கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

SHAREபட்டா பரம்பரை: “சின்னப் பையன்னு என்னைக் கிண்டல் பண்ணுனாங்க!”

இத்ரிஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இத்ரிஸ்

யூடியூப்ல வர்ற காசைவிட அதிக காசு செலவு பண்ணிக் கருவிகள் வாங்கியிருக்கேன். பார்வையாளர்களுக்குத் தரமான வீடியோக்கள் கொடுக்கணும்னு நினைக்கிறேன்

“பாடியில் ரோட்டுக்கடை வெச்சிருக்கிற ஒரு அக்கா கடைக்கு ரிவ்யூ பண்ணப் போயிருந்தேன். அந்த அக்காவோட கணவர் இறந்துட்டார். அவங்க பொண்ணைப் படிக்க வைக்கிறதுக்காக சாப்பாட்டுக் கடை நடத்துறதா என்கிட்ட சொன்னாங்க. முட்டையை வச்சு கிட்டத்தட்ட 25 வெரைட்டி டிஷ் பண்ணியிருந்தாங்க அந்த அக்கா. ரொம்பவே சூப்பரா இருந்துச்சு. நான் பண்ற ரிவ்யூவால அவங்களுக்கு வியாபாரம் அதிகமானா, அந்தப் பொண்ணு நிம்மதியா படிக்க முடியும். இப்படி முகம் தெரியாத மனிதர்களைச் சந்திக்கிறது பல வாழ்க்கைப் பாடங்களை எனக்குக் கற்றுக்கொடுக்கிறது’’ என்று நெகிழ்கிறார் இத்ரிஸ்.

SHAREபட்டா பரம்பரை: “சின்னப் பையன்னு என்னைக் கிண்டல் பண்ணுனாங்க!”

‘`நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சிங்கப்பூர். அங்கே நிரந்தரக் குடியுரிமை இருக்கு. அப்பாவோட குடும்பம் சென்னையில் இருந்தது. கொஞ்ச நாள் இங்கே இருக்கலாம்னு நாங்க குடும்பத்துடன் சென்னைக்கு ஷிப்ட் ஆகிட்டோம். இங்கேதான் ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சேன். சின்ன வயசில இருந்தே யூடியூபர் ஆகணும்ங்கிற ஆசை இருந்துச்சு. 12 வயசிலேயே என்கிட்ட இருந்த பொம்மைத் துப்பாக்கியைப் பற்றி விளக்கி வீடியோ பண்ணியிருக்கேன். அப்பவே எனக்கு யூடியூப் பரிச்சயம் ஆயிடுச்சு. 2018-ல் ஸ்கூல் படிக்கும்போதே யூடியூப் சேனல் ஆரம்பிச்சிட்டேன். அதுல அப்பப்ப இங்கிலீஷ்ல பேசி வீடியோ போட்டுட்டிருந்தேன்.

சிங்கப்பூர்க் குடியுரிமை இருக்கிறவங்க, ப்ளஸ் டூ முடிச்சதும் ரெண்டு வருஷம் கண்டிப்பா மிலிட்டரிக்கு சர்வீஸ் பண்ணப் போகணும். அதனால ப்ளஸ் டூ முடிச்சதும் அங்கே போயிட்டேன். அங்கே கொடுத்த உதவித்தொகையில், வீடியோ பண்ணத் தேவையான பொருள்களை வாங்கிட்டேன்.

சென்னைக்குத் திரும்பி வந்ததும் இன்ஜினீயரிங் காலேஜ்ல சேர்த்து விட்டாங்க. படிச்சிட்டே யூடியூப்லேயும் வீடியோஸ் பண்ண ஆசைப்பட்டேன். ‘விரும்பற எதுனாலும் பண்ணு. ஆனா, படிப்பை விட்றாதே’ன்னு வீட்ல பர்மிஷன் கொடுத்தாங்க. உணவு, பயணம்னு நிறைய விஷயங்கள் எக்ஸ்புளோர் பண்ண ஆசை. அதனால ‘Idris Explores’னு சேனலுக்குப் பெயர் வெச்சேன். முதலில் நான் பண்ணின பத்து வீடியோக்கள் பயங்கர சொதப்பலாத்தான் இருக்கும். எனக்கு சாப்பாடு பிடிக்குங்கிறதனால ஃபுட் ரிவ்யூ பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்... ஆனா, அதை எப்படிச் சொல்லணுங்கிற டோன் தெரியாம சிரமப்பட்டேன். தமிழ் யூடியூபர்ஸ் பார்த்து கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன்.

