Published:Updated:

“ஸ்டேண்ட்-அப் காமெடியிலதான் மனநிறைவு!”

வருண் குரோவர்
பிரீமியம் ஸ்டோரி
News
வருண் குரோவர்

உங்கள் சென்னை பரவாயில்லை பாஸ்... புது அரசு நல்லாவே ஹேண்டில் பண்றதா கேள்விப்பட்டேன். மும்பை உண்மையில் திணறுது

"என்ன நடக்குது நாட்டுல? நிஜமாவே வாழ பயமா இருக்குது. அசாம்ல ஒரு பயிற்சி மருத்துவரை மிருகத்தனமா போட்டு அந்த அடி அடிக்கிறாங்க. இன்னொரு பக்கம் பாபா ராம்தேவ் மாதிரி பக்கா ஏமாற்றுப் பேர்வழிங்க ஓப்பனா மருத்துவர்களைத் திட்டுறாங்க. அவர்களைக் கண்டிக்காம நாம கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்!” - பேச ஆரம்பிக்கும்போதே வார்த்தைகளில் நெருப்பை அள்ளிக்கொட்டுகிறார் வருண் குரோவர். இந்தியில் நம்பர் ஒன் ஸ்டாண்ட்-அப் காமெடியன், கவிஞர், எழுத்தாளர், பாலிவுட்டின் பிரபல திரைக்கதை ஆசிரியர். எல்லாவற்றையும்விட கோபக்கார இளைஞர்!
“ஸ்டேண்ட்-அப் காமெடியிலதான் மனநிறைவு!”
“ஸ்டேண்ட்-அப் காமெடியிலதான் மனநிறைவு!”

``மும்பையில லாக்டௌன் வாழ்க்கை எப்படி போகுது?’’

“உங்கள் சென்னை பரவாயில்லை பாஸ்... புது அரசு நல்லாவே ஹேண்டில் பண்றதா கேள்விப்பட்டேன். மும்பை உண்மையில் திணறுது. மகாராஷ்டிரா ஆளும் அரசு குழப்பமான சில உத்தரவுகளைப் போட்டிருக்காங்க. ஜூன் 15 வரை லாக்டௌன் போட்டதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களை நோக்கி நடக்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப போட்ட உத்தரவுதான் செம காமெடி. தெருக்களில் இடது பக்கம் உள்ள கடைகள் ஒரு நாளும், வலது பக்கக் கடைகள் மற்றொரு நாளும் திறந்துக்கலாம்னு ஒரு உத்தரவு. ‘யாரோட இடது பக்கம், யாரோட வலது பக்கம்னு சொல்லலையே’ன்னு எல்லாக் கடைக்காரர்களும் அவங்கவங்களுக்கு சாதகமா கடைகளைத் திறந்துட்டாங்க. இதுல இடதுசாரி வலதுசாரி என்ற பாரபட்சமே இல்லை. காவல்துறையால கட்டுப்படுத்தவும் முடியலை. இன்னொரு அலையைக் கொண்டுவராம விட மாட்டாங்க போல!”

``இன்ஜினீயரிங் படிச்ச நீங்க எப்படி திரைத்துறைக்குள்ள வந்தீங்க?’’

