கோழியாக மாறிய கணவனையும் மூன்று பிள்ளைகளைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு மனைவிக்கு கிடைக்கிறது. அது வரை கணவன் முன்னால் தலை குனிந்து மட்டுமே வாழ்ந்த பெண் தலை நிமிர்ந்து வாழும் சூழல் உருவாகிறது.
19வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட மிக முக்கியமான திரைப்படம் ‘பெதர்ஸ்’.
உலக சினிமாவிற்கு எகிப்து திரைப்படங்கள் தொடர்ந்து பல படைப்புகளை வழங்கி வருகின்றன. அறிமுக இயக்குநர் ஒமர் எல் ஜோகைரி தனது ‘பெதர்ஸ்’ திரைப்படத்தை தனித்துவம் மிக்க திரைமொழியால் கட்டமைத்து இருக்கிறார். இவரது சட்டகங்கள் திரைமேதைகள் ‘அகி கரிஸ்மாகி’, ‘ராய் அண்டர்சன்’ போன்றவர்களின் படைப்புகளை நினைவு படுத்துகின்றன. ‘டெட்பேன் காமெடி’ என வகைப்படுத்தும் வகையில் பெதர்ஸ் திரைப்படத்தின் காட்சியமைப்புகள் உள்ளது. படத்தின் அனைத்து சட்டகங்களும் ஒளி மங்கிய பீங்கான் பாத்திரங்களை போல் காட்சியளிக்கிறது. இதற்காக ஒளிப்பதிவாளர்,கலை இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர்,ஒப்பனை கலைஞர் என அனைவரும் ஒத்திசைந்து பணியாற்றி இருக்கிறார்கள். எனவேதான், படத்தின் அனைத்து சட்டகங்களும் தூசு படிந்த கண்ணாடி வழியாக பார்க்கும் அனுபவத்தை தருகின்றன.
படத்தில் எங்கும் எதிலும் தூசு நிறைந்து காணப்படுகிறது. தூசு ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரது இல்லங்களிலும் நிறைந்து காணப்படுகிறது. படத்தில் காட்டப்படும் அனைத்து பணங்களும் அழுக்கடைந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. ஏழை எண்ணி எண்ணி கொடுக்கும் பணமும் அப்படித்தான் இருக்கிறது. கொழுத்த பணக்காரன் கட்டுக்கட்டாக வைத்திருக்கும் பணமும் அப்படித்தான் காட்சியளிக்கிறது. எகிப்து நாட்டின் சிதிலமடைந்த பொருளாதரத்தை சிதிலமடைந்த பணத்தின் வழியாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் ஒமர் எல் ஜோகைரி.

ஆணாதிக்க போக்குடைய கணவன் ஒரு மந்திரவாதியால் கோழியாக்கப்படுகிறான். கோழியாக மாறிய கணவனையும் மூன்று பிள்ளைகளைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு மனைவிக்கு கிடைக்கிறது. அது வரை கணவன் முன்னால் தலை குனிந்து மட்டுமே வாழ்ந்த பெண் தலை நிமிர்ந்து வாழும் சூழல் உருவாகிறது. சிரிப்பு அவரது முகத்தில் என்றுமே இருந்ததில்லை. ஆணாதிக்கச் சமூகத்தில் அதற்கான சூழல் அவருக்கு வழங்கப்படவில்லை.
அவர் கையில் பொறுப்பு வந்த பிறகு அவர் முகத்தில் புன்னகை என்னும் பொன்னகை பூக்கிறது. அந்த புன்னகையை வற்ற வைக்க தொடர்ந்து ஆணாதிக்க சமூகம் பாடுபடுகிறது. அவை அனைத்தையும் எதிர்கொண்டு தனது புன்னகையை முகத்தில் தக்க வைக்கிறார்.
தொழில்முறை அல்லாதவர்களை நடிக்க வைத்து தனது திரைக்கதையை வளப்படுத்தியுள்ளார் இயக்குநர். கணவனாக நடிப்பதற்கு மட்டும் 30 கோழிகளை பயன்படுத்தியுள்ளார்.
இயக்குநர் இந்த கதாபாத்திரத்துக்கு பெயர் சூட்டவில்லை. அவரை ஒட்டு மொத்த பெண் சமூகத்தின் பிரதியாக்கி இருக்கிறார். கணவன் மனித உருவில் இருக்கும் போதும் அவனுக்கு எவ்வாறு பணிவிடை செய்கின்றாரோ, அதே போன்று கோழி உருவில் இருக்கும் போதும் பணிவிடைகள் தொடர்கின்றன. இன்னும் கோழி உருவில் இருக்கும் கணவனுக்கு கூடுதலாக பணிவிடை செய்ய நேரிடுகிறது. ஒரே ஒரு வித்தியாசம். முந்தைய பணிவிடை அவனது ஆணையின்படி நடக்கும். பிந்தைய பணிவிடை மனைவியின் திட்டமிட்டப்படி நடக்கிறது. அவர் தனது கோழிக்கணவனை மிகவும் அன்பாகவும் கனிவாகவும் நடத்துவதை இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளார்.

படத்தின் களமாக தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியை இயக்குநர் தேர்வு செய்துள்ளார். அதன் காரணமாக சுற்றுப்புறச்சுழல் சிதைந்து வருவதை படத்தின் அனைத்து சட்டகங்களும் சத்தியம் செய்து கூறுகின்றன. தொழில்முறை அல்லாதவர்களை நடிக்க வைத்து தனது திரைக்கதையை வளப்படுத்தியுள்ளார் இயக்குநர். கணவனாக நடிப்பதற்கு மட்டும் 30 கோழிகளை பயன்படுத்தியுள்ளார்.
உலகின் தலைசிறந்த கான் திரைப்பட விழாவில் இரு உயரிய விருதுகளை பெற்றுள்ளது ‘ஃபெதர்ஸ்’.
Winner: Critics' Week Grand Prize
Winner: FIPRESCI Prize Parallel Sections Feathers (2021)
Nominee: Golden Camera Feathers (2021)

‘பெதர்ஸ்’ திரைப்படம் முழுமையான திரையனுபவம்.
Feathers | Dir/scr: Omar El Zohairy | Egypt | 2021 | 115 mins |