Published:Updated:

`எதிர்நீச்சல்' பாலசந்தர்! #Classics

`எதிர்நீச்சல்' பாலசந்தர்! #Classics
பிரீமியம் ஸ்டோரி
News
`எதிர்நீச்சல்' பாலசந்தர்! #Classics

'இயக்குனர் சிகரம்' கே.பாலசந்தரின் முதல் பேட்டி இதுதான்! தனது எதிர்நீச்சல் வெற்றி குறித்தும், சினிமா குறித்தும் அப்போதே விலாவாரியாக பேசியிருக்கிறார்!

`எதிர்நீச்சல்' பாலசந்தர்! #Classics

'இயக்குனர் சிகரம்' கே.பாலசந்தரின் முதல் பேட்டி இதுதான்! தனது எதிர்நீச்சல் வெற்றி குறித்தும், சினிமா குறித்தும் அப்போதே விலாவாரியாக பேசியிருக்கிறார்!

Published:Updated:
`எதிர்நீச்சல்' பாலசந்தர்! #Classics
பிரீமியம் ஸ்டோரி
News
`எதிர்நீச்சல்' பாலசந்தர்! #Classics

ராகினி ரிக்ரியேஷன்ஸாரின் 'எதிர் நீச்சல்' நாடகத்தைப் பார்த்துவிட்டு வருகிறவர்கள் சும்மா இருப்பதில்லை. தங்களுடைய உறவினர்களையும் நண்பர்களையும் அந்த நாடகத்தைப் போய்ப் பார்க்கும்படி சொல்கிறார்கள். "போகும்போது என்னையும் கூப்பிடு" என்று உற்சாகத்துடன் கூறுகிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன் அரங்கேற்றப்பட்டு, அத்தனை சபாக்களிலும் நடைபெற்று வரும் இந்த நாடகம், சென்னையையே ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நாடகத்தின் வெற்றிக்குப் பலர் பல விதமாக காரணங்கள் கூறுகிறார்கள் சினிமா நட்சத்திரங்களான நாகேஷும், செளகார் ஜானகியும் இருப்பதால் தான் 'எதிர் நீச்சல்' மக்கள் மனத்தைக் கவர்ந்திருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அப்படிப் பார்க்கப் போனால் 'மெழுகு வர்த்தி’,'நீர்க்குமிழி’ இரண்டிலும் இவர்களிருவரும் நடித்தார்களே இந்த அளவுக்கு அவ்விரு நாடகங்களைப் பற்றி மக்கள் 'ஒஹோ' என்று ஏன் பேசவில்லை?இந்தநாடகத்தில் நடிக்கும் அத்தனை பேரும் உயிர்த் துடிப்புடன் பேசி நடித்திருக்கிறார்கள். ஆகா! "அந்த நாயரையும், பொருள் செறிந்த அவருடைய மலையாளப் பேச்சையும் மறக்கவே முடியாது" என்று கூறுகிறார்கள். உண்மைதான். ராகினி ரிக்ரியேஷன்ஸ் குழுவினர் நடிப்பில் எப்போது சோடை போனர்கள்?"

கதை அம்சம் குறிப்பிடும்படி பிரமாதமாக இல்லாவிட்டாலும் நாடகத்தில் கையாளப்பட்டிருக்கும் உத்தி புதுமையிலும் புதுமை. ஒரே செட்டில், ஒரே வீட்டில் நாடகம் முழுவதையுமே நடத்தி காட்டி விடுகிறார்கள். இது வரையில் ஒருவரும் இம்மாதிரி செய்ததில்லை" என்று இப்படியும் 'எதிர் நீச்சலின்' வெற்றிக்கு ஒரு காரணம் கூறப்படுகிறது. இதையும் மறுப்பதற்கில்லை.ஆனால், இவற்றிற்கெல்லாம் மேலாக, மாதுவையும், நாயரையும், சபாபதியையும், கிட்டு மாமாவையும், பட்டு மாமியையும், பேப்பர் பைத்தியத்தையும் மேடையில் உலவ விட்ட நாடகாசிரியரை மறந்து விட முடியுமா? நடுத்தர வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொரு குணசித்திரத்தையும் அப்பழுக்கில்லாமல் படைத்து, அன்றாட வாழ்க்கை என்னும் இலக்கியத்திலிருந்து வார்த்தைகளை எடுத்து வசனங்கள் அமைத்து, வேடிக்கைப் பேச்சுக்களின் மூலம் பல உண்மைகளையும் நீதிகளையும் மனத்தில் பதிய வைத்து நாடகத்தை உருவாக்கித் தந்துள்ள திரு கே. பாலசந்தரின் பேனாவின் சக்திக்கும் டைரக்ஷனின் திறமைக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது எதிர் நீச்சல். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்தில் பிறந்த பாலசந்தருக்கு நாடகம் எழுதுவது மாணவராயிருந்த நாட்களிலேயே ஏற்பட்ட ஒரு பழக்கம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே அநேக நாடகங்களை மேடை ஏற்றியிருக்கிறார் இவர். பின்னர், சென்னை அக்கெளண்டன்ட் ஜெனரல் ஆபீசில் உத்தியோகத்திற்கு சேர்ந்தபோது அங்கும் வருடத்திற்கு ஒருமுறை ஒரு புது நாடகத்தைத் தயாரித்துப் பல பரிசுகளைத் தட்டிக் கொண்டு போயிருக்கிறார். முதன் முதலில் அவருக்குப் புகழைத் தேடித் தந்த 'மேஜர் சந்திரகாந்த்' முதன் முதலில் ஏ. ஜி. எஸ். ஆபீசில்தான் அரங்கேறியது.

`எதிர்நீச்சல்' பாலசந்தர்! #Classics
`எதிர்நீச்சல்' பாலசந்தர்! #Classics

நேஷனல் ஆர்ட்டிஸ்ட் குழுவில் நாடகாசிரியராகவும் நடிகராகவும் சிறிது காலம் இருந்திருக்கிறார். அங்கிருக்கும் போதுதான் 'சதுரங்கத்'தையும்' 'கெளரி கல்யாணத்'தையும் தயார் செய்தார் இவர். ராகினி ரிக்ரியேஷன்ஸில் பங்கு பெற்ற பிறகு பல சிறு நாடகங்களை எழுதி, அவற்றில் நடித்தும் இருக்கிறார் பாலசந்தர். 'மேஜர் சந்திரகாந்த்'துக்குப் பிறகு, சர்வர் சுந்தரம், மெழுவர்த்தி, நீர்க் குமிழி, நாணல் போன்ற நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி நல்ல பெயர் வாங்கியிருக்கிறார். ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு புதுமையைப் புகுத்தி முன்னேற்றம் கண்டிருக்கிறார். நாடகத்தில் 'கதை, வசனம், டைரக்ஷன்' என்ற முத்தொழிலையும் புரிந்து கொண்டிருக்கும் இவர், சினிமாத் துறையிலும் அடியெடுத்து வைக்கக் காரணமாயிருந்தவர் எம்.ஜி.ஆர்.

"எம். ஜி. ஆரின் பெரும் முயற்சியின் காரணமாகத்தான் 'தெய்வத் தாய்' படத்திற்கு நான் வசனம் எழுதினேன்" என்று நன்றி உணர்ச்சியுடன் கூறினார் பாலசந்தர். சர்வர் சுந்தரம், நீர்க் குமிழி, நாணல் மூன்று நாடகங்களும் படங்களாக வெளிவந்துவிட்டன. அவருடைய 'மேஜர் சந்திரகாந்த்' இந்தியில் 'ஊஞ்ச்சே லோஹ்' என்ற பெயரில் வெளிவந்து  பரிசையும் பெற்றிருக்கிறது. அதில் அசோக் குமார் நடித்துள்ளார். "இப்போது அதையே தமிழில் ஏ. வி. எம். எடுக்கிறார்கள். முக்கியப் பாத்திரத்தில் 'மேஜர்’ சுந்தரராஜனே நடிப்பார். தேவையான சிறு மாறுதல்களுடன் அதை நானே டைரக்ட் செய்யப் போகிறேன்" என்று அடக்கத்துடன் தெரிவித்துக் கொண்டார் அவர். இந்தப் படத்தைத் தவிர தற்போது மனோகர் பீக்சர்ஸுக்காக தாம் எழுதிய 'பாமா விஜயம்' என்ற சமூக சித்திரத்தை டைரக்ட் செய்து கொண்டிருக்கிறார் பாலசந்தர். புராணத் தலைப்புடன் சமூகக் கதையொன்று எழுதுவதே ஒரு புதுமை தானே!

"நீங்கள் எதிர் நீச்சலையும் சினிமா எடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேனே. இந்த நாடகத்தை படமாக எடுக்க முடியுமா?" என்று கேட்டேன் நான்.

"ஏன் முடியாது? சர்வர் சுந்தரத்தை எடுக்க நினைத்தபோதும் பலர் பட உலகில் இப்படித்தான் சந்தேகப்பட்டார்கள். 'நாடகத்திற்கு தகுந்த 'ஸப்ஜெக்ட்' இது. சினிமா எடுத்தால் படுதோல்வி அடையும்' என்றும் சிலர் சொன்னர்கள். ஆனால், அது வெளியானதும் அதற்கு பிரமாதமான வரவேற்பு இருந்தது. எந்த 'ஸ்ப்ஜெக்ட்'டையும் எடுக்கிறபடி எடுத்தால் ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் இருக்கும்" என்று நம்பிக்கையுடன் கூறினார் பாலசந்தர்.

சினிமாத் துறையில் நுழைந்து புதுமைகளைப் புகுத்தி, புரட்சி செய்து புகழேணியில் ஏறிய இளைஞர்களின் பட்டியலில் சேருவதற்கு பாலசந்தரும் துடித்துக் கொண்டிருக்கிறார், அந்த நாள் பாலசந்தர், கல்யாணப்பரிசு ஶ்ரீதர், சாரதா கோபாலகிருஷ்ணன் இவர்களின் வரிசையில் 'எதிர்நீச்சல்' பாலசந்தரும் சீக்கிரத்திலேயே சேர்ந்துவிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கே.பாலசந்தர்
கே.பாலசந்தர்

பாலசந்தரை நேரில் சந்தித்துப் பேசும்போது அவர் உள்ளத்தில் துள்ளும் ஆர்வத்தை ஒருவராலும் எளிதில் கண்டு பிடித்து விட முடியாது. வார்த்தைகளை அளந்துதான் பேசுகிறார். 'இதை செய்யப் போகிறேன் அதை செய்யப் போகிறேன்’ என்று தமது வருங்கால திட்டங்களை அவர் அடுக்கிக் கொண்டு போவதில்லை. தமது கடந்த கால சாதனைகளைப் பற்றிய முதல் அத்தியாயத்தையும் மிகவும் சுருக்கிக் கொள்கிறார்.

"நாடகத்தில் 'கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை ஏற்று, அதில் வெற்றியடைந்து, அதே போல் சினிமாவிலும் இம்மூன்று பொறுப்புகளையும் ஏற்றுள்ள முதல் நபர் நீங்கள்தான், இல்லையா?" என்று நான் கேட்டபோது அவர், ''ஒரு வேளை அப்படியிருந்தாலும் இருக்கலாம், எனக்கு சரியாகத் தெரியாது" என்றார். சினிமாத் துறையில் முன்னுக்கு வருவதற்குத் தேவையான ஜாக்கிரதை உணர்வு அவருடைய தயக்கப் பேச்சில் பளிச்சிட்டது.

"நாடகங்களில் மாறுதல்களை செய்திருக்கும் உங்களுக்கு சினிமாவிலும் புது மாதிரி ஏதாவது செய்யலாம் என்ற நம்பிக்கை இருக்கிறதா?” என்று அடுத்தபடி கேட்டேன்.

"நம்பிக்கையிருக்கிறதோ இல்லையோ, நிறைய ஆசையிருக்கிறது. இப்போதுதானே சினிமா உலகில் நுழைந்திருக்கிறேன். என் நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்ட பிறகுதான் புதிய முயற்சிகளைப் பற்றித் தைரியமாகக் கூற முடியும்" என்று பதிலளித்தார் பாலசந்தர். எதிர் நீச்சல் நாடகத்தைப் படைத்த பாலசந்தர் சினிமா உலகில் தற்போது எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை ஒருவாறு புரிந்து கொண்டேன்! நாடக மேடையும், சினிமாத் துறையும் எழுத்தாளர்களை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது என்று அபிப்பிராயப்படும் அவர், "நல்ல படத்திற்குப் பரிசு கொடுக்கும்போது அதன் கதாசிரியருக்கும் தகுந்த சன்மானம் கொடுத்து மரியாதை செய்ய வேண்டும். இந்த வருஷம் மலையாள செம்மீனின் ஆசிரியருக்குப் பரிசு கொடுக்காதது அதிசயத்திலும் அதிசயம்" என்றார்.

பாலசந்தர் விந்தையான மனிதர்! விஞ்ஞானத்தில் பி.எஸ்.ஸி. பட்டம் பெற்றுவிட்டு, வாழ்க்கையில் 'கணக்கர்’ உத்தியோகம் பார்க்க ஆரம்பித்தார். அதைப் போலவே, கல்லூரியில் சமஸ்கிருதமும், பிரெஞ்ச் மொழியும் படித்துவிட்டு தமிழில் நாடகங்கள் எழுதுகிறார். 'பைல்'களுடன் பொழுதெல்லாம் கழித்தாலும், வெளி உலகையும், அதில் நடமாடும் பலதரப்பட்ட விசித்திர காரெக்டர்களையும் அலசி வைத்திருக்கிறார். ('பட்டு மாமி' அவருக்குத் தெரிந்த ஒரு பெண்மணியின் 'காரி கேச்சர்' என்றார் அவர்.) தாம் அதிகம் பேசாமல், பிறரை நிறையப் பேச விட்டு மனித இயல்புகளையும் பல வீனங்களையும் புரிந்து கொண்டுவிடுகிறார். தற்போது பாலசந்தர் உத்தியோகத்தில் ஒரு காலும், கலை உலகில் ஒரு காலுமாக தர்ம சங்கட நிலையில் இருக்கிறார்.

"கலையுலகில் கொஞ்சம் பணமும் புகழும் வந்து விட்டால் உத்தியோகத்தை உதறி விடுகிறார்களே. நீங்கள் அப்படியொன்றும் செய்யாமல் இருப்பதற்கு உங்களைப் பாராட்டத்தான் வேண்டும்" என்று நான் கூறினேன்.

"எப்படி விடுவது? அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாகி விட்டால்?" என்று கேட்டுவிட்டு அவர் தமக்குள் சிரித்துக் கொண்டார். 'பாலசந்தர் பலே கெட்டிக்காரர். சினிமா உலகின் பளபளப்பையும் மினு மினுப்பையும் சரியானபடி எடை போட்டு வைத்திருக்கிறார்' என்று நான் வியந்து கொண்டேன். ஆனால், அவருடைய மனப் போராட்டத்திற்கு சீக்கிரமே முடிவு ஏற்பட்டுத்தான் ஆகவேண்டும். அவர் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஆபீசில் சம்பளமில்லாமல் லீவு எடுத்துக் கொண்டிருக்கிறார்! வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் லீவு முடிவடைகிறது. அதற்குப் பிறகு சூப்பிரெண்டெண்ட் நாற்காலியில் போய் உட்காரப் போகிறாரா, அல்லது ஸ்டுடியோவில் டைரக்டர் நாற்காலியில் உட்காரப் போகிறாரா என்பது தெரிந்துவிடும். அல்லது இரண்டு நாற்காலிகளிலும் மாறி மாறி உட்காருவாரோ, என்னவோ? பாலசந்தர் இதிலும் புதுமையைப் புகுத்தி புரட்சி செய்தாலும் செய்வார். யார் கண்டது?

- ஶ்ரீ...

(19.06.1966 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism