சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

வெள்ளித்திரையில் காண்க!

ப்ரியாமணி
பிரீமியம் ஸ்டோரி
News
ப்ரியாமணி

`புதிய பாதை’ விளம்பரம் பார்த்ததுமே, `நாலு பேர்கூட பார்க்க வேண்டிய படம்’னு முடிவு பண்ணிட்டேன்.

தமிழ்நாட்டில் எப்போது தியேட்டர்கள் திறக்கப்படும் என்று தெரியவில்லை. அதனால் பிரபலங்களிடம் ‘உங்கள் மறக்க முடியாத தியேட்டர் அனுபவங்களைச் சொல்லுங்கள்’ என்று கேட்டபோது அவர்கள் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யங்கள்.

சரவணன்

“சேலத்துல `மூணு தியேட்டர்’னு இருந்தது. அங்க ‘புதிய பாதை’ படம் போட்டிருந் தாங்க. சேலம் ரஜினி ரசிகர் மன்றத்துல கௌரவ ஆலோசகரா இருந்ததால, ரஜினி சார் படம் ரிலீசானா குறைஞ்சது ஐம்பது பேருடன் போயிடுவேன். அதேநேரம் கொஞ்சம் ரசிச்சுப் பார்க்கிற படம்னு தோணுச்சுன்னா கூட நாலு பேருக்கு மேல கூட்டிட்டுப் போக மாட்டேன்.

`புதிய பாதை’ விளம்பரம் பார்த்ததுமே, `நாலு பேர்கூட பார்க்க வேண்டிய படம்’னு முடிவு பண்ணிட்டேன். தியேட்டர்ல படம் தொடங்கினதுல இருந்து ஒரே கைத்தட்டல்தான். இடை வேளையில் கதர் வேட்டி சட்டையில இருந்த ஒருத்தர் கூப்பிட்டு, ‘படம் அவ்ளோ பிடிச்சிருக்கா’ன்னு கேட்டார். ‘ஆமாங்க, நல்லா இருக்கு, அதான் கை தட்டுனேன்’னு சொன்னேன். அவர் அந்தப் படத்தை வாங்கின விநியோ கஸ்தராம். நான் நடிக்க வந்த புதுசுல விஜயகாந்தைப் பார்த்து நடிக்க வந்ததாப் பேசினாங்க. ஆனா, முதன்முதலா என்னை ஈர்த்தது ஆர்.பார்த்திபன். அவர்கிட்ட அசிஸ்டன்டா சேரணும்னு கொஞ்ச நாள் முயற்சியெல்லாம் பண்ணினேன்.”

சரவணன் - பாக்கியம் சங்கர்
சரவணன் - பாக்கியம் சங்கர்

பாக்கியம் சங்கர்

“தமிழ்நாடு, அகஸ்தியா, தங்கம்னு வடசென்னையில நான் படம் பார்த்த தியேட்டர்களெல்லாம் இன்னைக்கு இல்லை. சினிமா பார்க்கப் போன நாள்கள் கொண்டாட்டமான அனுபவமா இருந்தது. இடைவேளையில் சாப்பிட வீட்டுல இருந்து தின்பண்டங்களை எடுத்துட்டுப்போயிடுவோம்.

‘தங்கம்’ தியேட்டர்ல ‘7ஜி ரெயின்போ காலனி’ பார்க்கப் போனப்ப அப்படியொரு கூட்டம். தியேட்டர் வாசல் குறுகியதா இருக்கும். அடிச்சுப் புடிச்சு உள்ளே நுழைஞ்சப்ப சட்டை கசங்கி, அங்கங்க கிழிஞ்சு அதுக்கு மேல அதைப்போட்டிருக்கிறதுல அர்த்தமில்லைன்னு கழட்டிட்டு சட்டை இல்லாத உடம்போட பார்த்தேன். கொஞ்ச நேரம் கூச்சமா இருந்தது. ஆனா அக்கம்பக்கம் என்னைப் போலவே நிறைய பேர் சட்டை இல்லாம இருந்ததால ஒண்ணும் தெரியலை!’”

பிரியா மணி

“பெங்களூரு ஊர்வசி தியேட்டர்ல பேமிலி, பிரெண்ட்ஸ் எல்லாருமா சேர்ந்து நான் ஹீரோயினா நடிச்ச முதல் படமான ‘கண்களால் கைது செய்’ படத்தைப் பார்க்கப் போயிருந்தோம். ’என்னுடைய நடிப்புக்கு எல்லார்கிட்ட இருந்தும் உடனடி ரியாக்‌ஷன் எப்படி இருக்குமோ’ன்னு திக் திக்னு இருந்தது. ஆனா வீட்டுல உள்ளவங்களுக்கு என்னை பெரிய ஸ்க்ரீன்ல ஹீரோயினா பார்த்ததுலயே சந்தோஷம். பிரெண்ட்ஸ் மத்தியில இருந்தும் ‘நல்லா நடிச்சிருக்க’ங்கிற பாராட்டே கிடைச்சது. நல்ல ஒரு ட்ரீட் கொடுத்த சந்தோஷம் இருந்தது.”

பிரியா மணி - ‘சூப்பர் சிங்கர்’ மாளவிகா ராஜேஷ்
பிரியா மணி - ‘சூப்பர் சிங்கர்’ மாளவிகா ராஜேஷ்

‘சூப்பர் சிங்கர்’ மாளவிகா ராஜேஷ்

“வாழ்க்கையில முதன்முதலா பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ போன படம் ‘பேட்ட.’ விடியற்காலை நாலு மணிக்குப் போய் காசி தியேட்டர்ல பார்த்தேன். அதே ஷோவுல எனக்குப் பின்னாடி அனிருத், பாபி சிம்ஹா உட்பட அந்தப் பட டீம் இருந்தது. இடைவேளை வரைக்கும் படம் எனக்குப் புரியவே இல்லை. அந்த அளவுக்குச் சத்தம். ‘என்னதான் இருக்கு அந்த `முதல் நாள் முதல் காட்சி’யிலன்னு வந்ததுக்கு பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சியது. படம் பார்த்த திருப்தி இல்லை. அதனால சரியா ஒரு வாரம் கழிச்சு இன்னொரு முறை போய் ‘பேட்ட’ பார்த்துட்டு வந்தேன். இப்பெல்லாம் யாராச்சும் ’பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ’ன்னு கூப்பிட்டா, ‘அடப் போங்கப்பா’ன்னு சொல்லிடுறேன்.”

லதாராவ்-ராஜ்கமல்

“ சென்னை ‘காசி’ தியேட்டர்ல நடந்த ஒரு சம்பவம். படம் பேரு ஞாபகத்துல இல்ல, ஆனா ரஜினி சார் படம். ரஜினி சார் அறிமுகமாகிற சீன்ல யாரோ சிலர் தியேட்டருக்குள்ளேயே சரவெடியைக் கொளுத்திப் போட்டுட்டாங்க. திடீர்னு வெடிச் சத்தம் காதைப் பிளந்ததும், ஏதோ விபத்துன்னு பயந்துட்டோம்.

வெடிதான்னு கண்டுபிடிச்சதும்,யார் வச்சு விட்டதுன்னு கண்டுபிடிக்கணும்னு படத்தை நிறுத்திட்டாங்க. போலீஸ் வந்து காரணமான ரெண்டு பேரைத் தூக்கிட்டுப் போன பிறகே, படத்தைப் பார்க்க முடிஞ்சது. மால்களா மாறிட்ட மத்த தியேட்டர்களுக்குப் போனா, உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்த முடியாத ஒரு உணர்வே இருக்கு.’’

லதாராவ்-ராஜ்கமல் -  டேனியல் பாலாஜி  
 - சிங்கப்பூர் சுகன்யா-
லதாராவ்-ராஜ்கமல் - டேனியல் பாலாஜி - சிங்கப்பூர் சுகன்யா-

டேனியல் பாலாஜி

“எங்க வீட்டுப் பக்கத்துல இருந்த ‘மேகலா’ தியேட்டர்ல ‘அரங்கேற்றம்’ ரிலீசாகியிருந்தது. எங்க அப்பா அம்மா பார்த்துட்டு வந்து, ‘நல்ல படம்டா’ நீயும் போய் பார்த்துட்டு வா’னு சொன்னாங்க. நான் தியேட்டருக்குப் போனா, ‘இது அடல்ட் படம்; உனக்கெல்லாம் அனுமதி இல்லை’ன்னு டிக்கெட் கொடுக்க மறுக்கிறாங்க. வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சொன்னதும், ‘வா எங்கூட’ன்னு என்னைக் கூட்டிட்டு தியேட்டருக்கே வந்துட்டாங்க. டிக்கெட் கவுன்டர்ல ‘பெத்தவங்க எங்களுக்குத் தெரியாதா, எங்க பையன் எந்தப் படத்தைப் பார்க்கணும், பார்க்கக் கூடாதுன்னு. இந்தப் படத்தை அவன் பார்க்கணும்’னு சொல்லி டிக்கெட் வாங்கி உட்கார வச்சுட்டுத்தான் போனாங்க.”

