Published:Updated:

`இந்தியாவில் ஆசிட் வாங்குவது எவ்வளவு ஈஸி தெரியுமா?!' -ஸ்டிங் ஆபரேஷனில் இறங்கிய தீபிகா #Viral

ஸ்டிங் ஆபரேஷனில் இறங்கிய தீபிகா
ஸ்டிங் ஆபரேஷனில் இறங்கிய தீபிகா

இந்தக் காணொளியில், ஒவ்வொருவரும் வெவ்வேறு கடைகளுக்குச் சென்று ஆசிட் கேட்பதோடு, அதனால் தோலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்றும் கேட்கின்றனர்.

தீபிகா படுகோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், 'சபாக்'. இதை, எழுத்தாளர் மற்றும் இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம், ஆசிட் தாக்குதலில் உயிர்பிழைத்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் உண்மைக் கதையை மையக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, தீபிகா மற்றும் `சபாக்' படக்குழுவினர், ஆசிட் வீச்சு பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் ஆசிட் வாங்குவது எவ்வளவு எளிது என்பதை உணர்த்தும் வகையில் இந்த வீடியோ அமைந்திருக்கிறது .

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்

இதில், திரைப்படக் குழுவினர் சிலர் வெவ்வேறு கடைகளுக்கு ஆசிட் வாங்கச் செல்கின்றனர். இதைக் காரில் இருந்தவாறு தீபிகா மற்றும் இரண்டு ஒளிப்பதிவாளர்கள் கண்காணிக்கின்றனர். இந்தக் காணொளியில், ஒவ்வொருவரும் வெவ்வேறு கடைகளுக்குச் சென்று ஆசிட் கேட்பதோடு, `அதனால் தோலுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?' என்றும் கேட்கின்றனர்.

இந்தக் காணொளியில், ஒரே ஒரு கடையின் உரிமையாளர் மட்டுமே, `அடையாள அட்டை காண்பித்தால்தான் ஆசிட் வாங்க முடியும்' எனக் கூறுகிறார். ஒரு பெண் உரிமையாளர், `ஆசிட் மற்றவர்கள் மீது வீசுவதற்காக வாங்கப்படுகிறதா?' என்று சர்வசாதாரணமாகக் கேட்கிறார். மேலும், திரைப்படக் குழுவைச் சேர்ந்த ஒரு நடிகர், ஆசிட் வாங்குவதற்கான காரணத்தையும் கூறுகிறார். இதற்குக் கடை உரிமையாளர், `ஆசிட்டை மற்றவர்கள்மீது வீசப் பயன்படுத்த வேண்டாம்' என்று கூறிவிட்டு விற்கிறார்.

இந்த வீடியோவின் இறுதியில் தீபிகா படுகோன், 24 ஆசிட் பாட்டில்கள் மொத்தமாக வாங்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார். இத்தனைக்கும் இந்தியாவில் ஆசிட் வாங்குவதற்கு என விதிமுறைகள் அமலில் உள்ளது.

இதைப் பற்றி தீபிகா கூறுகையில், "ஆசிட் விற்கப்படுவதால்தான் ஆசிட் வீச்சு நடக்கிறது. ஆசிட் வீச்சைத் தடுக்கவேண்டியது கடை உரிமையாளர்களின் கடமை மட்டுமல்ல. நாம் அனைவருமே சட்டவிரோதமாக ஆசிட் வாங்கப்படுவதை அறிந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் சேர்ந்து, ஆசிட் விற்பதற்கான விதிமுறைகளைத் தெரிவிப்பதோடு வீடியோ முடிவடைகிறது.

பின் செல்ல