Published:Updated:

மூன்று நாய்கள், ஒரு பூனை... எனக்கு நான்கு குழந்தைகள்!

 மமதி சாரி
பிரீமியம் ஸ்டோரி
மமதி சாரி

புதிய நம்பிக்கை

மூன்று நாய்கள், ஒரு பூனை... எனக்கு நான்கு குழந்தைகள்!

புதிய நம்பிக்கை

Published:Updated:
 மமதி சாரி
பிரீமியம் ஸ்டோரி
மமதி சாரி

மிழ்த் தொலைக் காட்சிகளில் தொகுப்பாளராகப் புகழ்பெற்ற மமதி சாரி, அழகிய தமிழ் நடையில் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர். தனிப்பட்ட வாழ்க்கையில் பல தடைகளைக் கடந்து, மீண்டும் மீடியா பணிக்குத் திரும்பினார். இப்போது சன் லைஃப் தொலைக்காட்சியில், `நானும் ஃபிட்டுதான்’ நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

`நானும் ஃபிட்டுதான்’ நிகழ்ச்சியின் சிறப்பம்சம் என்ன?

முன்பெல்லாம் 40 - 50 வயதுகளில் ஒருவருக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் இப்போது, 20 - 30 வயதினருக்கே அதிகம் ஏற்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்னைகளுக்கான காரணங்கள், தீர்வுகள், வரும் முன் காப்பது, பிரச்னைக்கான அறிகுறிகளைக் கண்டறிவது உள்ளிட்ட எல்லா விஷயங்கள் குறித்தும் விளக்குகிறோம். உணவு முதல் உடற்பயிற்சி வரை பல செய்திகளை எளிமையாகக் கூறுகிறோம். நாங்கள் விவாதிக்கவிருக்கும் பாதிப்புகளுடன் இருக்கும் நபர்களையும் சந்தித்துப் பேசுவோம். இதனால் ஒரு பிரச்னைக்கான முழுமையான தீர்வைக் கொடுக்க முடிகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிகழ்ச்சியில் ரீ-என்ட்ரி கொடுக்க என்ன காரணம்?

தனிப்பட்ட என் வாழ்க்கைப் பிரச்னைகளிலிருந்து மீண்டு, 2016-ம் ஆண்டு முதல் மீண்டும் மீடியா பணிகளில் கவனம் செலுத்துகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளில் எனக்குப் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தாலும், அவை என் மனதுக்குப் பிடிக்கவில்லை. ஆழமும் அர்த்தமும் இருக்கும்படியான நிகழ்ச்சிகளில்தாம் இதுவரையிலும் நான் பணியாற்றியிருக்கிறேன்.

மூன்று நாய்கள்,  ஒரு பூனை... 
எனக்கு நான்கு குழந்தைகள்!

ஆரோக்கியம்தான் வாழ்க்கையின் அடிப்படை. வாழ்க்கையில் வெற்றிபெற உடலில் வலிமை தேவை. சிறுவயது முதலே உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். அதற்கு இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவும். எனவேதான், இதில் பணியாற்ற ஒப்புக்கொண்டேன்.

பள்ளிப் படிப்பை முடித்ததும் மருத்துவராக ஆசைப்பட்டேன். ஒருங்கிணைந்த ஏழு வருட எம்.டி படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். ஆனாலும், அந்தப் படிப்பை இரண்டு ஆண்டுகள் மட்டுமே படித்தேன். தொகுப்பாளராக ஆன பிறகும் மருத்துவத்துறை மீதான என் ஆர்வம் குறையவில்லை. `நானும் ஃபிட்டுதான்’ நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுக்க இதுவும் ஒரு காரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சவால்களைக் கடந்து வந்த நீங்கள், இப்போது மகிழ்ச்சியான மனநிலையில்தான் பணியாற்றுகிறீர்களா?

(சிரிக்கிறார்) என் வாழ்க்கைப் பயணம் வித்தியாசமானது. 1990-களில் தொகுப்பாளராகப் பணியாற்ற ஆரம்பித்தேன். 2000-ம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமாக இருந்தேன். சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்... அந்தக் காலகட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்நாட்டில் அதிக ஊதியம் பெறும் தொகுப்பாளராக நான்தான் இருந்தேன். ஆனால், பர்சனல் வாழ்க்கை சரியாக அமையவில்லை. என் திருமண வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள நான் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை. அந்த நேரத்தில் மன அழுத்தத்தின் உச்சத்தில் இருந்தேன். வாழ்வாதாரத் தேவைகளுக்காக மீண்டும் பணிக்குச் செல்லலாம் என முடிவெடுத்தேன். வாய்ப்புகள் கிடைத்தாலும், மனத்தளவில் ஆரோக்கியமாக இல்லாத நிலையில், இப்போது வேலை செய்வது சரி வராது என முடிவெடுத்தேன்.

மூன்று நாய்கள்,  ஒரு பூனை... 
எனக்கு நான்கு குழந்தைகள்!

அப்போது, எதற்கெடுத்தாலும் பயமாக இருந்தது. தனிமையில் ஒரு நிமிடம் இருக்கக்கூட பயந்தேன். எனக்கு ஆறுதல் சொல்லவும் யாருமில்லை. அப்போதைய என் நிலையில் வேறு சிலர் இருந்திருந்தால், தவறான முடிவுகளை எடுத்திருக்கக்கூடும். நான் அப்படி நினைக்கவில்லை என்பதுதான் என் பலம். அப்போது, புத்தகங்கள்தாம் என் வாழ்க்கையை மாற்றின. மனிதர்களால் எனக்குக் கிடைக்காத நம்பிக்கையை பல்வேறு புத்தகங்கள் கொடுத்தன. தனிமையில் சில தொலைதூரப் பயணங்களை மேற்கொண்டேன். இதனால் எனக்கு நம்பிக்கை அதிகரித்தது. ஆனால், எதுவும் அவ்வளவு எளிதில் நடந்துவிடவில்லை. `நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்கும். அதை நோக்கி நகர்வோம்’ என்ற புதிய நம்பிக்கையுடன் மீண்டும் என் வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்கினேன். `பிறகு, இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லையா?’ என்று கேட்கலாம். நிச்சயம் இன்னும்கூட பிரச்னைகள் தொடர்கின்றன. ஆனால், அவற்றுக்காகக் கலங்கி உட்காரும் மனநிலையில் நானில்லை. `எதையும் ஒரு கை பார்த்துவிடலாம்' என்கிற நம்பிக்கை மட்டுமே என்னை இயக்குகிறது. என் பணிகளில் முழு மனதுடன் மகிழ்ச்சியாகவே பணியாற்றுகிறேன். பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், எனக்குப் பிடித்த நிகழ்ச்சிகளில் மட்டுமே பணியாற்றுவதைக் கொள்கையாக வைத்திருக் கிறேன்.

தனிமை வாழ்க்கை உங்களுக்கு கற்றுக் கொடுத்தவை?

2013-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை தனிமையில்தான் இனிமை காண்கிறேன். மூன்று நாய்கள் மற்றும் ஒரு பூனை என எனக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள். இதனால் நான் தனிமையில் வசிப்பதாக நினைத்துக்கொள்வதில்லை. நம்மீது நமக்கு எப்போதும் அன்பு மற்றும் பாசம் இருக்க வேண்டும். அப்போதுதான் பிறருக்கு நாம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அந்த நிலைக்கு என்னை நகர்த்தியிருக்கிறேன். தினமும் உடற்பயிற்சிக்கு ஒரு மணிநேரம் ஒதுக்குகிறேன். சில விளையாட்டிலும் கவனம் செலுத்துகிறேன். பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்திக்கொண்டிருப்பதால், தனிமையில் இருப்பதாக நினைக்கவில்லை. அதற்காக வருத்தப் படுவதுமில்லை!

சென்னையில் ஜாலி டே!

துரை மாநகரமே அதிரப்போகுது என்று அவள் விகடன் ஜாலி டே வாசகிகள் திருவிழா அறிவிப்பைப் பார்த்தவுடன் நமது சிங்காரச் சென்னையில் எப்போது என்று எதிர்பார்க்க வைத்துவிட்டது.

- நிர்மலா ராவ், சென்னை-73

(விரைவில்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism