Published:Updated:

```விஜய் 64' டெக்னிக்கல் டீம், `கைதி' நைட் ஷூட் அனுபவம், `லக்கி சார்ம்' கார்த்தி!'' - லோகேஷ் கனகராஜ்

director lokesh kanagaraj
director lokesh kanagaraj

"நம்ம மக்களுக்குக் கன்டென்ட் நல்லா இருக்கணும். கதாபாத்திரத்தோடு அவங்க எந்தளவுக்கு ஒன்றிப்போறாங்களோ, அதுதான் அந்தப் படத்தோட வெற்றியா மாறும்." - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

’மாநகரம்’ படத்துக்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ’கைதி’யுடன் களம் இறங்குகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ’கைதி’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற பரபர வேலைகளுக்கு நடுவே நம்மிடம் பேசினார்.

```கைதி’ டீம் `விஜய் 64’-க்கு அப்படியே வந்ததுக்குக் காரணம் அவர்தான்!''- ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்

’கைதி’ டீசர் பார்க்கும்போதே படத்தில் டெக்னிக்கல் டீமுக்கு அதிக வேலை இருந்திருக்கும் என்பது தெரிகிறது. அவர்களைப் பற்றிச் சொல்லுங்க?

''நடிகர்களுக்கு ரிகர்சல் கொடுக்கிற மாதிரி, இந்தப் படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, டெக்னிக்கல் டீமுக்கு ஒருநாள் ரிகர்சல் மாதிரி காட்டுக்குள்ளே ஷூட் எடுத்தோம். ஐந்து நிமிட அளவுக்கான ஒரு வீடியோவை ஷூட் பண்ணிட்டு, அதை எடிட் பண்ணி, அதுக்குப் பின்னணி இசை சேர்த்து முழுமையான வீடியோவா ரெடி பண்ணிப் பார்த்தோம். இதிலேயே நாம எந்த மாதிரியான ஒரு படத்தில் வேலை பார்க்கப்போறோம்கிற மைண்ட் செட்டை டீமுக்குக் கடத்திட்டேன். அது எனக்கு ஷூட்டிங் போகும்போது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது. காட்டில் எடுத்த படம்கிறதால அதிகமா லைட்ஸைப் பயன்படுத்தாமல் சின்னச் சின்ன லைட்ஸை வெச்சு எடுத்தோம். ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனைக் கண்டிப்பா பாராட்டணும். கிடைக்கிற கொஞ்ச வெளிச்சத்திலேயே அழகா விஷூவல் கொடுத்திருக்கார்.  

ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவமான படம்கிறதால, அன்பறிவ் மாஸ்டர்ஸ் ரொம்ப மெனக்கெட்டிருக்காங்க. எங்களுடைய ஷூட்டிங் நேரம் மாலை 6 மணியிலிருந்து காலை 5 மணி வரை. பகலில் ரெஸ்ட் எடுக்கப்போயிடுவோம். ஆனா, நாங்க ஷூட் பண்ண சமயம், அன்பறிவ் மாஸ்டர்ஸுக்கு அவங்க ஸ்டண்ட் யூனியனில் பிரச்னை போயிட்டிருந்தது. யூனியனிலிருந்து ஸ்டண்ட் பாய்ஸ் யாரும் வரல. அதனால வெளியூரில் இருந்த புதுப் பசங்களை வெச்சுப் பண்ணினாங்க. அவங்களுக்குப் பகலில் பயிற்சி கொடுத்து இரவில் ஷூட்டிங் பண்ணுவாங்க. இப்படி ஓய்வே இல்லாமல் ஸ்டண்ட் டீம் வேலை பார்த்தாங்க. யாருக்கும் சின்னக் காயம்கூட இல்லாம சண்டைக் காட்சிகளை எடுத்துக் கொடுத்தாங்க. அதுமட்டுமல்லாம, சண்டைக் காட்சிகளில் எல்லா ஷாட்டுக்கும் டூப் போடாம நடிச்சார் கார்த்தி சார். பின்னணி இசையில் சாம் சி.எஸ்ஸும் எடிட்டிங்கில் பிலோமின் ராஜும் மிரட்டியிருக்காங்க.''

இரவு ஷூட்டிங்கில் என்னென்ன சவால்கள் இருந்தன?

Kaithi
Kaithi

''காட்டுல நைட் ஷூட்னாலே த்ரில்லாதான் இருக்கும். தினமும் கண்டிப்பா ஒரு பாம்பைப் பார்த்திடுவோம். அதுக்காகவே எல்லோருக்கும் ஸ்பெஷல் ஷூ கொடுத்திருந்தோம். நாங்க ஷூட் பண்ணது தென்மலைப் பகுதியில்தான். கடுமையான குளிரில்தான் ஷூட்டிங் போச்சு. யூனிட்ல எல்லோரும் கம்பளி போர்த்திக்கிட்டுதான் வேலை பார்த்தோம். கார்த்தி சார் காஸ்ட்டியூம் சட்டை மட்டும்தான். அதனால குளிர்ல பயங்கரமா சிரமப்பட்டார். ஆனாலும், என்ஜாய் பண்ணி நடிச்சார்.''

'தேவ்' படம் சரியா போகாததால 'கைதி'க்கு அழுத்தம் அதிகமா இருந்ததா?

dev movie still
dev movie still

''அந்தப் ப்ரஷர் எங்கமேல வர்றதுக்கு வாய்ப்பே இல்லை. அந்தப் படம் என்ன பண்ணுச்சுங்கிறதை இந்தப் படத்துக்குள்ளே கொண்டு வர வேண்டிய அவசியமும் இல்லை. அந்தப் படம் ரிலீஸான சமயத்தில்தான் நாங்க ஷூட்டிங் கிளம்பிட்டு இருந்தோம். அவர் அப்போதான் 'கைதி' கதாபாத்திரத்தோட மூடுக்கு வந்துக்கிட்டிருந்தார். அவர் 'தேவ்' படத்தோட ரிசல்டைப் பற்றி நினைக்காம, 'கைதி'க்காக வொர்க் பண்ணிட்டு இருந்தார்.'' 

இளம் படைப்பாளிகள்கிட்ட ஃபிலிம் மேக்கிங் திறமை மட்டும்தான் இருக்குங்கிற விமர்சனத்தை எப்படிப் பார்க்குறீங்க?

''வெறும் மேக்கிங்க்காக மட்டுமே படங்கள் ஓடுறதில்லைனு நினைக்கிறேன். ஏன்னா, நம்ம மக்கள் ஹாலிவுட் படங்களை அதிகமா பார்க்கிறாங்க. அதைப் பார்க்கிறதுக்கான தளங்களும் நிறைய வந்திடுச்சு. அதனால அதே மாதிரியான ஒரு டெக்னிக்கல் தரத்தை மட்டும் நாம கொடுத்தா பத்தாது. நம்ம மக்களுக்குக் கன்டென்ட் நல்லா இருக்கணும். கதாபாத்திரத்தோடு அவங்க எந்தளவுக்கு ஒன்றிப்போறாங்களோ, அதுதான் அந்தப் படத்தோட வெற்றியா மாறும்.''

"இளம் இயக்குநரின் படம் வெற்றியடைஞ்சா, அதில் மேக்கிங்கைத் தாண்டி ஏதோ ஒரு விஷயம் இருந்திருக்கும்.''
லோகேஷ் கனகராஜ்

'மெட்ராஸ்' பா.இரஞ்சித், 'தீரன் அதிகாரம் ஒன்று' ஹெச்.வினோத்னு கார்த்தியை வைத்து தன்னோட இரண்டாவது படத்தை இயக்கிய இயக்குநர்களுக்கு, அடுத்த படத்திலேயே ரஜினி, அஜித்னு பெரிய நடிகர்களை இயக்கும் வாய்ப்பு கிடைச்சது. அதே விஷயம் இப்போ உங்களுக்கும் நடந்திருக்கு. இதை எப்படிப் பார்க்குறீங்க?

Rajini Ranjith
Rajini Ranjith

''நாங்க ரெண்டாவது படம் பண்ணிட்டு மூணாவது படம் பெரிய நடிகர்கள்னா, சிவா சார் தமிழில் 'சிறுத்தை' படம் பண்ணிட்டு, ரெண்டாவது படமே 'வீரம்' பண்ணினார். ஒருவருக்கு மட்டும் இப்படி நடந்தா யதார்த்தமா நடந்ததுனு சொல்லலாம். நாலு பேருக்கு இப்படி நடந்திருக்குன்னா, கண்டிப்பா கார்த்தி சார் ஒரு 'லக்கி சார்'தான்.''

'கைதி' டீம்ல இருந்த எடிட்டர் பிலோமின் ராஜ் மற்றும் கேமராமேன் சத்யன் சூரியனை 'விஜய் 64' படத்துல கமிட் பண்ண என்ன காரணம்?

''இவங்க ரெண்டு பேரும் நல்ல வேலைக்காரர்கள் என்பதைத் தாண்டி, எனக்கு நல்ல நண்பர்கள். எங்களுக்குள்ளே பெருசா எந்தக் கருத்து வேறுபாடும் வந்ததில்லை. எனக்கு என்ன தேவை, அவங்களுக்கு என்ன தேவைனு எனக்கு நல்லாத் தெரியும். அதனால நாங்க வேலை பார்க்கிறதுக்கு வசதியா இருக்கும்னு நினைச்சுதான், 'விஜய் 64' படத்துக்கும் இவங்களைக் கமிட் பண்ணினேன்.'' 

Vijay 64 announcement
Vijay 64 announcement

இந்த வாரம் வியாழக்கிழமை வரவிருக்கும் ஆனந்த விகடன் இதழில் ’கைதி’ படத்தைப் பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

ஆனந்த விகடன் இதழை ஆன்லைனில் சப்ஸ்கிரைப் செய்து படிக்க இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு