Published:Updated:

`பருத்தி வீரன்' டு `பொன்னியின் செல்வன்'- தமிழ் சினிமாவில் கார்த்தியின் இடம் எது?!

Karthi, கார்த்தி
Karthi, கார்த்தி

ரஜினி போல ஒருவர், கமல் போல ஒருவர் என்பது மாறி, ரஜினியும் கமலும் இணைந்தது போன்ற அம்சம் கொண்டவர்களை ரசிகர்கள் தேடி, ரசிக்கத் தொடங்கினர். அந்தத் தேடலுக்கு விடையாகக் கிடைத்தவர்தான், கார்த்தி!

தமிழ் சினிமாவின் ரசிக மனோபாவம், தொடக்கத்திலிருந்தே இருமை எதிர்வுகளாக எதிரிணை நாயகர்களை உருவாக்கிக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா எனத் தொடங்கிய இவ்வழக்கம், எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் எனத் தொடர்ந்தது. சினிமாவை இருவேறு விதமாக அணுகிய எம்.ஜி.ஆரும் சிவாஜியும், தத்தமது பாணியில் அதன் உச்சத்தைத் தொட்டதன் விளைவு, இந்த இருமையைத் துல்லியமாக விளக்கியது. இவர்களுக்கு அடுத்த தலைமுறையில் எம்.ஜி.ஆர் வழியில் ரஜினியும், சிவாஜி வழியில் கமலும் எதிரிணை நாயகர்களாகக் கொண்டாடப்பட்டனர். ஆனால், இங்குதான் நடந்தது அந்த மாற்றம்...

Karthi, Tamannah
Karthi, Tamannah

எம்.ஜி.ஆரும் ரஜினியும் சினிமாவைத் தாண்டி சமூகத்தில் உண்டாக்கிய அதிர்வானது ரஜினி - கமலுக்கு அடுத்த தலைமுறை நடிகர்கள் மற்றும் ரசிகர்களின் மத்தியில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. ரஜினி போல ஒருவர், கமல் போல ஒருவர் என்பது உடைந்து, விஜய் - அஜித் இருவருமே ரஜினி வழியில் உருவாகினர். இந்த ஒருமைத்தன்மை, காலப்போக்கில் ஒருவித அயர்ச்சியை உண்டாக்கத் தொடங்க, கமல் வழியில் வருபவர்களாக சூர்யாவும், விக்ரமும் கண்டறியபட்டு பேலன்ஸ் ஆனது. பிறகு, சூர்யா, விக்ரம் இருவருமே கமல் பாணியிலிருந்து, ரஜினியின் பாணிக்கு மாற முயன்றபோது, ரசிக மனோபாவத்தில் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. ரஜினி போல ஒருவர், கமல் போல ஒருவர் என்பது மாறி, ரஜினியும் கமலும் இணைந்தது போன்ற அம்சம் கொண்டவர்களை ரசிகர்கள் தேடத் தொடங்கினர். அந்தத் தேடலுக்கு விடையாகக் கிடைத்தவர்தான், கார்த்தி!

சினிமாவில் 17 ஆண்டுகள் 18 படங்கள், 18 வெவ்வேறு இயக்குநர்கள், பல ஜானர்கள் என வெர்சடைலான திரைப் பயணம் கார்த்தியுடைது. முதல் படமான `பருத்திவீரன்' திரைப்படம் அடைந்த வெற்றி, `பராசக்தி' படத்தின் வெற்றியோடு ஒப்பிடப்பட்டது. ஒரு அறிமுக நடிகரின் திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றியடைவது, இதற்கு முன் `பராசக்தி'யில்தான் நிகழ்ந்தது என்றனர்.

Karthi, Priyamani
Karthi, Priyamani

தென் தமிழகத்தின் செம்மண் நிலத்து கிராமங்களில், சண்டியர்த்தனம் செய்துகொண்டு திரியும் ஒரு இளைஞனைத் தன் நடிப்பின்மூலம் அச்சு அசலாக வார்த்தெடுத்தார் கார்த்தி. மல்யுத்த வீரர்களைப் பந்தாடும்போது நெஞ்சைப் படபடக்கவைத்தார், `ஃபுல் அடித்தும் போதையில்லை' என கவிதை சொல்லி சிரிக்கவும் வைத்தார். இறுதிக் காட்சியிலோ, எல்லோர் நெஞ்சையும் கண்ணீரால் கனமாக்கினார். 'பருத்திவீரன்' போன்ற ஒரு லைஃப் டைம் கதாபாத்திரத்தை, மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்டது அட்டகாசமான ஒரு ஆரம்பத்தைக் கொடுத்தது.

Karthi, Aayirathil Oruvan
Karthi, Aayirathil Oruvan

`பருத்திவீரன்' வெளியாகி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு `ஆயிரத்தில் ஒருவன்' வெளியானது. அந்தப் படத்தினுள் நிகழும் ஜானர் ஷிஃப்ட்டின் கனத்தை கார்த்தியின் தோளில்தான் இறக்கிவைத்தார் இயக்குநர். அதை சின்ன இடருமின்றி தெம்பாகத் தூக்கி நடந்திருப்பார் கார்த்தி. `என்ன, ஒரே அழுக்காவே நடிக்கிறாப்ல' என்கிற விமர்சனத்துக்கும் `பையா'வில் பதில் சொன்னார். படத்தில் கார்த்தி அணிந்துவரும் ஹூட் வைத்த சட்டைகள், சத்யா பஜாரில் ஆரம்பித்து சூப்பர் மால்கள் வரை `பையா' சட்டையென விற்றுத் தீர்ந்தன. `பையா' படமும், `நான் மகான் அல்ல' படத்தின் `இறகைப் போலே' பாடலும் தமிழ் பெண்கள் மட்டுமல்லாது ஆந்திர பெண்களின் ட்ரீம் பாயாகவும் கார்த்தியைக் கொண்டுசேர்த்தது.

`நான் மகான் அல்ல' படத்தின் நேர்த்தியும், கார்த்தியின் அற்புதமான நடிப்பும் ஆண் ரசிகர்கள் வட்டத்தையும் பெரிதாக்கியது. 2011-ம் ஆண்டு பொங்கல் ரேஸில் `காவலன்', `ஆடுகளம்' படங்களுடன் வெளியான `சிறுத்தை', எதிர்பாராத அளவுக்கு பெரும் பாய்ச்சல் நிகழ்த்தியது. வணிகரீதியாக மிகப்பெரும் வெற்றி அடைந்தது.

இப்படி, தனது முதல் 5 படங்களிலேயே திறமைரீதியாகவும், வணிகரீதியாகவும் பெரும் நம்பிக்கையாக உருவெடுத்தார் கார்த்தி. ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகள், கார்த்தியின் கரியரில் மோசமான ஆண்டுகளாக மாறியது. 'கார்த்தி ஒரு ஒன்-டைம் ஒண்டர்' என்கிற பேச்சுகள் பரவலாக ஒலிக்கத் தொடங்கின.

Karthi, Madras
Karthi, Madras

அப்போதுதான் வெளியானது, `மெட்ராஸ்'. வணிகரீதியாகவும், விமர்சனரீதியாகவும் மிகப்பெரும் வெற்றியடைந்து, கார்த்தியின் அழுத்தமான கம்-பேக்குக்கு பாதை போட்டது 'மெட்ராஸ்.' அதன்பிறகு, கார்த்தியின் கதை மற்றும் கதாபாத்திர தேர்வுகளில் ஆரோக்கியமான மாற்றம், நடிப்பிலும் நல்ல பாய்ச்சல். உதாரணமாக, பருத்திவீரனின் எந்தச் சாயலையும் கொம்பனிடம் காணமுடியாது. தேவுக்கு ஹூட் வைத்திருக்கும் சட்டையை மாட்டிவிட்டாலும் `பையா' சிவா போல் தெரியாது. 'சிறுத்தை' ரத்னவேல் பாண்டியனுக்கும், தீரனுக்கும் இடையில் அத்தனை வித்தியாசங்கள்.

கார்த்தியின் கரியரில் சில ஆச்சர்யங்களும் இருக்கின்றன. இவர் நடித்து வெளியான படங்களின் இயக்குநர்களில் யாருமே இதுவரை ரிப்பீட் இல்லை. முதல்முறையாக, இப்போதுதான் 'காற்று வெளியிடை' படத்துக்கு அடுத்தபடியாக மணிரத்னத்துடன் 'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்திருக்கிறார். அதேபோல், கார்த்தியை வைத்து படம் இயக்கி ஹிட் கொடுத்தவர்களுக்கு, அடுத்து மாஸ் ஹீரோக்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Karthi
Karthi

'சிறுத்தை' இயக்கிய சிவா அடுத்தடுத்து அஜித்தை வைத்து நான்கு படங்கள் இயக்கினார். 'மெட்ராஸ்' படத்துக்கு அடுத்து பா.இரஞ்சித், 'கபாலி', 'காலா' எனத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாரை வைத்து இரண்டு படங்கள் இயக்கினார். 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்கு அடுத்து இப்போது ஹெச்.வினோத்துக்கும் அஜித்தை ஹீரோவாக வைத்து இரண்டு படங்கள் இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 'கைதி' இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜயைவைத்து 'மாஸ்டர்' இயக்கியிருக்கிறார். இவர் மீண்டும் விஜய்-யுடன் இணைய இருக்கிறார் என்பதோடு, அடுத்து கமல் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் படத்தையும் இயக்க இருக்கிறார். கார்த்தியை இந்த விதத்தில் அதிர்ஷ்ட நடிகர் என்றுகூட சொல்லலாம். அவரை வைத்து ஹிட் கொடுத்ததுவிட்டால், இயக்குநர்களின் கரியர் கிராஃப் உயரத் தொடங்கிவிடும்.

தொட்டு நடிக்கக்கூடாது... அனுமதி கிடைத்தும் `நோ' ஷூட்டிங்... சின்னத்திரையில் என்னதான் நடக்கிறது?
Karthi
Karthi

`கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கோயிலில் நடக்கும் அந்தக் காட்சி, கார்த்தியின் பிரமாதமான நடிப்புத்திறனுக்கு சமீபத்திய உதாரணம். படத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவும் அந்தக் காட்சிதான். அதில் மிகச்சிறப்பாக நடித்து நம் கண்களில் கண்ணீர் வரவைத்திருப்பார். `கைதி' படமெல்லாம் கார்த்தியின் ருத்ரதாண்டவம். தீனாவிடம், தன் மனைவி பற்றி விவரிக்கும் காட்சி அசாத்தியமானது. கார்த்தியின் கரியரைப் பார்க்கையில், முன் சொன்னதுபோல் எல்லா விதமான பாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறார். அவற்றில் சிறப்பாகப் பொருந்தியும் இருக்கிறார். வணிக அம்சங்களையும், பரிசோதனை முயற்சிகளையும் அழகாக பேலன்ஸ் செய்து, சிறப்பான திரைப்படங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும் கார்த்தியை உச்சத்தில் ஏற்றிக்கொண்டாட காத்திருக்கிறது கோலிவுட்!

அடுத்த கட்டுரைக்கு