கர்நாடகாவிலுள்ள பேளூருக்கு அருகில் அமைந்துள்ளது ஹொய்சாளேஸ்வரர் (Hoysala) ஆலயம். அந்த ஆலயத்தை அம்ருதேஸ்வரர் ஆலயம் என்றும் குறிப்பிடுகின்றனர். துவாராகபுரியைச் சேர்ந்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்ட ஹொய்சாளர்களால் (1121-ல்) கட்டப்பட்ட இந்தச் சிவன் கோயிலில் ஹொய்சாளேஸ்வரர், சாந்தலேஸ்வரர் என இரு சந்நிதிகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாகக் கட்டடக்கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில் மிகப்பெரிய கலைப் பொக்கிஷமாக, பிரமாண்டமாய் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது இந்தக் கோயில்!

இந்தக் கோயில் மன்னனால் மட்டுமில்லாமல் அந்த நகரத்தின் செல்வந்தர்களாக விளங்கிய குடிமக்களால் கட்டப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இந்தக் கோயில் தென்னிந்தியாவில் உள்ள பெரிய சிவன் கோயில்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விஷ்ணுவை வழிபடக்கூடிய ஹோய்சாளப் பேரரசை ஆண்ட மன்னன் விஷ்ணுவர்தனும் அம்மன்னனின் வழித்தோன்றல்களும் சிவனின் மீது நம்பிக்கையோடு இருந்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடாகவே இக்கோயிலை கட்டியதாகத் தெரிகிறது. மேலும், சமண மதத்தின் மீதும் இவர்களுக்குப் பற்றுள்ள காரணத்தினால் இந்தக் கோயில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும்படி இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். ஹொய்சாளேஸ்வரர் கோயில் முழுக்க ஒருவகை சோப்புக் கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வடிக்க இலகுவான மெழுகு போன்று இந்தப் பாறைகள் அமைந்ததால் எழுத்தில் வடிக்க முடியாத வகையில் கலை நயத்துடன் இங்கே சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

பகவான் விஷ்ணு அவரது மனைவி லஷ்மியுடன் இருப்பது போன்ற சிற்பம் இந்தக் கோயிலில் இடம் பெற்றிருக்கிறது. மிகவும் பிரமிக்க வைக்கும் கலைநுட்ப வேலைப்பாடுகளுடன் இந்தக் கோயில் காட்சியளிக்கிறது. வரலாற்றில் முக்கியமாகச் சொல்லப்படும் அத்தனை தெய்வங்களின் உருவங்களும் இந்தக் கோயில் சிற்பங்களில் இடம் பெற்றிருக்கின்றன.
இந்தக் கோயில் சிற்பத்தில் காணப்படும் இரண்டு முக்கிய தெய்வங்கள், சிவன் மற்றும் விஷ்ணு. அவர்கள் இருவருடைய பல்வேறு அவதாரங்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன. உதாரணமாக, சிவபெருமான் கொல்லப்பட்ட யானையின் மீது நடனம் ஆடுவது, தனது மனையாளான பார்வதி தேவியுடன் காட்சியளிப்பது, பைரவராக காட்சி தருவது, சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கும் மகாவிஷ்ணு பாம்புப் படுக்கையில் தனது மனைவி லட்சுமியுடன் வீற்றிருப்பது போன்ற வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்கள் பலவும் இந்தக் கோயில் சிற்பத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
எப்படி நமக்கு தஞ்சை பெரிய கோவில் இருக்கிறதோ அதே போன்று கர்நாடக மக்களுக்கு இந்த ஹோய்சாலா ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இடம் பெற்றிருக்கும் சிற்பங்களைத்தான் நடிகை நயன்தாரா அவருடைய திருமண சேலையில் முக்கிய அம்சமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
பாரம்பரிய சிறப்பு மிக்க இந்தக் கோயில் சிற்பத்தில் அமைந்திருக்கும் திருமகள், அதிர்ஷ்டத்தையும், செல்வ வளத்தையும் குறிப்பதால் அவர்களுடைய திருமண உடைகளில் குறிப்பிட்டு லஷ்மியின் உருவத்தையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். திருமகள் திருவருள் இருந்தால், சகலமும் கிடைக்கும் என்ற நம்பிக்கை யாருக்கும் உண்டுதானே!