Published:Updated:

``ஆன்லைன் விமர்சனம் நேர்மையா, உண்மையா இருக்கு. ஆனா, அது கம்மியா இருக்கே!" - இயக்குநர் லக்‌ஷ்மன்

'போகன்' ஜெயம் ரவி - ஹன்சிகா
'போகன்' ஜெயம் ரவி - ஹன்சிகா

ஜெயம் ரவியின் 25-வது படத்தை இயக்கும் லக்‌ஷ்மன் இந்தப் படம் குறித்துப் பேசியிருக்கிறார்.

`ரோமியோ ஜூலியட்', `போகன்' படங்களை இயக்கிய லக்‌ஷ்மன் ஜெயம் ரவியின் 25-வது படத்தை இயக்கி வருகிறார். பொள்ளாச்சியில் நடந்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பிலிருந்து நம்மிடம் பேசினார்.

இயக்குநர் லக்‌ஷ்மன்
இயக்குநர் லக்‌ஷ்மன்

``ரவிக்கு 25-வது படம், உங்களுக்கு அவருடன் தொடர்ந்து மூணாவது படம், இது எப்படி உருவானது?"

``ரவி சாரோட 25-வது படத்தை மோகன் ராஜா அண்ணன்தான் `தனி ஒருவன் 2' படமா எடுக்கிறதா இருந்தது. நானும் இந்தப் படம் 26, 27-வது படமாகத்தான் இருக்கும்னு நினைச்சேன். முக்கியமான விஷயம், என்னோட கதைக்குத் தேவையான ஆய்வுகளும் அந்தச் சமயத்துல போய்க்கிட்டிருந்தது. கடவுள் புண்ணியத்துல ஜெயம் ரவியின் 25-வது படமா, என் படம் அமைஞ்சிருக்கு."

``ஜெயம் ரவி இந்தக் கதைக்கு எப்படி சம்மதிச்சார்?"

இயக்குநர் லக்‌ஷ்மன்
இயக்குநர் லக்‌ஷ்மன்

``ரவி சார் இந்தக் கதையைக் கேட்டதுமே, என்னை ஆச்சர்யமா பார்த்து, 'எங்கடா இதைப் பிடிச்ச'னுதான் கேட்டார். அவருக்கு 25-வது படமா இது நல்ல பெயரை வாங்கித் தரும். அவரும் இந்தக் கதையில ரொம்ப ஆர்வமா இருக்கார். படத்துல ஒரு உதவி இயக்குநர் மாதிரி வேலையும் செய்றார்."

"எப்போவும் உங்க படத்துல ஹன்சிகா இருப்பாங்க. இந்தப் படத்துல இல்லையே?"

போகன்
போகன்
ஹன்சிகா

``நான் தயாரிச்ச `கள்வனின் காதலி' படத்துல நயன்தாரா, நான் இயக்கிய `ரோமியோ ஜூலியட்', `போகன்' படங்கள்ல ஹன்சிகா ஹீரோயின். நான் தெரிஞ்ச முகங்களைத்தான் நடிக்க வெச்சிருக்கேன். ஆனா, இந்தப் படத்துல புது ஹீரோயின் நடிச்சிருக்காங்க. அது ஒரு புது அனுபவமா இருக்கு.`என்ன உங்க படத்துல எப்போவும் ஹன்சிகாவே இருக்காங்க'னு சிலர் கேட்டாங்க. அதனாலதான், அவங்க இல்லாம இந்தப் படத்தை எடுக்கப்போறோம். ஜெயம் ரவியின் 25-வது படத்துக்குப் பிறகு, நான் இயக்கப்போற அடுத்த படத்துல என் பொண்ணு ஹரிதாவை ஹீரோயினா அறிமுகப்படுத்தப்போறேன். விஸ்காம் படிச்சிருக்காங்க, இப்போ `ஜெயம் ரவி 25'ல உதவி இயக்குநரா வேலை பார்க்கிறாங்க."

"உங்க படங்கள்ல நகைச்சுவைக்குனு தனி நடிகர்கள் இருக்க மாட்டேங்கிறாங்களே?"

"இந்தப் படத்துல சதீஷ் ஃப்ரெண்ட் கேரக்டர்ல நடிச்சிருக்கார். என் கதைகள்ல மொத்தமே மூணு, நாலு பேர்தான் முக்கியக் கதாபாத்திரங்களா இருப்பாங்க. அதனால, காமெடிக்குத் தனியா சீன் வைக்கிறதில்லை. சூழலையே காமெடியா மாத்திடுவேன். அதை ஹீரோ, ஹீரோயின் ரெண்டுபேரும் சரியா பண்ணிட்டுப் போயிடுவாங்க. ரசிகர்கள் மத்தியிலும் அதுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. அதனால, எனக்குப் பெரிய நகைச்சுவை நடிகர்கள் தேவைப்படுறதில்லை. மத்தபடி, நான் வடிவேலு சாரோட தீவிர ரசிகன். அவரை ஹீரோவா வெச்சுப் படம் பண்ணணும்னு ஆசை இருக்கு."

"இது என்ன மாதிரியான படம்?"

``இந்தப் படத்தைத் தொடங்குறதுக்கு முன்னாடி, வீரபாண்டிய கட்ட பொம்மன் சம்பந்தமா ஒரு கதையைத் தயாரிக்கலாம்னு இருந்தேன். அதுக்கான ஆய்வுகளையும் பண்ணிக்கிட்டிருந்தேன். அதைப் பற்றிப் படிக்கப் படிக்க எனக்கு வேற ஒரு கேள்வியும் அதுக்கான பதிலும் மனசுல வந்தது. அந்தக் கதை முழுக்க முழுக்க சமுதாயத்தோட அன்றாட விஷயங்களோடு தொடர்புடையதா இருந்தது. அதுதான் ஜெயம் ரவியின் 25-வது படமா உருவாகிட்டிருக்கு."

"இப்போதைய சினிமா விமர்சனங்களை எப்படிப் பார்க்குறீங்க?"

"விமர்சனங்கள் எப்போதுமே வரவேற்கத்தக்கது. குடும்பத்தோடு படம் பார்க்கணும்னா, 1000 ரூபாய் செலவு ஆகுது. அந்தப் படம் நல்லாயிருக்கா, இல்லையானு சொல்ற முழு உரிமையும் படம் பார்க்கிற எல்லோருக்கும் உண்டு. அதேசமயம், இங்கே ஆன்லைன்ல விமர்சனம் பண்ற சிலர் தனி மனிதத் தாக்குதல்களை முன்னெடுக்கிற விஷயமும் இருக்கத்தான் செய்யுது. அதைக் குறைச்சுக்கலாம். ஆன்லைன் விமர்சகர்கள் சொல்ற விஷயம் உண்மையாவும், நேர்மையாவும் இருக்கு. ஆனா, கண்ணியம் கம்மியா இருக்கு."

“ரவிக்கும், உங்களுக்குமான நட்பைப் பற்றி?”,

“ ‘ஜெயம்’ ரவிக்கு 25- வது படம். என்ன ஸ்பெஷல்?”

“காதல், கூடுவிட்டுக் கூடு பாய்தல்னு படமெடுத்த நீங்க, என்ன திடீர்னு சமூக அக்கறையுள்ள படங்களை எடுக்க ஆரம்பிச்சிட்டீங்க?"

“அரசியல் பேசுறது இப்போ ஒரு டிரெண்ட் ஆகிடுச்சு. இந்தப் படமும் அதைப் பற்றித்தான் பேசப்போகுதா?”

“இமான், ஜெயம் ரவி, லக்‌ஷ்மன் கூட்டணி இந்தப் படத்திலும் இருக்கே?!”

“உங்க சினிமா பயணம் சுவாரஸ்யமா இருக்கும்போல?!

உள்ளிட்ட பல கேள்விகளுக்கு, நாளை வெளிவரும் ஆனந்த விகடன் இதழில் விரிவாகப் பதில் அளித்திருக்கிறார், இயக்குநர் லக்‌ஷ்மன். விகடன் இதழை ஆன்லைனின் சப்ஸ்கிரைப் செய்து படிக்க, இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்!

அடுத்த கட்டுரைக்கு