் திரைப்படங்களில் நடிகர்களாக மதுரைக்காரர்கள் பலர் நடித்திருந்தாலும் நடிகர் வடிவேலு என்ற பெயருக்கு இணையாகச் சொல்லிட யாருமில்லை. மதுரை நகரம் தமிழ்த் திரையுலகிற்கு வழங்கிய மகத்தான கலைஞன் வடிவேலு என்று சொன்னால் அப்படி என்ன பெரிய கலைஞன் என்ற கேள்வி சிலருக்குத் தோன்றிட வாய்ப்புண்டு. சரி, பேசுவோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எண்பதுகளில் சார்லி சாப்ளின் நடித்த கோல்டு ரஷ், தி கிரேட் டிக்டேட்டர், மாடர்ன் டைம்ஸ், தி கிட், சிட்டி லைட்ஸ் போன்ற திரைப்படங்களைப் பார்த்தபோது, திரைப்படம் என்ற கலை உலகுக்கு அளித்த மாபெரும் மேதை சாப்ளின்தான் என்று எனக்குத் தோன்றியது. சமூகத்துடன் ஊடாடிடும் கலைஞன் காலத்தை மீறிய படைப்புக்களினால் என்றும் நிலைத்திருப்பான்.

என்னைப் பொறுத்தவரையில் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கிற நடிகர் வடிவேலு, தமிழ்ச் சமூகத்துடன் முடிவற்ற விசாரணையைக் கருத்தியலாக நகைச்சுவையின்மூலம் முன்வைத்துள்ளார். அந்த வகையில் திரைப்படத்தில் நகைச்சுவையினால் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கிற வெறுமனே காமெடியன் என்று எளிதில் நடிகர் வடிவேலைக் கடந்து செல்ல இயலாது. சராசரித் தமிழர் பொதுப்புத்திக்கும் வடிவேலுவின் நகைச்சுவைக்கும் இடையில் நெருக்கமான உறவு பொதிந்துள்ளது. மதுரை மண்ணுக்குரிய தனித்துவமான குணத்தையும் பண்பையும் நகைச்சுவைக் காட்சிகளின் வழியாகச் சித்திரிக்கிற வடிவேலு என்ற அசலான கலைஞனின் திறன்கள் பன்முகத்தன்மையுடையன.

வடிவேலு
வடிவேலு

எழுபதுகள் காலகட்டத்தில் மதுரையிலுள்ள ரீகல், பரமேஸ்வரி போன்ற தியேட்டர்களில் ஆங்கிலத் திரைப்படங்கள் திரையிடுவதற்கு முன்னர் லாரல் ஹார்டி, சார்லி சாப்ளின் நடித்த குறும்படங்கள் வெள்ளித்திரையில் ஒளிர்ந்திடும். நகைச்சுவையை முதன்மைப்படுத்திடும் ஹாலிவுட் படத்தைப் பார்த்து, அரங்கில் பார்வையாளர்கள் விழுந்துவிழுந்து சிரிப்பார்கள். சாப்ளினின் அப்பாவியான முகமும் நாடோடித்தனமான உடலும் சிரிப்பை வரவழைக்கும். குண்டும் ஒல்லியுமான உடல் தோற்றமுடைய லாரலும் ஹார்டியும் அடிதடி என்று மேலோட்டமாகச் செய்கிற செயல்பாடுகளைப் பார்த்துப் பலரும் சிரித்தனர்.

