Published:Updated:

`மாமா மேல இரும்பு வாசம் வீசிட்டே இருக்கும்!' -இயக்குநர் அதியனின் மனைவி ஆதிரை #VikatanExclusive

`இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' இயக்குநர் அதியன் ஆதிரை
`இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' இயக்குநர் அதியன் ஆதிரை

``ஒரு நாளைக்கு 100 ரூபா கிடைச்சா கூட பொண்டாட்டி, புள்ளைய காப்பாத்த உதவும்னு வீடு வீடாகப்போய் துணி துவைக்கிற சோப் பவுடர் வித்திருக்கார்.''

பல போராட்டங்களைக் கடந்து தன் வாழ்க்கைத்துணை வெற்றியடைந்ததையும் அதனை மக்கள் கொண்டாடுவதையும் நேரில் பார்க்கையில் ஒரு மனைவியின் மனம் எப்படியிருக்கும்.. மனதுக்குள் பொங்கிய ஆனந்தத்தை, அப்படியே கண்ணீர்த்துளிகளாகச் சிந்த ஆரம்பித்துவிடும், அது பொதுவெளியாக இருந்தாலும்.

அதியன் ஆதிரை
அதியன் ஆதிரை

நேற்றைய தினம் இப்படியோர் உணர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்தது. `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' திரையிடப்பட்டதையடுத்து, படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரையின் மனைவி ஆதிரையும் மக்களோடு மக்களாகப் படத்தைப் பார்த்தார். கணவரின் முதல் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்தவர், சந்தோஷம் தாங்கமுடியாமல் கண்ணீர்விட ஆரம்பிக்க, மனைவியின் கண்ணீரைத் துடைத்துவிட்டார் இயக்குநர் அதியன். இந்த அழகான தருணம் புகைப்படமாகி வைரலாகிவிட்டது.

இந்த வைரல் விஷயத்தை ஆதிரையிடம் சொன்னதும், ``மாமா சொன்னாரு'' என்று வெட்கப்பட்டவரிடம், `உங்க கணவரோட முதல் படத்தைப்பார்த்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?' என்றோம். ''அச்சோ, என்கிட்டே பேட்டி எடுக்கிறீங்களா... எனக்கு மாமாவைத் தவிர வேறெதுவும் தெரியாதுங்களே'' என்றவரிடம், `உங்க மாமாவைப் பற்றியே சொல்லுங்களேன்' என்றோம்.

அதியன் ஆதிரை குடும்பத்துடன்
அதியன் ஆதிரை குடும்பத்துடன்

``அவர் என் சொந்த அத்தை பையன். நாங்க ஒருத்தரையொருத்தர் விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்க மாமாவை (அதியன்) எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்களுக்குக் கல்யாணமாகிறப்போ எனக்கு 18 வயசு, அவருக்கு 24 வயசு. எங்களுக்கு ரெண்டு ஆம்பளைப்பசங்க. பெரியவன் திலீபன் சேகுவாரா, சின்னவன் தமிழ் முகிலன். அவரு காலேஜ் படிக்கிறப்போவே கவிதை, இலக்கியம்னு ஆர்வமா இருப்பாரு. சினிமா டைரக்ட் பண்ணணும்கிறது அவரோட லட்சியம்.

காலேஜ் முடிச்சவுடனே கரஸ்ல எம்.ஏ படிச்சிக்கிட்டே ஒரு கல்யாண மண்டபத்துலே வேலை பார்த்தார். கல்யாணம் நடந்தவுடனே, கிடைக்கிற வேலையெல்லாம்  பார்த்துதான் குடும்பத்தைக் காப்பாத்தினார். ஒரு நாளைக்கு 100 ரூபா கிடைச்சாக்கூட பொண்டாட்டி, புள்ளைய காப்பாத்த உதவும்னு வீடு வீடாகப்போய் துணி துவைக்கிற சோப் பவுடர் வித்திருக்கார்; இரும்புக்கடையில லோடு தூக்கிறது, இரும்புகளைச் சுமந்து லாரியில ஏத்துறதுன்னு வேலை பார்த்திருக்கார். அப்போல்லாம் அவரோட தோள்பட்டைகளைப் பார்த்தா அப்படியே புண்ணாயிருக்கும்.

முதுகெல்லாம் ஆணிக் குத்து, கம்பிக் குத்துன்னு ரணமா இருக்கும். அவர் மேல இரும்புவாசம் வீசிட்டே இருக்கும். இந்தக் கஷ்டத்துலேயும் ரெண்டு கவிதைப் புத்தகம் எழுதினார். அதுல ஒரு புத்தகம்தான் 'அப்பனின் கைகளால் அடிப்பவன்'. இதைப் பார்த்துட்டு எங்க குடும்பத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் உதவியோட, ரஞ்சித் சாரைப் பார்க்க வாய்ப்புக் கிடைச்சது. மாமா படமும் செஞ்சுட்டார். அவங்க ரெண்டு பேரும் இல்லன்னா, எங்களுக்கு இந்த வாழ்க்கையே இல்லீங்க'' என்றவரின் குரல் தழுதழுக்கிறது.

இயக்குநர் அதியன், மனைவி ஆதிரையுடன்
இயக்குநர் அதியன், மனைவி ஆதிரையுடன்

``என் மாமாவோட மொதப்படத்தைப் பார்த்தப்போ, இப்படியொருத்தர் எனக்குக் கணவரா கிடைக்கிறதுக்கு நான் தவம் பண்ணியிருக்கணும்னு நினைச்சேன். அப்போதான் அழுதுட்டேன்'' என்றவரின் குரலில் கணவரின் மீது டன் டன்னாய் காதல் வழிகிறது!

அடுத்த கட்டுரைக்கு