சினிமா
தொடர்கள்
Published:Updated:

ரஜினியின் முதல் மேக்கப்!

ரஜினியின் முதல் மேக்கப்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினியின் முதல் மேக்கப்!

ஒப்பனைத்துறையில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கால அனுபவம் கொண்டவர் ஆர்.சுந்தரமூர்த்தி. ஜெமினி கணேசனில் தொடங்கி ரஜினி, கமல் கடந்து, தற்போது விஜய் ஆண்டனி வரை இவரிடம் அரிதாரம் பூசிக்கொள்ளாத நடிகர்கள் தமிழ் சினிமாவில் குறைவு.

“50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பனைத்துறையில் இருக்கீங்க. எப்படி அது சாத்தியமாச்சு?”

“மேக்கப் என் ரத்தத்திலேயே இருக்கு. எங்க தாத்தா, அப்பா, சித்தப்பா எல்லோருமே மேக்கப் கலைஞர்கள்தான். 40-களில் எங்க தாத்தா மோகாம்பர முதலியார் நாடக நடிகர்களுக்கு மேக்கப் போடுவார். அவருக்கு உதவியா எங்க அப்பாவும் சித்தப்பாவும் இருப்பாங்க. அப்போல்லாம் மேக்கப் பொருள்களை மும்பையில இருந்து வரவைக்கணும். அதுவும் எல்லோருக்கும் கிடைச்சிடாது. சம்பந்தப்பட்ட சினிமாத் தயாரிப்பாளர், பிலிம் சேம்பருக்குப் போய், படத்தைப் பற்றிய விவரத்தை எழுதிக் கொடுத்து அப்ளை பண்ணி வாங்கணும். இதெல்லாம் நாடகத்துக்குச் சரிபட்டு வராதுன்னு, எங்க தாத்தா அவருக்குத் தேவையான மேக்கப் பொருள்களை வீட்டிலேயே தயாரிச்சிடுவார்.

அதனாலயே அவருக்கு அப்போ டிமாண்டு அதிகம். அப்போல்லாம் நாடக நடிகர்கள் எங்க வீட்டுக்கே வந்து மேக்கப் போட்டுக்குவாங்க. இதனால, எந்நேரமும் எங்க வீட்டுல மேக்கப்பும், மேக்கப் சார்ந்த விஷயங்களும்தான் பேச்சா இருக்கும். ஏழெட்டு வயசிருக்கும்போதே நான் அவங்களோட கை கால்களுக்கெல்லாம் மேக்கப் போட்டுவிட ஆரம்பிச்சிட்டேன்.

அப்புறம் எங்க அப்பா ஏ.வி.ராமச்சந்திரன் சினிமாவுக்குப் போய், பி.யு.சின்னப்பா, நாகேஷ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு மேக்கப் போட ஆரம்பிச்சார். ‘மனோகரா’ மாதிரி எத்தனையோ படங்களுக்கு மேக்கப் போட்டிருக்கார். எனக்குப் படிப்பு சரியா வராததால, அப்பாவுக்கு உதவியா நானும் இந்தத் தொழிலைக் கத்துக்கிட்டேன். அப்படியே ஜெமினி கணேசன் சாருக்கு டச்-அப் பையனா இருந்து, அவரோட ‘சாந்தி நிலையம்’ படம் மூலமா முதன்முதலா மேக்கப்மேன் ஆனேன்.

ஜெமினி கணேசனும், கே.பி சாரும் சேர்ந்து அப்போ நிறைய படங்கள் பண்ணுனதால, கே.பி சாருக்கு என் வேலை பிடிச்சுப்போக, அதுக்குப் பிறகு அவரோட எல்லாப் படங்களுக்கும் மேக்கப் பணி செய்ய ஆரம்பிச்சேன். இப்படி ஆரம்பிச்ச பயணம் இது. இப்போவரை தொடருது.”

“ரஜினிக்கு நீங்க ஸ்பெஷல். அவரோடு பணியாற்றிய அனுபவங்கள்?”

“கே.பி சாரோட படங்கள்ல தொடர்ந்து வேலை பார்த்ததால, `கமல், சுஜாதா, சரிதா’ன்னு அவர் அறிமுகப்படுத்திய எல்லாக் கலைஞர்களுக்கும் நான்தான் மேக்கப் போட்டேன். ‘அபூர்வ ராகங்கள்’ பட சமயத்துல ஒருநாள் கே.பி சார் என்னைக் கூப்பிட்டு, ‘இன்ஸ்டிட்யூட்ல இருந்து ஒரு பையன் நடிக்க வந்திருக்கான்’னு சொல்ல, அவர் கை காட்டுன திசையைப் பார்த்தா ரஜினி சார் பவ்யமா நின்னுகிட்டிருக்கார். ‘எப்படிடா இருக்கான்’னு கேட்டார். ‘கொஞ்சம் வித்தியாசமா நல்லா இருக்காரு சார்’னு நான் சொன்னேன். கே.பி சார் அந்தக் கேரக்டரைப் பற்றிச் சொல்லிட்டு, ‘அவனுக்குக் கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது மேக்கப் போட்டுவைடா’ன்னு சொல்லிட்டுப் போயிட்டார். அப்போல்லாம் ரஜினிக்கு அவ்வளவா தமிழ் தெரியாது. அதனால, அதிகம் பேசமாட்டார். நான் அவரைக் கூட்டிக்கிட்டுப் போய் ஒரு கோட் போட்டுவிட்டு, கொஞ்சமா தாடி வெச்சுவிட்டு, சார்கிட்ட காட்டினேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. ‘நைட்டே ஷூட் போயிடலாம்டா’ன்னு சொல்லிட்டுப் போயிட்டார். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அன்னைக்கு ஒரு பௌர்ணமி நாள். அன்னைக்குத்தான் படத்துல அவர் அறிமுகமாகிற அந்த கேட் சீனை அடையாறுல எடுத்தாங்க. ‘அவள் ஒரு தொடர்கதை’ தெலுங்கு ரீமேக், ‘மூன்று முடிச்சு’ன்னு தொடர்ந்து கே.பி சார் படத்துல ரஜினி நடிக்க ஆரம்பிக்க, அவருக்கும் எனக்கும் நல்ல பழக்கமாயிடுச்சு.

ரஜினியின் முதல் மேக்கப்!

ரஜினி சாரோட தலைமுடி ஒரு தனி அழகு. உண்மையைச் சொல்லணும்னா, அவரோட முடி சீக்கிரம் கொட்டுனதுக்குக் காரணம் அவரேதான். தலையைக் கோதிவிட்டுக்காம அவரால இருக்கவே முடியாது. அதேமாதிரி, ஒவ்வொரு ஷாட்டுக்கு இடையிலேயும் முள் சீப்பை வெச்சு முடியைச் சீவிக்கிட்டே இருப்பார். இப்படி எந்த ஆர்ட்டிஸ்ட்டுமே பண்ணமாட்டாங்க. பின்னாடி அவர் பயன்படுத்துன ஹேர் டையும் அவருக்கு செட் ஆகல.

அவரோட முதல் படத்துல இருந்து ‘சந்திரமுகி’ வரைக்கும், சில படங்களைத் தவிர்த்து, பெரும்பாலான படங்களுக்கு நான்தான் அவருக்கு மேக்கப் போட்டிருக்கேன். அவருக்குப் போட்ட எத்தனையோ கெட்டப்ல ‘ராகவேந்திரர்’ படத்துக்கும் ‘பாட்ஷா’ படத்துக்கும் நான் போட்ட கெட்டப் என் மனசுக்கு நெருக்கமானது.”

“நீங்க மேக்கப் டெஸ்ட் செய்து அறிமுகப்படுத்திய பிரபலங்கள்?”

“கே.பி சார் அறிமுகப்படுத்திய எல்லா நடிகர், நடிகைகளுக்கும் நான்தான் மேக்கப் டெஸ்ட் பண்ணினேன். அதுக்கப்புறம் முரளி, பூர்ணிமா பாக்யராஜ், குயிலி மாதிரி சில நடிகர்களுக்கும் செஞ்சிருக்கேன். ஒருகட்டத்துக்கு மேல அது கைராசி, நம்பிக்கைன்னு மாறிப்போச்சு.

ரஜினியின் முதல் மேக்கப்!

அதனாலேயே பலபேர் என்கிட்ட வருவாங்க. சமீபத்துல விஜய் ஆண்டனிக்கு ‘நான்’ படத்துக்கு நான்தான் மேக்கப் டெஸ்ட் செஞ்சேன்.”

“அப்போ இருந்த மேக்கப், இப்போ இருக்கிற மேக்கப்... என்ன வித்தியாசம் உணர்றீங்க?”

“எல்லாம் காலத்துக்கேற்ப மாறுகிற மாதிரி, மேக்கப் துறையிலேயும் நிறைய மாற்றங்கள் வந்திருக்கு. முன்னாடியெல்லாம் நாடகங்கள்ல கடைசி பென்ச்ல இருக்கிறவனுக்கும் நடிகர்களோட உருவம் தெளிவாத் தெரியணும்னு அதுக்கேத்த மாதிரி ஹெவி மேக்கப் போடுவோம். சினிமாவுல அதைவிடக் கம்மியா பயன்படுத்தினாங்க.

ரஜினியின் முதல் மேக்கப்!

இப்போ உள்ள கேமராவுல எல்லாம் பளிச்சுன்னு தெரியிறதால கம்மியாதான் மேக்கப் போடுற மாதிரி ஆகிடுச்சு. இப்போ வர்ற கேமராமேன்கள் எல்லோருமே லைட்டான மேக்கப்பைத்தான் விரும்புறாங்க. மும்பையில இருந்து வர்ற ஹீரோயின்களுக்கு மட்டும் ஹெவி மேக்கப் போடுறாங்க.”