உலகத் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள நகைச்சுவைக் காட்சிகளுடன் வடிவேலு திரைப்படங்களில் நடித்துள்ள நகைச்சுவையை ஒப்பிடும்போது, அவை முன்மாதிரி எதுவுமற்றவை என்ற உண்மை புலப்படும். நகைச்சுவை என்று இதுவரையிலும் தமிழ் சினிமா கட்டமைத்துள்ள வரையறைகளைத் தகர்த்துத் தனக்கான மொழியில் வடிவேலு காட்சிப்படுத்தியுள்ள நகைச்சுவைகள் ரசிகர்களுக்குப் புதிய போக்கினை அறிமுகப்படுத்தியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழைப் பொறுத்தவரையில் பண்டைய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு வகையான மெய்ப்பாடுகளில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நகைச்சுவை மெய்ப்பாடு எள்ளல், இளமை, பேதைமை, மடமை ஆகிய இடங்களில் தோன்றும் என்ற விளக்கம் தரப்பட்டுள்ளது. சங்க இலக்கியம், மணிமேகலை உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களில் நகைச்சுவைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இருபதாம் நூற்றாண்டில் தமிழில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் தொடக்கம் முதலாகவே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

வடிவேலு
வடிவேலு
காளி என் ரத்தினம், டி.எஸ்.துரைராஜ், சாரங்கபாணி, என்.எஸ்.கிருஷ்ணன், சந்திரபாபு கே.ஏ. தங்கவேலு, நாகேஷ், சுருளிராஜன், என்னத்த கண்ணையா, வெண்ணிற ஆடை மூர்த்தி, தேங்காய் சீனிவாசன், குமரி முத்து, கவுண்டமணி, செந்தில் போன்ற நடிகர்கள் நகைச்சுவையின் மூலம் ரசிகர்களைச் சிரிக்க வைத்தனர். அந்த வரிசையில் 1991-ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய `என் ராசாவின் மனசிலே' என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார் வடிவேலு.

அவர், சில ஆண்டுகளில் நகைச்சுவையில் தனக்கெனத் தனித்த முத்திரையைப் பதித்தார். தமிழ்த் திரைப்படங்கள் பெரும்பான்மையான தமிழர்களுடைய சமூகம், அரசியல், பண்பாட்டு வாழ்க்கையுடன் ஒத்திசைந்த நிலையில் வடிவேலு, நகைச்சுவை நடிகர் என்ற வரம்பிற்கு அப்பால் சமூக விமர்சகராக மாறி, நகைச்சுவை நடிப்பின் மூலம் முடிவற்ற கேள்விகளை எழுப்புகிறார். அவை, தமிழ்ச் சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றங்கள்.

மதுரை, இஸ்மாயில்புரம் 12வது தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்த நடராச பிள்ளை - சரோஜினி அம்மாள் தம்பதியினருக்கு 1960-ம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று மகனாகப் பிறந்த வடிவேலுவின் இளமைப் பருவம் வறுமையில் தோய்ந்திருந்தது. வடிவேலுவின் அத்தையும் அம்மாவும் சேர்ந்து முனிச்சாலை புளியமரத்தடி மார்க்கெட்டில் தெருவோரத்தில் காய்கறிகள் விற்கும் சிறிய கடையை நடத்தினர். வடிவேலு தொடக்கப் பள்ளிக் கல்வியைச் சில ஆண்டுகளில் முடித்த நிலையில் அம்மா நடத்திய காய்கறிக் கடைக்கு உதவியாக இருந்தார்.

வடிவேலு
வடிவேலு

வடிவேலு பதின்பருவத்தை நெருங்கியபோது முனிச்சாலையில் பலராம் நடத்திய தேநீர்க் கடைதான் அவருக்கும் நண்பர்களுக்கும் ‘தாப்பாக’ இருந்தது. அங்குதான் வடிவேலு, முருகேசன், மோளையன், பாலகிருஷ்ணன், நைனா, சண்முகம், சங்கர் போன்ற நண்பர்கள் ஒன்றுசேர்ந்து தினமும் அரட்டையடித்துக்கொண்டிருந்தனர். முனிச்சாலையில் சாலையோரம் இருந்த சிறிய அம்மன் கோவிலில் திருவிழா நடத்துகிறோம் என்று நோட்டுப் போட்டுப் பணம் வசூலித்த சண்முகத்துடன் சேர்ந்து திரிந்த வடிவேலுவின் உலகம், மதுரைக் கடைத்தெருக்களில் விரிந்தது. கோவில் திருவிழாவில் பாலு சொந்தமாக எழுதி, இயக்கிய வாழ்வியல் நாடகங்களைப் பாலு கலா மன்றம் என்ற பெயரில் அரங்கேற்றினார். கிருஷ்ணாபுரம் 4வது தெரு முக்கில் நடந்த பாலுவின் சமூக நாடகங்களில் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் உற்சாகத்துடன் நடித்தார். நண்பர்கள் வட்டாரத்தில் வடிவேலுவின் பெயர் வேலு. பொருளாதாரரீதியில் வசதி இல்லையெனினும் நண்பர்களுடன் சேர்ந்து வடிவேலு கேலி, கிண்டல் எனப் பொழுதைப் போக்கினார்.

