Published:Updated:

"வாழ்நாள் முழுவதும் கிடைக்காதுன்னு தெரிஞ்ச ஒரு பொருள் கிடைச்ச மாதிரிதான் என் மகள்!"- நெகிழும் தம்பதி

கோபிநாத்

மதிக்கத்தக்க எந்தக் கேரக்டரும் அவ்வளவு சீக்கிரம் நமக்கு கிடைக்காது. நகைச்சுவை கதாபாத்திரம் தான் நமக்குக் கொடுப்பாங்க. அதையெல்லாம் வேண்டாம்னுலாம் சொல்ல முடியாது.

"வாழ்நாள் முழுவதும் கிடைக்காதுன்னு தெரிஞ்ச ஒரு பொருள் கிடைச்ச மாதிரிதான் என் மகள்!"- நெகிழும் தம்பதி

மதிக்கத்தக்க எந்தக் கேரக்டரும் அவ்வளவு சீக்கிரம் நமக்கு கிடைக்காது. நகைச்சுவை கதாபாத்திரம் தான் நமக்குக் கொடுப்பாங்க. அதையெல்லாம் வேண்டாம்னுலாம் சொல்ல முடியாது.

Published:Updated:
கோபிநாத்
'சினிமா, சின்னத்திரை என பலரும் அறிந்த முகம் கோபிநாத். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'சுந்தரி' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். உயரம் குறைந்த மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் சினிமாவில் நிச்சயம் சாதிக்க வேண்டும் என்கிற வைராக்யத்துடன் பல அவமானங்களை எதிர்கொண்டு கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனந்த விகடன் யூடியூப் தளத்தில் வெளியாகும் 'உடைத்துப் பேசுவோம்' பகுதிக்காக அவரையும், அவருடைய மனைவி கனிமொழியையும் அவர்களுடைய இல்லத்தில் சந்தித்தோம். கனிமொழியும் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி தான்! ஆனாலும், அவர்களுடைய மகள் தன்ஷிகா எல்லாக் குழந்தைகளைப் போலவும் உயரம் அதிகமா இருக்கிறாள் என்கிற நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் அந்த அழகான குடும்பத்திற்குள் நுழைந்தோம்.

கோபிநாத் - கனிமொழி
கோபிநாத் - கனிமொழி

என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி. சின்ன வயசுலயே ஊரை விட்டு ஓடி வந்துட்டேன். ஆரம்பத்தில் சென்னைக்கு வந்ததும் கிடைக்கிற எல்லா வேலைகளும் பண்ணியிருக்கேன். நாமளும் நடிக்கணும்னு ஆசை வந்ததுமே அதற்கான முயற்சிகளை எடுக்க ஆரம்பிச்சிட்டேன். சினிமாவைப் பொறுத்தவரை நல்லா நடிக்கணும், திறமையா இருக்கணும். இது ரெண்டும் இருந்தா நிச்சயம் நமக்கு ஏதாவதொரு ஒரு இடம் அதில் கிடைக்கும்னு தொடர்ந்து போராடினேன். அந்தப் போராட்டத்தில் பல அவமானங்களையும், கேலி கிண்டல்களையும் எதிர்கொண்டேன். அதையெல்லாம் மீறி தான் இன்றைக்கு சினிமாவில் பயணிச்சிட்டு இருக்கேன்.

மதிக்கத்தக்க எந்தக் கேரக்டரும் அவ்வளவு சீக்கிரம் நமக்கு கிடைக்காது. நகைச்சுவை கதாபாத்திரம் தான் நமக்குக் கொடுப்பாங்க. அதையெல்லாம் வேண்டாம்னுலாம் சொல்ல முடியாது. சில விஷயங்களை நாம பர்சனலா எடுத்துக்கக் கூடாது. அது நம்மளையும் சரி, நம்ம கரியரையும் சரி பாதிக்கும். இதுவரைக்கும் 60 படங்கள்கிட்ட பண்ணியிருக்கேன். 200 சீரியலுக்கு மேல நடிச்சிருக்கேன். நல்லா நடிக்கிறேன்னு என் நடிப்பை பாராட்டி நிறைய விருது கொடுத்து என்னை கெளரவிச்சிருக்காங்க என்றவரைத் தொடர்ந்து அவரின் மனைவி கனிமொழி பேசினார்.

குடும்பத்தினருடன் கோபிநாத்
குடும்பத்தினருடன் கோபிநாத்

எங்களுடையது அரேஞ்சிடு மேரேஜ். ஆரம்பத்தில் கல்யாணம்னு சொன்னதுமே எனக்கு பயமா இருந்துச்சு. ஸ்கூல் படிக்கும்போது நிறைய பேர் என்னை கிண்டல் பண்ணியிருக்காங்க. அதனால பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சதுமே எங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. கல்யாணம் பற்றி நிறைய பயம் இருந்துச்சு. அம்மா எடுத்துச் சொன்ன பிறகுதான் ஓகே சொன்னேன். எனக்கு சினிமா ரொம்பப் புதுசு. கல்யாணத்துக்கு பிறகு தான் சினிமா பற்றி தெரிஞ்சுக்கிட்டேன் என்பவரிடம் குடும்பத்தலைவி வாழ்க்கை எப்படியிருக்கு எனக் கேட்டோம்.

