Published:Updated:

பஞ்ச வாத்தியங்கள் என்றால் என்ன? அவை எப்போது இசைக்கப்படுகின்றன... | Doubt of Common Man

பஞ்ச வாத்தியங்கள்
News
பஞ்ச வாத்தியங்கள்

இசை வல்லுநர்கள் பலரும் பஞ்சவாத்தியம் வாசிப்பதை இறைவனுக்குச் செலுத்தும் காணிக்கையாகக் கருதுகின்றனர்.

Published:Updated:

பஞ்ச வாத்தியங்கள் என்றால் என்ன? அவை எப்போது இசைக்கப்படுகின்றன... | Doubt of Common Man

இசை வல்லுநர்கள் பலரும் பஞ்சவாத்தியம் வாசிப்பதை இறைவனுக்குச் செலுத்தும் காணிக்கையாகக் கருதுகின்றனர்.

பஞ்ச வாத்தியங்கள்
News
பஞ்ச வாத்தியங்கள்
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் ஹரி என்ற வாசகர், ``பஞ்ச வாத்தியம் என்றால் என்ன? அது கோயில்களில் மட்டுமே இசைக்கப்படும் என்கிறார்களே… உண்மையா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
Doubt of common man
Doubt of common man

திமிலை, மத்தளம், இந்தளம், இடக்கை (உடுக்கை), கொம்பு எனும் ஐந்து வகையான இசைக்கருவிகளைப் பஞ்சவாத்தியம் என்கின்றனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களிலும், மகாராஷ்டிரம், குஜராத் போன்ற சில வட மாநிலங்களிலுமுள்ள கோயில்களில் பஞ்சவாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன. குறிப்பாக, சிவபெருமான், மகாவிஷ்ணு, ஐயப்பன், அம்மன் கோயில்களில் இந்தப் பஞ்ச வாத்திய இசையே அதிகமாக இசைக்கப்படுகிறது. பஞ்சவாத்திய இசையினை `இறை இசை' என்று சொல்வதுண்டு. இசைத்துறையில் சிறப்பு பெற்று விளங்கும் இசை வல்லுநர்கள், பஞ்சவாத்தியம் வாசிப்பதை இறைவனுக்குச் செலுத்தும் காணிக்கையாகக் கருதுகின்றனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலுள்ள கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் முதுமுனைவர் பட்ட ஆய்வாளராகவும், இசைத் தமிழ் ஆய்வாளராகவும் இருக்கிற முனைவர் ஆ.ஷைலா ஹெலினிடம் பஞ்சவாத்தியம் குறித்துக் கேட்டபோது, அவர் கூறியதாவது, ``திருவிதாங்கூர் அரண்மனை ஏடுகளில் கேரளாவின் 64 கலைகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அந்த ஏடுகளில்,

முனைவர் ஆ. ஷைலா ஹெலின்
முனைவர் ஆ. ஷைலா ஹெலின்

1. அர்ஜுன ந்ருத்தம் 2. ஆதி வேடன் கலி, 3. சாக்கியார் கூத்து, 4. நங்கியர் கூத்து (நங்கையர்கூத்து), 5. ஷோபான சங்கீதம், 6. ஒப்பன, 7. கரடி ஆட்டம், 8. கம்பாடி கலி, 9. ஐவர் கலி, 10. கண்யார் கலி (கன்னியர் கலி), 11. காக்கரிஷி கலி, 12. காளியூட்டு, 13. குருமார் கலி, 14. களமெழுத்து, 15. கூடியாட்டம், 16. கும்மாட்டி கலி, 17. கொத்தாமுரியாட்டம், 18. புல்லுவன் பாட்டு, 19. கருடன் தூக்கம், 20. சவிட்டு கலி, 21. சாத்தான் கலி, 22. சோழி கலி, 23. மோஹினி ஆட்டம், 24. தாளம் கலி, 25. திடம்பு ந்ருத்தம், 26. திருவாதிர கலி, 27. தீயாட்டு கலி, 28. களரிப்பயட்டு, 29. துள்ளல், 30. தெய்யம், 31. தெய்யன்னம், 32. தோல் பாவக்கூட்டு, 33. தவ்வு முட்டு, 34. புளிக்கலி, 35. நாகச்சுட்டு, 36. நாயக்கர் கலி, 37. படையணி, 38. பள்ளு கலி, 39. பாணியர் கலி, 40. பரிச்சமுட்டு கலி, 41. கூரன் கலி, 42. பதிச்சி கலி, 43. பாக்கனார் கலி, 44. பானக்கலி, 45. பூதம் கலி, 46. பூதனும்திரையும், 47. பூரம் கலி, 48. பஞ்ச வாத்தியம், 49. பத்ரகாளி துள்ளல், 50. யக்ஷ கானா, 51. கூடியாட்டம், 52. மலையிக்கூட்டு, 53. மங்களம் கலி, 54. கேரள நடனம், 55. மார்க்கம் கலி, 56. முடியேட்டு, 57. முடியாட்டம், 58. வடி தல்லு, 59. வட்ட கலி, 60. வில்லடிச்சான் பாட்டு, 61. வேடன் துள்ளல், 62. வேள கலி, 63. சர்ப்பம் துள்ளல், 64. பூதன் திர என்று 64 கலைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

மேற்காணும் 64 கலைகளும், வெவ்வேறு நிகழ்ச்சிகளின் சூழலுக்கேற்ப நிகழ்த்தப்படுகிறது. மேலேயிருக்கும் வாத்தியக்கலைகளில் “பஞ்சவாத்தியம்” மிக முக்கியமானதாக இருக்கிறது.

இசைக்கருவிகள்

இசைக்குரிய ஓசைகள் ஐந்து வகைக் கருவிகள் வழி எழுப்பப்படுகின்றன. அவை’ நரம்புக் கருவிகள், துளைக் கருவிகள், தோல் கருவிகள், கஞ்சக் கருவிகள், மிடறு (கழுத்து) என்பன. இவற்றில் எழுப்பப்படும் ஓசைகளை ஒழுங்குபடுத்தியே இசை அமைகிறது.

  1. நரம்புக் கருவிகள் (தந்திக் கருவிகள்) - யாழ், தம்புரா, வீணை, வயலின் ஆகியவை.

  2. துளைக் கருவிகள் (காற்றுக் கருவிகள்) - புல்லாங்குழல், நாதசுரம் முதலியவை.

  3. தோற்கருவிகள் (கொட்டுக் கருவிகள் ) - தவில், மிருதங்கம், கஞ்சிரா முதலியவை.

  4. கஞ்சக் கருவிகள் (உலோகக் கருவிகள்)- ஜால்ரா, ஜலதரங்கம் முதலியவை

பஞ்ச வாத்தியம்

பஞ்ச வாத்தியம் என்பது பெயருக்கேற்றபடி ஐந்து வகை இசைக் கருவிகளால் வாசிக்கப்படும் இசையாகும். பஞ்ச வாத்தியக் கருவிகளான திமிலை, மத்தளம், இந்தளம், இடக்கை (உடுக்கை), கொம்பு எனும் ஐந்து இசைக்கருவிகளில் திமிலை, மத்தளம், இந்தளம், இடக்கை முதலிய நான்கும் தோற்கருவிகள், அதாவது கொட்டுக் கருவிகள். கொம்பு மட்டும் துளைக் கருவியான காற்றுக் கருவியாகும்.

பஞ்ச வாத்தியங்கள்
பஞ்ச வாத்தியங்கள்

பஞ்ச வாத்திய இசை என்பது ஒரு கூட்டிசையாகும். பல கருவிகள் இணைந்து கூட்டிசையாக ஒலிக்கும் இவ்விசை பல்லியம் (பல்இயம்) எனப்படும். தமிழ் சங்க இலக்கியத்தில் `பல்லியம்' எனும் சொல் மிகுந்த பயன்பாட்டில் இருந்திருக்கின்றது. பல்லியம் என்பதனை ஆமந்திரிகை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதையில்,

“முரசு எழுந்து இயம்பப், பல்இயம் ஆர்ப்ப” (சிலம்பு. 3:125)
“கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை” (சிலம்பு. 3:142)

என்று குறிப்பிடப்பட்டிருப்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ளலாம்.

திமிலை
திமிலை

1. திமிலை

மரத்தினால் செய்யப்பட்டு, தோலினால் கட்டப்பட்ட ஒரு தோற்கருவியாகும். இக்கருவியானது மணற்கடிகார வடிவில் இருக்கும். இக்கருவியானது கேரளா மற்றும் தென்னிந்தியக் கோவில்களில் அதிக அளவில் இசைக்கப்படுகிறது.

2. மத்தளம்

நடுப்பகுதி பெரிதாகவும், மற்ற பகுதி சிறியதாகவும் இருக்கும் இக்கருவி இரண்டு கைகளால் இசைக்கப்படுகிறது. இது இருமுத்தோற்கருவி என்றழைக்கப்படுகிறது.

3. இந்தளம் (இலத்தாளம்)

இது இரண்டு தட்டு வடிவில் அமைந்த உலோகத்தால் செய்யப்பட்ட கருவியாகும். இக்கருவியானது இரு கைகளில் பொருத்தி இசைக்கப்படுகிறது.

இந்தளம் (இலத்தாளம்)
இந்தளம் (இலத்தாளம்)

4. இடக்கை (உடுக்கை)

உலோகம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்தும் இருக்கும் இக்கருவி இரண்டு கை விரல்களால் இசைக்கப்படுகிறது. தோல் இசைக்கருவியான இதைக் கைகளைக் கொண்டும் இசைக்கலாம்.

5.கொம்பு

வளைந்த உலோகத்தால் செய்யப்பட்ட இதனை வாயினால் ஊதி இசைக்கப்படுகிறது.

மேற்காணும் ஐந்து வகையான கருவிகளைக் கொண்டு இசைக்கப்படும் பஞ்ச வாத்திய இசை பன்னெடுங்காலமாக பெரிய கோயில்களில் இசைக்கப்பட்டு வருகிறது. பஞ்ச வாத்தியம் கடந்த 80 வருடங்களுக்கும் மேலாக, பல்வேறு கோயில்களில் இடம் பிடித்திருக்கிறது.

பஞ்ச வாத்திய இசைக் கலைஞர்கள் அரை பிறை வடிவில் நின்று இரண்டு மணி நேரம் வரை பஞ்ச வாத்தியத்தை இசைக்கின்றனர். பஞ்ச வாத்தியக் குழுவின் நடுவில் நிற்கும் “திமிலை” இசைக்கலைஞர், இத்தாளத்தின் உதவியோடு இந்த இசையை வழி நடத்திச் செல்கிறார். அவர்களுக்கு எதிரில், மத்தளம் இசைப்பவர்களின் வரிசையும், அவர்களுக்கு பின்னால் கொம்பு இசைப்பவர்களும் அணி வகுக்கிறார்கள். “இடக்கை” இசைக் கலைஞர்கள் பொதுவாக இருவராகவும், இரு பக்கமும் திமிலை மற்றும் மத்தளத்துக்கு நடுவில் நின்று இசைக்கின்றனர். “திமிலை” பஞ்ச வாத்தியத்தின் முதன்மை வாத்தியமாகும். இதில் இசைக் கலைஞர்களின் எண்ணிக்கை 12 முதல் 54 அல்லது 55 எனச் சூழலுக்கேற்ப இருக்கும். ஒவ்வொரு மத்தளமும் இரண்டு திமிலைகளாலும், ஒவ்வொரு திமிலைக்கும் சமமான எண்ணிக்கையில் கொம்பும், இலைத்தாளமும் இருக்கும். ஒரு “இடக்கை”கண்டிப்பாக இருக்கும். பெரிய குழுவில் இடக்கை எண்ணிக்கை இரண்டோ அல்லது மூன்றோ இருக்கும்.

கொம்பு
கொம்பு

பஞ்ச வாத்தியத்தின் தொடக்கத்தின் அடையாளமாக “சங்க நாதம்” முழங்கப்படும். பஞ்ச வாத்தியத்தின் தாள கட்டைகள் பிரமிட் அமைப்பில் வேகம் கூடி கொண்டே செல்லும் வகையில் அமைந்திருக்கும். இன்றைய அளவில் இசைக்கப்படும் பஞ்ச வாத்தியம் பதி காலம் முதல் திருத காலம் வரை உள்ள தாள கட்டுக்கள் இசைக்கப்பட்டு வருகிறது.

  • 1, 2 மற்றும் 3 காலங்கள் மெதுவாக, நிதானமான தாளக் கட்டமைப்பை உடையது. இது “பதி களம்” அல்லது “பதி காலம்” என்று கூறப்படும்.

  • 4, 5 மற்றும் 6 காலங்கள் மத்திய தாளக் கட்டமைப்பை உடையது. இது “மத்ய களம்” அல்லது “மத்ய காலம்” என்று கூறப்படும்.

  • 7, 8, 9 மற்றும் 10 காலங்கள் உச்ச பட்ச தாளக் கட்டமைப்பை உடையது. இது “திருத களம்” அல்லது “திருத காலம்” என்று கூறப்படும். "திஸ்ர" என்றும் கூறப்படுவதுண்டு.

பஞ்ச வாத்தியங்களை இசைத்தல்
பஞ்ச வாத்தியங்களை இசைத்தல்

“பதி களம்” முடிய 15 நிமிடங்கள் வரை பிடிக்கும். நிகழ்ச்சியின் மொத்த நேரத்தைக் கணக்கிட்டு “பிரமாணி” என்பவர் “பதி களம்” இசைக்கப்படும்போது மொத்த நிகழ்ச்சியின் போக்கைத் தீர்மானிப்பார். நிதான கதியில் தொடங்கி துரித கதியை அடையும் இந்த இசை “த்ரிபுட” என்ற தாளத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு இறுதியில் பேரொலி நிலையிலிருந்து இறங்கி நிறைவுறுகிறது. பஞ்ச வாத்தியத்தின் இறுதியில் “திமிலை” கருவிகள் எல்லாம் சேர்ந்து இலைத்தாளம் உதவியுடன் “வேகம்” “ஒலி” “திறமை” என்ற கூட்டு கலவையாக அமைகிறது.

திருவிழாக்களில் இசைத்துறையைச் சேர்ந்த பல வல்லுநர்கள் பஞ்ச வாத்தியம் இசைப்பதை இறைவனுக்கு செய்யும் இசை காணிக்கையாகக் கருதுகின்றனர். கோயில்களிலும், கோயில் திருவிழாக்களிலும் இசைக்கப்படும் பஞ்ச வாத்தியம், ஆமந்திரிகை எனும் பல்லியமாகும். இக்கலை நம் புலன்களைத் தீவிரமாக இயக்கும்படி செய்கிறது. பஞ்ச வாத்தியக் கலையின் ஒலி நயங்கள் மற்றும் தாள லயங்கள் நம் உள்ளத்தை நெகிழச் செய்து இன்பமளிக்கிறது என்பது மட்டும் உண்மை” என்றார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

Doubt of common man
Doubt of common man