
பெங்களூரில் வாழ்ற தமிழர் ஒருவர் டைப் ரைட்டர் மூலமா ஓவியம் வரைகிறார். பலகட்டத் தேடலுக்குப் பிறகு அவரைக் கண்டுபிடிச்சேன்.
“கண்ணகி நகர் ஏரியாக்காரங்கன்னாலே மோசமானவங்கங்கிற பிம்பம் எனக்கும் இருந்தது. அப்படியொரு பிம்பத்தை உருவாக்கி வெச்சிருக்காங்க. ஆனா கண்ணகி நகர் போனபிறகுதான் அவங்க எவ்வளவு அற்புதமான மனிதர்கள்னு தெரிஞ்சது. இந்த மாதிரியான விளிம்புநிலை மனிதர்களின் எதார்த்தமான வாழ்க்கையை எந்தவித அலட்டலும் இல்லாம அப்படியே பதிவு பண்ணணும்னு நினைச்சேன்..!’’ என்று நெகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறார் தீபக்.
சென்னையில் புதுப்புது மனிதர்களைச் சந்தித்து அதை வீடியோ ஆக்குவதுதான் தீபக் யூடியூப் வீடியோக்களின் தனித்துவம்.
“சென்னையில் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்துட்டிருந்தேன். சின்ன வயசில இருந்தே கிரியேட்டிவா ஏதாவது பண்ணணுங்கிற ஆசை இருந்துச்சு. அதனால, ஐ.டி வேலையை விட்டுட்டு மீடியா தொடர்பான சில கோர்ஸ் படிச்சேன். பிறகு, இயக்குநர் ராதா மோகனிடம் அசிஸ்டெண்ட் டைரக்டரா இருந்தேன். சினிமா ஆசை இருந்தாலும் நாம தனித்துவமா ஏதாவது ஒரு விஷயம் பண்ணணும்னு மனசுல தோணிட்டே இருந்துச்சு. அதனால, `Meet a Stranger’-னு ஒரு யூடியூப் சேனலை 2020-ல் ஆரம்பிச்சேன்.

புதுப்புது மனிதர்களைச் சந்திக்கணும். சந்திக்கிற மனிதர்களோட எதார்த்த வாழ்க்கையைப் பதிவு பண்ணணும்னு முடிவு பண்ணினேன். என்னோட கருத்தையோ, தனிப்பட்ட அரசியல் புரிதலையோ மக்கள்கிட்ட திணிக்கக்கூடாதுன்னு எனக்குள்ளேயே சில வரைமுறைகள் வெச்சிக்கிட்டேன்.
சமையல், ஃபுட் ரிவ்யூன்னு பலதரப்பட்ட விஷயங்களைத் தமிழ் யூடியூப் சேனல்களில் பார்த்திருக்கேன். விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையையும், அப்படி வாழ்ற மனிதர்களின் இடங்களையும் தமிழ் யூடியூப் சேனல் மூலமா பார்வையாளர்கள்கிட்ட யாரும் எடுத்துக் காட்டலை. அந்த வெற்றிடத்தை நான் பூர்த்தி பண்ண விரும்பினேன்.
நிறைய தேடல்கள் இருந்துச்சு. ஒவ்வொருவராக தேடித் தேடிக் கண்டுபிடிச்சு அவங்ககூடப் பேசி வீடியோ பதிவிட்டேன். ‘கண்ணகி நகர்’ ஏரியாவில் பண்ணின பிளாக் நல்ல ரீச் கொடுத்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா பலருக்கும் என் சேனல் பற்றித் தெரிய ஆரம்பிச்சது. ரிசர்ச் மூலமா ஒருத்தரை வீடியோ எடுக்கணும்னு முடிவெடுத்திடுவேன். ஆனா, அவங்களோட தொடர்புகள் ஏற்படுத்திக்க ரொம்பவே மெனக்கெட வேண்டியிருக்கும்” என்றவரிடம், மறக்கமுடியாத அனுபவம் குறித்துக் கேட்டேன்.


