மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உண்மைகள் சொல்வேன்! - 29

உண்மைகள் சொல்வேன்! - 29
பிரீமியம் ஸ்டோரி
News
உண்மைகள் சொல்வேன்! - 29

- கலைப்புலி எஸ்.தாணு

2005… நான் ‘சச்சின்’ படம் எடுத்துக்கொண்டிருந்த நேரம். ஒருநாள் தேவி ஸ்ரீதேவி சதீஷுடன் சென்னை ரெசிடன்ஸி ஹோட்டலில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு குடும்பத்தோடு உணவருந்த நடிகர் விக்ரம் வந்தார். என்னைப் பார்த்தவர் மரியாதை நிமித்தமாக வந்து சில நிமிடங்கள் பேசினார். இதற்கு முன்பு சினிமா விழாக்களில், வேறு நிகழ்ச்சிகளில் இருவருமே பார்த்துக்கொண்டோமே தவிர படம் எடுப்பது பற்றியோ, தயாரிப்பது பற்றியோ பேசியதில்லை.

இந்த முறை என்னுடன் இருந்த சதீஷ், விக்ரம் பக்கத்தில் இருக்கும்போது ‘‘விக்ரம் சாரை வெச்சு நீங்க ஒரு படம் பண்ணணும் சார்’’ என்றார். ‘‘நிச்சயமா பண்ணலாம்பா’’ என்றேன். இதுதான் ‘கந்தசாமி’ படத்துக்கான ஆரம்பப் புள்ளி.

‘சச்சின்’ ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது என்னைப் பார்ப்பதற்கு விக்ரமின் மேனேஜர் கிரி வருகிறார். ‘‘சார், விக்ரம் சார் நம்ம கம்பெனிக்குப் படம் பண்ணலாம்னு சொன்னார்’’ என்றார். ‘‘பண்ணிடலாம்பா’’ என்று சொல்லி சம்பளம் பேசினோம். பேச்சுவார்த்தை முடிந்ததும் ‘‘எப்ப சார் அட்வான்ஸ் தர்றீங்க?’’ என்றார். ‘‘நாளைக்கே வாங்கிக்கோங்க’’ என்று சொல்லி அடுத்த நாள் ஒரு கோடி ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்தேன். இவ்வளவு அட்வான்ஸ் என்பது விக்ரம் அதுவரை வாங்காதது. அதனால் அவர் மிகுந்த சந்தோஷத்துடன் என்னோடு படம் பண்ணத் தயாரானார். ஆனால், அவரின் அடுத்தடுத்த படங்கள் முடிவதில் கொஞ்சம் தாமதமாக, கால்ஷீட் தள்ளிக்கொண்டே போனது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.

உண்மைகள் சொல்வேன்! - 29
உண்மைகள் சொல்வேன்! - 29
உண்மைகள் சொல்வேன்! - 29

இந்தச் சூழலில் விக்ரம் ஒருநாள் போன் செய்து, ‘‘ஒரு கதை கேட்டேன் சார். நல்லாருக்கு… நீங்களும் கேட்குறீங்களா?’’ என்றார். ‘‘ஓகே’’ சொல்லி பாம்குரோவ் ஹோட்டலில் ரூம் போட்டேன். இயக்குநர் மிஷ்கின் வந்தார். அப்போதுதான் அவர் ‘சித்திரம் பேசுதடி’ என்கிற ஹிட் படத்தை எடுத்து முடித்திருந்தார். விக்ரம் அங்கே வர கொஞ்சம் காலதாமதம் ஆகிறது. ஆனால், விக்ரமுக்குக் கதை பிடித்திருந்தால்?! ‘நல்ல நேரம் முடிவதற்குள் அட்வான்ஸ் கொடுத்துவிடுவோம், அதன்பிறகு கதை கேட்போம்’ என மிஷ்கினிடம் 50,000 ரூபாய் கொடுத்துவிட்டேன்.

