சினிமா
Published:Updated:

வல்லமை தாராயோ - “முதல் எபிசோடுக்கே 5 ஸ்டார் ரேட்டிங்!”

ஷாலி நிவேகாஸ், கெளசிக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷாலி நிவேகாஸ், கெளசிக்

‘வல்லமை தாராயோ’ டிஜிட்டல் டெய்லி சீரிஸுக்குக் குவியும் பாராட்டுகள்

கூண்டுக்கிளியின்

காதலில் பிறந்த

குஞ்சுக்கிளிக்கு

எதற்கு வந்தன

எப்படி வந்தன

சிறகுகள்?

- அக்டோபர் 26, இரவு 7 மணி முதல் தினந்தோறும் ‘விகடன் டிவி’ யூ ட்யூப் சேனலில் ஒளிபரப்பாகும் விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் ‘வல்லமை தாராயோ’ டிஜிட்டல் டெய்லி சீரிஸின் முதல் எபிசோடைப் பார்த்தபோது கல்யாண்ஜியின் மேற்கண்ட கவிதை வரிகள்தான் நினைவுக்கு வந்தன.

பறத்தல் என்பது சுதந்திரத்துக்கான குறியீடு. அதை உணர்த்தும்வகையில் விமானநிலையத்தில் தொடங்குகிறது முதல் காட்சி. ஆனால் நாயகி அபி வானத்தில் பறக்கும் உயரத்தை அடைய எத்தனை இன்னல்களைக் கடந்துவந்திருப்பாள் என்பதைப் பின்னோக்கிச் சொல்கின்றன அவளது நினைவுகள். சிறகுகள் கத்திரிக்கப்பட்ட அவளது பால்யகாலத்தில் ஆண்குழந்தைகளுடன் விளையாடக்கூடாது, இப்படித்தான் உடை உடுத்தவேண்டும் என்று ஏராளமான கெடுபிடிகள் நம்மையும் துயரத்தில் மூழ்கச்செய்கின்றன. ஒரு சின்ன சஸ்பென்ஸுடன் முதல் எபிசோட் முடிய, அடுத்தடுத்த எபிசோட்களும் விறுவிறுப்பாக நகர்கின்றன. ‘கண்டிப்பா ‘வல்லமை தாராயோ’ ஹீரோ - ஹீரோயினைச் சந்திச்சே ஆகணுமே’ என்ற ஆவலில் அபிராமியாக நடித்துள்ள ஷாலி நிவேகாஸ், சித்தார்த்தாக நடித்துள்ள கெளஷிக் இருவரையும் சந்தித்து உரையாடினேன்.

வல்லமை தாராயோ - “முதல் எபிசோடுக்கே 5 ஸ்டார் ரேட்டிங்!”

“நிறைய குறும்படங்களில் நடிச்சிருந்தாலும் ‘வல்லமை தாராயோ’ எவ்வளவு ஸ்பெஷல்?” என்றேன்.

“விகடனுடைய பேனர்ல உருவாகுற இந்த புராஜெக்ட்ல நடிக்கிறது ரொம்பவே சந்தோஷம். நிச்சயமா என் கரியரில் இது ஒரு மைல்ஸ்டோனா இருக்கும்னு நம்புறேன். இந்தியாவிலேயே முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸ்னு சொல்லும்போதே எங்களுக்குப் பெரிய பொறுப்பு இருக்குன்னு நல்லாத் தெரியுது. அதைப் புரிஞ்சுக்கிட்டு வொர்க் பண்ணியிருக்கேன். மக்களுக்கும் ரொம்பப் பிடிக்கும்னு நம்புறேன்” என்று ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக முடித்த ஷாலியைத் தொடர்ந்தார், கெளஷிக்.

“நான் கடைசியா நடிச்ச ஷார்ட் பிலிம் 2016ல. அப்புறம், மீடியாக்குள்ள வந்த பிறகு, நடிக்கலை. ‘வல்லமை தாராயோ’ மூலமா பெரிய பிரேக் கிடைக்கப்போகுதுன்னு நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு. இது எங்கே கூட்டிட்டுப் போகப்போதுன்னு தெரியலை. ஆனா, இந்தத் தருணத்தை ரொம்ப ரசிச்சு வேலை செய்றேன்” என்றார்.

