ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
Published:Updated:

“அந்தக் கொள்கையில கடைசிவரை உறுதியா இருப்பேன்!” - ‘பத்மஸ்ரீ’ சௌகார்ஜானகி

சௌகார்ஜானகி - முத்துக்கண்ணம்மா
பிரீமியம் ஸ்டோரி
News
சௌகார்ஜானகி - முத்துக்கண்ணம்மா

என்னைக் காப்பாத்திக்கிற தைரியத்தைக் கடவுள் கொடுத்திருக் கார். அதனாலதான், கொரோனா ஆரம்பிச்சதும் பல மாசத்துக்கு மத்தவங்களோடு எந்த வகையிலும் நேரடி தொடர்பு இல்லாம, தனி மனுஷியா பயமில்லாம வாழ்ந்தேன்.

பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் குடிமக்களுக்கு, மத்திய அரசினால் ஆண்டு தோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. திரைத் துறை பங்களிப்புக்காக, இந்த ஆண்டு பத்ம விருதைப் பெறவிருக்கிறார் செளகார் ஜானகி.

‘புதிய பறவை’ படத்தில் வரும் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடல் மூலமாகப் பட்டிதொட்டியெங்கும் பிர பலமானவர், ‘இரு கோடுகள்’, ‘நீர்க்குமிழி’, ‘தில்லு முல்லு’ போன்ற ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தவர்.கிளாஸிக் காலகட்ட நாயகி. முன்னணி இடம்பிடித்த தென் னிந்திய சினிமாவின் சூப்பர் சீனியர் நடிகை செளகார் ஜானகிக்கு வாழ்த்துகள் கூறி பேசினோம்.

“நடிகர் சிவகுமார் சார், ஏவி.எம்.சரவணன் சார், சத்யராஜ் சார், வைரமுத்து சார் உட்பட பலர் போன்ல வாழ்த்தினாங்க. ‘உங்களுக்கு ரொம்ப காலத்துக்கு முன்பே இந்த விருது கிடைச்சிருக் கணும்’னு பலரும் சொன்னாங்க. விருதுகள் நம்மைத் தேடி வர்றதுதான் கொடுக்கிறவங்களுக்கும், அதை வாங்குறவங்களுக்கும் கெளரவம். அதனால, எந்த ஆதங்கமும் இல்லாம, என் கலைத்துறை தகுதிக்காக இந்த விருதை சந்தோஷமா ஏத்துக்கிறேன்” என்பவர், தெலுங்கில் வெளியான ‘செளகார்’ படத்தில் அறிமுகமாகி, 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர், திரையுலகில் 73 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

“அந்தக் கொள்கையில கடைசிவரை உறுதியா இருப்பேன்!” - ‘பத்மஸ்ரீ’ சௌகார்ஜானகி

பெங்களூருவில் நீண்ட காலமாகத் தனியாக வசிப்பவர், 91 வயதிலும் தனக்கான தேவைகளைத் தானே பூர்த்திசெய்து கொள்கிறார். “விவரம் தெரிஞ்ச பருவத்திலிருந்தே வைராக்கியமான வாழ்க்கைமுறையைத்தான் கடைப்பிடிக்கிறேன். சினிமாவுல பிஸியா வேலை செஞ்சபோதே, என் பிள்ளைகளுக்கான தேவைகளைக் கவனிச்சுட்டு, எனக்குத் தேவையானதை வீட்டுல நானே சமைச்சு, ஷூட்டிங்குக்கு எடுத்துட்டுப்போவேன். என்னால யாருக்கும் எந்த பாரமும் ஏற்படக்கூடாதுங்கிற கொள்கையில இப்பவரைக்கும் உறுதியா இருக்கேன். ‘ஜானு, தனியா ஏன் சிரமப்படுறே? எங்களோடு வந்திடு’ன்னு குடும்பத்துல எல்லோரும் அன்புடன் சொல்லுவாங்க.

என்னைக் காப்பாத்திக்கிற தைரியத்தைக் கடவுள் கொடுத்திருக் கார். அதனாலதான், கொரோனா ஆரம்பிச்சதும் பல மாசத்துக்கு மத்தவங்களோடு எந்த வகையிலும் நேரடி தொடர்பு இல்லாம, தனி மனுஷியா பயமில்லாம வாழ்ந்தேன். தினமும் நாலரை மணிக்கு எழுந்தா, இரவு வரைக்கும் உருப்படியான வேலைகளைச் செஞ்சு நல்லபடியா பொழுதைக் கழிப்பேன். நடிச்சவரைக்கும் போதும்னு எப்பவுமே நான் நினைச்சதில்லை. என்னைத் தேடி வர்ற நல்ல பாத்திரங்களை ஏத்துகிட்டு நடிக்கிறேன். நான் சேர்த்து வெச்ச சம்பாத்தியத்துல, கடைசி காலம்வரை யாருக்கும் சிரமம் கொடுக்காம வாழணும்னு உறுதியோடு இருக்கேன்” என்று நம்பிக்கையுடன் முடித்தார்.