"வெளியில் எங்கேயும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போக முடியாது. எங்களை பார்த்து சிரிச்சிட்டே போவாங்க. எங்க உருவத்தை வச்சு கேலி, கிண்டல் பண்ணுவாங்க. மாசமா இருக்கேன்னு தெரிஞ்சப்ப ரொம்பவே பயந்தேன். ஒவ்வொரு முறை ஸ்கேன் பார்க்கும்போதும் குழந்தை நார்மலா இருக்குன்னு சொல்லுவாங்க. ஆப்ரேஷன் பண்ணி குழந்தை பிறந்த பிறகு முதலில் குழந்தையோட கை, கால் பார்த்துதான் சந்தோஷப்பட்டேன். அவள் உயரமா இருந்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இதுவரை நாம ஆசைப்பட்டு நமக்குக் கிடைக்காத, நம்மளுக்கு இந்த வாழ்நாள் முழுவதும் கிடைக்காதுன்னு தெரிஞ்ச ஒரு பொருள் நம்ம கையில் கிடைச்சா உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படியான உணர்வு தான் எனக்கு இருந்துச்சு.

கோபிநாத் - கனிமொழி
கோபிநாத் - கனிமொழி

பல கேலி, கிண்டல்கள் எனக்கு கேட்டு, கேட்டு பழகிடுச்சு. பொது இடத்தில் மத்தவங்க மேல தப்பு இருந்தாலும் நாம எதிர்த்து கேள்வி கேட்டா நம்ம குறையைத்தான் முதலில் சுட்டிக்காட்டி பேசுவாங்க. அந்த இடத்தில் அதுக்கப்புறம் நம்ம எதுவே பேச முடியாது. இப்படி பலர் பண்ணியிருக்காங்க. எங்களுக்கு காசு, பணம் தேவையில்லைங்க.. ஃப்ரெண்ட்லியா எங்ககிட்ட பழகினாங்கனா அது போதும்! குட்டை, குள்ளம் என்கிற வார்த்தை எங்களை ரொம்ப காயப்படுத்துது" என்றவரின் கரத்தை அவருடைய மகள் தன்ஷிகா இறுகப் பற்றிக் கொண்டார். அந்த சூழலை மாற்ற தன்ஷிகாவிடம் பேசினோம்.

நான் இப்ப ஏழாம் வகுப்பு படிக்கிறேன், எனக்கு ஐஏஎஸ் ஆகணும்னு ஆசைக்கா என்றதும் கோபிநாத் தொடர்ந்தார்.

"எங்களுக்கு எந்த முன்னுரிமையும் கிடைக்காது. எல்லாத்துக்குமே மிகப்பெரிய போராட்டம் பண்ண வேண்டியிருக்கும். நான் சினிமாவை நம்பித்தான் வாழுறேன். எனக்கு எப்பவாச்சும் தான் வேலை கிடைக்கும். வேலை இல்லாம சிரமமாகத்தான் இருக்கு. இப்ப ஒரு மாசமா எனக்கு வேலை இல்ல. வீட்டு வாடகை, பொண்ணோட படிப்பு செலவுன்னு எல்லாத்துக்கும் பணம் ரெடி பண்ண கஷ்டமாகத்தான் இருக்கு. மனசுல அதிக கவலை இருக்குங்க. நாங்க லோன் கேட்டாகூட யாரும் கொடுக்க முன்வர மாட்டேன்றாங்க. அரசு சார்பில் எந்த உதவித்தொகையும் இப்ப வரைக்கும் எங்களுக்கு வர்றது இல்ல. வாடகை வீட்டில் தான் இருக்கிறோம். இப்ப என் மனைவி பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்காங்க. எனக்கு இல்லைன்னாலும் அவங்களுக்காகவாச்சும் அரசாங்கத்துல ஏதாவது வேலை ரெடி பண்ணிக் கொடுத்து எங்க வாழ்க்கைக்கு உதவலாம். நானும் சிஎம் செல் வரை மனு கொடுத்துட்டேன். இப்ப கூட டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியிருக்காங்க என்றவரைத் தொடர்ந்து கனிமொழி பேசினார்.

கோபிநாத் குடும்பத்தினர்
கோபிநாத் குடும்பத்தினர்

என்கிட்டேயும் சரி, என் கணவர்கிட்டேயும் சரி இப்பவரைக்கும் நீங்க ரெண்டு பேர் மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க என்கிற கேள்வியை எங்க பொண்ணு எங்ககிட்ட கேட்டதில்ல. இதுக்கப்புறமும் அவ அந்தக் கேள்வியை எங்களைப் பார்த்து கேட்க மாட்டான்னு நினைக்கிறேன். அப்படி அவளை கேட்க வைக்கிறது, வைக்காம இருக்கிறதும் இந்த சமூகத்துடைய கையில் தான் இருக்கு!" என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார்கள். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!