காமெடி நடிகராக நம்மிடையே பரிச்சயமான முகம் பிளாக் பாண்டி. அவர் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் . 'உதவும் மனிதம்' என்ற அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்து வருகிறார்.

சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு அவர்களைத் தேடிச் சென்று உணவளித்து வருகிறார். அத்துடன் படிப்பு செலவு, மருத்துவ செலவு, இறுதிச் சடங்கிற்குகூட வசதி இல்லாமல் கஷ்டப்படும் பல குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில், இலங்கையில் விலைவாசி உயர்வால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை அறிந்து இலங்கை மக்களுக்கு நேரடியாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க அனுமதி கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதற்கு இலங்கை கடற்றொழில் அமைச்சர் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில்,

நேசமுடன் வணக்கம்! இடர்களை எதிர்கொள்ளும் இலங்கை வாழ் எமது மக்களுக்கு 'உதவும் மனிதம்' என்ற உணர்வெழுச்சியுடன் நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதை அகம் மகிழ்ந்து வரவேற்கின்றேன். தமிழக மக்களிடமிருந்து அத்தியாவசிய பொருட்களை சேகரித்து நீங்களாகவே எமது மக்களுக்கு அனுப்ப முன்வந்திருக்கும் உங்கள் பணி ஈழத்தமிழ் மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவுக்கும், தொன்மைக்குடி உணர்வுக்கும் மறுபடியும் உயிர் கொடுத்திருக்கிறது. நீங்களே குறிப்பிட்டது போல், வெறும் வாய்ச் சொல்லால் மட்டுமன்றி செயலாலும் இந்தியா எமது மக்களை நேசிக்கின்றது என்பதை உங்கள் 'உதவும் மனிதம்' வெளிப்படுத்தியுள்ளது.
தமிழர்கள், இந்தியர்கள் என இரு அடையாளங்களையும் ஒன்றாக கொண்டிருக்கும் தமிழக மக்களை போலவே,.. நாம் இலங்கையர்கள் என்பதால் தமிழர்கள் என்ற அடையாளத்தையோ, தமிழர்கள் என்பதால் இலங்கையர்கள் என்ற அடையாளத்தையோ நாம் ஒரு போதும் இழந்துவிட முடியாதவர்கள். பேசும் மொழியாலும் கலை கலாசார பண்பாட்டு உணர்வுகளாலும் இணையும் எங்கள் உறவுகள் நீடித்து வளரட்டும். உங்கள் மனிதாபிமான உதவிப் பொருட்களை எமது கப்பல் சேவை மூலம்கொண்டு வர நான் ஆவன செய்கிறேன். ஆகவே, நம்பிக்கையோடு உங்கள் பணிகளை ஆரம்பிக்கலாம். இது குறித்து ஈழத்தமிழ் மக்களின் சார்பாகவும், இலங்கை அரசு சார்பாகவும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். நன்றி! என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டிருக்கிறார்.