“அந்தக் கொள்கையில கடைசிவரை உறுதியா இருப்பேன்!” - ‘பத்மஸ்ரீ’ சௌகார்ஜானகி

சதிர்கலையின் கடைசிவாரிசு! - ‘பத்மஸ்ரீ’ முத்துக்கண்ணம்மா

ரெட்டை மூக்குத்தி, சிரித்த முகம் என வரவேற்கிறார் முத்துக்கண்ணம்மா. 83 வயதிலும் பாடிக்கொண்டே, பாடலுக்கேற்ற பாவத்துடன் சதிர் நடனம் ஆடி நம்மை மெய் சிலிர்க்கவைப்பவர், பராம்பர்ய நடனமான சதிராட்டம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைப் பூர்வீகமாகக் கொண்டவருக்கு கலைப் பிரிவில், மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

"நான் பொறந்து, வளர்ந்தது விராலி மலை. எங்க குடும்பமே சதிராட்டக் குடும்பம். நான் ஆறாவது தலைமுறை வாரிசு. ஏழு வயசிலேயே, விராலிமலை முருகனுக்கு என்னைப் பொட்டுக்கட்டி விட்டுட்டாங்க. அந்த நேரத்துல என்னோட சேர்த்து மொத்தம் 32 பேர் கோயில்ல சதிராட்டம் ஆடிட்டு இருந் தோம். எங்களை, இறைவனுக்கு சேவை செய்யப் பிறந்த நித்திய சுமங்கலின்னு சொல்வாங்க; மரியாதையா நடத்துவாங்க.

காலை, மாலை இரு வேளையும் 400 படிகள் ஏறி, இறங்கி முருகனை வணங்கிப் பாடி சதிராட்டம் ஆடுவதுதான் எங்க வேலை. பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மாசி மகம், தைப்பூசம், திருவிழானு சதிராட்டம் இங்க களைகட்டும். அப்போ விராலிமலைக் கோயிலை நிர்வகிச்சிக்கிட்டு இருந்த புதுக்கோட்டை மகாராஜா ராஜகோபால தொண்டைமான், எங்களுக்கு வேண்டிய சலுகைகளைச் செஞ்சு கொடுத்தாரு. மத்த இடங்கள்ல சொல்ற மாதிரி, பாலியல் பிரச்னைகள் எல்லாம் இங்க இருந்ததில்ல.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்தப்போ, கோயில்ல சதிர் ஆட தடை போட்டாங்க. மகாராஜாவோட ஆட்சி யும் முடிவுக்கு வந்திடுச்சு என்றாலும், அவர் எங்களுக்கு நில, தலங்களை கொஞ்சம் கொடுத்துட்டுப் போனார். காலப்போக்குல அதெல்லாம் எங்ககிட்ட இருந்து போயிடுச்சு. பலரும் சதிராட்டத்தை விட்டு விவசாயக் கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க. அப்போ என்னோட சேர்த்து சதிர் ஆடுன 32 பேர்ல, இப்போ என்னைத் தவிர ஒருத்தர்கூட உயிரோட இல்ல'' என்பவர், தன் குடும்பம் பற்றிச் சொன்னார்.

''சாமிக்கு பொட்டுக்கட்டி விடப்பட்ட யாரும் அடுத்து தாலிகட்டி திருமணம் செஞ்சுக்க மாட்டாங்க. எங்ககூட சேர்ந்து வாழ விரும்புறவங்ககூட வாழ்வோம். அப்படி என்னைய ஏத்துக்கிட்ட என் கணவர் தண்டபாணி, கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி இறந்து போயிட்டாரு. பிள்ளைங்க இருக்காங்க. கலைஞர்களுக்கான அரசின் உதவித்தொகை ரூ.3000-லதான் என் பிழைப்பு ஓடுது.

பரத நாட்டியத்துக்கு எல்லாம் முன்னோடி எங்க சதிராட்டாம். பாடிக்கிட்டே ஆடணும். விராலிமலைக்கு பக்கத்து ஊரான விராலூர்ல நடக்கிற எட்டாம் நாள் திருவிழாவுக்கு இன்னமும் நான் போய் சதிராடிக்கிட்டு இருக்கேன். இந்தக் கலையை இன்னும் நான் சொல்லிக்கொடுத்துட்டு வர்றேன். பத்ம விருது மூலமா சதிராட்டம் பத்தி அடுத்த தலைமுறைக்கும் தெரியவந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு'' என்கிறார் மனம் நிறைந்து.