சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

SHAREபட்டா பரம்பரை: “அலாவுதீன் கில்ஜிதான் என் ஹீரோ!”

கனி
பிரீமியம் ஸ்டோரி
News
கனி

படங்கள்: சுரேஷ் கிருஷ்ணா

‘வாசிப்புங்கிறது ஒரு கடல் மாதிரி. அதுக்குள்ளே மூழ்கிட்டீங்கன்னா மீண்டு கரைக்கு வர்றது ரொம்பவே கஷ்டம்!’ என்கிறார், கனி. ‘குக்கு வித் கோமாளி’ டைட்டில் வின்னராக நமக்கு அறிமுகமானவர், நிஜத்தில் அழகான கதை சொல்லி. ‘Theatre D’ என்கிற யூடியூப் தளத்தின் மூலம் தன்னுடைய பார்வையாளர்களுக்கு எளிமையாய்ப் புரியும் வண்ணம் கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

தன்னுடைய வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏதோவொரு கதையுடன் தொடர்புபடுத்திச் சிலாகித்துக்கொள்வது கனியின் தனிச்சிறப்பு! தனக்கே உரித்தான வெள்ளந்திச் சிரிப்புடன் தன் கதை குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

‘என் உயிரினும் மேலான சப்ஸ்கிரைபர்ஸுக்கு...’ அப்படித்தான் என் கதையை ஆரம்பிக்கணும். அவங்க இல்லைன்னா நிச்சயம் இந்த இடம் எனக்கானது இல்லை. கொரோனா லாக்டௌனுக்கு முன்னாடி வரைக்கும் ஒரு சராசரியான குடும்பத்தலைவியாகத்தான் என் வாழ்க்கை இருந்திருக்கு.

SHAREபட்டா பரம்பரை: “அலாவுதீன் கில்ஜிதான் என் ஹீரோ!”

எங்க குடும்பத்தில எல்லாருமே நான் கதை சொல்றேன்னு சொன்னாலே ஓடிடுவாங்க...பயங்கரமா கிண்டல் பண்ணுவாங்க. ஏன்னா, அவங்க சந்தோஷமாவோ, துக்கமாவோ என்கிட்ட என்ன விஷயங்கள் ஷேர் பண்ணிக்கிட்டாலும் அதை ஏதாவது ஒரு கதையோடு ஒப்பிட்டுப் பேசுவேன். என்னை எவ்வளவுக்கு எவ்வளவு கிண்டல் பண்ணினாங்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவங்கதான் எனக்கு இப்போ ஆதரவா இருக்காங்க. என் கணவர் திரு, ‘நீ ஏன் தெரிஞ்ச கதைகளை வெளியில் சொல்ல மாட்டேன்ற’ன்னு அடிக்கடி என்கிட்ட கேட்டுட்டே இருப்பார். கொரோனா லாக்டௌன் வந்தப்போ திடீர்னு ஒருநாள் எங்க வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப்ல கனி ‘பொன்னியின் செல்வன்’ கதை சொல்லப் போறா... அதை நான் ஷூட் பண்ணப் போறேன்னு சொன்னார். அப்படி ஒரு எண்ணம் எனக்குள்ளே இல்லைங்கிறதனால அதை நான் பெருசா எடுத்துக்கவே இல்ல. ஆனாலும், அவர் விடாம என்னைக் கதை சொல்ல ஆரம்பின்னு சொல்லிட்டே இருந்தார். அவர் சொன்னதை நிறைவேற்ற லாக்டௌன் பேருதவியா அமைஞ்சது.

எங்களுடைய புரொடக்‌ஷன் கம்பெனிக்கு ‘Theatre D’ன்னு பெயர் வைக்கலாம்னு நானும், திருவும் முடிவு பண்ணியிருந்தோம். ‘Theatre D’ தான் கனியை உருவாக்குச்சு. அதனால இந்தப் பெயர் எனக்கு பர்சனல் ஃபேவரைட். இந்தப் பெயரிலேயே வீடியோக்கள் பதிவிட ஆரம்பிச்சோம்.

‘ஒரு ஊருல ஒரு ராஜா’ என்கிற தலைப்பில் வரலாற்றுக் கதைகள் பற்றிச் சொல்ல ஆரம்பிச்சேன். வரலாற்றைப் பொறுத்தவரை ஒவ்வொருத்தர் ஒவ்வொன்னு சொல்லியிருப்பாங்க. அதுசார்ந்த தேடலோட நிறைய புத்தகங்கள் வாசிக்கும்போது பல உண்மைகள் தெரிய வரும். அலாவுதீன் கில்ஜியை நான் மோசமான வில்லனாகத்தான் இதுக்கு முன்னாடி பார்த்திருக்கேன். ஆனா, அவர் சார்ந்த விஷயங்களைத் தேடித் தேடிப் படிக்கும்போது அவர் செமையான கம்யூனிஸ்ட்னு தெரிய வந்துச்சு. இப்போ அவர்தான் எனக்கு ஹீரோவாக இருக்கார். அவருக்கு நான் பெரிய ரசிகை ஆகிட்டேன். இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சிக்க ரொம்பவே டைம் எடுக்கும். எனக்குத் தெரிஞ்ச விஷயங்களைச் சொல்லும்போது, நானும் முன்னாடி பண்ணினவங்க பண்ணுன அதே தப்பைப் பண்ணிடக்கூடாது இல்லையா? ‘இப்படிச் சொல்றாங்க.. இதுவும் உண்மையா இருக்கலாம்... நீங்க முடிவு பண்ணிக்கோங்க’ன்னு பார்வையாளர்கள்கிட்ட முடிவைக் கொடுத்திடுவேன். ஏன்னா, தவறான விஷயத்தை நானும் சொல்லிடக்கூடாதில்ல!

இந்தத் தேடலுக்கும், அதுசார்ந்த மெனக்கெடலுக்கும் நிறைய நேரம் தேவைப்பட்டுச்சு. அந்த வீடியோக்கள் எல்லாமும் பெரிய அளவில் ரீச் ஆகலை. ஆனாலும், எனக்குப் பிடிச்ச விஷயம் என்பதால் அதை நான் பெருசா எடுத்துக்கவும் இல்லை. தரவுகளைச் சேகரிக்க நேரம் இல்லாததால அதை நிறுத்திட்டு, ‘பொன்னியின் செல்வன்’ கதையைப் பற்றிச் சொல்லலாம்னு முடிவெடுத்ததுமே, கதை சொல்ற முறை பற்றித்தான் அதிகமா யோசிச்சேன். ஏன்னா, நான் அந்தக் கதையைப் பல முறை புத்தகங்களாகப் படிச்சிருக்கேன். ஆடியோ புத்தகமா கேட்டிருக்கேன். அதே மாதிரி, நாடகமாகவும் பார்த்திருக்கேன். என்ன மாதிரியான மொழிநடையைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்னு நினைச்சப்போ பேச்சு வழக்குல கதையைச் சொல்லலாம்னு தோணுச்சு.

SHAREபட்டா பரம்பரை: “அலாவுதீன் கில்ஜிதான் என் ஹீரோ!”

ஆனாலும், கதையைக் கேட்டுட்டு புத்தகங்கள் படிக்காம விட்டுட்டாங்கன்னா அது புத்தகங்களுக்குப் பண்ற துரோகமாகிடும். சுத்தமா புத்தகம் படிக்க மாட்டேன்னு சொல்றவங்களில் ஒண்ணு ரெண்டு பேராவது கதை கேட்டுட்டு புத்தகம் படிச்சா அது எனக்குக் கிடைக்கப்போகிற மிகப்பெரிய வெற்றியா இருக்கும். இப்போ, என் கதையைக் கேட்டுட்டு, பலரும் புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சிருக்கிறதா சொல்றாங்க. உண்மையாவே விவரிக்க முடியாத அளவுக்கான சந்தோஷம் அடைஞ்சிருக்கேன்” என்றவரிடம், டிராவல் பிளாக் குறித்துக் கேட்கவும் சிறிய புன்னகையுடன் தொடர்கிறார்.

“எனக்கு டிராவலிங் ரொம்பவே பிடிக்கும். சின்ன வயசில டிரெயின்ல எங்கேயாச்சும் போகும்போது நைட் டைமாக இருந்தால்கூட சில் அவுட்ல தெரியுற மரங்களை வேடிக்கை பார்த்து அவங்ககூட பேசிட்டே வர்றது இயற்கையோடு சேர்ந்து பயணிக்கிற உணர்வைக் கொடுக்கும். கல்யாணத்துக்குப் பிறகு பெரிய அளவில் டிராவல் பண்ண வாய்ப்பு கிடைக்கலை. ஆனா, ‘பசங்க வளர்ந்ததும் டிரிப் போகலாம்’னு திரு அடிக்கடி சொல்லிட்டே இருப்பார்.

அவருக்கு என்னை ராஜஸ்தானுக்குக் கூட்டிட்டுப் போகணும்னு ஆசை. லாக்டௌன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி குடும்பத்துடன் வட இந்தியா முழுக்கவும் ரோடு டிரிப் போகலாம்னு பிளான் பண்ணியிருந்தோம். ஆனா, அதுக்குள்ள கொரோனா வந்ததால பிளான் கேன்சல் ஆகிடுச்சு. திருவுக்கு ஹைதராபாத்ல ஷூட்டிங் நடக்குது. பசங்களுக்கு ஆன்லைன் கிளாஸுங்கிறதனால நாங்களும் அவர்கூடக் கிளம்பிட்டோம். ஒவ்வொரு முறையும் ரோடு டிரிப்பாதான் ஹைதராபாத் போய்ட்டு வர்றோம். சீக்கிரமே பல இடங்களுக்கு டிராவல் பண்ணி என் சப்ஸ்கிரைபர்ஸுக்குச் சுத்திக் காட்டணும்” என்றவரிடம், மறக்கமுடியாத நினைவுகளைப் பகிரச் சொல்லிக் கேட்டேன்.

“ ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி என்னை யாருன்னு பலருக்கும் அடையாளம் கண்டுகொள்ள உதவியா இருந்துச்சு. அதன் மூலமா நிறைய பேர் என் கதையைக் கேட்க ஆரம்பிச்சிருக்காங்க. பெட்ரோல் பங்கில் இருந்தப்போ ஒரு சின்னப் பொண்ணு என்னைப் பார்த்ததும் என்கிட்ட வந்து, ‘அக்கா நான் உங்க கதையைக் கேட்கிறேன்... எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்’னு சொன்னா. பின்னாடி வந்த அந்தப் பொண்ணோட அப்பா, ‘உங்க கதையைக் கேட்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் புத்தகம் வாசிக்கணுங்கிற ஆர்வம் இவளுக்கு வந்திருக்கு. இப்ப வரலாற்றுப் புத்தகங்கள்கூட வாசிக்க ஆரம்பிச்சிட்டா’ன்னு சொன்னாங்க. ரொம்பவே நெகிழ்ச்சியான தருணம் அது!”

மலர்ந்து சிரிக்கிறார் கனி.