மீனாட்சியம்மன் கோவிலுக்கு எதிரில் விட்டவாசலில் போட்டோக்களுக்குப் பிரேம் போடுகிற கடை வைத்திருந்த பழநியப்ப பிள்ளை கடையில் வேலைக்குச் சேர்ந்த வடிவேலு, அடிக்கடி மட்டம் போட்டுவிடுவார்; நண்பர்களுடன் சுற்றித் திரிந்தார். சினிமாவில் சேர்ந்து நடிகனாக வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்த வடிவேலு, லட்சுமிபுரம் 7வது தெருவில் குடியிருந்த திரைப்படத் தயாரிப்பாளர் பழ.கருப்பையாவைப் பார்க்கப் போனார். அப்பொழுது அங்கு தற்செயலாக அறிமுகமான ராஜ்கிரணுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. சென்னைக்குச் சென்ற வடிவேலு ராஜ்கிரணின் உதவியாளராகச் சேர்ந்து அவருடைய அலுவலகத்தில் வேலை செய்தார். மதுரை நகரில் எப்பொழுதும் நண்பர்களுடன் சேர்ந்து வெட்டியாகச் சுற்றித்திரிந்த வடிவேலுக்குள் கனன்றுகொண்டிருந்த திரைப்பட மோகத்தினால் எப்படியாவது திரைப்படத்தில் நடித்திட முயன்றார். டி.ராஜேந்தரின் 'என் தங்கை கல்யாணி' (1988) படத்தில் சிறிய வேடத்தில் வடிவேலு நடித்திருந்தாலும் அந்தக் காட்சி யாருக்கும் நினைவில் இல்லை.

ராஜ்கிரண்
ராஜ்கிரண்

வடிவேலுவின் நடிப்பு, குரலினால் ஈர்க்கப்பட்ட ராஜ்கிரண், என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் வடிவேலுவை அறிமுகப்படுத்தினார். ’போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய வடிவேலு தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே நடிகனாகவும் பாடகனாகவும் அறிமுகமானார். மெலிந்த உடலும், டொக்கு விழுந்த கன்னங்களும், கறுத்த நிறத்துடனும் மதுரை வட்டாரத் தமிழ் பேசிய வடிவேலுவின் நடிப்பின் இன்னொரு முகம் 'தேவர் மகன்' (1992) திரைப்படத்தில் வெளிப்பட்டது. காத்திரமான பாத்திரத்தில் கையை இழந்த வேடத்தில் உருக்கமாக நடிக்க முடியுமென்று நிரூபித்த வடிவேலுவின் வெற்றிக்கொடி மெல்ல உயர்ந்தது. சிங்காரவேலன் (1992), சின்னக் கவுண்டர் (1992), காதலன் (1994), காலம் மாறிப்போச்சு (1996) போன்ற திரைப்படங்கள் அவருடைய வலுவான புகழுக்கு அடித்தளமிட்டன. வடிவேலு, அன்றைய காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகர்களாக விளங்கிய கவுண்டமணி, செந்தில் போன்றவர்களுடன் நகைச்சுவைக் காட்சிகளில் சிறிய வேடங்களிலும் நடித்தார்.