விக்ரம் வந்தார், மிஷ்கின் கதை சொல்ல ஆரம்பித்தார். முழுமையாகக் கதையைக் கேட்டு முடித்ததும் விக்ரமிடம் ‘‘தம்பி, நீங்க ஏற்கெனவே ‘சேது’ பண்ணிட்டீங்க. அதன் மறுபாதியை ‘பிதாமகன்’ல பண்ணிட்டீங்க. இப்ப இந்தப்படம் பண்ணீங்கன்னா அந்த வரிசையில இன்னொரு படமா இது ஆகிடும். படத்துல ஃபைட் இல்ல, பாட்டு இல்ல. எனக்கும் செலவு இல்ல. இரண்டரை கோடில படத்தை எடுத்துடலாம். இப்பவே என் பாக்கெட்ல ஏழு கோடி லாபம் வந்த மாதிரி இருக்கு. ஆனா, இந்தப் படம் எடுத்து, ஏழு கோடி லாபம் சம்பாதிக்கிறது என் நோக்கம் இல்ல தம்பி. நீங்க ‘அந்நியன்’ பண்ணியிருக்கீங்க. ‘அந்நியன்’ படத்துக்கு மேலான ஒரு படம் கொடுக்கணும் தம்பி. விக்ரம் - தாணு சேரும்போது படம் பிரமாண்டமா இருக்கும்னு உங்க ரசிகர்கள் எதிர்பார்ப்பாங்க. அதை நிறைவேற்றணும்’’ என்றேன்.

‘‘மிஷ்கின், ‘சித்திரம் பேசுதடி’ மாதிரி கமர்ஷியலா ஒரு படம் பண்ணி நல்ல பேர் வாங்கியிருக்கீங்க. அடுத்து மணிரத்னம் பாராட்டுற மாதிரி படம் எடுக்குறேன்னு இறங்கினீங்கனா, அவர் மட்டும்தான் பாராட்டுவார். ஒட்டுமொத்த திரை யுலகமும் பாராட்டுமான்னு எனக்குத் தெரியல. ஏன்னா, ஈஸியா இன்னொரு படத்தோட உங்க படத்தை ஒப்பிட்டிடுவான். அதனால, இந்தப் படத்தை வேற யாருக்காவது பண்ணிடுங்க’’ என்று சொன்னேன். ‘‘சரி, மிஷ்கின்… நீங்க வேற கதை ரெடி பண்ணுங்க’’ என விக்ரமும் சொல்ல, கலைந்துபோனோம். அந்தக் கதைதான் பின்னர் மிஷ்கினே ஹீரோவாக நடித்த ‘நந்தலாலா.’

சில மாதங்கள் கடந்தன. இதற்கிடையே ஹைதரா பாத்தில் ஒரு நிகழ்ச்சியில் விக்ரம் கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு டிவி சேனலின் சிஇஓ, ‘‘தாணுக்குப் படம் பண்ணப்போறதா கேள்விப்பட்டேன். அவருக்குப் படம் பண்ணீங்கன்னா எங்க சேனல்ல அந்தப் படத்தோட பாட்டு, டிரெய்லர்னு ஒரு பிட் செய்திகூட வராது’’ என்று விக்ரமிடம் சொல்லியிருக்கிறார்.

இதற்கு விக்ரம் ‘‘சார், மூணு வருஷத்துக்கு முன்னாடியே அவருக்கு நான் படம் பண்றேன்னு சொல்லி ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸும் வாங்கியிருக்கேன். இவ்வளவு பெரிய தொகையை நான் ஒரு படத்துக்கு அட்வான்ஸா வாங்கினதே இல்ல. இப்ப பண்ணமாட்டேன்னு சொன்னா நான் நன்றிகெட்டவனாகிடுவேன். நீங்க இந்தப் படத்தை புரமோட் பண்ணலைன்னாலும் பரவாயில்ல. நான் அவருக்குப் படம் பண்ணாம இருக்கமாட்டேன்’’ என்று சொல்லிவிடுகிறார். இதைக் கேள்விப்பட்ட எனக்கு விக்ரமின் மீது இன்னும் மரியாதை கூடுகிறது. அவரது கரியரில் மிக முக்கியமான படமாக இதைப் பண்ணவேண்டும் என வைராக்கியம் அதிகரிக்கிறது. விக்ரமை வைத்து 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் பண்ண முடிவெடுக்கிறேன்.