சிங்கப்பூர் சுகன்யா

“ரஜினி மக்கள் மன்றத்துல இன்னைக்கு பொறுப்பு, ரஜினி சார் மருமகளா ‘காலா’வுல நடிச்சதெல்லாம் பிறகு வந்தது. ஆனா ஆரம்பத்துல இருந்து நான் ரஜினி சார் ரசிகை. அதனால அவர் படங்களை ரிலீசான உடனே பார்க்கத் தவற மாட்டேன். அப்படித்தான் ‘கபாலி’ படத்தை திண்டுக்கல்ல ஒரு தியேட்டர்ல பார்த்தேன். அந்த அனுபவம் மறக்க முடியாது. ஏன்னா, நான் பார்த்த அன்னைக்கு அதே தியேட்டர்ல சிம்புவும் கபாலி பார்த்தார். பக்கத்துல அவர் நடிச்ச ஏதோவொரு படத்தின் ஷூட்டிங் நடந்துட்டிருந்திருக்கு. ஷூட்டிங் முடிச்சிட்டு ‘கபாலி’ பார்க்க வந்திருந்தார். அந்தப் படம் மட்டும் நான் நடிச்சிருந்த ‘காலா’வா இருந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும்ல?”

தம்பி ராமையா

“புதுக்கோட்டை பக்கம் `பனையப்பட்டி-நச்சாந்து பட்டி’யில `மாட்டுக்கார வேலன்’ பார்த்த அனுபவம் பல வருஷம் கடந்தாலும் பசுமையா மனசுல இருக்கு. ஏன்னா, முதன் முதலா எங்க அம்மாகிட்ட அனுமதி வாங்கிட்டுப் போய்ப் பார்த்த படம் அது. அதுக்கு முன்னாடியெல்லாம் வீட்டுக்குத் தெரியாம, புளியம்பழம் உலுப்பிக் கடையில போட்டு அதுல கிடைக்கிற காசை வச்சுத் திருட்டுத்தனமாத்தான் பார்த்திருக்கேன்.

டூரிங் டாக்கீஸ்ல மண்ணுல உட்கார்ந்துதான் பார்ப்போம். அப்ப எங்க பின்னாடி சேர்ல உட்கார்ந்து படம் பார்கிறவங்களைப் பார்த்தா பொறாமையா இருக்கும். ‘மாட்டுக்கார வேலன்’ பர்ஸ்ட் ஷோ முடிஞ்சு வெளியில வந்துட்டு மறுபடியும் அடுத்த ஷோவுக்கும் போயிட்டேன். இதை யாரோ வீட்டுல போட்டுக் கொடுத்துட்டாங்க. எங்க அம்மா `ரெண்டாவது தடவை பார்க்கறதுக்கு காசு எப்படிக் கிடைச்சது’ன்னு கேட்டு ஒரே அடி. மறக்க முடியாத வாழ்க்கை தம்பி அது.’’

தம்பி ராமையா - ராதிகா சரத்குமார் - யூகி சேது
தம்பி ராமையா - ராதிகா சரத்குமார் - யூகி சேது

ராதிகா சரத்குமார்

“ ‘சோலே’ இந்திப்படத்தை `சத்யம்’ தியேட்டர்ல 28 முறை பார்த்திருக்கேன். ஆனா அதுக்கு முன்னாடி முதல்ல நாலு முறை டிக்கெட் கிடைக்காம, பிளாக் டிக்கெட்டும் வாங்கத் தெரியாம பீல் ஆனதெல்லாம் நடந்தது. சென்னையில படம் ரிலீசான சமயம் லண்டன்ல இருந்து திரும்பியிருந்தேன். `டெனிம்’ ஜீன், ஜாக்கெட் எங்கிட்ட இருந்தது. படம் வந்தப்ப, அந்த டிரஸ் காஸ்ட்யூம் பிரபலமாகியிருந்ததா, அதைப் போட்டுகிட்டு டிக்கெட் எடுக்க வெயிட் பண்ணிட்டிருப்பேன். ஹவுஸ்புல் போர்டு போட்டுடுவாங்க. டென்ஷனாகி, இந்த ஜாக்கெட் ராசிக்குத்தான் டிக்கெட் கிடைக்க மாட்டேங்குதுன்னு கழட்டி வீசிட்டுப் போனேன். சரியா அன்னைக்குத்தான் டிக்கெட் கிடைச்சது.”

யூகி சேது

“1984-ம் வருஷம் சென்னை பிலிம் சேம்பர் தியேட்டர்ல `Heimat’ங்கிற ஜெர்மன் மொழிப் படம் ஒண்ணு பார்த்தேன். 16 மணி நேரம் ஓடக்கூடிய படம். முதல் நாள் எட்டு மணி நேரம், மறுநாள் எட்டு மணி நேரம்னு பிரேக் விட்டுப் பார்த்தேன். படத்தின் கதையில மூணு ஜெனரேஷன் மக்களைக் காட்டுவாங்க. ஹிட்லர் காலத்து ஜெர்மனியும் உண்டு. ஆனா, ஒருபுறம் இரண்டாம் உலகப்போர் நடந்து மக்கள் செத்துட்டிருந்தாலும், கிராமப்புறங்களில் மக்கள் வழக்கமான வாழ்க்கையை வாழ்ந்திட்டிருந்தாங்கன்னும் படம் பேசும். என் வாழ்க்கையில தியேட்டர்ல போய் படம் பார்த்த அனுபவத்துல மறக்க முடியாதது இதுதான்.”