கட்டுரைகள்
Published:Updated:

“பாரீன் ஷுட்டிங்னா விஜய் ஜாலியா இருப்பார்!”

பாலசுப்ரமணியெம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாலசுப்ரமணியெம்

சிம்புதேவன் இயக்கத்துல ‘கசடதபற’ படத்துல ஆறு ஒளிப்பதிவாளர்கள் வொர்க் பண்ணியிருக்கோம்.

”ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட ஒளிப்பதிவாளர்களுள் பாலசுப்ரமணியெம் முக்கியமானவர். ‘பிதாமகன்’ ‘180’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என, தன்னை ஒரு குறிப்பிட்ட ஏரியாவுக்குள் சுருக்கிக்கொள்ளாமல் எல்லாப் பக்கமும் பவுண்டரிகளை விளாசுவது இவரது ஸ்டைல். தன்னுடைய திரைப் பயணத்தில் நிகழ்ந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

``பி.சி ஸ்ரீராம்கிட்ட சேர்ந்த கதை?’’

“சின்ன வயசுல இருந்தே பெயின்டிங், போட்டோகிராபி மேல ஆர்வம் அதிகமா இருந்தது. இது ரெண்டுலேயே என் காலேஜ் வாழ்க்கை நகர்ந்தது. பி.சி.ஸ்ரீராம் சாருடைய படங்கள் பார்த்து அவர் மேல பயங்கர ஆர்வம் ஆகிடுச்சு. பிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சுட்டுப் போனால்தான் அவர்கிட்ட அசிஸ்டென்டாக முடியும்னு நானே நினைச்சுக்கிட்டு இன்ஸ்டிட்யூட்ல சேர முயற்சி பண்ணினேன். ஆனா, பி.காம் படிச்சிருந்ததால பிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர முடியலை. அப்புறம், ஒரு பிரைவேட் கம்பெனியில் கேமரா அசிஸ்டென்டா மூணு வருஷம் வேலை செஞ்சேன். கல்யாண கவரேஜ், நியூஸ் கவரேஜுக்கெல்லாம் போவேன். வைஷாலின்னு என் பிரெண்ட் ஒருத்தர் ரிப்போர்டரா இருந்தாங்க. அவங்க பி.சி சாரை பேட்டி எடுக்கப் போகும்போது நான் போட்டோ எடுக்குறேன்னு கேட்டு அவங்களோடு போனேன். போகும்போது நான் எடுத்த போட்டோவெல்லாம் எடுத்துட்டுப் போனேன். அவரைப் பார்த்ததும் பயமாகிடுச்சு. ஒருவழியா அவர்கிட்ட அந்தப் போட்டோக்களைக் காட்டி ‘உங்ககிட்ட அசிஸ்டென்டா சேரணும்’னு சொன்னேன். ‘இப்போ என்கிட்ட நிறைய பேர் இருக்காங்க. நான் சொல்றேன்’னு சொன்னார். அதுவே ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்போ பி.சி சார் அம்மாவிடம் அவரோட போட்டோ ஒன்னை வரையதற்காகக் கேட்டு வாங்கிட்டு வந்தேன். மூணு மாசம் அந்தப் போட்டோவை ஆயில் ப்ரொட்ரெய்ட்ல வரைஞ்சேன். நான் வரைஞ்சதை எடுத்துக்கிட்டு அவர் வீட்டு வாசல்ல நின்னேன். அப்போ நான் வரைஞ்சதை வாங்கிப் பார்த்துட்டு ‘நல்லா இருக்கு. ரெண்டு நாள் கழிச்சு என் அசிஸ்டென்ட் திருநாவுக்கரசுன்னு ஒருத்தர் பேசுவார்’னு சொல்லிட்டுப் போயிட்டார். அப்படித்தான் சேர்ந்தேன்.”

“பாரீன் ஷுட்டிங்னா விஜய் ஜாலியா இருப்பார்!”

`` ‘தேவர்மகன்’ படத்துல அசிஸ்டென்டா வேலை பார்த்த அனுபவம்?’’

“சிவாஜி சார், கமல் சார் ரெண்டு பேரும் ஸ்பாட்ல இருக்கும்போது பார்க்கவே அவ்ளோ அருமையா இருக்கும். ‘கமலா இங்க வாடா... என்ன சட்டையை இப்படி இன் பண்ணியிருக்க?’ன்னு சொல்லிக்கிட்டே அதை அட்ஜஸ்ட் பண்ணிவிடுவார். அவர் சிவாஜி சாருடைய மீசையை சரி பண்ணிவிடுவார். ஆக்‌ஷன்னு சொன்னதும் அப்படியே ரெண்டு பேரும் அந்தந்த கேரக்டர்களா மாறிடுவாங்க. எத்தனை படம் பண்ணினாலும் அந்தப் படத்துடைய அனுபவம் மாதிரி வராது.”

“பாரீன் ஷுட்டிங்னா விஜய் ஜாலியா இருப்பார்!”

``கமல் தயாரிப்பில் உங்களுடைய முதல் படம், அதுவும் இந்தியில். எப்படி இந்த வாய்ப்பு அமைஞ்சது?’’

“கமல் சாருடைய அதிதீவிர ரசிகன் நான். ஆனா, அவர் தயாரிப்புல என் முதல் படம் அமைஞ்சது எதிர்பார்க்காதது. பி.சி சார்தான் கமல் சார்கிட்ட சொல்லி இந்த வாய்ப்பு வாங்கிக்கொடுத்தார். ‘மகளிர் மட்டும்’ படத்துடைய இந்தி ரீமேக் ‘லேடீஸ் ஒன்லி.’ தமிழில் நாகேஷ் சார் நடிச்ச கேரக்டர்ல கமல் சார் நடிச்சார். முதல் ஷாட் ரோலிங் சொல்லும்போது ரொம்பப் பதற்றமா இருந்தது. முதல்ல எடுத்ததே ரெண்டரை நிமிஷ ஷாட். படம் சூப்பரா வந்தது. ஆனா, படம் வெளியாகலைன்னு ரொம்ப ரொம்ப வருத்தமா இருந்தது. பி.சி சார் என்கிட்ட, ‘இது நார்மலா நடக்கிறதுதான். அடுத்ததுல வொர்க் பண்ண ரெடி பண்ணு’ன்னு சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார்.”

“பாரீன் ஷுட்டிங்னா விஜய் ஜாலியா இருப்பார்!”

`` ‘வசீகரா’, ‘அழகிய தமிழ்மகன்’னு விஜய் கூட ரெண்டு படம் பண்ணியிருக்கீங்க. உங்களுக்கு விஜய் ரொம்ப நெருக்கமாமே!’’

“ `உன்னை நினைத்து’ படம் முதல்ல விஜய் சாரை வெச்சுதான் ஆரம்பமானது. மூணு நாள் ஷூட் போனோம். அப்புறம், சில காரணங்களால அவர் போய், சூர்யா உள்ள வந்தார். ‘வசீகரா’ பண்ணும்போது அதிக நாள்கள் விஜய் சாருடன் பயணிச்சேன். அவரை இங்க பார்க்கிறதுக்கும் பாரீன் ஷூட்ல பார்க்கிறதுக்கும் அவ்ளோ வித்தியாசமா இருக்கும். அவ்ளோ ஜாலியா இருப்பார். வடிவேல் சாரும் விஜய் சாரும் செம ரகளை பண்ணுவாங்க. அவங்க நடிக்கிற சீனை எடுக்கும்போதே செம சுவாரஸ்யமா இருக்கும்.”

பாலசுப்ரமணியெம்
பாலசுப்ரமணியெம்

`` ‘பிதாமகன்’ வாய்ப்பு எப்படி வந்தது? அந்தப் பட அனுபவம்?’’

“ஏவிஎம் ஸ்டூடியோ வுக்குள்ள விக்ரம், சூர்யா இருக்கிற பெரிய பேனர் வெச்சிருந்தாங்க. ரெண்டு நாளில் பூஜை போட்டு ஷூட்டிங் போகப்போறாங்க. அதுக்கு முதல்ல கமிட்டாகி இருந்தது, ஆர்தர் வில்சன். அந்தப் போஸ்டரைப் பார்த்துட்டு ‘இந்த மாதிரி படமெல்லாம் நமக்குக் கிடைச்சா சூப்பரா இருக்கும்ல’ன்னு நினைச்சுட்டுப் போனேன். மறுநாள் பாலா சாருடைய பிரெண்ட் வேணு சார்கிட்ட இருந்து எனக்கு போன் வந்தது. ‘ஆர்தர் வில்சன் வேற ஒரு படத்துடைய ஷூட்டிங்ல இருக்கிறதனால கால்ஷீட் பிரச்னையாகுது. நீ பண்ணுறியா?’ன்னு கேட்டார். உடனே ஓகே சொல்லிட்டேன். பாலா சார் கதை சொல்லும்போது, சுடுகாட்டுல இருந்து ஆரம்பிக்கிறோம்னு சொன்னார். அப்போவே எனக்கு சுவாரஸ்யமா இருந்தது. கொஞ்ச நாளிலேயே பாலா சாரும் நானும் ரொம்ப நெருக்கமாகிட்டோம். விக்ரம் சாருடைய மேனரிசத்தைக் காட்டுறதுக்கு அவருக்கான ஷாட் எல்லாமே பெரும்பாலும் வைடுல இருக்கும். சூர்யா இறந்த சீனை எடுத்தது ரொம்ப ரொம்ப சவாலா இருந்தது.”

“பாரீன் ஷுட்டிங்னா விஜய் ஜாலியா இருப்பார்!”

`` ‘பிதாமகன்’, ‘180’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’னு எல்லா ஜானர் படங்களையும் பண்ணுறீங்க. உங்க ஸ்டைலோ விருப்பமோ என்ன?’’

“ `180’ நான் டிஜிட்டல்ல பண்ணுன முதல் படம். ‘பிதாமகன்’ எவ்ளோ அனுபவம் கொடுத்ததோ அதே அளவுக்கு ‘180’ ரொம்ப புது அனுபவமா இருந்தது. ஜெயேந்திரா சார்கூட நிறைய விளம்பரங்கள் வொர்க் பண்ணியிருக்கேன். அது பி.சி சார் பண்ண வேண்டிய படம். அப்புறம், எனக்கு வந்தது. படம் பார்த்துட்டு மணிரத்னம் சார் என் தோள் மேல கை போட்டு ‘உன் படங்கள் எல்லாம் பார்த்திருக்கேன். இதுல சூப்பரா பண்ணிருக்க பாலு’ன்னு சொன்னார். எனக்கு ரொம்பப் பிடிச்சது ‘பிதாமகன்’, ‘நீர்ப்பறவை’ மாதிரியான படங்கள். ஆனா, எல்லா நேரமும் அந்த மாதிரி அமையாது. ரொம்ப அரிதாதான் கிடைக்கும். அப்போ கிடைக்கிறதுல நல்லாப் பண்ணணும்னு நினைக்கிறேன்.”

“பாரீன் ஷுட்டிங்னா விஜய் ஜாலியா இருப்பார்!”

`` ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’ன்னு தொடர்ந்து பொன்ராம் - சிவகார்த்திகேயன் காம்பினேஷன்ல வொர்க் பண்ணுன அனுபவம்?’’

“ `ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்துல வொர்க் பண்ணும்போது ராஜேஷ் டீம் எல்லோரும் என்கூட நல்லா செட் ஆகிட்டாங்க. அப்படித்தான் பொன்ராமும் பழக்கம். சிவா இப்போ வேற லெவலுக்குப் போயிட்டார். நடிப்பு, காஸ்ட்யூம், டான்ஸ்னு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து பண்ணுறார். கொஞ்ச கொஞ்சமா தன்னை மெருகேத்திக்கிட்டார். இப்போ சிவான்னு சொல்லமுடியாது. சிவா சார்னு சொல்ற அளவுக்கு வளர்ந்துட்டார்.”

“பாரீன் ஷுட்டிங்னா விஜய் ஜாலியா இருப்பார்!”

`` ‘திருமணம்’ சீரியல் தயாரிச்சுட்டு வர்றீங்க. டிவி வாழ்க்கை எப்படி இருக்கு?’’

“உள்ள வந்த பிறகுதான், டெலிவிஷன் வேற ஒரு உலகமா இருந்துட்டு வருதுன்னு தெரிஞ்சது. ரொம்பப் புதுசாவும் கொஞ்சம் சிரமமாவும் இருக்கு. நிறைய கத்துக்கிறேன். பார்ப்போம்.”

“பாரீன் ஷுட்டிங்னா விஜய் ஜாலியா இருப்பார்!”

``அடுத்தடுத்த படங்கள்?’’

“சிம்புதேவன் இயக்கத்துல ‘கசடதபற’ படத்துல ஆறு ஒளிப்பதிவாளர்கள் வொர்க் பண்ணியிருக்கோம். அதுல நான் ஒரு போர்ஷன் எடுத்திருக்கேன். அப்புறம், ‘அன்புள்ள கில்லி’ன்னு நானும் என் பிரெண்டும் சேர்ந்து தயாரிச்சிருக்கிற படம். அதுக்கும் நான்தான் ஒளிப்பதிவு பண்ணியிருக்கேன்.