இந்த நேரத்தில் மீண்டும் தேவி ஸ்ரீதேவி சதீஷ்தான் இயக்குநர் சுசி கணேசனை அழைத்து வந்து என்னிடம் அறிமுகப்படுத்துகிறார். ‘‘கதை ரெடி பண்ணுப்பா… பண்ணலாம்’’ என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டேன். இதற்கிடையே சதீஷ் மூலமாக விக்ரமைச் சந்தித்துக் கதை சொன்னார் சுசி கணேசன். அவருக்குப் பிடித்துப் போக, அடையாறு பார்க் ஹோட்டலில் கூடுகிறோம். ‘கிளாடியேட்டர்’ படத்தைப் போன்று கொஞ்சம் கதையை எல்லாம் மாற்றி ஒரு கதை சொல்கிறார் சுசி கணேசன். ‘‘ரொம்ப நல்லாருக்கு. பீரியட் படம் பெரிய செலவாகும். யோசனை பண்ணிச் சொல்லுங்க…’’ என்கிறேன்.

உண்மைகள் சொல்வேன்! - 29
உண்மைகள் சொல்வேன்! - 29
உண்மைகள் சொல்வேன்! - 29

இதற்கிடையே தமிழ் சினிமா உலகில் ஒரு பிரச்னை நடக்கிறது. சினிமாவுக்கான வரி அதிகமாகிவிட்டது. இதனால் வியாபாரம் குறைந்துவிட்டது. என்ன செய்வது என எல்லோரும் குழப்பத்தில் இருக்க, ‘‘இப்ப இருக்கிற சூழல்ல இவ்ளோ பெரிய பட்ஜெட்ல படம் பண்ணுனா சரியா இருக்காது சார். அதனால கொஞ்சம் குறைச்சி பண்ணலாம்’’ என்கிறார்கள். ‘`சிம்பிளான கதை பண்ணலாம்’’ என ‘கந்தசாமி’ படத்தின் கதையைச் சொல்கிறார் சுசி கணேசன். எனக்குக் கதை ரொம்பவும் பிடித்துவிட்டது. ஸ்கிரிப்ட்டை இறுதி செய்து வேலைகளில் இறங்கினோம்.

லொகேஷன் பார்ப்பதற்காக ஆசியாவில் தொடங்கி அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என எல்லாக் கண்டங்களையும் சுற்றிவந்த விக்ரமும் சுசி கணேசனும் இறுதியாக முடிவு செய்த இடம் கென்யா. அங்கே ஷூட்டிங் நடத்துவதற்கு அனுமதிகளை வாங்கி, இங்கே விசா, டிக்கெட் என எல்லாவற்றையும் எடுத்து கென்யாவுக்குப் புறப்படுவதற்கு நாள் குறித்து விட்டோம். ஆனால், கென்யாவில் திடீரென உள்நாட்டுக் கலவரம். நாடே போர்க்களமாகிறது. மூன்று மாதங்கள் காத்திருந்தும், பிரச்னை முடியவில்லை. அதனால், தென்னமெரிக்காவில் மெக்ஸிகோ எல்லைக்கு மிக அருகில் இருக்கும் துராங்கோ நகரைத் தேர்வு செய்கிறோம்.

இயக்குநர் சுசி கணேசன் முதல் நபராக அங்கே போய் ஷூட்டிங் நடத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்து ஏற்பாடுகளை எல்லாம் செய்கிறார். சென்னையிலிருந்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என 150 பேர் போக வேண்டும். அவ்வளவு பேருக்கும் விசா கிடைப்பதில் சிக்கல் உருவாகிறது. இதனால் மீண்டும் இரண்டு மாதம் தாமதம். இயக்குநர் அங்கே இருக்கிறார். ஆனால், படக்குழுவினரால் போகமுடியவில்லை. இறுதியில் எல்லாச் சிக்கல்களையும் தீர்த்து நானும் குழுவினரோடு துராங்கோ போகத் தயாரானேன்.

இதற்கு முன்னர் படத் தொடக்கவிழா அழைப்பிதழ் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தேன். சுசி கணேசன் சீனாவுக்குச் சென்று இதற்கான வேலைகளைச் செய்ய, அழைப்பிதழைத் திறந்தாலே டிரெய்லர் ஓடுவது போல தயாரித்தோம். தமிழ் சினிமா உலகில் முதல் முயற்சி இது. எல்லோரும் பிரமித்தார்கள். அதிக பட்ஜெட்டில் போட்டோ ஷூட், வீடியோ ஷூட் செய்து படத்தைத் தொடங்கினோம்.

துராங்கோவுக்குத் தொழில்நுட்பக் கலைஞர்களோடு போனோம். ஜிம்மி ஜிப் உட்பட கேமரா உபகரணங்கள் பலவற்றையும் இங்கிருந்து கொண்டுபோனோம். விக்ரமே எடை அதிகமான பல கருவிகளைத் தூக்கிக்கொண்டு நடந்தார். அவர் தொழில்பக்தியைக் கண்டு வியந்துபோனேன்.

துராங்கோ கவர்னரும், அதிகாரிகளும் எங்களைச் சிறப்பாக கவனித்தனர். எந்தப் பிரச்னையும் இல்லாமல் படப்பிடிப்பை நடத்தி முடிக்கத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்தனர். அவர்களே ஹெலிகாப்டர், கார்கள் என எல்லாவற்றையும் தந்து படப்பிடிப்பு நல்லபடியாக நடக்கத் துணை நின்றார்கள்.

உண்மைகள் சொல்வேன்! - 29

துராங்கோ கவர்னர் எங்கள் ‘வி’ கிரியேஷன்ஸின் முந்தைய தயாரிப்புகளை எல்லாம் பார்த்து சிலாகித்து, அந்த நாட்டுக்கான தூதராக என்னை நியமித்தார். ஷூட்டிங் முடிந்ததும் எங்களுக்கு விருந்தளித்தார். அவரது மாளிகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கலைநிகழ்ச்சிகளுடன் விருந்து நடக்கிறது. எல்லோருக்கும் அசைவ உணவு பரிமாறப்படுகிறது. நான் சைவம் என்பதால் எனக்கு மட்டும் சைவ உணவு வருகிறது. அவ்வளவு பெரிய கூட்டத்தில் எனக்கு மட்டும் எப்படி சரியாக சைவ உணவு வருகிறது என ஆச்சர்யம் எழுந்தது. அங்கிருந்தவர்களைக் கேட்டேன். ‘‘உங்கள் டேபிளின் முன் ஒரு பூ வைத்திருக்கிறோம். அந்தப் பூ இருந்தால் சைவம் என அர்த்தம். அதனால்தான் எந்தக் குழப்பமும் இல்லாமல் பரிமாறுகிறோம்’’ என்றார்கள்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் இதேபோல் கவர்னர் மாளிகையில் கவர்னர் சென்னா ரெட்டி எனக்கு ஒரு விருந்தளித்தார். எதற்காக அந்த விருந்து, ‘கந்தசாமி’ படப்பிடிப்பில் நடந்தது என்ன, வடிவேலு எப்படி இந்தப் படத்தில் நடிக்க வந்தார், விக்ரமுக்கும் சுசி கணேசனுக்கும் இடையே ஏற்பட்ட நெருடல், 30 கோடிக்கும் குறைவாகத் திட்டமிடப்பட்ட ‘கந்தசாமி’ படத்தின் பட்ஜெட் ஏன் 40 கோடியானது, ரஜினியின் மெளன உண்ணாவிரதத்தில் நடந்த சம்பவங்கள்... அடுத்தடுத்த வாரங்களில் சொல்கிறேன்.