Published:Updated:

லட்சுமி மீதான அந்த விமர்சனம், அர்ச்சனாவின் சுதந்திரம்... பிரபலங்களின் கணவர்கள் பகிரும் சீக்ரெட்ஸ்!

மனைவியின் திறமைக்கு ஊக்கம் கொடுத்து வாழ்க்கைத் துணையை பிரபலமாக்கி அழகு பார்த்த கணவர்கள், மனைவியின் வெற்றி குறித்து மகிழ்ச்சியுடன் பேசுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண்கள்தாம் காரணமாக இருப்பார்கள்' என்ற பொதுவான பேச்சு வழக்கை மாற்றி, மனைவியின் திறமைக்கு ஊக்கம் கொடுத்து வாழ்க்கைத் துணையை பிரபலமாக்கி அழகு பார்க்கும் கணவர்களும் அதிகளவில் இருக்கின்றனர். அந்த வகையில் மீடியா வெளிச்சத்துக்கு வராத சில கணவர்கள், பிரபலமாக இருக்கும் தம் மனைவியின் வெற்றி குறித்து மகிழ்ச்சியுடன் பேசுகின்றனர்.

மனைவியுடன் ராமகிருஷ்ணன்
மனைவியுடன் ராமகிருஷ்ணன்

நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், சின்னத்திரையில் குடும்ப பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றிதான் அதிக கவனம் பெற்றார். இதுபோன்ற நிகழ்ச்சிகளால் ஏராளமான விமர்சனங்களையும் பஞ்சாயத்துகளையும் எதிர்கொண்ட லட்சுமிக்கு, உற்ற துணையாக இருந்து நம்பிக்கையளிப்பவர் கணவர் ராமகிருஷ்ணன்.

``எங்க இருவர் குடும்பமும் தூரத்துச் சொந்தம். சின்ன வயசுல இருந்தே இருவரும் நல்லா பழகினோம். லட்சுமி மேல எனக்கு க்ரஷ் இருந்துச்சு. ஆனா, அதை நான் வெளிப்படுத்தல. எதேச்சையா இருவர் வீட்டுலயும் எங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் செய்தாங்க. நாங்களும் ஏத்துகிட்டோம். அப்போ லட்சுமி பத்தாவதுதான் முடிச்சிருந்தாங்க. நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் நடந்துச்சு. ஆணாதிக்கம், கட்டுப்பாடுகள் நிறைந்த எங்க வீட்டுல குடும்பத் தலைவர் சொல்றதை இளைய தலைமுறை ஆண்கள், வீட்டிலுள்ள பெண்கள் யாருமே மீற முடியாது. இதனால, கல்யாணம் ஆன புதுசுல லட்சுமி ரொம்பவே கஷ்டப்பட்டாலும் எல்லோரிடமும் பொறுமையுடன் நடந்துகிட்டாங்க. வேலை விஷயமா பல்வேறு நாடுகள்ல நான் வசிச்சபோது, லட்சுமி பல வருஷங்கள் கோயம்புத்தூர்ல எங்க மூணு பெண் குழந்தைகளையும் தனியாளா பார்த்துகிட்டாங்க. இதுக்கிடையே, சுயதொழில் உட்பட ஆக்கபூர்வமான பல்வேறு வேலைகளையும் செய்தாங்க.

Lakshmi - Ramakrishnan Couple
Lakshmi - Ramakrishnan Couple

ஐ.டி துறையில பல வருஷங்கள் வேலை செஞ்ச நிலையில, சென்னை வந்த பிறகு, சில கல்லூரிகள்ல பேராசிரியரா வேலை செய்துகிட்டே பிஹெச்.டி முடிச்சேன். பல்வேறு நிறுவனங்களுக்கு கன்சல்டன்சி வேலைகளுடன், ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டவும் செய்றேன். அதனால, என்னோட பணிச்சூழலும் பரபரப்பாதான் இருக்கும். எந்த ஈகோவும் இல்லாம வீட்டு வேலைகள் செய்வேன். என் மனைவி வேலையை முடிச்சுட்டு தாமதமா வரும்போது டின்னர் தயார் செஞ்சு காத்திருக்கவும் கூச்சமே படமாட்டேன். ஆண், பெண் சமம்ங்கிறது பேச்சுல மட்டும் இல்லாம, நடைமுறையிலயும் நாங்க சாத்தியப்படுத்திகிட்டு இருக்கோம். சினிமாவுல நடிச்சாலும், வீட்டுல நடிகைங்கிற பிம்பத்தை லட்சுமி ஒருபோதும் காட்டிகிட்டதில்ல. எனக்கும், எங்க மகள்களுக்குமான தேவைக்குத்தான் முதல்ல முக்கியத்துவம் கொடுப்பாங்க. அதன் பிறகுதான் அவங்களோட கரியருக்கு நேரம் ஒதுக்குவாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லட்சுமிக்கு நடிக்கிறதைவிட, கதை சொல்றதுலதான் அதிக ஆர்வம். அதனாலதான், இயக்குநராகவும் ஆனாங்க. சமூகத்துல பார்க்கிற நல்ல கதைகளை மட்டுமே இயக்க ஆசைப்படுவாங்க. என் மனைவியின் திறமைக்கு ஊக்கம் கொடுக்கவே, அவங்க இயக்கும் படங்களைத் தயாரிக்கவும் முன்வருகிறேன். குடும்ப பிரச்னைகளுக்கு இயன்ற தீர்வும் உதவியும் செய்யும் நோக்கத்துலதான் `சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில தொகுப்பாளரா என் மனைவி வேலை செய்தாங்க. அதுபோன்ற நிகழ்ச்சியால லட்சுமிமீது இப்ப வரை விமர்சனங்கள் வருது. இதையெல்லாம் நாங்க பொருட்படுத்துறதே இல்ல. ஏன்னா, அந்த நிகழ்ச்சி பத்தி விமர்சனம் செய்யுற பலருக்கும், என் மனைவி தொகுப்பாளரா நடத்துற நிகழ்ச்சிக்கு வந்து, தங்களோட குடும்ப பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்கிற ஏழை மக்களுக்கு உதவ நாங்க நடத்தும் `நேர்மறை’ங்கிற அமைப்பு பத்தி தெரிய வாய்ப்பில்ல. எனவே, நாங்க எங்களுக்காக மட்டுமே வாழுறோம். ஊர் உலகத்துக்காக இல்ல" என்கிறார் உற்சாகத்துடன்.

மனைவியுடன் பத்ரிநாத்
மனைவியுடன் பத்ரிநாத்

மிழகத்தில் பிரபல சமையற்கலைஞர்களில் முக்கியமானவர் மல்லிகா பத்ரிநாத். இல்லத்தரசியாக இருந்த மல்லிகாவுக்குச் சமையற்கலையில் இருந்த ஆர்வத்துக்கு ஊக்கம் கொடுத்த கணவர் பத்ரிநாத், அவரது சமையல் குறிப்புகளைப் புத்தகமாக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி கண்டவர். இதற்காகவே, தன் கணக்காளர் பணியையும் வெகுவாகக் குறைத்துக்கொண்டார்.

``என் மனைவி காலேஜ் முடிச்சிருந்த நேரம். அவரை பொண்ணு பார்க்க சேலம் போயிருந்தோம். வீணை வாசிச்சு, கர்னாடக இசைப் பாடலைப் பாடினாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. `உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா, மியூசிக் பத்தி எனக்கு எதுவும் தெரியாது'ன்னு சொன்னேன். `எனக்கும் தெரியாது. பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு, வீட்டுலதான் என்னை மியூசிக் கத்துக்கச் சொன்னாங்க. சில நாள்கள்தான் வகுப்புக்குப் போனேன்'னு மல்லிகா சொன்னதும் சிரிச்சுட்டேன். சமையற்கலை ஆர்வத்துல ரொம்பவே அனுபவம் பெற்ற மல்லிகாவின் திறமையை வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்த நினைச்சேன்.

மனைவியுடன் பத்ரிநாத்
மனைவியுடன் பத்ரிநாத்

மனைவி எழுதிய வெஜ் கிரேவி ரெசிப்பிகளைப் புத்தகமாக்க முதல்ல முயன்றோம். எந்த பப்ளிகேஷன்லயும் உரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கல. நாங்களே அச்சகத்துல கொடுத்து பிரின்ட் பண்ணி, அந்தப் புத்தகத்தைத் தெரிஞ்சவங்களுக்குக் கொடுத்தோம். பலர்கிட்டயும் நல்ல ஃபீட்பேக் கிடைக்கவே, வருஷத்துக்கு ஒரு புத்தகத்தை வெளியிட்டோம். இதுக்காக ஆரம்பத்துல ரொம்பவே மெனக்கெட்டோம். ஒவ்வொரு புத்தகத்துக்கான ரெசிப்பிகளை எழுத ஏழு மாதங்கள் வரை செலவிட்டு, ஒரு புக்ல சராசரியா நூறு ரெசிப்பிகள் வரை வெளியிடுவோம்.

அதுக்கான ரெசிப்பிகளை எழுதி முடிக்கவே மல்லிகா ஏழு மாதங்கள் வரை செலவிடுவாங்க. பிறகு, அதையெல்லாம் முறையா செஞ்சு பார்த்து, அந்தச் சுவை பலருக்கும் ஏற்புடையதா இருக்கும் பட்சத்துலதான் அதைத் தேர்வு செய்வோம். அதுக்காக என் மனைவி கொடுத்த உழைப்பைக் கண்கூடா பார்த்து வியந்திருக்கேன். மனைவியின் புத்தகங்கள் அதிகளவுல விற்பனையாச்சு. கூடவே, பல தளத்துலயும் சமையற்கலை நிபுணரா புகழ்பெற்றாங்க. காலமாற்றத்துக்கு ஏற்ப, சமையலுக்குனு இப்ப யூடியூப் சேனல் நடத்துறோம். தொடக்கத்துல டெக்னிக்கல் வேலைகளை நான் கவனிச்சுகிட்டேன். கேமரா செட் பண்ணி, சமையல் செஞ்சு, அந்த வீடியோவை தானே எடிட் பண்ற அளவுக்கு மல்லிகாவுக்கு டெக்னிக்கலாவும் இப்போ அனுபவம் கூடிடுச்சு. மல்லிகாவின் வளர்ச்சியைப் பார்த்து உளமாற பெருமைப்படுறேன்" என்கிறார் மகிழ்ச்சியுடன்.

கணவர், மகளுடன் அர்ச்சனா
கணவர், மகளுடன் அர்ச்சனா

மிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக நீண்டகால அனுபவம் கொண்டவர் அர்ச்சனா. பல மணிநேர நிகழ்ச்சியையும் உற்சாகம் குறையாமல் தொகுத்து வழங்குபவருக்கு, ஆஃப் ஸ்கிரீனில் இருந்து எனர்ஜி கூட்டுபவர் கணவர் வினீத் முத்துக்கிருஷ்ணன். பாதுகாப்புத் துறைச் சார்ந்த அரசுப் பணியில் இருப்பவர், எப்போதும் அமைதியோ அமைதி குணம். அதற்கு நேரெதிரான அர்ச்சனாவின் பேச்சுத் திறமைக்கு முதல் ரசிகரான வினீத், மனைவிக்கு ஊக்கமளித்து உற்சாகப்படுத்தி பெருமிதப்படும் கணவர்.

``என் தம்பியின் தோழிதான் அர்ச்சனா. அந்த வகையில எங்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாச்சு. அப்பவே ஃபேமஸான தொகுப்பளரா இருந்த அர்ச்சனா, தன்னோட பணிச்சூழல் சிக்கல்களை ஒருபோதும் வீட்டுக்குள் கொண்டுவரமாட்டாங்க. நானும் அப்படித்தான். ஆனா, எங்க வேலையையும் வீட்டு நிர்வாகத்தையும் எப்படி பேலன்ஸ் பண்ணணும்னு முறையா திட்டமிட்டுப்போம். கல்யாணம், குடும்பங்கிற இயல்பான விஷயங்கள், ஒரு பெண்ணோட கனவுகளுக்கு ஏன் தடையா இருக்கணும்? எங்க தரப்புல இருந்து அர்ச்சனாவுக்கு எந்த அழுத்தமும் கொடுக்காம, சுதந்திரமா வெளியுலகத்துலயும் வேலை செய்ய ஊக்கப்படுத்துவோம். அர்ச்சனாவோட முகம் டல்லா இருந்தா, உடனே பேச்சு கொடுத்து சிரிக்க வெப்பேன். உடனே கவலைகளை மறந்துடுவாங்க. நாங்க நெடுஞ்சாலையில டிராவல் பண்றப்போ, அர்ச்சனா கார் ஓட்டுவாங்க. நான் தூங்குவேன். இப்படி எங்களுக்குள் விட்டுக்கொடுத்துப் போகும் விஷயங்கள், பாகுபாடு இல்லாம பகிர்ந்துதான் பல்வேறு வேலைகளையும் செய்வோம்.

கணவருடன் அர்ச்சனா
கணவருடன் அர்ச்சனா

நேரம் கிடைக்கிறப்போ அர்ச்சனா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியைப் பார்ப்பேன். வீட்டில் இருந்து அவரை ஊக்கப்படுத்துவேன். ஆனா, நான் மீடியா வெளிச்சத்துக்கு வர விரும்ப மாட்டேன். போன வருஷம் அவள் விகடன் விருது நிகழ்ச்சியில என் மனைவியுடன் மேடை ஏறினேன். எப்போதும்போல நான் அமைதியா இருக்க, எனக்கும் சேர்த்து சரவெடி மாதிரி பேசித் தள்ளிட்டாங்க அர்ச்சனா. அந்த வீடியோ வைரலாகி, ரொம்பவே வெட்கமாகிடுச்சு. என் மனைவியும் மகளும் நல்லா பேசுவாங்க. இருவருடைய பேச்சைக் கேட்டு ரசிக்கவே எனக்குப் பிடிக்கும். அதனால, வீட்டுல நான் அதிகம் பேச மாட்டேன்" என்கிறார் புன்னகையுடன்.

ராமகிருஷ்ணன், பத்ரிநாத், வினீத் ஆகியோர் தங்கள் மனைவியைப் பற்றிப் பெருமிதத்துடன் பகிரும் கூடுதல் விஷயங்கள் மற்றும் தமிழிசையின் கணவர் சௌந்தரராஜன் ஆகியோர் பகிரும் தகவல்களை இந்த வார அவள் விகடன் இதழில் படிக்கலாம்.

சுடர்விடும் மனைவிகள்... தூண்டுகோலாய் கணவர்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு