Published:Updated:

``பஞ்சாபியரான ஹர்பஜனை ஏன் திருவள்ளுவரா தேர்ந்தெடுத்தேன்னா..?!'' - டியூட் விக்கி சொல்லும் சீக்ரெட்ஸ்

திருவள்ளுவராக ஹர்பஜன் சிங்
திருவள்ளுவராக ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங் திருவள்ளுவராக நடிக்கும் `திருவள்ளுவர் கன்சல்டன்சி சர்வீஸ்' சீரிஸின் இயக்குநரான டியூட் விக்கியுடன் ஒரு சின்ன உடையாடல்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் தமிழ் ட்வீட்டுகளுக்குத் தனி ரசிகர்கள் வட்டமே உண்டாகிவிட்டது. இந்நிலையில் ஹீரோ, காமெடியன், வில்லன் என சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் `டிக்கிலோனா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் கோலிவுட்டில் நடிகராகவும் களமிறங்குகிறார் ஹர்பஜன்.

`டிக்கிலோனா' டீம்
`டிக்கிலோனா' டீம்

இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 2020 ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகவுள்ளது. அதுமட்டுமன்றி, `ப்ளாக் ஷீப்' யூடியூப் சேனலின் வெப் சீரிஸில் திருவள்ளுவராக நடித்திருக்கிறார் பாஜி.

`திருவள்ளுவர் கன்சல்டன்சி சர்வீஸ்' (TCS) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸை `டியூட்' விக்கி இயக்க, `ப்ளாக்‌ ஷீப்' சேனலே அதைத் தயாரிக்கிறது. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இயக்குநர் விக்கியிடம் பேசினோம்.

``திருவள்ளுவருடைய திருக்குறளும், அதுல இருக்கிற அறநெறிகளுக்குப் பெயர்போனது. இந்த டிஜிட்டல் யுகத்துல, அதுக்கான அங்கீகாரமும், கவனமும் இன்னும் கிடைக்கலன்னுதான் சொல்லணும். இது மூலமா நிறைய பேருக்கு திருக்குறள் போய்ச் சேரணும். அதுக்கான சின்ன முயற்சிதான் இந்த சீரிஸ்."

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

``இன்னைக்கு நிலைமைக்கு ஐ.டி இளைஞர்களோட பெரிய பிரச்னையே அவங்களுக்கு ஏற்படுற மன அழுத்தம்தான். சுருக்கமா சொல்லணும்னா, ஒரு அரசு எப்படி இருக்கணும், ஒரு படை எப்படி இருக்கணும், ஒரு குடிமகன் எப்படி இருக்கணும்னு அடிப்படை விஷயங்கள் எல்லாத்தையும் திருவள்ளுவர் தன்னுடைய குறள் மூலமா பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னாடியே சொல்லிட்டார். அப்படி இருக்கும்போது ஐ.டி துறையில வேலை பார்க்கிறவங்களுக்கு வேலை, குடும்பம்னு எல்லா பக்கமும் ஏற்படுற பிரச்னைகளுக்கு, திருவள்ளுவர் இப்போ இருந்து தன் திருக்குறள் மூலமா என்ன தீர்வு சொல்லியிருப்பார்ங்கிறதுதான் டி.சி.எஸ்."

``உலகப்பொதுமறைப் புலவரான திருவள்ளுவரின் திருக்குறள் குறித்து யார், எத்தனை ஆய்வுகள் வேணாலும் செய்யலாம். ஆனா, திருவள்ளுவருக்குனு தனி ஒரு அடையாளம் பூசாதீங்க. ஒருவேளை திருவள்ளுவர் இப்போ இருந்திருந்தாலும்கூட இதையெல்லாம் எதிர்பார்க்க மாட்டார். திருவள்ளுவர் எந்த ஒரு அடையாளமும் இல்லாம, எல்லாருக்கும் பொதுவானவரா இருக்கணும்ங்கிறதுதான் நம்ம கருத்து. அதை வலியுறுத்தற விதமாதான் இந்த வெப் சீரிஸும் இருக்கும். அவருக்குத் தேவையில்லாத வண்ணங்கள் பூசி, அவரை குறுகிய வட்டத்துகுள்ள அடைக்க வேண்டாம். இது எங்களுடைய வேண்டுகோள்."

