Published:Updated:

``அவளுக்கு தெரிஞ்சுடக்கூடாதுன்னு ட்விட்டர்ல டேக் கூட பண்ணலை!'' - விஜி சந்திரசேகர்

Lovelyn and Director Bharathiraja
Lovelyn and Director Bharathiraja ( twitter.com )

''பூமி குளோபல் வார்மிங், அமேசான் காடு எரியறதுன்னு செத்துக்கிட்டிருக்கு. இந்த நேரத்துல என் அடுத்த படத்தைப் பத்தி யோசிக்கிறதுக்கு எனக்கு நேரமில்லை.''

நடிகை விஜி சந்திரசேகர் இயற்கை விவசாயத்தில் ஆர்வமிக்கவர் என்பது எல்லோருக்குமே தெரியும். "இயற்கை விவசாயத்துல ஈடுபாடு காட்டுவதற்கு என் சின்ன வயசிலிருந்தே, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு என் மனசுல ஊறிப்போனதுதான் காரணம். சென்னையடுத்த மகாபலிபுரம் பக்கத்துல இருக்கிற எங்களோட பண்ணையில, கிட்டத்தட்ட 20 வருஷமா இயற்கை முறையில் விவசாயம் பண்ணிக்கிட்டிருக்கோம். கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளின்னு சில காய்கறிகளை மட்டும் விளைவிக்கலாம்னுதான் ஆரம்பிச்சோம். ஆனா, கடையில் வாங்குற காய்கறிகளுக்கும், எங்க பண்ணையில் இயற்கை முறையில் வளர்ந்த காய்கறிகளுக்கும் இருந்த சுவை வித்தியாசம், ரசாயன மருந்து ஏதும் தெளிக்காத ஃபிரஷ்ஷான காய்கறிகள் ஆகியவை பிடிச்சுப் போச்சு.

வெங்காயத்துல ஆரம்பிச்சு கறிவேப்பிலை, கொத்தமல்லி வரைக்கும் எங்க பண்ணையில இருந்துதான் எங்க வீட்டு சமையல் அறைக்கு வந்துக்கிட்டிருக்கு.

அதனால, வீட்டுக்குத் தேவையான அத்தனை காய்கறிகளையும் நம்ம பண்ணையில்தான் சாகுபடி செய்யணும்னு முடிவு பண்ணி, ஆள்களை வேலைக்கு அமர்த்திக் களத்துல இறங்கினோம். இப்ப வெங்காயத்துல ஆரம்பிச்சு கறிவேப்பிலை, கொத்துமல்லி வரைக்கும் எங்க பண்ணையில இருந்துதான் எங்க வீட்டு சமையல் அறைக்கு வந்துக்கிட்டிருக்கு. தவிர, நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்க்காக எள்ளு, நிலக்கடலையும்கூட விதைச்சிருக்கோம்" என்று விகடனுக்கு அளித்த பேட்டியொன்றில் அவரே இதைச் சொல்லியும் இருக்கிறார்.

தற்போது, அமேசான் காடுகளில் தீப்பிடித்ததையொட்டி, இயற்கை குறித்த விழிப்புணர்வு பிரசாரமாக விஜி சந்திரசேகரும் அவர் மகள் லவ்லினும் தங்கள் பண்ணையில் வளர்ந்த மரக்கன்றுகளை மற்றவர்களுக்கு இலவசமாக வழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். பூமியைப் பாதுகாக்கும் இந்தப் பெண்களுடைய செயலுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்க போன் செய்தோம்.

Actor Viji Chandrasekar
Actor Viji Chandrasekar
twitter.com

''லவ்லின்கிட்டேயும் என்னைப் போலவே இயற்கை நேசிக்கிற இயல்பு இருக்கு. அமேசான் காடுகள் எரிகிற செய்தி கேள்விப்பட்டதிலிருந்தே அவ அப்செட்டாதான் இருந்தா. சரியா தூங்க மாட்டேங்கிறா. நம்மளால முடிஞ்சதை செய்யணும் மம்மி'ன்னு சொல்லிட்டே இருந்தா. சிலர், அவகிட்டே 'ஹவுஸ் ஓனருக்குப் பிறகு, அடுத்த படம் என்ன பண்ணப் போறீங்க'ன்னு கேட்டாங்க.

அதுக்கு லவ்லின், 'உலகம் குளோபல் வார்மிங், அமேசான் காடு எரியறதுன்னு செத்துக்கிட்டிருக்கு. இந்த நேரத்துல என் அடுத்த படத்தைப் பத்தி யோசிக்கிறதுக்கு எனக்கு நேரமில்லை. என்னால முடிஞ்ச அளவுக்கு மரங்கள் நடப்போறேன். மத்தவங்களுக்கும் கொடுக்கப்போறேன்'னு சொன்னா. அவளுடைய பதில் எனக்கு ஒரு நிமிஷம் ஷாக்காக இருந்தாலும் அடுத்த நிமிஷம் பயங்கர சந்தோஷமாயிட்டேன். இந்தச் சின்ன வயசுல உலகத்தைப் பத்தி கவலைப்படறா என் பொண்ணுன்னு அப்படியே உடம்பு சிலிர்த்துப்போச்சு.

ஃபிளாட்ல குடியிருக்கிறவங்ககிட்டே 'உங்க வீட்டுக்கு முன்னாடி தெருவுலகூட நான் கொடுக்கிற மரங்களை நடுங்க'ன்னு ரெக்வெஸ்ட் வைக்கிறா.

சரி, லவ்லின் ஆசைப்பட்டபடியே மரங்கள் நடலாம்னு முடிவு பண்ணிட்டு, எங்க பண்ணையில் இருந்தே ஆரம்பிச்சோம். எங்க பண்ணையில மாமரம், எலுமிச்சை, மாதுளைனு பலவகை மரங்கள் இருக்கு. அதோட விதைகளெல்லாம் கீழே விழுந்து முளைச்சிருக்கும். தரையில அள்ளாம மக்கிப் போய் கிடக்கிற சருகுகள் எல்லாம் அந்த மரங்களுக்கு உரமாகியிருக்கும். அந்த மரக்கன்றுகளையெல்லாம் எடுத்து, எனக்குத் தெரிஞ்சவங்க, அவளுக்குத் தெரிஞ்சவங்கன்னு எல்லாருக்கும் கொடுக்க ஆரம்பிச்சா.

ஃபிளாட்ல குடியிருக்கிறவங்ககிட்டே 'உங்க வீட்டுக்கு முன்னாடி தெருவுலகூட நான் கொடுக்கிற மரங்களை நடுங்க'ன்னு ரெக்வெஸ்ட் வைக்கிறா. அவளோட சீரியஸ்னஸை புரிஞ்சுக்கிட்டு, இது எல்லாருடைய மனசுக்கும் போய்ச் சேரணும்னுதான் பாரதிராஜா சாரை எங்க பண்ணைக்கு இன்வைட் செஞ்சேன். அவரும் பெருந்தன்மையா வந்து ஒரு மாமரத்தை நட்டுவிட்டு, 'நல்ல காரியம் பண்றேம்மா. உன்னை நினைச்சு நான் ரொம்ப பெருமைப்படுறேன்மா. உன் மனசுக்கு நல்ல நிலைமைக்கு வருவேன்'னு சொல்லி, அவ நெத்தியில முத்தமிட்டு வாழ்த்திட்டுப் போனார்'' என்றவர் தொடர்ந்தார்.

Lovelyn
Lovelyn
twitter.com

'' 'நான் இப்படிப் பண்றதைப் போட்டோ எடுக்கக் கூடாது; ஃபேஸ்புக்ல, ட்விட்டர்ல போடக்கூடாது'ன்னு கண்டிச்சுச் சொல்லிட்டா லவ்லின். ரொம்ப கெஞ்சிக்கேட்டுத்தான் போட்டோ எடுத்தேன். அவளுக்குத் தெரியாமத்தான் என் ட்விட்டர் அக்கவுன்ட்ல போட்டிருக்கேன். அவளுக்குத் தெரிஞ்சிடக் கூடாதுன்னு அவளை நான் டேக்கூட பண்ணலை'' என்று சிரிக்கிறார் விஜி சந்திரசேகர்.

அடுத்த கட்டுரைக்கு