பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“தமிழ் சினிமாவில் மரியாதை இல்லை!”

 “தமிழ் சினிமாவில் மரியாதை இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“தமிழ் சினிமாவில் மரியாதை இல்லை!”

“பூர்வீகம் ஜாம்ஷெட்பூர். படிச்சது ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்டும் பப்ளிக் ரிலேஷன்ஸும்.

‘பேட்ட’ படத்தில் ரஜினியை 90ஸ் லுக்கில் பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள், ‘தர்பாரி’ல் 80ஸ் லுக்கில் பார்த்து வியந்துகொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களின் ரஜினியிசத்திலும் நிஹாரிகா கானுக்கு முக்கியப் பங்குண்டு. பாலிவுட்டின் பிரபல காஸ்ட்யூம் டிசைனரான நிஹாரிகாதான் இந்தப் படங்களில் ரஜினியின் யூத் லுக் டிரான்ஸ்ஃபர்மேஷனை நிகழ்த்தியவர். படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருக்கும் நிவேதா தாமஸுக்கும் இவரே டிசைன் செய்திருக்கிறார்.

“பூர்வீகம் ஜாம்ஷெட்பூர். படிச்சது ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்டும் பப்ளிக் ரிலேஷன்ஸும். ‘படிச்சதுக்கும் பார்க்கிற வேலைக்கும் சம்பந்தமே இல்லையே’ங்கிறதுதானே உங்க முதல் கேள்வி. ஆமாம்... எனக்கு ஃபேஷன் டிசைனிங்ல எந்தப் பின்னணியும் அனுபவமும் இல்லை. நான் டிசைனரானது எதிர்பாராத விஷயம்தான்” - நாமே எதிர்பார்க்காத இன்ட்ரோவுடன் ஆரம்பிக்கிறார் நிஹாரிகா.

rajinikanth, Niharika Khan
rajinikanth, Niharika Khan

“டிசைனிங் பற்றி ஏபிசிடிகூடத் தெரியாத நிலையில்தான் நான் டிசைனர் அவதாரம் எடுத்தேன். என் தம்பி, அர்ஜுனும் காஸ்ட்யூம் டிசைனர்தான். ஒரு கட்டத்துல அவர் பிஸியான, எக்ஸ்பென்சிவ்வான டிசைனராயிட்டார். அப்படியொரு சூழல்லதான் தம்பியின் நண்பர் என்னை பாலிவுட் டைரக்டர் சுதீர் மிஸ்ராகிட்ட அறிமுகப்படுத்தினார். ‘எனக்கு டிசைனிங் தெரியாது. நீங்க பிரபலமான டைரக்டர். என்னை கமிட் பண்ணி, உங்க புராஜெக்ட்டைக் கெடுத்துக்காதீங்க’ன்னு சொன்னேன். ‘நீங்க உண்மையைப் பேசறீங்க... அதனால நீங்கதான் இந்தப் படத்துல வொர்க் பண்றீங்க’ன்னு சொல்லி என்னை கமிட் பண்ணுனாங்க. ‘உன்னை என்ன எவரெஸ்ட்லேருந்தா குதிக்கச் சொல்றாங்க? ஏன் இந்த வாய்ப்பை மறுக்கறே’ன்னு கேட்டார் என் தம்பி. எல்லாரும் சேர்ந்து என்னை கன்வின்ஸ் பண்ணிட்டாங்க. `கோயா கோயா’ என் முதல் படம். அந்தப் படம் தந்த நம்பிக்கையில் 13 வருஷங்களா நிற்காம ஓடிட்டிருக்கேன்’’ நிஜம் பேசுபவர் தமிழில் இரண்டே படங்களில்தான் வேலை பார்த்திருக்கிறார். இரண்டுமே ரஜினி படங்கள்.

“பாலிவுட் படங்கள் பண்ணிட்டிருந்த நான், அங்கிருந்து தெலுங்குப்பக்கம் போனேன். அங்கிருந்து தமிழ் இண்டஸ்ட்ரி. ஷிவாய் படத்துல வொர்க் பண்ணின யாரோ ஒருத்தர் ஏ.ஆர்.முருகதாஸ்கிட்ட என்னைப் பத்திச் சொல்லியிருக்காங்கபோல. முருகதாஸ் கூப்பிட்டார். `பேட்ட’ படத்துல ரஜினி சாருக்கும் நவாசுதீனுக்கும் டிசைன் பண்ணினேன். அதுல என் வொர்க் பிடிச்சுப்போய் வந்த வாய்ப்புதான் ‘தர்பார்.’

தமிழ் இண்டஸ்ட்ரியில் காஸ்ட்யூம் டிசைனர்ஸுக்கு மதிப்பு இல்லை. யார் வேணா காஸ்ட்யூம் டிசைன் பண்ணிடலாம்னு நினைக்கிறாங்க. இதுவரைக்கும் பேட்ட, தர்பார்னு ரெண்டு படங்களும் இந்த எண்ணத்தைத்தான் எனக்குக் கொடுத்தன. முருகதாஸ் சாரோ, ரஜினி சாரோ எனக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையில் எந்தக் குறையும் வைக்கலை. ஆனா நேஷனல் அவார்டு வாங்கின ஒரு டிசைனரை எப்படி நடத்தணும்னு புரொடக்‌ஷன் கம்பெனிக்குத் தெரியலை. நான் பணத்துக்காக வேலை செய்கிறவள் இல்லை. எனக்கு மரியாதை முக்கியம். அது கிடைக்காத இடத்துல என்னால வேலைசெய்ய முடியாது. பாலிவுட்ல இந்தப் பிரச்னையே இல்லைன்னு சொல்லலை. ஆனா அங்கே உள்ளவங்களுக்கு நான் யார், என் பின்னணி என்னன்னு தெரியும். அங்கே நான் பண்ணின எல்லாப் படங்களிலும் எனக்கான அங்கீகாரமும் பாராட்டுகளும் தவறாமக் கிடைச்சிருக்கு. தமிழ்ப் படங்கள் எனக்குத் தந்த கசப்பான அனுபவங்களை மறக்கவெச்சதுல தமிழ் ரசிகர்களுக்குப் பெரிய பங்குண்டு. `பேட்ட’ படத்துல ரஜினி சார் லுக்கைப் பார்த்துட்டு அவங்க என்னைக் கொண்டாடினாங்க. அதைவிட அதிகமா இப்போ ‘தர்பார்’ லுக் பார்த்துட்டுப் பாராட்டறாங்க. அதுதான் என் வேலைக்கான அங்கீகாரம்.’’ வேதனையை வென்ற தருணம் பகிர்பவருக்கு தர்பாருக்குப் பிறகு ரசிகர்களின் ஆதரவு இன்னும் அதிகரித்திருக்கிறது.

ரஜினி பற்றிப் பேச ஆரம்பித்தால் உலகம் மறக்கிறார் நிஹாரிகா.

“ ‘பேட்ட’ படத்துல வொர்க் பண்றவரைக்கும் நான் ரஜினி சார் படங்கள் பார்த்ததில்லை. அந்தப் படத்துல வொர்க் பண்ணிட்டிருந்தபோது, எந்திரன் 2.0 ரெடியாயிட்டிருந்தது. அந்தப் படத்தின் டிரெய்லரையெல்லாம் காட்டி, படத்தைப் பத்தி என்கிட்ட நிறைய பேசினார் ரஜினி சார். அவருக்காகவே அந்தப் படத்தைப் பார்த்தேன். `பேட்ட’ படத்தில் ரஜினி சாரின் அறிமுகக் காட்சி. அந்த டிரெஸ்ஸைப் போட்டுக்கிட்டு வந்து நின்னு ‘நிகாரிகா’ன்னு கூப்பிட்டார். ஒரு குழந்தையின் குதூகலத்தோடு, ‘நிகாரிகா... சூப்பர்’னு அவர் சொன்னபோது எனக்கு வார்த்தைகள் இல்லை.

 “தமிழ் சினிமாவில் மரியாதை இல்லை!”

`தர்பார்’ல அவருக்கு போலீஸ் கேரக்டர். ‘நிகாரிகா நான் என்ன செய்யணும்?’னு கேட்டார். ‘கொஞ்சம் ஒல்லியா இருந்தா போலீஸ் காஸ்ட்யூம்ல இன்னும் சூப்பரா தெரிவீங்க சார்’னு சொன்னேன். உலகமே வியந்து பார்க்கிற இடத்துல இருக்கிற சூப்பர் ஸ்டார்... நான் இப்படித்தான் இருப்பேன்னு சொல்லிட்டுப் போயிருக்கலாம். ஆனா நான் சொன்னதுக்காகவே வெயிட்டைக் குறைச்சு, மஸ்குலரா, நிஜமான போலீஸா வந்து நின்னபோது நான் ஷாக் ஆயிட்டேன். ‘நிகாரிகா... நீங்க சொன்ன மாதிரியே வெயிட்டைக் குறைச்சிட்டேன். இப்போ நான் ஓகேவா’ன்னு கேட்டபோது நான் என்ன சொல்ல முடியும்?”

அவர் கண்களில் அவ்வளவு ஆச்சர்யம்!