Published:Updated:

படத்தில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ - பிளாக் பாண்டியின் யாருமறியா மற்றொரு முகம் பற்றித் தெரியுமா?

பிளாக் பாண்டி

"கொரோனா காலத்தில் பலருக்கும் உதவி பண்ணியிருக்கோம். இது தவிர, மளிகைப் பொருள்கள், படிப்பு செலவு, மருத்துவச் செலவு அவ்வளவு ஏன் இறுதிச் சடங்குக்குக் கூட நாங்க உதவியிருக்கோம்." - பிளாக் பாண்டி

படத்தில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ - பிளாக் பாண்டியின் யாருமறியா மற்றொரு முகம் பற்றித் தெரியுமா?

"கொரோனா காலத்தில் பலருக்கும் உதவி பண்ணியிருக்கோம். இது தவிர, மளிகைப் பொருள்கள், படிப்பு செலவு, மருத்துவச் செலவு அவ்வளவு ஏன் இறுதிச் சடங்குக்குக் கூட நாங்க உதவியிருக்கோம்." - பிளாக் பாண்டி

Published:Updated:
பிளாக் பாண்டி
"என்னை படத்தில் காமெடியனாக பார்த்திருப்பீர்கள். ஆனால், நிஜத்தில் என்னுடைய முகம் வேறு!" என்கிறார் பிளாக் பாண்டி. சின்னத்திரை, வெள்ளித்திரை எனப் பலதரப்பட்ட தளங்களில் இவருடைய முகத்தை பார்த்திருக்கிறோம். ஆனால் பலரும் அறியாத பிளாக் பாண்டியின் இன்னொரு முகம் என்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் அப்படியே நேரெதிராய் ரம்மியமான சூழலில் நிசப்தமாக விரிகிறது அந்தச் சாலை. 'மகா ஹோம்மேட் ஃபுட்' என்கிற பெயர் பலகையை அடையாளம் கண்டு அந்த வீட்டிற்குள் நுழைந்தோம். பரபரப்பாக ஒரு பிளேட்டில் சாப்பாட்டை பிளாக் பாண்டி வைத்துக் கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து அவரது தங்கையின் மாமியார் அந்தத் தட்டில் குழம்பு ஊற்ற, அவரது அம்மா அதில் ஸ்வீட் வைக்க அவர் தங்கை அதை பேக் செய்ய... தங்கையின் மகள் அதை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார். குடும்பமே ஒன்றிணைந்து சாப்பாடு கட்டிக் கொண்டிருந்தனர். என்னவென்று அவரிடமே கேட்டோம்.

பிளாக் பாண்டி
பிளாக் பாண்டி

"'உதவும் மனிதம்' என்கிற பெயரில் என்னால் முடிஞ்ச உதவியை ஏழை, எளிய மக்களுக்குப் பண்றேன். பிறருக்கு உதவணும் என்கிற குணம், என் அப்பா எனக்கு சொல்லிக் கொடுத்தது. சோறு போடுறதை விட மிகப்பெரிய நன்மை எதுவும் கிடையாதுன்னு அப்பா அடிக்கடி சொல்லுவார். மனிதனுக்கு அடிப்படைத் தேவை உணவுதான். அவன் குடும்பம் நல்லா சாப்பிட்டாதான் அவனால அடுத்து என்ன பண்ணலாம்னே யோசிக்க முடியும். அடிப்படை விஷயத்துக்கு நாம உதவி செய்தா அடுத்தடுத்து முன்னேற அவங்களே என்ன வழின்னு யோசிச்சிப்பாங்க என்பது என் அப்பா எனக்குக் கொடுத்த நம்பிக்கை.

பிளாக் பாண்டி குடும்பத்தினர்
பிளாக் பாண்டி குடும்பத்தினர்

பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னாடியே பலருக்கும் உதவணும் என்கிற எண்ணம் இருந்துச்சு. ஆனா, எதையும் ஆரம்பிச்சு பாதியிலேயே விட்டுடக் கூடாதுங்கிறதுக்காக நம்மால முடியும்னு எப்ப முழு நம்பிக்கை வருதோ அப்ப ஆரம்பிக்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கொடுத்த நம்பிக்கையில் ரெண்டு வருஷமா 'உதவும் மனிதம்' என்கிற அறக்கட்டளை நடத்திட்டு வர்றேன்.

எங்களால முடிஞ்சதை, பெரிய மனசு உள்ள யாராவது எளிய மனிதர்களுக்கு உதவணும்னு நினைச்சு எங்களைத் தொடர்பு கொண்டாங்கன்னா அவங்க கொடுக்கிற பணத்தை வச்சு சமைச்சு சாலைகளில் வசிக்கக்கூடியவர்களுக்கு உணவளிப்போம். ஆரம்பத்தில் கடைகளில் வாங்கிட்டு இருந்தோம். நாமளே நம்ம கையால ஏன் சமைச்சு போடக் கூடாதுன்னு தோணுச்சு. என் தங்கச்சி ஹோம் மேட் ஃபுட் பிசினஸ்தான் பண்றா. அதனால அவளே சமைச்சு கொடுக்கிறேன்னு சொன்னா. வீட்ல எப்படிச் சாப்பிடுவோமோ அதே மாதிரி சாதம், சைட் டிஷ், குழம்புன்னு விதவிதமா சமைச்சு கொடுப்போம். வீட்ல எப்படி காரம், இனிப்பு எல்லாம் அளவா போட்டு சமைப்போமோ அப்படிப் பார்த்து பார்த்துதான் சமைச்சு கொடுப்பா. நல்ல அரிசி, தரமான எண்ணெய்னு வீட்டுக்குப் பயன்படுத்தும் பொருள்களைதான் நாங்க சமையலுக்கும் பயன்படுத்துறோம்.

பிளாக் பாண்டி குடும்பத்தினர்
பிளாக் பாண்டி குடும்பத்தினர்

கொரோனா காலத்தில் பலருக்கும் உதவி பண்ணியிருக்கோம். இது தவிர, மளிகைப் பொருள்கள், படிப்பு செலவு, மருத்துவச் செலவு அவ்வளவு ஏன் இறுதிச் சடங்குக்குக் கூட நாங்க உதவியிருக்கோம். எனக்கு மாசத்தில் 30 நாளும் ஷூட்டிங்லாம் இருக்கிறது இல்ல. எப்பவும் நான் பிஸியாவும் இருக்கிறதில்ல. நான் ஃப்ரீயா இருக்கும்போது நானே எல்லா வேலைகளையும் பண்ணிடுவேன். நான் இல்லாத பட்சத்தில் என் தங்கச்சி, அவளோட கணவர் ஹெல்ப் பண்ணுவாங்க. இல்லைன்னா என்கிட்ட ஒரு டீம் இருக்காங்க. நான் இல்லாதப்ப அவங்க எல்லா வேலையும் பார்த்துப்பாங்க.

எனக்கு சின்ன வயசில இருந்தே சமுத்திரக்கனி அண்ணன் நல்ல பழக்கம். அவர் வெளியில் தெரியாம பலருக்கும் உதவி பண்ணிட்டு இருக்கார். ஒருநாள் அவர்கிட்ட பேசும்போது, 'நீ என்ன பண்ணிட்டு இருக்க தெரியுமாடா... பெரிய விஷயம்'ன்னு சொன்னார். 'ஏதாச்சும் பண்ணனும், என்ன பண்ணலாம்'ன்னு அவர் கேட்கவும், 'வாரத்துல ஒருநாள் அன்னதானம் கொடுத்தா பலருக்கும் உதவியா இருக்கும் அண்ணா'ன்னு சொன்னேன். ஏன்னா இப்ப வரைக்கும் எங்ககிட்ட இருக்கிற பணத்தில், நண்பர்கள் உதவியில்தான் சாப்பாடு கொடுத்துட்டு இருக்கோம். அவர்கிட்ட சொன்னதும், சரி ஞாயிற்றுக்கிழமை நான் கொடுக்கிறேன்னு சொன்னார். கிட்டத்தட்ட ஒரு வருஷமா ஞாயிற்றுக்கிழமை சாப்பாட்டுக்கு அவர் கொடுக்கிற பணத்தில்தான் எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்துட்டு இருக்கோம்.

பிளாக் பாண்டி
பிளாக் பாண்டி

கொடுக்கும்போதே அவர் பெயரையும் குறிப்பிட்டுதான் கொடுப்போம். அவர்னு இல்ல யார் அன்னைக்கு அன்னதானத்திற்குக் காசு கொடுக்கிறாங்களோ அவங்க கொடுத்ததுங்கிற தகவலைச் சொல்லிடுவோம். நம்மகிட்ட சாப்பாடு வாங்கினதும் அவங்க முகத்துல வர்ற சிரிப்பை பார்க்கணுமே அந்த மனநிம்மதி எங்கே போனாலும் கிடைக்காதுங்க. பலரும் நம்ம இப்படிச் சேவை பண்றதை பார்த்து, இதை வச்சுதான் இவன் சம்பாதிக்கிறான்னுலாம் தப்பா பேசிடுவாங்களோன்னுலாம் தயங்கியிருக்கேன். ஆனாலும், என் ஒட்டுமொத்த குடும்பமும் எனக்கு கொடுத்த சப்போர்ட்னாலதான் என்னால நான் நினைச்சதை பண்ண முடியுது.

ஞாயிற்றுக்கிழமை ஒருநாளுக்கு உதவி பண்ண அண்ணன் கிடைச்சிட்டார். மீதியுள்ள ஆறு நாளுக்கும் யாராவது மனமுவந்து உதவி பண்ணினாங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும். ஒளிவுமறைவு இல்லாம வெளிப்படையாகவே எல்லா விஷயமும் பண்றோம். அதனால நிச்சயம் அவங்கக் கொடுக்கிற பணம் வீணாகாது. பலரும் இதுமூலமா நான் சம்பாதிக்கிறேன்னு நினைக்கிறாங்க. உண்மையைச் சொல்லணும்னா நாங்க இன்னமும் வாடகை வீட்லதான் குடியிருக்கிறோம். நடுத்தர குடும்பமாக வாழத் தேவையான விஷயங்கள் எங்ககிட்ட இருக்கு. இருக்கிறதை வச்சு நிறைவா வாழ்ந்துட்டு இருக்கோம்" என்றார்.

பிளாக் பாண்டி
பிளாக் பாண்டி

அவரது அம்மா மீனாட்சி பேசும்போது, "என் மாமனார் நாடகத்திற்குப் போகும்போதே பலருக்கும் உதவி செய்வார். எம்ஜிஆர் வீட்டில் எப்பவும் உலை கொதிச்சிட்டே இருக்கும்னு என் கணவர் சொல்லி கேட்டிருக்கேன். அவர் மாதிரி நாம சம்பாதிக்கிறதுல ஒரு பங்கு இல்லாதவங்களுக்கு கொடுக்கணும்னு சொல்லுவார். அப்படித்தான் என் மகனும் இருக்கான். இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்னு எல்லார்கிட்டேயும் நான் கேட்டுக்கிறது ஒண்ணுதான். 'வாய்ப்பு கிடைக்குறவங்களுக்கே மறுபடி, மறுபடி வாய்ப்பு கொடுக்கிறதுக்கு பதில் இல்லாதவங்களுக்குக் கொடுத்து உதவுங்க. என் பையனுக்கு வாய்ப்பு கொடுத்து பலருக்கும் உதவத் தயாரிப்பாளர்கள் எல்லாரும் உதவணும். அதுதான் என் கோரிக்கை!" என்றார் உருக்கமாக.

"என் மனைவிக்குப் பிறந்தநாள்... 100 பேருக்கு சாப்பாடு கொடுக்கணும்" என போன் கால் வர நம்மிடமிருந்து விடைபெற்றார். நடிகர் பிளாக் பாண்டியுடன் ஒருநாள் செலவிட்டோம். அவருடைய உதவும் மனிதம் குறித்து தெரிந்து கொள்ள மறக்காமல் இந்த லிங்கை கிளிக் செய்யவும்!

படங்கள் - பிரவீன்