Published:Updated:

சமந்தா முதல் சுஷ்மிதா சென் வரை - பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்கும் `இணைய வன்முறையாளர்கள்'!

சமந்தா, சுஷ்மிதா சென்

சுஷ்மிதாவைவிட லலித்மோடி 12 வயது மூத்தவர் என்றும் அதனால் இந்தக் காதல் உண்மையல்ல என்றும் எழுதுகிறார்கள். ஒருவரின் வயது, உயரம், பேங்க் பேலன்ஸ் எல்லாவற்றையும் தராசில் நிறுத்திப் பார்த்துத்தான் காதல் வருமா?

சமந்தா முதல் சுஷ்மிதா சென் வரை - பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்கும் `இணைய வன்முறையாளர்கள்'!

சுஷ்மிதாவைவிட லலித்மோடி 12 வயது மூத்தவர் என்றும் அதனால் இந்தக் காதல் உண்மையல்ல என்றும் எழுதுகிறார்கள். ஒருவரின் வயது, உயரம், பேங்க் பேலன்ஸ் எல்லாவற்றையும் தராசில் நிறுத்திப் பார்த்துத்தான் காதல் வருமா?

Published:Updated:
சமந்தா, சுஷ்மிதா சென்
பிரபலங்களின் அன்றாட வாழ்வைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மக்களிடையே புதிதல்ல. சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்வை, கிசுகிசுக்களாக எழுவதற்கென்றே எல்லா மொழிகளிலும் சிறப்பு (?!) பத்திரிகைகள் உண்டு. அதுபோக கொரோனாவிற்குப் பிறகு எல்லோருமே யூடியூபர்களாக மாறிவிட்ட நிலையில் மக்களின் தனிப்பட்ட விஷயங்கள்தான் முக்கிய கன்டென்டுகளாக நாள்தோறும் ட்ரெண்டிங்கில் உள்ளன.

நாகரிகம் இல்லாமல் பிரபலங்களின் அந்தரங்கத்தைக் காட்சிப்படுத்துவது வெளிநாடுகளில் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இந்தியாவிலும் பாலிவுட் நடிகர்களின் வாழ்க்கையைப் படம் போட்டுக் காட்ட அவர்களைப் பின்தொடர்ந்து ஜிம், ஹோட்டல் என ஆரம்பித்து நடிகர்களின் உறவினர்கள் வீடுகள்வரை கேமராவை நுழைக்கத் துடிக்கும் பத்திரிகைக் கலாசாரம் உண்டு.

இந்த அநாகரிகக் கலாசாரத்தின் நீட்சியாக நாள் முழுவதும் பிரபலங்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றி வதந்திகளை மட்டுமே பரப்பி யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளச்செயலிகள் மூலமாக வருவாய் ஈட்டுபவர்கள் அதிகம்.

இங்கிலாந்து இளவரசி டயானாவின் மரணம் இவற்றிற்கெல்லாம் முன்னோடி எனச் சொல்லலாம். டயானா தன் நண்பருடன் காரில் சென்றபோது அவரைத் துரத்திப் போட்டோ எடுத்து அதைப் பத்திரிகையில் வெளியிடத் துடித்த போட்டோகிராபருக்கு (#Paparazzi ) பயந்து, டயானாவின் கார் ஓட்டுநர் காரை வேகமாகச் செலுத்தியதால் விபத்துக்குள்ளாகி இறந்துபோனார்கள்.

இங்கிலாந்து இளவரசி டயானா
இங்கிலாந்து இளவரசி டயானா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமூக வலைதளங்களும் எல்லோர் கைகளிலும் எளிதாகக் கிடைக்கும் இணையம் மற்றும் செல்போன் கேமராக்களும் இந்த நேர்மையற்ற, தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான, மனிதத்தன்மையற்ற செயல்களை மிகச் சாதாரணமாக்கியிருக்கின்றன. சமூகம் அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்பதை வேகவேகமாக ”Normalize” செய்துகொண்டிருக்கிறது.

மேலோட்டமாகப் பார்த்தால் இவையெல்லாம் வெறும் பொழுதுபோக்கு போல் தெரிந்தாலும் அடிப்படையில் பிரபலங்களின் வசதியான வாழ்க்கை மற்றும் புகழைப் பார்த்துக் காழ்ப்புணர்ச்சி கொள்பவர்களே அதிகம் அவதூறுகளைப் பரப்பி ட்ரோல் செய்கிறார்கள். தனிப்பட்ட குரோதத்திற்காக அவ்வாறு செய்பவர்களைத் தாண்டி, இன்று பணத்திற்காகப் பிரபலங்களைக் குறிவைக்கும் 'Paid Troll'களும் அதிகம். இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வீட்டில் முடங்கிப்போகச் செய்வதே முதன்மை நோக்கம். பிரபலமாக இருப்பதாலேயே ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றிப் பொதுவெளியில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று உரிமை எடுத்துக்கொள்வதும் வன்முறை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
எதிர்காலத்தில் சில பல குழப்பங்களைத் தடுப்பதற்காக தங்களுடைய திருமணம், விவாகரத்து, உடல்நலம் தொடர்பான விஷயங்களைப் பொதுவெளியில் தன் ரசிகர்களுக்குச் சொல்வதைக் கடமை என்று பிரபலங்கள் நினைக்கின்றனர். ஆனால் பல சமயங்களிலும் அதைத் தவறாகப் பயன்படுத்தும் சமூக வலைதளத்தினர் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்விற்குக் கருத்துச் சொல்ல ஆரம்பித்துவிடுகின்றனர்.

நடிகை சமந்தா நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டபோதும், பிறகு அவரை விவாகரத்து செய்தபோதும் இரண்டு முடிவுகளுமே பணத்திற்காகத்தான் எடுக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் பலர். குறிப்பாக சமந்தா கணவரைப் பிரியும்போது அவரது உடைகளையும் நடிப்புத் தொழிலையும் வைத்து ஒழுக்க ரீதியாகத் தூற்றப்பட்டார். அதேபோல் நடிகர் தனுஷ் தானும் தன் மனைவி ஐஸ்வர்யாவும் விவாகரத்துச் செய்வதாகவும், இனி நண்பர்களாகத் தொடர இருப்பதாகவும் ட்விட்டரில் அறிவித்தார். அதோடு இதுபற்றி மேற்கொண்டு யாரும் பேச வேண்டாம் எனவும் தங்களுக்கான பிரைவேட் ஸ்பேஸைக் கொடுக்குமாறும் நேரடியாகக் கேட்டுக்கொண்டார். ஆனால் அதெல்லாம் நம் இணைய வாசிகளின் புத்திக்குத் துளியளவும் ஏறவில்லை. வயதுவந்த இருவர் திருமணம் செய்வதும் பிரிவதும் அவர்களது தனிப்பட்ட முடிவு. ஆனால் பலரும் இணையத்தில் தனுஷின் மாமனாரான நடிகர் ரஜினிகாந்த்தை டேக் செய்து அறிவுரை கூறியது அநாகரிகத்தின் உச்சம்.

சமந்தா - நாக சைதன்யா
சமந்தா - நாக சைதன்யா

பிரபலங்களின் பக்கங்களில் கேள்வி கேட்பவர்கள், ட்ரோல் செய்பவர்கள் ஒருபக்கம் என்றால், யூடியூபில் பத்திரிகையாளர் என்கிற பெயரில் திரைப்பட நடிகர்களைப் பற்றிய அவதூறுகளை, வதந்திகளைப் பரப்பும் "முன்னாள் நடிகர்கள்" சிலர் தற்போது தமிழ்நாட்டில் உருவாகியுள்ளனர். இவர்களால் சம்பந்தப்பட்ட பலரும் குறிப்பாக நடிகைகள் மன உளைச்சலுக்குத் தொடர்ந்து ஆளாகி வருகின்றனர். இதற்குப் பின்னால் சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் பணம் பறிக்கும் நோக்கம் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன. ஆனால் இந்த இணைய வன்முறையாளர்களைக் கண்டித்தால் கருத்துச் சுதந்திரம் பற்றி வகுப்பெடுக்கும் போலி முற்போக்காளர்களும் நம்மிடையே உண்டு. இதுபோல் சமூக நலனுக்கு எதிராகச் செயல்படுபவர்களைப் பற்றிச் சமூக செயற்பாட்டாளர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

இது ஒருபுறமிருக்க, நாட்டில் எப்போதெல்லாம் அரசுக்கு எதிராக விவாதங்கள் தீவிரமடைகிறதோ அப்போது பிரபலங்கள் பொது விஷயங்களைப் பற்றித் தேவையில்லாத கருத்துகளைச் சொல்வதும், பிரபலங்களின் அந்தரங்க விஷயங்கள் வேண்டுமென்றே கசியவிடுவதும் நடக்கிறது. அதையொட்டி நாட்டுக்குத் தேவையே இல்லாத விவாதங்கள் தீவிரமடைந்து முக்கிய விவாதங்கள் நீர்த்துப்போகச் செய்வதென்பது சமூக வலைதளங்கள் வந்த பிறகு ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது.

இலங்கையின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் பற்றிய விவாதங்கள் பொதுமக்களிடையே தீவிரமடைந்திருக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறைந்துகொண்டே வருவதைப் பற்றியும் பேச வேண்டிய சூழலில் அதை மடைமாற்றம் செய்ய லலித் மோடி மற்றும் சுஷ்மிதா சென்னின் டேட்டிங்கைப் பற்றி இணையம் பேசிக் கொண்டிருக்கிறது. லலித் குமார் மோடி சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் சென்றதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் படங்களுடன் அவரே வெளியிட்டிருந்த செய்திதான் கடந்த ஒரு வாரமாக இணையத்தின் ட்ரெண்டிங் டாப்பிக். செய்தியும் படங்களும் வெளியிட்டது லலித்மோடி என்றாலும் இணையம் சுஷ்மிதாவைத்தான் குறிவைத்துத் தாக்குகிறது.

லலித் மோடி, சுஷ்மிதா சென்
லலித் மோடி, சுஷ்மிதா சென்
இன்ஸ்டாகிராம்

தன்னைவிட வசதி படைத்த ஒருவரை ஒரு பெண் காதலித்தால் அல்லது திருமணம் செய்துகொள்ள விளைந்தால் அவரது காதல் முழுக்க முழுக்க பணத்திற்காக மட்டுமே என்பதன் பின்னால் இருக்கும் உளவியல், நுணுக்கமாகப் பெண்களின் பொருளாதார சுதந்திரம் சார்ந்தது. காலங்காலமாகப் பெண் என்பவள் தியாகமே உருவாக இருக்கவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு ஆண்களிடம் இருக்கிறது. இதைப் பெண்களின் மனதிலும்கூட நூதனமாக ஏற்றி வைத்திருக்கின்றனர். தாயை/தாய்மையைத் தியாகத்தின் வடிவமாகப் போற்றுவதன் மூலம் பெண்கள் தங்களுக்கென வாழ்வதையே மறந்து குடும்பத்திற்காக உழைப்பவர்களாக, ஆண்களுக்கு அடிமையாக இருக்கவேண்டும் எனச் சமூகம் எதிர்பார்க்கின்றது. பெண்கள் சாதாரணமாக ஒரு சேலை கேட்டால்கூட அவர்களை எப்போதும் சேலை மற்றும் நகைகளுக்காக நச்சரிப்பவர்கள்போல சமூகம் சித்திரித்து வைத்திருக்கின்றது.

இதன் விளைவாகப் பெண்கள் எந்த ஆசையும் இன்றி, தனக்கான பொருளாதாரச் சுதந்திரத்தைக்கூட சிந்திக்காமல் ஆணின் கட்டுப்பாட்டில் மட்டுமே வாழவேண்டும், அப்படி மீறினால் அவர்களுக்கு குடும்பப்பெண் அல்ல என்கிற அவதூறு பரிசாகக் கிடைக்கும். வசதிபடைத்த பெண் ஏழை ஆணைக் காதலிப்பதே உண்மைக்காதல் என்றும் வசதியான ஆணைத் தேடிவரும் பெண்கள் பணத்திற்காக மட்டுமே வருவார்கள் என்றும் மக்களின் மனதில் ஆழமாகப் பதியச் செய்த கொடுங்காரியத்தில் திரைப்படங்களின் பங்கு அதிகம்.

சுஷ்மிதா சென் மிக இளம் வயதிலேயே பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றவர். அதைத் தொடர்ந்து நடிக்க வந்தவர். தனது 24வது வயதில் தனது முதல் குழந்தையைத் தத்தெடுத்துக்கொண்டவர். புகழின் உச்சியில் இருக்கும் சமயம் அதை வைத்து நிறைய பணம் சம்பாதித்து, தன்னைவிட வசதி படைத்தவரைத் திருமணம் செய்துகொள்ளும் எல்லா வாய்ப்பும் இருந்தும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்தது மட்டுமல்லாமல் தன் தத்துக் குழந்தைகளுடன் தன்னை ஏற்றுக்கொள்பவரையே திருமணம் செய்வேன் எனப் பிடிவாதமாக இருப்பவர். அவ்வளவு உறுதியாகவும் சுயமரியாதையுடனும் வாழும் சுஷ்மிதா சென்னை, லலித் மோடியுடன் டேட்டிங் சென்றார் என்கிற காரணத்தினாலேயே அவரைத் தரக்குறைவாக ”Gold digger Woman’ என ட்ரோல் செய்துகொண்டிருக்கிறது இணையம்.

லலித் மோடி - சுஷ்மிதா சென்
லலித் மோடி - சுஷ்மிதா சென்
“I believe that all women should be independent, especially financially. I don’t need a man in my life to have diamonds. I can own them myself.“ ஒவ்வொரு பெண்ணும் பொருளாதாரச் சுதந்திரம் அடைந்திருக்கவேண்டும் என்றும் தனக்கு வைரம் தேவையென்றால் அது தன்னாலேயே வாங்கிக்கொள்ள முடியும், அதற்காக ஒரு ஆணைத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றும் இந்தச் சம்பவத்திற்கு முன்பே ஒருமுறை சுஷ்மிதா சொல்லியிருக்கிறார்.

இணையத்தில் பலநேரங்களில் ஆண்களும் இதுபோன்ற ட்ரோல்களுக்கு ஆளாகின்றனர். பொருளாதார ரீதியாக தன்னைவிட வசதி குறைந்த ஆணை ஒரு பெண் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும்போது அந்தத் திருமணத்தில் ஆண் அடிமையாக இருப்பான் என இணையமும் பொதுச்சமூகமும் கேலி செய்கிறது. அதற்கு உதாரணம், சமீபத்தில் நடந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம். அவர்கள் லிவ்-இன் உறவிலிருந்த காலம் முழுவதும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வது தவறானது எனச் சமூக வலைதளங்களில் இருவரும் தூற்றப்பட்டார்கள். திருமணத்தன்று விக்னேஷ் சிவன் பணத்திற்காகத் திருமணம் செய்துகொண்டார் என்பதில் தொடங்கி, நயன்தாரா உடனடியாகக் குழந்தை பெற்றுக்கொள்வாரா அல்லது நடிப்பைத் தொடருவாரா என்பதுவரை அவர்களது சமூக வலைதள கணக்குகளில் நேரடியாக டேக் செய்து கேள்வி கேட்டிருக்கிறார்கள் சமூக வலைதள ஆர்வலர்கள்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
சுஷ்மிதாவைவிட லலித்மோடி 12 வயது மூத்தவர் என்றும் அதனால் இந்தக் காதல் உண்மையல்ல என்றும் எழுதுகிறார்கள். ஒருவரின் வயது, உயரம், பேங்க் பேலன்ஸ் எல்லாவற்றையும் தராசில் நிறுத்திப் பார்த்துத்தான் காதல் வருமா?

பிரபலமாக இருக்கும் அரசியல்வாதி ஒருவர் தன்னைவிட மிகக் குறைவான வயதுள்ள பெண்ணைக் காதலிக்கிறார். அந்தப் பெண்ணும் அவரை மனதாரக் காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வரும்போது அவரைச் சுற்றி இருந்தவர்கள் வயது வித்தியாசத்தைக் காரணம் காட்டி அவரது திருமணத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர். தன்னைவிட வயதில் மிகக் குறைந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் அது அவரது பொது வாழ்க்கையில் கறை படிந்ததுபோல் ஆகும் என்று சொல்லி அந்தப் பெண்ணுடனான உறவை சுமுகமாகப் பேசிப் பிரித்துவிட்ட கதையெல்லாம் இந்தியாவில் நடந்தேறியிருக்கிறது.

வசதிபடைத்த அல்லது பிரபலங்களைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் தங்கள் காதல் உண்மை என்று மற்றவர்களுக்கு நிரூபிக்க அளவில்லாத தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கிறது அல்லது அவள் வாழ்நாள் முழுவதும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவதூறுகளைச் சந்தித்தே ஆக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.

ரஜினிகாந்த் - சௌந்தர்யா
ரஜினிகாந்த் - சௌந்தர்யா
அதேபோல் சுஷ்மிதாவிற்கு வந்த இன்னொரு #FreeAdvice, ஒரு பொறுப்புள்ள அம்மாவாக மகள்களின் வாழ்க்கையைப் பற்றி யோசித்து அவர்களுக்காக மீதி வாழ்க்கையை வாழவேண்டும் என்பது. அடடா! தன் சொந்தக் குடும்பத்தைவிட சுஷ்மிதா சென்னின் குடும்பத்தின் மீது இவ்வளவு அக்கறை கொண்டுள்ள இவர்களுக்கு சுஷ்மிதா என்ன கைம்மாறு செய்யப்போகிறார்?

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் தன் மகனை மணமேடையில் வைத்துக்கொண்டே திருமணம் செய்யும்போது, இரண்டாவது திருமணத்தை இவ்வளவு வெளிப்படையாகச் செய்யவேண்டுமா எனக் கூச்சமே இல்லாமல் வெளிப்படையாகக் கேள்விகேட்டவர்கள் அதிகம். இந்தப் பேச்சுகளை உடைத்து, விவாகரத்தான பெண் மறுமணம் செய்வதை “Normalize” ஆக்குவதற்கென்றே அந்தத் திருமணத்தை மிக விமரிசையாக ரஜினிகாந்த் நடத்தியதுபோலிருந்தது. இவ்வித பாதிப்புகள் பிரபலங்களுக்கும் சாமானியர்களுக்கும் ஒன்றுதான்.

சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியை ஒருவர் தன் மகனின் கையால் தாலி எடுத்துக் கொடுத்து மறுமணம் செய்துகொண்டார். சமூக வலைதளங்களில் தங்களை முற்போக்காளர்களாகக் காட்டிக்கொள்ளும் பலரும்கூட அந்தத் திருமணத்தினால் அப்பெண்ணின் மகனுக்குத் தாயிடம் இருந்து விலக்கம் ஏற்படும் என்றும் குழந்தைகளின் தந்தை எப்படிப் போனாலும் தாய் என்பவள் திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தைகளுக்காகவே வாழ வேண்டும் என்றும் ஒருபக்கம் அட்சதை தூவிக்கொண்டே மறுபக்கம் திருமணப் பெண்ணுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

இந்திய பொதுச்சமூக அமைப்பில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் இடம் கிடைக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்கிற எண்ணமே அயர்ச்சியைத் தரும் அளவிற்குத் தற்கால இணைய உலகம் பின்னோக்கிச் செல்கிறது. ஆணின் மிக மோசமான செயல்களைக்கூட அப்படியா என்று கேட்டு எளிதாகக் கடக்கமுடிகின்ற மக்களுக்கு, ஒரு பெண் இந்தச் சமூகம் வரையறுத்து வைத்திருக்கிற போலி பிற்போக்குக் கோட்பாடுகளை உடைத்து முன்னேறினால் அவள் பணத்திற்காக எதையும் செய்யும் ஒழுக்கம் கெட்டவளாகிறாள். தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வர இணையம் பெரும் உதவியாக இருக்கும் என நம்பி உள்நுழையும் எந்தப் பின்புலமும் இல்லாத சாதாரண பெண்களை இந்த ட்ரோல்கள் அச்சமூட்டி மீண்டும் வீட்டுக்குள் ஒளிந்துகொள்ளச் செய்கின்றன. ஆனால் இணையத்தில் நாள்தோறும் ட்ரோல்களைச் சந்தித்து அதிலிருந்து மீண்டு வருபவர்களும் ஏராளம். அந்த வரிசையில் தன்னை ட்ரோல் செய்பவர்களுக்கு சுஷ்மிதா சென் கூறியிருக்கும் பதில் இங்கு அனைவருக்குமானது.

சுஷ்மிதா சென்
சுஷ்மிதா சென்
“நான் ஒருபோதும் நிலையற்ற புகழ் வெளிச்சத்தில் வாழ்ந்ததேயில்லை. நான் நானாக மனச்சாட்சியின்படி வாழ்கிறேன். நானே சூரியன்.”
சுஷ்மிதா சென்