“ரெண்டு பேருமே ஆங்கரா வொர்க் பண்ணியிருக்கீங்க. நடிக்கும்போது உங்களுக்குள்ள இருந்த ஆங்கர் வெளியே வருவாரா?” என்ற கேள்விக்கு உடனடி பதில் வருகிறது ஷாலியிடமிருந்து.

“அந்த ஆங்கரைத் தலையில் தட்டி உள்ள அனுப்புறதுதாங்க பெரிய கஷ்டமாவே இருக்கு. முதல் ஷெட்யூல்ல எனக்கு மேக்ஸிமம் டயலாக் இருக்காது. ரியாக்‌ஷன்கள் மட்டும்தான். என் கேரக்டர் எப்போவுமே குழப்பத்துலதான் இருக்கும். குழப்பத்தையே வெவ்வேறு விதமா ரியாக்‌ஷன்ல காட்டணும். அதெல்லாம் ரொம்ப சவாலா இருந்தது” என்றார்.

“ஆங்கரிங் பண்ணும்போது ரொம்ப நேச்சுரலா பேசுவோம். ஆனா, நடிக்கும்போது கண்ணைச் சிமிட்டினாக்கூட ஒன்மோர் சொல்லிடுறாங்க. கண் சிமிட்டாமல் நடிக்க முதல் மூணு நாள் ரொம்பக் கஷ்டமா இருந்தது. டயலாக் பேசுறதைவிட ப்ரேம்ல சும்மா இருக்கிறதுதான் ரொம்ப சிரமம். அதை, ஷாலி சூப்பரா பண்ணிடுவாங்க. ரியாக்‌ஷனுக்குன்னே செஞ்ச முகம் அவங்களோடது” என்று கெளஷிக் சொன்னதும், “கலாயா, காம்ப்ளிமென்டான்னு தெரியலையே” என்று இங்கேயும் குழப்பமான ரியாக்‌ஷனை ஷாலி கொடுக்க, “பார்த்தீங்களா... நான் சொன்னேன்ல. இந்த ரியாக்‌ஷனெல்லாம் எப்படித்தான் முகத்துல கொண்டுவர்றாங்களோ” என்று மீண்டும் கலாய் கலந்த காம்ப்ளிமென்ட் கொடுத்தார் கெளஷிக்.

ஷாலி நிவேகாஸ், கெளசிக்
ஷாலி நிவேகாஸ், கெளசிக்

“நிறைய கனவுகள் இருக்கிற பொண்ணு, அபிராமி. ஆனா, குடும்ப பாசத்துக்கு கட்டுப்பட்டு தன்னுடைய ஆசைகளையும் கனவுகளையும் தனக்குள்ளேயே பூட்டி வெச்சுக்குற கேரக்டர். தனக்கு வரப்போற கணவன் தனக்கான சுதந்திரத்தைக் கொடுப்பார்னு நம்புறா. ஆனா அவனும் அபி குடும்பத்தார் மாதிரிதான் நடந்துக்கிறான். கூண்டுக்கிளியா அடைக்கிற குடும்ப உறவுகளிடம் போராடி, எப்படி அபி தன் கனவுகளை நிறைவேத்திக்கிறாங்கிறதுதான் ‘வல்லமை தாராயோ’ கதை. ஒரு பெண்ணின் வலிமையைச் சொல்லக்கூடிய கதை” என்றார் ஷாலி.

“கதையில நான் சொல்றதுக்கு என் பொண்டாட்டி தலையாட்டணும். இங்க அவங்க சொல்றதுக்கு நான் தலையாட்டிக்கிறேன். சரிதானே ஹீரோயின் மேடம்?” என்று கெளஷிக் கவுன்டர் கொடுக்க, “கடவுளே... இந்த மனுஷனோட கலாயிலிருந்து தப்பிக்க எனக்கு வல்லமை தாராயோ” என்று சிரித்தபடி செல்லமாய் முறைத்தார் ஷாலி நிவேகாஸ்.