நகைச்சுவை நடிகராகக் கதாநாயகனின் நண்பனாக நடித்தபோது வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் திரைப்படத்தில் முக்கியத்துவம் பெற்றன. அவருடைய தனித்துவமான நடிப்பினால் பெரிய அளவில் பார்வையாளர்களைக் கவர்ந்தார். வடிவேலுவை முன்னிறுத்தித் தனிப்பட்ட நகைச்சுவைக் காட்சிகளைத் தயாரித்திட இயங்கிய தனிப்பட்ட குழுவினருடன் வடிவேலு ஈடுபாட்டுடன் இயங்கினார். ஒவ்வொரு படத்திலும் வடிவேலு ஏற்று நடிக்கிற கதாபாத்திரத்தின் தோற்றம், ஆடை, தலைமுடி, மீசை, நடக்கிற முறை, விரிந்து அல்லது சுருங்கியிருக்கிற மார்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டதனால் எல்லாக் கதாபாத்திரங்களும் தனிப்பட்ட முறையில் ரசிகர்களின் மனதில் பதிந்தன.

நகைச்சுவைக் கதாபாத்திரங்களை உருவாக்குவதிலும் சம்பவங்களைச் சரியாகச் சித்திரிப்பதிலும் வடிவேலுவும் அவருடைய குழுவினரும் கடுமையாக உழைத்தனர். தமிழ்மொழியை மதுரை வட்டாரத்திற்குரிய பேச்சில் ஏற்ற இறக்கமான குரலில் பேசிய வடிவேலுவின் குரல், நகைச்சுவையை உயிரோட்டமானதாக மாற்றியது.
வடிவேலு - கோவை சரளா
வடிவேலு - கோவை சரளா

ஒரு திரைப்படத்தில் இரு வேறு காட்சிகளில் நடிக்கும்போது வடிவேலுடைய உடல் மொழியும் உச்சரிப்பும் அலட்டலும் தனித்து விளங்கின. ’அரசு’ திரைப்படத்தில் கோவிலில் மணியடிக்கிற வேலை பார்க்கிற பிச்சுமணியும் பின்னர் அரசாங்க வேலை கிடைத்தவுடன் கோட்டு, சூட் அணிந்த பிச்சுமணியும் வெவ்வேறு என்ற நிலையில் வடிவேலுவின் குரலும் உடல்மொழியும் தனித்து இருந்தன. எந்தவொரு விஷயத்தையும் நுட்பமாகக் காட்சிப்படுத்திய வடிவேலுவின் அக்கறை, நடிப்பில் நுட்பமாக வெளிப்பட்டது. வடிவேலுவின் திரைப்பட ஈடுபாடு காரணமாகத்தான் அவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

வடிவேலும் சரி, சிங்கமுத்தும் சரி இருவரும் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் பார்த்த மனிதர்களையும் அவர்களுடைய நகைச்சுவைச் செயல்பாடுகளையும் முன்னிறுத்தி நடித்தனர். அதனால்தான் அந்தக் காட்சிகள் பார்வையாளர்களுக்கு நெருக்கத்தைத் தந்தன. திரைப்படத்தில் தியேட்டரை விட்டு வெளியேறினாலும் ரசிகர்களின் மனதில் வடிவேலுவின் நகைச்சுவை வசனங்கள் மிதந்தன.

அவர் ஒவ்வொரு படத்திலும் நகைச்சுவையில் தனக்கெனத் தனிப்பட்ட புதிய போக்கைத் திட்டமிட்டு உருவாக்கினார். வெகுஜன ஊடகமான சினிமாவில் இடம்பெற்ற வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் காலங்கடந்தும் இன்றளவும் நிலைத்திருப்பது தற்செயலானது அல்ல.
திரைப்படத்தில் காமெடிக்கு எனத் தனியாக டிராக் தயாரித்தபோதும் வடிவேலு தன்னுடைய முத்திரையைப் பதித்தார். அவருடன் சேர்ந்து திரைப்படத்தில் தரமாக நடிப்பதற்கென்று உருவான காமெடி நடிகர்களைப் பயன்படுத்தி நகைச்சுவைக் காட்சிகளை வடிவமைத்தது வடிவேலுவின் அடுத்தகட்ட வளர்ச்சி. அல்வா வாசு, போண்டா மணி, சிங்கமுத்து, சுப்புராஜ், வெங்கல்ராவ், மச்சக்காளை, கிருஷ்ணமூர்த்தி, நெல்லை சிவா, அமிர்தலிங்கம் போன்ற நகைச்சுவை நடிகர்களுடன் சேர்ந்து வடிவேலு நடித்த நகைச்சுவைக் காட்சிகள் அவரை முன்னணி நகைச்சுவை நடிகராக்கியது.
நேசமணி
நேசமணி

வெற்றிக்கொடி கட்டு (2000) திரைப்படத்தில் பார்த்திபனுடன் சேர்ந்து வடிவேலு நடித்த நகைச்சுவைக் காட்சிகள், பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன. நேசமணி பாத்திரத்தில் வடிவேலு நடித்து வெளியான ப்ரண்ட்ஸ் (2001) திரைப்படம், நகைச்சுவையில் அவருக்கு ஒப்பீடாகச் சொல்லிட யாருமில்லை என்ற நிலையை உருவாக்கியது. அறுபதுகள் காலகட்டத்தில் மதுரைப் பக்கம் வெட்டியாக ஊர் சுற்றித்திரிகின்ற இளவட்டங்கள், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ வைத்திருப்பதாகப் பேசுவார்கள். அந்தச் சங்கத்தின் பெயரை முன்வைத்துக் ‘கைப்புள்ள’ என்ற பாத்திரம்மூலம் வின்னர் படத்தில் வடிவேலு தீவிரமாகச் செய்த செயல்களும் வசனங்களும் வடிவேலுவின் செவ்வியல் நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டுகள்.

வடிவேலு - கைப்புள்ள
வடிவேலு - கைப்புள்ள

மதுரை நகரின் தெருக்களில் வடிவேலு எதிர்கொண்ட அனுபவங்கள், பல்வேறு திரைப்படக் கதைமாந்தர்களின் ஊடாக அசலான மனிதர்களாகப் பார்வையாளர்களுடைய கூட்டுக்கற்பனையில் பதிவாகியுள்ளனர். வாய்மொழியாகவும், அனுபவங்களாகவும் காலந்தோறும் உருவாக்கப்பட்டுள்ள கதைமாந்தர்கள்மீது, ரசிகர்கள் உணர்ச்சிகளையும் விருப்பு வெறுப்புகளையும் முதலீடு செய்தல், வடிவேலு சித்திரிக்கிற திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளில் தொடர்கிறது. திரையில் ஒளிர்ந்திடும் நகைச்சுவைக் காட்சிகள் புனைவு எனினும் ரசிகர்கள் அளவற்ற உணர்ச்சியில் திளைத்தல், மகிழ்ச்சியடைதல் போன்றவை திரைப்படத்தைப் பார்க்கும்போது நிகழ்கிறது.

ஒருவகையில், யதார்த்தமாகக் காட்சிப்படுத்தப்படும் புனைவை உண்மை என்று நம்பிய ரசிகர்கள் நாய் சேகர், படித்துறைப் பாண்டி போன்ற கதாபாத்திரங்கள் மூலம் வடிவேலுவை முன்வைத்து விரிந்திடும் நகைச்சுவைக் காட்சிகளுடன் ஒன்றுகின்றனர். இதுதான் வடிவேலு என்ற மகத்தான கலைஞன் வெள்ளித்திரையில் உருவாக்கியுள்ள அற்புதம்.

- மதுரையின் வழியே வடிவேலு குறித்த பார்வை அடுத்த வாரமும் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism