Published:Updated:

தனுஷ் - ஐஸ்வர்யா 'காதல் ரகசியம்'! - #Classics

தனுஷ் - ஐஸ்வர்யா 'காதல் ரகசியம்'!
பிரீமியம் ஸ்டோரி
News
தனுஷ் - ஐஸ்வர்யா 'காதல் ரகசியம்'!

தனுஷை மணமுடிக்க ஐஸ்வர்யா பட்ட அவஸ்தைகள், கொஞ்ச நெஞ்சமல்ல...!

தனுஷ் - ஐஸ்வர்யா 'காதல் ரகசியம்'! - #Classics

தனுஷை மணமுடிக்க ஐஸ்வர்யா பட்ட அவஸ்தைகள், கொஞ்ச நெஞ்சமல்ல...!

Published:Updated:
தனுஷ் - ஐஸ்வர்யா 'காதல் ரகசியம்'!
பிரீமியம் ஸ்டோரி
News
தனுஷ் - ஐஸ்வர்யா 'காதல் ரகசியம்'!

 சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மருமகனாகிறார் தனுஷ். வரும் 18 - ம் தேதி திருமணம். தனுஷ் - ஐஸ்வர்யா காதல் எப்படி சாத்தியமானது என்பதுதான் எல்லார் மனசுக்குள்ளும் இருக்கிற கேள்வி. இதில் மிகத் தெளிவாக இருந்தவர் தனுஷ்கடந்த ஜூன் மாதம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இல்லத் திருமணத்துக்கு வந்திருந்த ஐஸ்வர்யாவை, விகடனுக்காகப் பேட்டியெடுத்தோம்.

அப்போதே அவர் எதையும் மறைக்கவில்லை என்பது இப்போது புரிகிறது. 20.6.04 விகடன் இதழில் வெளியான அந்த பளிச் பதில்கள் இங்கே...

"உங்க கல்யாணம் எப்போ?"

"ம்ம்ம். அக்டோபர் அல்லது நவம்பரில்!"

"அட்வான்ஸ் வாழ்த்துக்கள். ஆமா, உங்களோடது லவ் மேரேஜா, இல்லே வீட்ல பெரியவங்க முடிவு பண்றதா?"

"ஏன் ரெண்டுமே சேர்ந்ததா இருக்கக்கூடாதா? வீட்ல பேசிட்டு இருக்காங்க சீக்கிரம் கல்யாணம் இருக்கும்."மாப்பிள்ளையின் பெயர் மட்டும்தான் ஐஸ்வர்யா சொல்லவில்லை. இதோ இப்போது திருமணச் செய்தி. அதுசரி.

தனுஷ் - ஐஸ்வர்யா காதல் எப்படி மலர்ந்தது?

தனுஷ் ப்ளஸ் டு, ஐஸ்வர்யா சட்டம் பயின்றவர். பையனுக்கு 22 வயசு, பொண்ணுக்கோ 24. தனுஷ் சுதந்திரப் பறவை. ஆனால், ஐஸ்வர்யா அரண்மனைக் கிளி. மகாபலிபுரம் செல்கிற சாலையில் இருக்கிற சத்யபாமா பொறியியல் கல்லூரியில், நிர்வாகப் பிரிவில் பணிபுரிகிறார் ஐஸ்.

திருமணச் செய்தி வெளியானபோது, மாப்பிள்ளை சிம்பு இல்லையா என்ற ஆச்சர்யம்தான் பலருக்கு. காரணம் சிம்புவும் ஐஸ்வர்யாவும் ஆஷ்ரம் பள்ளித் தோழர்கள். அவர்களின் நட்பு ஆரம்பத்தில் பல கிசுகிசுக்களைக் கிளப்பியது. ஐஸ்வர்யாவின் பெயரைப் பிரபலப்படுத்தியதே அந்தச் செய்திகள்தான். ஆனால் ஏனோ பிறகு இருவருக்குமிடையே மனவருத்தங்கள் பெரிதாகி, கடைசியில் நட்பு கூட மிச்சமில்லாமல் சுத்தமாக விடுபட்டுப்போயிற்று!தமிழ் சினிமா போலவே திடீர் ட்விஸ்ட்.

'காதல் கொண்டேன்' படம் ரிலீஸான நேரம் நிகழ்ந்தது. பிரீமியர் ஷோவுக்கு ஐஸ்வர்யா தன் தங்கை செளந்தர்யாவுடன் போயிருந்தார். தனுஷின் குடும்பமே கூடியிருக்க, புதிய நட்பு வேர் பிடித்தது. தனுஷின் நடிப்பைப் புகழ்ந்து தள்ளிய ஐஸ்வர்யா, தனுஷின் சகோதரிகளான விமலகீதா, கார்த்திகா தேவி இருவருக்கும் நெருக்கமான தோழியானார்.

ஆல்பர்ட் தியேட்டர் ரஜினியின் ஃபேவரைட் தியேட்டர் . ரஜினியின் படங்கள் எப்போதும் அங்கேதான் ரிலீஸாகும். மிக முக்கியப் படங்கள் ரிலீஸாகும்போது ஐஸ்வர்யாவும் அங்கே வருவார்.

தனுஷ் - ஐஸ்வர்யா 'காதல் ரகசியம்'!
தனுஷ் - ஐஸ்வர்யா 'காதல் ரகசியம்'!

வி.ஐ.பி. பாக்ஸில் புதிய தோழிகள் சந்திக்க ஆரம்பித்தனர். ஒரிரு முறை தனுஷும் அங்கே வந்ததுண்டு. நட்பின் நெருக்கத்தால், தனுஷின் ஈக்காடுதாங்கல் இல்லத்துக்கு வந்து போக ஆரம்பித்தார் ஐஸ்வர்யா.

50 வயதைத் தொட்டும் ஜாலியான இளைஞனாக இருக்கிற அப்பா, இன்னும் கிராமத்து மனுஷியாக இருக்கிற அம்மா, பரபரப்பான இடத்தைப் பிடித்திருக்கும் டைரக்டர் அண்ணன் இரண் டு டாக்டர் சகோதரிகள், ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இளைஞன் தனுஷ் என்ற அந்த வித்தியாசமான குடும்பச் சூழல் தான் ஐஸ்வர்யாவின் மனசில் முதல் விதையை வெகு ஆழமாக ஊன்றியது.

மெள்ள தனுஷி டம் ஈடுபாடுகாட்ட ஆரம்பித்தார் ஐஸ், தனுஷின் அக்கா டாக்டர் விமலகீதாவின் திருமணத்துக்கு முகூர்த்தப் பட்டுப்புடவை எடுத்த குழுவில் ஐஸ்வர்யாவும் ஒருவர். விமலகீதாவின் திருமண வரவேற்புக்கு, எங்கோ பெங்களூரில் இருந்த ரஜினியைக் கட்டாயப்படுத்தி வரவழைத்து, ரிசப்ஷனில் அப்பாவுடன் வந்து நின்று அசத்தினார் ஐஸ்வர்யா.

பொது நிகழ்ச்சிகளுக்கு வரத் தயங்கும் ரஜினியின் திடீர் வருகை அப்போதே பலரது புருவங்களை உயரவைத்தது. விமலகீதா திருமணமாகிப் போனார். இளையமகள் டாக்டர் கார்த்திகாதேவி, ராமச்சந்திரா மருத்துவமனையில் பிஸி. மகன் செல்வராகவன், ரெயின்போ காலனிக்காக ஹைதராபாத்தில் தங்கிவிட்டார்.

தனுஷும் ஷூட்டிங்கில் பிஸி. வீட்டில் தனியே இருந்த தனுஷின் அம்மா விஜயலட்சுமியின் தனிமையில் பங்குகொள்ள ஆரம்பித்தார் ஐஸ்வர்யா.சூப்பர் ஸ்டாரின் மகள் என்ற பந்தா துளியுமில்லாமல் அன்பு காட்டுகிற ஐஸ்வர்யாவைக் குடும்பமே கொண்டாடத் துவங்கியது. வீட்டுக்கு அடிக்கடி வந்து போகிற ஐஸ்வர்யாவுடன் தனுஷின் நட்பும் சரசரவென வேர் பிடித்தது.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி, தனுஷ-க்கு கைமுறிவு ஏற்பட்ட சமயம், அவரைப் பார்க்க ராமச்சந்திரா மருத்துவமனைக்குப் பதட்டத்துடன் ஓடிவந்த நண்பர்களில் ஐஸ்வர்யா முக்கியமானவர். ஒடிந்த கையுடன் அடிபட்டுக் கிடந்த தனுஷுக்கு ஐஸ்வர்யாவின் வருகை, சிலிர்ப்பை உண்டாக்க, இருவர் நெஞ்சிலும் காதல் பூ! அடிக்கடி தனுஷ் வீட்டுக்கு ஐஸ்வர்யா செல்வதும் , அவர்கள் வீட்டு விழாக்களில் இடம்பெறுவதும் ரஜினி வீட்டில் சலசலப்பை உண் டாக்க, சிறிதும் தயக்கமின்றி அம்மாவிடம் பேசினாராம் ஐஸ்வர்யா. ரஜினிக்கும் இது பற்றித் தொலைபேசியில் தெளிவாகவே விளக்கம் சொன்னாராம். மகளின் வெளிப்படையான பதிலும், அவரது உறுதியும், பெற்றவர்களை யோசிக்கவைத்தது. இது சரிவருமா? என்ற தயக்கம் தலைகாட்டினாலும், வேறு வழியில்லாத அளவுக்கு விஷயம் தீவிரமாகத் தொடங்கியது. இதே சமயத்தில் டைரக்டர் கஸ்தூரிராஜா ரஜினியைச் சந்தித்து  மனமுருகிப் பேசினார் .

இந்தத் திருமணத்தை நடத்த ரஜினி மனதுவைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தாராம். ரஜினியின் எண்ணங்கள் என்னவாக இருந்ததோ. அப்போது அவர் பதில் எதுவும் சொல்லவில்லை.

தனுஷின் திடீர் வெற்றி, செல்வராகவனின் எழுச்சி இரண்டினாலும் கஸ்தூரிராஜாவின் பேச்சு, நடவடிக்கைகளே வித்தியாசமாக இருப்பது பற்றி ஏற்கெனவே பொங்கிக் கொண்டிருந்த கோடம்பாக்கப் பிரமுகர்கள் சிலரே இது பற்றி வதந்திகளைப் பரப்ப ஆரம்பிக்க, - அதைச் சமாளிக்கப் படாதபாடு பட்டார் கஸ்தூரி ராஜா.

இன்னொரு பக்கம், தனது நண்பர்களிடம் இதுபற்றிப் பேசினார் ரஜினி 'வீண் பிரச்சனைகள் கிளம்பினால், அது இன்னும் ரசாபாசமாகிவிடும். விருப்பத்துக்கு சம்மதம் சொல்வதுதான் மரியாதை' என அட்வைஸ் கிடைத்ததாம் இறங்கி வந்தார் ரஜினி.

பெங்களூர் ஜோதிடர் ஒருவருக்கு தனுஷ் ஐஸ்வர்யா இருவரது ஜாதகங்களும் அனுப்பப்பட்டன. பொருத்தம் பற்றி அவர் திருப்தி சொன்னார். இந்த விஷயத்தில் முடிவுகளை எடுக்க யாருக்கும் அதிக அவகாசம்  இல்லை. ஏராளமான படங்களை ஒப்புக்கொண்டு தடுமாறிய தனுஷ் இரவு பகலாக நடிக்கத் துவங்க, சந்திப்புக்கு நேரமில்லாமல் தனுஷின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வர ஆரம்பித்தார் ஐஸ். 'தேவதையைக் கண்டேன்' படப்பிடிப்புகளின்போது நிகழ்ந்த சந்திப்புகள் பற்றி 'ஸ்டுடியோ' வட்டாரங்களில் பேச்சு பரவியது. இதற்கிடையே 'சந்திரமுகி' ஷூட்டிங்கில் ரஜினி பிஸியாகிவிட்டார். தி.நகரின் பிரபல ஜவுளிக் கடை ஒன்றுக்கு தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் வந்துபோன தகவல் கசிய ஆரம்பித்தது.

தனுஷின் பிரஸ்மீட்டுக்கு முந்தைய தினம்கூட இது பற்றி அவரிடம் கேட்டோம். "இல்லியே!” என சமாளிக்கப் பார்த்தவர், "நல்ல செய்தி சொல்றேன். ஆனா இப்போ இல்லை" என்றார் சுருக்கமாக. "இன்னும் சில விஷயங்கள் பேசி முடிவு பண்ண வேண்டியிருக்கு” என்றார் கஸ்தூரி ராஜா.

ஆனால், மீடியாவுக்கு செய்தி கசியத் துவங்கியதும் பதறிப்போய் படாரென பிரஸ்மீட் கூட்டப்பட்டது. ஆனால், அங்கே இது காதல் திருமணம் இல்லை. பெரியவர்கள் பேசி முடிவு பண்ணியது என்றார் தனுஷ் அப்பாவியாக.

அண்ணன் செல்வராகவன், அக்கா கார்த்திகாதேவி இருவரையும் முந்திக்கொண்டு நடக்கிறது தனுஷ் திருமணம். உற்சாகத்தில் இருக்கிறார் கஸ்தூரிராஜா. எல்லாமே கடவுளின் சித்தம், அவன் நினைத்தது நடக்கும். என்கிறார் இப்போது சந்தோஷமாக.

திருமணத்தை இரு வீட்டார் முன்னிலையில் மட்டும் நடத்தத் திட்டம். அது ரஜினியின் போயஸ் இல்லம் அல்லது ரஜினி - லதா திருமணம் நடந்த திருப்பதியில் ரஜினிக்குப் பிடித்த இயக்குநரின் தலைமையில் நடக்கலாம்! ரிசப்ஷனுக்கு சத்யபாமா இன்ஜினியரிங் கல்லூரி வளாகம், சென்னை டிரேட் சென்டர், சிவாஜி கார்டன் என மூன்று இடங்களை ரிசர்வ் செய்திருக்கிறார்கள். தீபாவளி முடிந்ததும் திருவிழா தொடங்குகிறது!

- கீதன்

(14.11.2004 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)