விக்கி
விக்கி

``திருவள்ளுவர் பொதுவானவர்ங்கிறதை அழுத்தமாச் சொல்லத்தான் பஞ்சாபியரான ஹர்பஜன் சிங்கைத் தேர்ந்தெடுத்தோம். கதை எழுதும்போதே ஹர்பஜனைதான் திருவள்ளுவரா முடிவு பண்ணினோம். அவருக்கும் கதை கேட்டவுடனே பிடிச்சிடுச்சு. நடிக்கும்போது, குறளுக்கும், தன்னுடைய வசனத்துக்கும் அர்த்தம் என்னனு கேட்டு தெரிஞ்சுகிட்டு ரொம்ப ஆர்வமா நடிச்சார். ரெண்டு வரி குறள்ல இவ்வளவு பெரிய கருத்துகளைக் கொண்டு வர முடியுமானு ஹர்பஜனே ஆச்சர்யப்பட்டுப் போனார். இந்தளவுக்கு ஆர்வமா நடிச்சதாலதான் அவருக்கான போர்ஷன் சீக்கிரமே முடிஞ்சது."

``ஹர்பஜனை எல்லோருக்கும் கிரிக்கெட்டரா மட்டும்தான் தெரியும். ஆனா, இந்த சீரிஸ் மூலமா அவரை நல்ல நடிகராவும் பார்ப்பீங்க. சின்னச் சின்ன எக்ஸ்ப்ரஷன்ஸ்கூட ரொம்ப அசால்டா பண்ணிட்டார். அதுமட்டுமல்லாம, அவருடைய தோற்றமும் திருவள்ளுவரைப் பிரதிபலிச்சது. இந்தக் காரணங்களாலதான் ஹர்பஜனைத் தேர்ந்தெடுத்தோம்."

திருவள்ளுவர்
திருவள்ளுவர்
`ஹர்பஜன் ஏன் அப்படி பண்ணார்னே புரியல...!' - சச்சின் பகிர்ந்த `வடிவேலு' மொமன்ட்

``காவிச்சாயம் பூசி திருவள்ளுவருக்குப் பல்வேறு உருவங்கள் கொடுத்ததை எல்லாம் நாங்க பொருட்படுத்தவே இல்லை. பல வருட ஆராய்ச்சிய்களுக்குப் பிறகு திருவள்ளுவர் எப்படி இருப்பார்னு பார்த்துப் பார்த்து ஓவியம் வரைந்தவர்தான் ஓவியர் வேணுகோபால் சர்மா. அவர் உருவம் கொடுத்த ஓவியத்தை அடிப்படையா வெச்சுதான் வள்ளுவருக்கான உருவத்தை வெப் சீரிஸ்ல கொடுத்திருக்கோம்."

``திரைத்துறை, வெப்சீரிஸ்னு இரண்டையுமே எப்படி ப்ளாக் ஷீப் பேலன்ஸ் பண்ணுது?"

``ப்ளாக் ஷீப்ல மொத்தம் 127 பேர் இருக்கோம். எங்களுடைய பயணத்துல இங்க இருக்கிற ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியம். இதோட மூளை விக்னேஷ்தான். அவருடைய கனவுகள்தான் இதெல்லாம். மேடை நாடகம், திரைப்படம்னு அவர் முன்னெடுத்து வெச்சதுதான் இதெல்லாம் எங்களுக்கு சாத்தியமாச்சு. அதே மாதிரி, இப்போ வெப் சீரிஸ்தான் டிஜிட்டல் யுகத்துடைய ஹாட் டாப்பிக். அதுல ப்ளாக் ஷீப்புடைய பங்களிப்பும் இருக்கணும். அதுவும் திருக்குறளையும், திருவள்ளுவரையும் முன்னிறுத்தி வெச்சுப் பேசக்கூடியதா இருக்கணும். இது ஒண்ணுதான் நோக்கம். இந்த சீரிஸ் எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும்" என தம்ஸ் அப் காட்டி பேட்டியை முடித்துக்கொண்டார்.

பத்து எபிசோடுகளைக் கொண்ட `திருவள்ளுவர் கன்சல்டன்சி சர்வீஸ்', அடுத்த ஆண்டு பிப்ரவரியின் தொடக்கத்தில் ப்ளாக் ஷீப் யூடியூப் சேனலில் வெளியாகிறது.

அடுத்த கட்டுரைக்கு