“சென்னையில் செயின்ட் தாமஸ் மவுண்ட்டில்தான் அதிக அளவுல ஆங்கிலோ இந்தியன்ஸ் இருந்திருக்காங்க. ஆனா, நாங்க போய்த் தேடினப்போ அவங்க எல்லாரும் வெளிநாட்டுக்குப் போய் செட்டில் ஆகிட்டாங்கன்னு சொன்னாங்க. அதனால இங்கே தலைமுறை தலைமுறையா வாழ்ந்தவங்க இப்போ இல்லை என்கிற தகவலைப் பதிவு பண்ணலாம் என்கிற எண்ணத்தோடு தான் அங்கே போயிருந்தேன். எதார்த்தமா அங்கே உள்ளே காய்கறிக் கடையில் ஒரு ஆங்கிலோ இந்தியரை சந்திச்சேன். அவங்ககிட்ட பேசி வீடியோ எடுக்க சம்மதம் வாங்கினேன். அவங்க வீட்டுக்கு எங்களைக் கூட்டிட்டுப் போனாங்க. அங்கே போனபிறகுதான் நூறு வருஷம் பழைமையான வீடு அவங்களுடையதுன்னு தெரிஞ்சது. ஆங்கிலோ இந்தியன் சம்பந்தமான பல நுட்பமான பொருள்கள் அங்கே இருந்துச்சு. அவங்க வீடே மியூசியம் மாதிரி இருந்துச்சு. அந்த வீடியோவுக்கு பயங்கர ரீச் கிடைச்சது.
பெங்களூரில் வாழ்ற தமிழர் ஒருவர் டைப் ரைட்டர் மூலமா ஓவியம் வரைகிறார். பலகட்டத் தேடலுக்குப் பிறகு அவரைக் கண்டுபிடிச்சேன். அதே மாதிரி, வேனில் வாழ்ந்து ஆல் இந்தியா டூர் போற தம்பதி பற்றித் தெரிய வந்துச்சு. கடைசி நேரத்தில் அவங்களோட பேட்டி முடிவாகி, அவசர அவசரமா அவங்க இருந்த இடத்துக்குப் போய் அவங்களைப் பற்றி வீடியோ பண்ணினேன். அந்த வீடியோ பலருக்கும் பிடிச்சிருந்தது.


இத்தனை வீடியோ போடணுங்கிறது என் குறிக்கோள் இல்லை. எப்போ வீடியோ பண்ணினாலும் நேர்மையான விஷயத்தைப் பதிவு பண்ணனும், அவ்வளவுதான்! இதுவரை நானேதான் வீடியோ ஷூட் பண்ணி எடிட் பண்ணி அப்லோடு பண்ணிட்டிருந்தேன். என்னோட பள்ளித்தோழன் ராம் ஐ.டி வேலையை விட்டுட்டு தனித்துவமா ஏதாவது பண்ணணும்ங்கிற எண்ணத்தோட இருந்ததால, அவனும் நானும் சேர்ந்து வீடியோஸ் பண்ணலாம்னு முடிவெடுத்தோம். ரெண்டு பேரும் கேமரா, எடிட்னு வேலையைப் பகிர்ந்து பண்ண ஆரம்பிச்சிருக்கோம்.




ஒரு வீடியோ எடுக்கப் போகிறதுக்கு முன்னாடி, எப்படி அவங்களோட வாழ்வியலை எடுத்துக் காட்டலாம்னு பிளான் பண்ணிட்டுதான் போவோம். தகுதியில்லாத ஒருத்தர்மீது வெளிச்சம் விழக்கூடாதுங்கிறதுலயும், தகுதியுள்ளவங்களை கவனிக்காம விட்டுடக் கூடாதுங்கிறதுலயும் ரொம்ப எச்சரிக்கையா இருக்கோம். பணம் சம்பாதிக்கிறதுக்காக இந்த பிளாட்பார்மை நாங்க தேர்ந்தெடுக்கலை. மனசுக்கு நிறைவா ஒரு விஷயம் பண்றோம் என்கிற திருப்தியே போதும். யூடியூப் மூலமா கிடைக்கிற பணத்தை அடுத்த வீடியோவுக்கே செலவிடுறோம். சில சமயம் கைக்காசைப் போட்டு டிராவல் பண்ணி வீடியோ எடுத்திருக்கோம்” என்றவரிடம் அடுத்த திட்டம் குறித்துக் கேட்கவும், புன்னகைக்கிறார்.
“கேரளாவில் ஒரு ஊரில் 80 சதவிகிதம் ட்வின்ஸ்தான் இருக்காங்கன்னு நியூஸ் கேள்விப்பட்டேன். அது உண்மைன்னா என்ன காரணம்னு தெரிஞ்சுக்கணும். பிறகு மக்களுக்கு அதைக் காட்டணும். அதுக்கான தரவுகளை இப்பவே தேட ஆரம்பிச்சிட்டோம்’’ என்ற தீபக், “மனிதர்களைத் தேடிச்செல்கிறேன். அவர்களைப் படித்தால் வாழ்க்கையின் பரிமாணங்களைப் புரிஞ்சுக்கலாம்” என்கிறார்.