“ஏன்னா இன்ஜினீயரிங் படிச்சாலே இந்தியாவைப் பொறுத்தவரை எல்லாத் துறைகளுக்குள்ளும் போக டோக்கன் கிடைச்ச மாதிரி. குறிப்பா சினிமா. ‘பாருய்யா, நான் இன்ஜினீயரிங் பட்டதாரி. நான் அதையெல்லாம் விட்டுட்டு கலைச்சேவை பண்ண வந்திருக்கேன்!’னு ஈஸியா டைரக்டர்களை அட்ராக்ட் பண்ணலாம். ஆனா, நான் சினிமாவுக்கு வருவேன்னு ஐ.ஐ.டி பனாரஸ்ல இன்ஜினீயரிங் சேர்ந்தப்போ நினைக்கல. எல்லோரையும்போல ‘கைநிறைய சம்பாதிக்கணும். ஒரு கார் வாங்கணும்’னு நினைச்சேன். படிச்சு முடிச்சு புனேல ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பார்த்தேன். ஒரு வருஷத்துல வாழ்க்கை குறித்த பயம் வந்திருச்சு. பத்து வருஷமா ஒரே கம்பெனில ஒரே சேர்ல உட்கார்ந்து தலைமுடி கொட்டிப்போய், ஒரு குட்டி கார், குட்டி வீடுன்னு சீனியர்ஸ் எல்லாமே ஏலியன்ஸ் போல ஒரே மாதிரி தெரிஞ்சாங்க. ‘அடக்கொடுமையே! பத்து வருஷத்துக்கு அப்புறமா நாமளும் இப்படித்தானே இருப்போம். வேண்டவே வேண்டாம்’னு முடிவெடுத்தேன்.

பனாரஸ்ல படிக்கிறப்போ நான் நாடகம்லாம் நடிப்பேன். நல்லா கதை பேசுவேன். எழுத்தாளரா உருவாகிட்டா விதவிதமா பேனாவை வெச்சுக்கிட்டு தாடைய தாங்கிக்கிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம்னு அவ்வளவு ஆசை. ‘ஒருவேளை க்ளிக் ஆகலைனா அப்படியே யூ-டர்ன் போட்டு இன்ஜினீயரிங் ஃபீல்டுக்கு வந்திடலாம். அல்லது பட்டமேற்படிப்பு படிக்கலாம்’னு முடிவெடுத்தேன். அப்பா அம்மா பாலிவுட் சினிமாவின் ரசிகர்கள். ‘மகன் நடிகனாகவோ, கவிஞனாகவோ ஜொலிப்பான்’ என என்னைவிட அதிகம் நம்பினார்கள். அதனால் மும்பைக்கு ஸ்வீட் காரம் டப்பாக்களோடு உச்சிமோந்து ரயிலேற்றி அனுப்பி வைத்தார்கள். அனுராக் காஷ்யப் போல ஒரு மனிதரை சந்திக்காமல் போயிருந்தால் மீண்டும் புனேவில் குட்டி கார், குட்டி வீடு என இன்ஜினீயராக யாருக்குமே தெரியாமல் செட்டில் ஆகியிருப்பேன். விதி வலியது. இப்ப பிரபலம் ஆகிட்டேன்!”

“ஸ்டேண்ட்-அப் காமெடியிலதான் மனநிறைவு!”
“ஸ்டேண்ட்-அப் காமெடியிலதான் மனநிறைவு!”

``மேடையில அரசியல் பேசிச் சிரிக்க வைக்கிற ஸ்டேண்ட்-அப் காமிக், சினிமா பாடலாசிரியர், எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர்...இதுல எது உங்களுக்கு மனசுக்கு நிறைவா இருக்கு?

“சந்தேகமே இல்லாம ஸ்டேண்ட்-அப் காமெடிதான். இதுக்குத்தான் சென்ஸார் இல்லை. என்னோட வேலையை யாரும் எடிட் பண்ண மாட்டாங்க. என் கதைகளுக்கு அவங்க வேற வடிவம் கொடுக்க மாட்டாங்க. மனசுல இருக்குறதைப் பேசிட்டு வந்துடுவேன். ஆனா, சினிமால அவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கு. வேற ஒருத்தரோட காலணிகளை மாட்டிக்கணும். செட் ஆகாத அந்தக் காலணிகளை மாட்டிக்கிட்டு கேட்வாக் நடக்கணும். ஆனா செம த்ரில்லிங்கா இருக்கும். ஏன்னா உங்க உழைப்புக்கு ஈஸியா அங்கீகாரம் கிடைச்சிரும். பிரபலமான ‘கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ போன்ற படங்கள்ல பாடல் எழுத வாய்ப்பு கிடைச்சிரும். ‘மஸான்’, ‘தம் லகா கே ஹெய்சா’ போன்ற படங்கள் மூலமா தேசிய விருது வரை வாங்கி பெற்றோரை குஷிப்படுத்துவீங்க. ‘சாக்ரெட் கேம்ஸ்’ மாதிரி புகழ்பெற்ற வெப்சீரீஸ்ல வேலை பார்த்து ஒரே நாள்ல பிரபலம் ஆகிடுவீங்க!”

`` ‘மஸான்’ படத்தைப் பற்றிக் கேட்க நினைத்தேன். அந்தப் படத்தின் பாடலாசிரியராக நிறைய விருதுகள் வாங்கினீர்கள். அந்தப் படத்தோட கதையே உங்களுடையதாமே?’’

“இல்லை. அதை அழகான குறும்படத்துக்கான ஸ்கிரிப்ட்டாக இயக்குநர் நீரஜ் வைத்திருந்தார். அவர் ‘கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தபோது, நான் அந்தப் படத்தில் பாடல் எழுதியிருந்தேன். அப்போது அறிமுகம். முதல் சந்திப்பிலேயே நண்பர்கள் ஆனோம். இமாச்சலப்பிரதேசத்தில் பிறந்தவன் நான். என்னுடைய கல்லூரி வாழ்க்கை காசியில் கழிந்ததால்தான் காசியை மையமாக வைத்து எழுதப்பட்ட ‘மஸான்’ படத்தில் நான் பணிபுரியும் வாய்ப்பு நீரஜால் கிடைத்தது. இருவரும் சேர்ந்து அதை முழு நீள சினிமாவாக மாற்றினோம். என் எழுத்தில் திரைக்கதையாக மாறியது எனலாம். என்னுள் இருந்த சினிமா எழுத்தை வெளிக்கொண்டு வந்தது நண்பன் நீரஜ் தான்!”

“ஸ்டேண்ட்-அப் காமெடியிலதான் மனநிறைவு!”
“ஸ்டேண்ட்-அப் காமெடியிலதான் மனநிறைவு!”

``சினிமா, ஸ்டேண்ட் அப் என இரட்டைக்குதிரைச் சவாரி சிரமமாக இல்லையா?’’

“சினிமாவில் தேசிய விருது வாங்கியதும், ரஜினிகாந்த் படங்களில் ஒரே பாடலில் பணக்காரர் ஆவதைப்போல ஆகிடலாம்னு நானும்கூட நினைச்சேன். ஆனால், யதார்த்தம் வேறு. ‘கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூரில்’ நான் எழுதிய ‘காலா ரே’ பாட்டு பரவலாகக் கொண்டாடப்பட்டது. வித்தியாசமான வார்த்தைகளைப் போட்டு கறுப்பு வண்ணத்தைக் கொண்டாடி எழுதியிருந்தேன். எல்லாப் பக்கமும் அந்தப் பாட்டு மும்பையில் ஒலித்தது. இண்டஸ்ட்ரியில் பார்க்கும் மனிதர்கள் எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால், அடுத்த வாய்ப்பு கிடைக்க மூன்று வருடங்கள் ஆனது. அந்தக் கோபமே ‘தம் லகா கே ஹெய்சா’ படத்திற்காக தேசிய விருது வாங்க வைத்தது. தலைக்கும் இதயத்துக்கும் கீழே வயிறு என்ற ஒன்று இருக்கிறதல்லவா? அதனால் இரட்டைக்குதிரை என்ன... பல குதிரைச் சவாரி வரை செய்தே ஆக வேண்டும். அப்படி ஓடியதால்தான் லாக்டௌனில் குறைந்தபட்சம் என்னால் சாலையோர மனிதர்களுக்கு உணவளிக்கவாவது முடிந்தது!”

``லாக்டௌன் காலத்துல சினிமாவுக்காக நிறைய எழுதுறீங்களா?

“எல்லோரும் அதைச் சொல்லித்தான் கடுப்படிக்கிறாங்க. ‘செம வாய்ப்பு வருண்...திரைக்கதையா எழுதித் தள்ளுங்க!’ன்னு நண்பர்களே சொல்றாங்க. கோபமா வரும். எழுத்து, அது எந்த மீடியத்துக்காக இருந்தாலும் சரி, சுவிட்ச் ஆன் பண்ணியதும் பல்பு மாதிரி எரியாது. இந்தக் கொரோனாவால நீங்க எப்படி ஒரு மன அழுத்தத்தோட இருக்கீங்களோ, அதைப் போலத்தான் நானும் இருக்கேன். முதல் கொரோனா அலை வந்தப்போ பாலிவுட்ல முக்கால்வாசிப் பேர் விளக்கு பிடித்து, தட்டெடுத்துத் தட்டினார்கள். கோபமாக வந்தது. அமெரிக்கா முதல் அலையில பாடம் கத்துக்கிட்டு நாசூக்கா இரண்டாவது அலைக்குள்ள போகாம தப்பிச்சிட்டாங்க. ஆனா, இங்கே கும்பமேளாலயும், தேர்தல் கூட்டத்திலும் கொரோனாவை வளர்த்தெடுத்தாங்க. தடுப்பூசி கண்டுபிடிச்சும் முழுசா மக்களுக்குப் போட முடியல. ‘முதல் அலையை வென்றெடுத்த அரசு’ன்னு வெட்கமே இல்லாம ஓட்டு கேட்டு வந்து நின்னாங்க. பேண்டமிக் காலத்துல வாழ்ந்தோம்னு எதிர்காலத்துல சொல்றப்போ, இப்போ நடந்த அரசியல் கூத்துகளும் மனசுல வந்துபோகும். இதையெல்லாம் நினைச்சா எழுதவே முடியாத அளவுக்கு மன அழுத்தம் வருது. முன்னாடி நான் எழுதிய சிறுகதைத் தொகுப்பு ‘பேப்பர் சோர்.’ அதெல்லாம் ஒரு வாரத்துக்கும் கம்மியான நேரத்துல எழுதினேன். அதுபோல ஒரு புத்தகத்தை இப்போது எழுத உட்கார்ந்தால் வார்த்தைகள் இடறுது. தவிர, ‘ரைட்டர் ப்ளாக்’ எனக்கும் இருக்கு. இ.எம்.ஐ, மருந்து, உணவு, லாண்ட்ரி என எனக்கும் தேவைகள் இருக்கு!”

``மோடியில் ஆரம்பித்து இந்திரா காந்தி வரை எல்லோரையும் ஸ்டேண்ட் அப் காமெடியில் ரோஸ்ட் செய்கிறீர்கள். மிரட்டல்கள் வந்ததா?’’

“உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. கட்சிப் பாகுபாடில்லாமல் எல்லோரையும் ரோஸ்ட் செய்வதால் கொலை மிரட்டல்கள் வருவதில்லை. மோடி நம்மை ஆள்வதால் அவர் மீது அதிக கேள்விகளை முன்வைப்பேன். அதற்காக சிலர் என்னைத் திட்டுவார்கள். அது நடக்கும்தானே! ட்விட்டரில் நீங்கள் பதிவிடும் கருத்துக்கு யாராவது ஒரு நபர் கெட்ட வார்த்தைகளில் அர்ச்சிப்பதைப் போலத்தான் இதுவும்..!”

``தமிழ் சினிமா பார்க்கும் பழக்கம் உண்டா?’’

“ஓடிடி புண்ணியத்தில் நிறைய தென்னிந்திய சினிமாக்கள் பார்க்கிறேன். எனக்கு தென்னிந்திய உணவு பிடிக்கும். மாதுங்காவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இட்லிதான் என் ஃபேவரைட் உணவு. சின்னவயசிலிருந்து ரஜினி, கமல் படங்களை விரும்பிப் பார்ப்பேன். ‘காலா’ இந்தி வெர்ஷனுக்குப் பாட்டெழுதினேன்!”