‘நிறைய பேர் ஃபுட் ரிவ்யூ பண்றாங்க. அதுல நாம தனித்துவமா இருக்க என்ன பண்ணலாம்’னு யோசிச்சேன். சின்னச்சின்னக் கடைகளையெல்லாம் தேடித்தேடிக் கண்டுபிடிச்சு வீடியோ பண்ணினேன். அந்த வீடியோக்கள் எனக்கும் ஹிட் ஆச்சு... அந்தக் கடைகளை நடத்துற எளிமையானவங்களுக்கும் ரீச் கொடுத்துச்சு. முன்னாடி ஹோட்டல்களுக்குப் போனா, ‘சின்னப் பையன்... இவன் நம்ம கடைக்கு ரிவ்யூ சொல்லப்போறானா’ன்னு ஓனரும் சரி, கடையில் வேலை பார்க்கிறவங்களும் சரி, முகத்துக்கு நேரா கிண்டல் பண்ணியிருக்காங்க. இன்னைக்கு அவங்களே ‘ரிவ்யூ பண்றீங்களா’ன்னு கேட்குறாங்க’’ என்றவரிடம் கொலாபரேஷன் குறித்துக் கேட்டோம்.

SHAREபட்டா பரம்பரை: “சின்னப் பையன்னு என்னைக் கிண்டல் பண்ணுனாங்க!”

‘`என் பெரும்பாலான வீடியோக்கள் நானா தேடிப் போய் ரிவ்யூ பண்ணின ஹோட்டல்கள்தான்! சில பார்வையாளர்கள் அவங்களுக்குத் தெரிஞ்ச ஹோட்டல்கள் சொல்லி, அதை டிரை பண்ணிப் பார்க்கச் சொல்வாங்க. அதுதவிர கொலாபரேஷனுக்கும் வருவாங்க. இப்பவும் சில நெகட்டிவ் கமென்ட்ஸ் வரும்... அதையெல்லாம் பெருசா எடுத்துக்கிறது கிடையாது. பணம் சம்பாதிக்கிறது என் நோக்கமில்லை... எனக்குப் பிடிச்சதை ரசிச்சுப் பண்றேன்.. அதுக்கு வர்ற பாசிட்டிவான கமென்ட்ஸையும், நான் மாத்திக்க வேண்டிய விஷயங்களைக் குறித்துச் சொல்லப்படும் அறிவுரைகளையும் எடுத்துக்கிறேன்’’ என்று சிரிக்கிறார்.

‘`யூடியூப்ல வர்ற காசைவிட அதிக காசு செலவு பண்ணிக் கருவிகள் வாங்கியிருக்கேன். பார்வையாளர்களுக்குத் தரமான வீடியோக்கள் கொடுக்கணும்னு நினைக்கிறேன். இப்ப, இன்ஜினீயரிங் செகண்ட் இயர் படிச்சிட்டு இருக்கேன். இத்தனை நாள் ஆன்லைன் கிளாஸ் என்பதால, வீடியோ எடுத்து அதை எடிட் பண்ணி நானே பதிவேற்ற சுலபமா இருந்துச்சு. காலேஜ் திறந்துட்டாங்கன்னா அதெல்லாம் பண்ண கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அதனால அதுக்கு மட்டும் குட்டியா ஒரு டீம் ஃபார்ம் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்கேன். புரொபஷனில் என்னவா ஆனாலும், யூடியூபர் என்பதுதான் என் வாழ்நாளுக்குமான அடையாளம்’’ என்கிறார் இத்ரிஸ்.