Published:Updated:

`1980-லேயே அரசியலை விட்டு விலக நினைத்தேன்!' - மனம் திறக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன்

சுப்புலட்சுமி ஜெகதீசன்

``அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கிய உறவினர் ஒருவரும், பா.ஜ.க-வில் உள்ள என் பழைய நண்பர் ஒருவரும் தங்களது இயக்கத்தில் சேருமாறு அழைத்தார்கள். நான் எந்த இயக்கத்திலும் சேர விரும்பவில்லை. இப்போது, பெரியாரிஸ்ட் என்பது என் அடையாளம்...’’ - சுப்புலட்சுமி ஜெகதீசன்.

`1980-லேயே அரசியலை விட்டு விலக நினைத்தேன்!' - மனம் திறக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன்

``அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கிய உறவினர் ஒருவரும், பா.ஜ.க-வில் உள்ள என் பழைய நண்பர் ஒருவரும் தங்களது இயக்கத்தில் சேருமாறு அழைத்தார்கள். நான் எந்த இயக்கத்திலும் சேர விரும்பவில்லை. இப்போது, பெரியாரிஸ்ட் என்பது என் அடையாளம்...’’ - சுப்புலட்சுமி ஜெகதீசன்.

Published:Updated:
சுப்புலட்சுமி ஜெகதீசன்

ப்45 ஆண்டுக்கால பொது வாழ்க்கை... அ.தி.மு.க, தி.மு.க-வில் இருந்தபோது வகித்த அமைச்சர் பொறுப்புகள்... ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் தனியொரு பெண்ணாக ஆளுமை செலுத்திய பாங்கு... பல்வேறு ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டாலும், தமிழக முதல்வர்களான எம்.ஜி.ஆர், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து அரசியல் உலகில் பயணித்தவர் என்ற பெருமைக்கு உரியவர் சுப்புலட்சுமி ஜெகதீசன்.

சமீபத்தில், தான் சார்ந்திருந்த தி.மு.க-வில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகிக்கொண்ட சுப்புலட்சுமி ஜெகதீசன், தற்போது பெண்ணினப் போராளியாகவும், பெரியாரிஸ்ட் ஆகவும் களம் இறங்கியுள்ளார். புதிய முகத்துடன் வலம் வரத் தொடங்கியுள்ள சுப்புலட்சுமி ஜெகதீசனை சந்தித்தோம்...

`1980-லேயே அரசியலை விட்டு விலக நினைத்தேன்!' - மனம் திறக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன்

உங்கள் இளமைக்காலம், ஆரம்ப அரசியல் வாழ்க்கை எப்படி இருந்தது?

நான் பிறந்து வளர்ந்தது, கொடுமுடிக்கு அருகே வடக்குப்பாளையம் கிராமத்தில். தந்தை விவசாயி. அவர் மட்டும்தான் எங்கள் குடும்பத்தில் 5-ம் வகுப்பு வரை படித்தவர். காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசி. காமராஜருக்கு நெருக்கமானவர்.

எங்கள் வீட்டில் மூன்று பெண் பிள்ளைகள். நான் மூத்தவள். இயல்பாகவே என் தந்தைக்கு பெண் கல்வியில் ஈடுபாடு அதிகம். நாங்கள் மூன்று பெண்களும் அப்போதே பட்டதாரிகள். என் பெரியப்பா, சேலத்தில் அரசு உதவிபெறும் கல்லூரியின் தாளாளராக இருந்தார். அங்கு இளங்கலை ஆசிரியர் பி.டி பட்டப்படிப்பு படித்தேன். என்னை அந்தக் கல்லூரியைக் கவனித்துக்கொள்ளுமாறு கூறியதால் சில காலம் பணியாற்றினேன். பின்னர் 1969-ல் கொடுமுடியில் ஆசிரியர் பணி கிடைத்தது. தலைமையாசிரியர் ஆகும் நேரத்தில், 1977-ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அப்போது என் கணவரின் தம்பி அ.தி.மு.க செயலாளராக இருந்தார். மொடக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் பெண் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். நன்கு படித்தவராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியதால் எனக்கு அந்த வாய்ப்பு தேடி வந்தது. அந்தத் தேர்தலில் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.

இயல்பாகவே அரசியல் அறிவு எனக்கு இருந்தது. எம்.ஜி.ஆரின் முதலாவது தமிழக அமைச்சரவை பட்டியலில் எனக்கு அமைச்சர் பதவி அளிக்க, கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆட்சேபித்தார்கள். இருப்பினும், 8 மாதம் கழித்து இரண்டாவது முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது, 4 புதிய அமைச்சர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பட்டியலில் எனது பெயரும் இடம் பெற்று முதன்முறையாக கைத்தறி, கதர் மற்றும் துணிநூல் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றேன்.

`1980-லேயே அரசியலை விட்டு விலக நினைத்தேன்!' - மனம் திறக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன்

முதன்முறையாக அமைச்சரான அனுபவம், பெண்ணாக இருந்து அரசியல் களத்தில் சந்தித்த சவால்கள் பற்றி?

ஆசிரியர் பணியில் இருந்ததால், கடமை தவறாமல் பணியாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தேன். நான் முதன்முறையாக அமைச்சரானபோது, கைத்தறித்துறை மிக மோசமான நிலையில் இருந்தது. 1976-77-களில் கைத்தறி நெசவாளர்கள் வேலைவாய்ப்பின்றி கடும் பாதிப்படைந்து கஞ்சித்தொட்டி திறக்கும் நிலையில் இருந்தார்கள். பிரச்னைகளுக்கு ஓராண்டிலேயே தீர்வு கண்டேன்.

கைத்தறியில் புதிய ரகங்களை அறிமுகப்படுத்துவது, நெசவாளர்களுக்குக் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதுடன், அவர்களின் பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டேன். நான் அரசியலுக்கு புதியவள் என்பதாலும், பெண் என்பதாலும் என் மீது பலரும் பொறாமையும் எரிச்சலும் கொண்டனர். முதல்வர் எம்.ஜி.ஆரிடம் என்னைப் பற்றி சிலர் தவறான தகவல்களைக் கூறினர். இதனால் என்னிடம் பேசுவதை எம்.ஜி.ஆர் தவிர்த்தார். இது எனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.

அப்போது ஜானகியம்மாவிடம், `என்னைப் பற்றித் தவறாக தலைவரிடம் (எம்.ஜி.ஆரிடம்) சொல்லியிருக்காங்க. இது எனக்கு ரொம்ப கவலையா இருக்கு’ என்றேன். `அப்படியானால் நீயும் அவருடன் பேசாதே. அவரே உன்னைக் கூப்பிட்டுப் பேசும்போது எல்லாவற்றையும் சொல்லி விடு’ என்றார். அதேபோல எம்.ஜி.ஆரை சந்தித்தபோதெல்லாம் அவருடன் பேசுவதைத் தவிர்த்தேன். பின்னர் அவரே என்னைக் கூப்பிட்டு கேட்டார். `என்னைப் பற்றி உங்களிடம் தவறாகப் பலரும் பேசியதை நம்பி என்னுடன் பேசாமல் நீங்கள் தவிர்த்தீர்கள். அதுதான் காரணம். என்னைப் பற்றி வரும் தவறான தகவல்களை நம்பாதீர்கள்’ என்றேன். அவரும் சிரித்தபடியே, `அப்படியா? சரி சரி போய் வேலையைக் கவனி. மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார்.

1980-ல் அ.தி.மு.க ஆட்சியை மத்திய அரசு கலைத்தபோது, எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் இனி அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிக்கொள்ள நினைத்தேன். ஆட்சியைக் கலைத்து விட்டதால் நாம் வெளியே செல்வதில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று நினைத்தேன்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

அது என்ன கசப்பான அனுபவங்கள்... பகிர இயலுமா?

எனக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்தேன். அப்போது நாஞ்சில் மனோகரன் தி.மு.க-வுக்கு சென்று விட்டார். மருத்துவமனையில் இருந்த என்னை சந்திப்பதற்காக வந்த நாஞ்சில் மனோகரன், என்னை தி.மு.க-வுக்கு வந்து விடுமாறு அழைத்தார். `எனக்கு அரசியலே வேண்டாம். நான் மீண்டும் ஊருக்கே சென்று விவசாயத்தையும், ஆசிரியர் பணியையும் கவனித்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன்’ என்று கூறிவிட்டேன். இந்த சம்பவத்தை அப்படியே திரித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிலர், `நாஞ்சிலாருடன் சுப்புலட்சுமியும் தி.மு.க-வுக்குச் செல்லப் போகிறார்’ என்று எம்.ஜி.ஆரிடம் பொய்யான தகவலைத் தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து, நான் தங்கியிருந்த மருத்துவமனையில், யாரையும் என்னை சந்திக்க விடக் கூடாது எனக் கூறி அந்த மருத்துவ மனையின் டாக்டரை அக்கட்சியினர் மிரட்டினர். இதனால் அந்த டாக்டர், `உங்களுக்கு இங்கு பாதுகாப்பில்லை. எனவே, ஏதாவது ஹோட்டலில் தங்கிக்கொள்ளுங்கள். உங்களுக்கு அங்கு வந்து சிகிச்சையளிக்கிறோம். இப்போதைக்கு இங்கிருந்து சென்று விடுங்கள்’ என்றார்.

அப்போது கவர்னர் ஆட்சி நடந்துகொண்டிருந்ததால், எல்லா இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கிருந்த எங்கள் சொந்தக்கார டாக்டர் ஒருவர் மூலம், கோவை செழியனின் வீட்டுக்கு என் 5 வயது மகனுடன் சென்றுவிட்டேன். கோவை செழியன் எனக்கு ஒரு வகையில் உறவினர். அப்போதுதான் அவரும் அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்குச் சென்றிருந்தார். அவர் உடனே கலைஞருக்கு போன் போட்டு, `சுப்புலட்சுமிக்கு மிரட்டல் ஏற்பட்டதால் அவர் இங்கு வந்துள்ளார்’ என்று கூறினார். அடுத்த நாளே ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோரை அனுப்பி வைத்தார் கலைஞர். என்னை உடனடியாக தி.மு.க-வில் சேருமாறு கலைஞர் கூறியதாக அவர்கள் கூறினர். நான் அரசியலில் நீடிக்க விரும்பவில்லை என்பதை அவர்களிடம் தெரிவித்துவிட்டேன்.

`நீங்கள் மாநில அளவில் அமைச்சராக இருந்து விட்டு மீண்டும் ஆசிரியராகப் போய் பணியாற்றினால் நல்லா இருக்காது. எதிர்காலத்தில் உங்களை பாதுகாக்க இந்த இயக்கம் எப்போதும் துணை நிற்கும். நீங்கள் சட்டசபையில் கேள்விகளுக்கு பதில் கூறுவது கலைஞருக்கு ரொம்ப பிடிக்கும். இந்த மாதிரி பெண்கள் நம்ம கட்சியில இல்லையேய்யா என்று ஆதங்கப்படுவார். எனவே, தி.மு.க-வில் உடனடியாக இணைந்துவிடுங்கள். உங்களுக்கு உரிய கௌரவமும் மரியாதையும் கிடைக்கும்’ என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். அதை ஏற்று அப்போதே உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு, கட்சியில் இணைந்துகொண்டேன்.

கருணாநிதி
கருணாநிதி

1984 தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அ.தி.மு.க-வில் இருந்த தற்போதைய ஈரோடு மேற்கு தொகுதியின் அமைச்சர் சு.முத்துசாமியை எதிர்த்து போட்டியிட்டு 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றேன். தி.மு.க-வில் சேர்ந்த பின், அதிக அளவில் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக கலைஞர் என்னை அனுப்பி வைப்பார். 1988 வரையிலும் தொடர்ந்து கட்சிப்பணிக்காக வெளியூர் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காகச் சென்றுவிடுவோம்.

தி.மு.க அமைச்சரவையில் இடம்பெற்ற அனுபவம்?

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று கலைஞர் முதல்வரானார். அவரது அமைச்சரவையில் சத்துணவு மற்றும் சமூகநலத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டேன். எனது காலத்தில் தான் சத்துணவுடன் முட்டை அளிக்கப்பட்டது. திருமண உதவித்திட்டம், மகப்பேறு உதவித் திட்டம், கலப்புத் திருமணத் திட்டம், கைம்பெண் திருமண உதவித்தொகை திட்டம் போன்ற மகளிருக்கான திட்டங்கள் நான் அமைச்சராக இருந்த காலத்தில் தான் ஏற்படுத்தப்பட்டன. இந்தத் திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் திராவிடத் தலைவர்களின் பெயரை கலைஞர் சூட்டினார். ஒன்றரை ஆண்டுகள் ஆட்சி செய்த நிலையில், தி.மு.க ஆட்சியை அப்போதைய பிரதமர் சந்திரசேகர் கலைத்தார்.

முன்னாள் பிரதமர் சந்திரசேகர்
முன்னாள் பிரதமர் சந்திரசேகர்

1991-ல் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானார். அந்தத் தேர்தலில், மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுமாறு கலைஞர் என்னைக் கேட்டுக் கொண்டார். அப்போதைய தி.மு.க மாவட்டச் செயலாளரின் செயலால், என்னால் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட முடியாது என்று கூறி கோபத்துடன் வெளியே வந்துவிட்டேன். உடனே, தயாளு அம்மாளிடம் போன் போட்டு, `சுப்புலட்சுமி கோவிச்சிட்டு போகுது பாரு’ என்று கூறவே, அண்ணியார் (தயாளு அம்மாள்) என்னை தடு்த்து நிறுத்தி, `போய் கலைஞரைப் பாரு’ என்று திருப்பி அனுப்பி வைத்தார். கலைஞரை சந்தித்தபோது, `உன்னுடைய தொகுதியில் ரெண்டு முறை நானே வந்து பிரசாரம் செய்து உன்னை ஜெயிக்க வைக்கிறேன்’ என்று கூறி மொடக்குறிச்சியில் நிற்க வைத்தார். அப்போதைய ராஜீவ்காந்தி அலையால் அந்தத் தேர்தலில் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. பின்னர் 1996-ல் நான் மொடக்குறிச்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனேன்.

தடா சட்டத்தில் கைதான அனுபவம்?

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறியே தி.மு.க ஆட்சியைக் கலைத்து, என்னை கைது செய்தனர். தி.மு.க அரசைக் கலைத்ததற்கு ஆதாரம் தேவைப்பட்டதால், இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ விசாரணை அதிகாரியான கார்த்திகேயனிடம், தி.மு.க-வினரை கைது செய்யுமாறு அழுத்தம் கொடுத்தனர். `தகுந்த ஆதாரம் இன்றி, அரசியல் காரணங்களுக்காக யார் மீதும் வழக்குப் போடமாட்டேன்’ என்று கார்த்திகேயன் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்ததாக தி.மு.க-வினர் மீது குற்றம்சாட்ட போதுமான ஆதாரங்கள் இல்லாததால் சி.பி.ஐ வழக்குத் தொடரவில்லை. இதைக்கண்ட ஜெயலலிதா, தமிழ்நாடு சிறப்பு புலனாய்வுப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தினார். தி.மு.க-வினரை பழி வாங்கும் நோக்கத்துடன் முதலில் என்னையும், என் கணவரையும் தடா சட்டத்தில் கைது செய்தனர். அந்த நேரத்தில் சென்னையில் பத்மநாபா கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் தொடர்புடைய 2 விடுதலைப் புலிகளுக்கு நாங்கள் அடைக்கலம் அளித்ததாக, எங்கள் மீது வழக்குப் பதியப்பட்டது. பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலரையும் தடாவில் கைது செய்தனர். எங்களைக் கைது செய்ததால், இந்த விவகாரம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. தடா சட்டத்தை அரசியல் பழிவாங்கும் காரணங்களுக்காக பயன்படுத்துவதாக ஜெயலலிதா அரசு மீது குற்றச்சாட்டு எழுந்ததால் அதன் பிறகு தி.மு.க அரசியல் தலைவர்களை கைது செய்யவில்லை.

`1980-லேயே அரசியலை விட்டு விலக நினைத்தேன்!' - மனம் திறக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன்

இருப்பினும் தடாவில் கைதானதால், ஓர் ஆண்டாக மதுரை சிறையில் இருந்தோம். தனிக்கோர்ட்டில் 9 மாதத்துக்குள் 14 முறை ஜாமீன் கேட்டு மனு செய்தும், அதனை தள்ளுபடி செய்தார்கள். என் கணவருக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கைதாகி பல மாதங்களாகியும் ஜாமீன் கிடைக்காததால் முரசொலி மாறன் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்தோம். எங்கள் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, `வழக்குப் பதிந்து 3 மாதத்துக்குள் ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை?’ என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி, பின்னர் ஜாமீன் வழங்கியது. கிட்டத்தட்ட 18 மாதங்கள் சிறையில் நானும் என் கணவரும் இருந்தோம். பின்னர் வழக்கை நிரூபிக்க முடியாததால் எங்களை நீதிமன்றம் 1999-ல் விடுதலை செய்தது.

2004-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அப்போதைய திருச்செங்கோடு (தற்போது ஈரோடு தொகுதி) தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போட்டியிட்டு 1.88 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மத்திய சமூக நலம் மற்றும் அதிகாரமளிப்புத் துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்றேன். எனது காலத்தில் மாற்றுத்திறனாளிகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தேன். எனக்கு அப்போதைய மத்திய அமைச்சர் மீராகுமார் ஜெகஜீவன்ராம் பக்கபலமாக இருந்தார். சென்னை முட்டுக்காடு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான `நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஃபார் எம்பவர்மென்ட் பெர்சன்ஸ் ஆஃப் மல்டிபிள் டிஸ்ஸெபிளிடி இன்ஸ்ட்டியூட்டை’ ஏற்படுத்தினேன். இறுதியாக 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட நான் 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றேன். அதற்கு பல காரணங்கள் உண்டு. அதை வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லை.

`1980-லேயே அரசியலை விட்டு விலக நினைத்தேன்!' - மனம் திறக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன்

சமீபத்தில், அரசியலில் இருந்து விலகிய பின் மாற்றுக்கட்சியில் இருந்து அழைப்பு வந்ததா?

ஆமாம். அ.தி.மு.கவில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கிய உறவினர் ஒருவரும், பா.ஜ.கவில் உள்ள என் பழைய நண்பர் ஒருவரும் தங்களது இயக்கத்தில் சேருமாறு அழைத்தார்கள். நான் எந்த இயக்கத்திலும் சேர விரும்பவில்லை. இப்போது, பெரியாரிஸ்ட் என்பது என் அடையாளம்.

ஏன் திடீரென பா.ஜ.கவை எதிர்த்துக் களமிறங்கியுள்ளீர்கள்?

மனுதர்ம சாஸ்திரத்தில் பெண்கள் கேவலமாக சித்திரிக்கப்பட்டிருப்பது குறித்து பெண்களுக்கே தெரியவில்லை. எனவே பா.ஜ.கவின் முகத்திரையை கிழிப்பதே என் நோக்கம். அந்தப் பணிக்காக பெரியாரின் வழியில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.