
ஐவர்
நடிகை மேகா ஆகாஷ் தன் வாழ்க்கையின் முக்கியமான ஐந்து நபர்கள் பற்றிப் பகிர்கிறார் இங்கே...
பாட்டி
என் வாழ்க்கையில் மறக்க முடியாத, முக்கியத்துவம் வாய்ந்த முதல் நபர்... என் பாட்டி கோமளா. ஏன்னா, சின்ன வயசுலேருந்து என்னோட எல்லா வளர்ச்சிக்கும் பாட்டிதான் காரணமா இருந்திருக்காங்க...

அம்மா
ரெண்டாவது... என் அம்மா பிந்து. எல்லாருக்கும் அம்மான்னா ரொம்பவே பிடிக்கும். அம்மா சொல்றதைத்தான் கேட்பாங்க. நானும் அப்படித்தான். எந்த முடிவையும் அம்மாகிட்ட ஒருவார்த்தை கேட்டுவிட்டுதான் எடுப்பேன். எனக்காக அம்மா நிறைய தியாகம் பண்ணியிருக்காங்க. அவங்களுடைய வேலையையெல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு எனக்காக ஷூட்டிங் ஸ்பாட் வருவாங்க. மணிக்கணக்கா காத்திருப்பாங்க. என் வாழ்க்கையில் அன்றும் இன்றும் என்றும் முக்கியமான நபர் என் அம்மா.

அப்பா
மூணாவது... அப்பா ஆகாஷ். அவர் சின்ன வயசுல நிறைய கஷ்டங்களைப் பார்த்திருக்கார். போராடி மேலே வந்தவர். நானும் என் குடும்பமும் இப்போ நல்ல நிலைமைல இருக்கறதுக்கு அப்பா பட்ட கஷ்டங்களே காரணம். என்னோட கனவை அடைய முடிஞ்சதுக்கும் அவர்தான் காரணம். வலிகளைத் தாண்டி எப்படி முன்னேறிச் செல்லணும்னு அப்பா தன் வாழ்க்கை மூலமா கற்றுக்கொடுத்திருக்கார்.
இயக்குநர் கெளதம்
நாலாவது... என் மரியாதைக்குரிய இயக்குநர் கெளதம் சார். சினிமா பத்தி நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கார். இந்தத் துறையில் என்னை உறுதியா நிறுத்தியிருக்கார். `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் என்னோட கேரக்டரான லேகாவை அழகாக வெளிப்படுத்தியிருக்கார். என்னை முழுசா நம்புகிறவர் அவர்.

எம்.எஸ்.டோனி
அஞ்சாவது... எம்.எஸ்.டோனி. குட்டிப் பெண்ணா இருந்தபோதே நான் அவருடைய ஃபேன். அவரைப் பார்த்தே நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டிருக்கேன். அவருடைய விடாமுயற்சியும் உழைப்பும் உறுதியும் பிடிக்கும். அவருடைய இன்ஸ்பிரேஷன் மூலமாகவே நான் நிறைய விஷயங்கள் பண்ணியிருக்கேன்.