Published:Updated:

`` `கொடி பறக்குது' படத்துல நானும் ரஜினிக்கு ஜோடிதான்'' - `வளையல் சத்தம்' பாக்யஶ்ரீ

`எத்தனை வருஷமாச்சு உங்களை சினிமாவுல பார்த்து' என்றோம். ``ஹவ் ஸ்வீட், என்னை நல்லா ஞாபகம் வெச்சிருக்கீங்களே... ரொம்ப தேங்க்ஸ்'' என்ற பாக்யஶ்ரீ அப்படியே உரையாட ஆரம்பித்தார்.

நடிகை பாக்யஶ்ரீ. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்தவர். சொந்தப் பெயர் பாக்கியலட்சுமி. சினிமாவுக்காக பாக்யஶ்ரீ ஆனார். 80-களில் ஒரு ரவுண்டு வந்தவர், அப்போது உச்சத்திலிருந்த நடிகர் முரளி, ஆனந்த் பாபு போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்னால், `நான் தடுப்பூசி போட்டுக்கிட்டேன்' என்று ஸ்டேட்டஸில் சிரித்த முகம் காட்டியவரை, `எத்தனை வருஷமாச்சு உங்களை சினிமாவுல பார்த்து' என்றோம். ``ஹவ் ஸ்வீட், என்னை நல்லா ஞாபகம் வெச்சிருக்கீங்களே... ரொம்ப தேங்க்ஸ்'' என்றவர், உரையாட ஆரம்பித்தார்.

பாக்யஶ்ரீ
பாக்யஶ்ரீ

``நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான். நடிகை ஶ்ரீதேவியைப் பார்த்துதான் எனக்கு நடிக்கணும்னு ஆசை வந்துச்சு. என்னோட பெரியப்பா ராஜாராம் கன்னடத்துல டைரக்டரா இருந்தார். அவர்கிட்ட என் ஆசையைச் சொன்னேன். அவர் என்னை இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் சார்கிட்ட அறிமுகப்படுத்தி வெச்சார். அவர்கிட்ட என்னோட போட்டோஸை கொடுத்து வெச்சோம். அவர் என்னை சில டைரக்டர்கள்கிட்ட அறிமுகப்படுத்தி வெச்சார். அந்த வகையில, சில மலையாளப் படங்கள்ல நடிச்சேன். ஒரு தடவை லவ் சீன்ல நடிக்கிறப்போ காட்டருவியில அடிச்சுட்டுப் போயிட்டேன். மோகன்லால் சார் உட்பட பலரும் பதறிட்டு ஓடி வந்து என்னைக் காப்பாத்தினாங்க. மம்முட்டி சார்கூட நடிக்கிறப்போ, ஒரு சீன்ல கொஞ்சம் டைட்டா டிரெஸ் பண்ணிருந்தேன். ரொம்ப சின்னப் பிள்ளைங்கிறதால கொடுத்ததைப் போட்டுக்கிட்டேன். ஆனா, மம்முட்டி சார் `இறுக்கமா டிரெஸ் போடக்கூடாதும்மா. பிற்காலத்துல நல்லது நடக்கணும்மா'ன்னு அட்வைஸ் பண்ணாரு. அதெல்லாம் மறக்கவே முடியாது'' என்று நெகிழ்பவர், தமிழ் சினிமாவில் நடித்த அனுபவத்தைப் பகிர ஆரம்பித்தார்.

``தமிழ்ல மனோரமா ஆச்சிக்கு மகளா `தேவியின் திருவிளையாடல்' படத்துல அறிமுகமானேன். எனக்கு தமிழ் திரையுலகத்துல நடிப்பு சொல்லிக் கொடுத்த முதல் ஆசான் ஆச்சிதான். அடுத்து முரளிக்கு ஜோடியாக `வளையல் சத்தம்' படத்துல ஹீரோயினா நடிச்சேன். இந்தப் படத்துல எனக்கு அப்பா எம்.என்.நம்பியார். அம்மா எம்.என்.ராஜம். இவங்க முன்னாடி டயலாக் பேசுறப்போ பயத்துல நாக்கு உலர்ந்துடும். ஷூட்டிங் ஸ்பாட்ல தண்ணி குடிச்சிட்டே இருப்பேன். நம்பியார் சார் `குடிங்க குடிங்க நல்லா தண்ணி குடிங்க. அவ்ளோ பயம்'னு சொல்லி கேலி பண்ணுவாரு.

ஆச்சியின் மகளாக
ஆச்சியின் மகளாக
Vikatan

அப்புறம் `தாயா தாராமா'ன்னு ஒரு படம். அதுல ஆனந்த் பாபு சாருக்கு ஜோடி நான். இதுல என்னோட அம்மா கே.ஆர்.விஜயாம்மா, அப்பா டெல்லி கணேஷ். விஜயாம்மா, `உன் ஸ்கின் நல்லா இருக்கு. உனக்கு நிறைய மேக்கப் வேண்டாம்'னு சொல்வாங்க. அப்போ டான்ஸ்னாலே ஆனந்த் பாபுதான். அவர்கூட டூயட்டுக்கு டான்ஸ் ஆடினதெல்லாம் இப்போ நினைச்சாலும் படபடங்குது. ஆனா, எத்தனை டேக் வாங்கினாலும் கோவிச்சுக்க மாட்டார். `சின்ன வாத்தியாரி'ல் பிரபுவுக்கு தங்கையாக, `படிக்கிற வயசுல' பாண்டியராஜனுக்கு ஜோடியா நடிச்சேன். `கொடி பறக்குது' படத்துல தாதா ரஜினிக்கு ஜோடியா நடிச்சேன். அதுக்கப்புறம்தான் தெலுங்குல ஹீரோயின் கேரக்டர்ஸ் கிடைக்க ஆரம்பிச்சது. இவ்வளவு ஏன், கலைஞர் கதை, வசனம் எழுதின `ஒரே ரத்தம்'கிற படத்துல நடிச்சிருக்கேன். பாரதிராஜா சார் வாயால `நல்லா நடிக்கிறேம்மா'னு பாராட்டு வாங்கியிருக்கேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃபீல்டுல நிறைய வாய்ப்புகள் வந்துட்டிருந்த நேரத்துல காதலும் வந்துச்சு. அவர் பேர் வாசுதேவன். குஜராத்தில் `ஸ்டார் நைட் புரோகிராம்ஸ்' எல்லாம் கோ ஆர்டினேட் செஞ்சுகிட்டிருந்தார். அதனால கல்யாணம் ஆனதும் குஜராத்ல செட்டிலாகிட்டேன். பையன் விஸ்வஜித் பிறந்ததும் அவனை வளர்க்கிறது, படிக்க வெக்கிறதுன்னு காலம் ஓடிடுச்சு. அவன் படிப்புக்காகத்தான் மறுபடியும் சென்னை வந்தோம். இப்போ அவன் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறான். நானும் `இராமனுஜம்' உட்பட சில சீரியல்கள்ல நடிச்சேன்'' என்றவரிடம், ஏன் சினிமாவில் மறுபடியும் நடிக்கவில்லை என்றோம்.

நடிகை பாக்யஶ்ரீ தற்போது
நடிகை பாக்யஶ்ரீ தற்போது
Vikatan

``பெரிய பெரிய ஜாம்பவான்கள் கூடதான் நடிச்சேன். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் யாரோடவும் டச் இல்லாம விட்டுட்டேன். என் நடிப்பைப் பாராட்டினவங்கிட்டேயே அடுத்து எப்படி சான்ஸ் கேட்கிறதுன்னு எனக்குத் தெரியலை. அதனால, தமிழ் சினிமாவுக்கும் எனக்கும் பெரிய கேப் விழுந்துடுச்சு. இப்போ தமிழ் சினிமா உலகம் ரொம்ப நல்லாருக்கு. நடிகைகளோட வயசையெல்லாம் தாண்டி திறமைக்கு நிறைய மரியாதை கொடுக்கிறாங்க. இப்போ இருக்கிற யங்ஸ்டர்ஸ் படங்கள்ல நடிக்கிறதுக்கு ரொம்ப ஆசையா காத்துகிட்டிருக்கேன்'' என்று புன்னகைக்கிறார் பாக்யஶ்ரீ.

வெல்கம் பேக்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு