Published:Updated:

உயிர்மெய் - 14

உயிர் மெய்
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் மெய்

மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

`எதைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். சமீபகாலமாகச் சிலருக்கு `எதைத் தின்றால் பித்தம் தலைக்கேறும்?’ எனவும் சொல்லவேண்டியிருக்கிறது. பித்தம், உயிர்மெய்யில் உசுப்பேற்றும் விஷயம் என்பதால், ஒரேயடியாகப் பித்தம் என்றால், `அந்த விஷயம்’ என்று மட்டும் நினைக்க வேண்டியதில்லை. ஆனால், `அந்த’ விஷயத்துக்கு, பித்தம் சற்றுத் தூக்கலாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டும் என்பதில் உண்மை உண்டு. `பித்தம்’ என்னும் சொல்லுக்கு அதைத் தாண்டி பல பொருள்கள் இந்திய மருத்துவத்தில் உள்ளன. பசித்தால் சுரக்கும் அமிலம், ருசித்ததை ஜீரணிக்கும் நொதி, பார்த்தால் ஏற்படும் பரவசம், பார்க்காததால் ஏற்படும் பசலை, மஜ்ஜையில் சுரக்கும் சிவப்பணு, மனதில் நினைக்கும்போதெல்லாம் உருகிச் சுரக்கும் ஹார்மோன், மனதுக்குப் பிடித்தவளின் ஆன்லைன் நடமாட்டத்தை வாட்ஸ்அப்பில் கண்டதும்  மூளைக்குள் பட்டாம்பூச்சியாகப் படபடக்கும் செரடோனின்... எனப் பித்தத்தின் போர்ட்ஃபோலியோ பெரிதினும் பெரிது!

உயிர்மெய் - 14

வாதம், பித்தம், கபம் எனப்படும் தமிழ் மருத்துவத்தின் அடிப்படையில், கத்திச்சண்டை போட்டு உடலைக் காப்பாற்றுவதில் ஆரம்பித்து கண்ணீர் வடிப்பது, காதலாகிக் கசிந்துருகுவது... எனப் பித்தம், உடல்திரையின் நாயகன். காந்தி, லிங்கன், சே குவேரா ஆகிய உலகின் மிகப் பெரிய ஆளுமைகள் எல்லாம் கொஞ்சம் பித்த பெர்சனாலிட்டியாக இருந்திருக்கக்கூடுமோ என்ற யோசனையும் உண்டு. `பித்தமடங்கிப் போகில் பேசாதே போய்விடு’ என மரணக்குறியாகவே பித்தத்தை அன்று தமிழ் மருத்துவமும் இன்ன பிற இந்திய மருத்துவ முறைகளும் அடையாளம் காட்டியுள்ளன. `இந்தப் பித்தம் அழகான தாம்பத்யத்துக்கும் நித்தம் அதன் அளவில் தேவை’ என்றனர் நம் முன்னோர். `உதிரும் மயிரில் இருந்து ஆரம்பித்து, உடலின் அத்தனை உறுப்புகளின் உறுதிக்கும் உணவே மருந்தாச்சே... இந்தப் பித்தம் கொஞ்சநாளாக எனக்கு பிஸ்கோத்தாகப் போய்க்கொண்டிருக்கிறதே... இதை வலுப்படுத்த ஒரு டயட் சார்ட் கிடையாதா? பாக்யராஜின் முருங்கைக்காய் மாதிரி வேற ஏதாவது இல்லையா?’ என ஏங்குவோருக்குத்தான் இந்த வாரம்.

ஆண் உயிரணுவை வலுவாக உருவாக்கத் தலையாயது நாகச்சத்து. அதாவது Zinc. இன்னும் விரித்து, விசாலமாகப் பார்த்தால், இதை `இங்கிலீஷ் பித்தம்’ எனலாம். ரொம்ப நாளாக இந்தச் சத்து உடல் நோய் எதிர்ப்பாற்றலுக்கான கனிமச்சத்து என்று மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது, நாகம் என்பது வெறும் கனிமச்சத்து மட்டுமல்ல; உயிரணுக்கள் உற்பத்திக்கும், உடலுறவில் அவை உள் எறியப்பட்ட பின்னர், அதற்கான குளத்தில் சத்தாகத் திரியவும், நீந்தி முன்னேறவும்கூட உதவும் முக்கியச் சத்து என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த Zinc அளவு குறைந்தால், உயிரணுக்களின் உற்பத்திக்குத் தேவையான `Testosterone’ எனும் ஆண் ஹார்மோன் சத்தும் குறைவதைத் தெள்ளத்தெளிவாக நவீன உணவியலாளர்களும் மருத்துவர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். நம் முன்னோரோ, `மேகம் கிளர்பேதி வெட்டையழலைத் தணிக்கும்’ என `வெட்டையழல் நோயில் விந்தணுக்குறைவு வரும்; அதைப் போக்கும் இந்த நாகச்சத்து’ என்கின்றனர். மொத்தத்தில், இந்த Zinc is king.

அவ்வளவு முக்கியமான இந்த `சிங்க்’-காரம் நம் அன்றாட உணவில் எங்கே உள்ளது? மலையளவு பயன் தரும் இந்தச் சங்கதி, நம் உணவிலேயே மிகச் சிறிதாக உள்ள எள்ளில்தான் ஏகப்பட்ட அளவில் இருக்கின்றதாம். நாகச்சத்துடன் இரும்புச்சத்தையும் சேர்த்து அளிக்கும் உணவுப்பொருளில் முதல் மதிப்பெண்ணைப் பெறுவது இந்த எள். கூடவே, Coenzyme Q10 (COQ10) என்னும் சத்தையும் சரமாரியாக வைத்திருப்பது இந்தச் சின்னஞ்சிறு எள். இன்றைக்கு, விந்தணுக்கள் வேகமாக ஓட நவீன மருத்துவத்தில் அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் சத்துதான் இந்த Coenzyme Q10. வெளிநாட்டில் மருத்துவச் சந்தையில் இப்போது இந்த COQ10-க்கு எக்கச்சக்க கிராக்கி. ``பாஸு! அதனாலதான் எள் ஒட்டிய வெளிநாட்டு பர்கரைச் சாப்பிடுறோம்’’ எனப் புறப்பட்டுவிட வேண்டாம். அதில் எள்ளைத் தவிர, அத்தனையும் அழிச்சாட்டியம் பண்ணக்கூடியவை. நீங்கள் சமர்த்தாக எள்ளுத் துவையலாகவோ, கருப்பட்டி சேர்த்து  எள் உருண்டையாகவோ   எள்ளுப்பொடியில் நல்லெண்ணெய் சேர்த்து அளவாகச் சாப்பிடுங்கள். அது, விந்தணுக் கூட்டத்தை உயர்த்தும். உள்ளூர் உழவனின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும். `எள்ளோதனம்’ அல்லது `எள்ளோதரை’ எனும் எள்ளும் அரிசிச்சோறும் சேர்த்துச் செய்யப்படும் உணவு, உடற்சூட்டால் வரும் விந்தணுக் குறைவுக்கு நெடுங்காலமாகப் பரிந்துரைக்கப்பட்ட உணவு. அரிசிக்குப் பதில் தினை அரிசியில் சோறிட்டால், உயிர்மெய்க்கு இன்னும் ஸ்பெஷல். எள் அடிப்படையில் குளிர்ச்சியானது. ஆனால், சில சித்த மருந்துகளைச் சாப்பிடும்போது மட்டும் எள்ளைத் தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு அதிக எள், கருச்சிதைவை உண்டாக்கும்.

நிறையப்பேர் நினைப்பதுபோல் கொண்டைக்கடலை, வெறும் புரதச்சத்து மட்டும் தரும் பயிரல்ல. தினமும் சிறிதளவு காலை வேளையில் வெள்ளை அல்லது சிவப்பு கொண்டைக்கடலையை வேகவைத்துச் சாப்பிடுவது இதே நாகச்சத்தைச் சேர்த்துத் தரும். கொண்டைக் கடலையைச் சமைத்து, வேகவைத்துச் சாப்பிட்டாலும்கூட சில மணி நேரம் ஊறவைத்துப் பின்னர் சமைப்பது நல்லது. இந்த ஊறல் செய்கை, அந்தக் கடலையில் உள்ள கனிமங்களையும் சத்துகளையும் கசியவிடாமல் அதில் கட்டியிருக்கும் ஃபைட்டிக் அமிலத்தை (Phytic acid) உடைத்து, ஜீரணத்தை லகுவாக்கிட உதவும். முளைகட்டிச் சாப்பிட்டாலும் முழுதாக வேகவைத்துச் சாப்பிட்டாலும் கொஞ்சம் எள், மிளகு, சீரகம், வெந்தயம் சேர்த்து காம்போவாகச் சாப்பிட்டால், கொஞ்சம் காம போகமாகவும் செய்யும். கொண்டைக்கடலைப் போலவே பச்சைப்பட்டாணியும் நாகச்சத்து நிறைந்த பயறு.

`எல்லாமே மரக்கறிதானா? எங்களுக்கு..?’ எனும் புலால் பிரியர்களுக்கு, கடல் உணவுகளில் சிப்பிச்சதை (Oyster) மிகச் சிறந்த உணவு. நாகம் முதலான பல கனிமங்களை ஏராளமாகத் தரும் கடல் விருந்து இது. சீனர்களின் மிகப் பிரியமான உணவு இந்த சிப்பிச்சதை. நாமும் நெடுங்காலம் சாப்பிட்டவர்கள்தான். `சிப்பியை உப்போடு சேர்த்து வேகவைத்து, பின்னர் சதையை மிளகு சேர்த்து சமைத்து உண்டால், உடல் வலுப்பெறும்’ என்கிறது சித்த மருத்துவம். இன்றைய அறிவியல், இந்தச் சிப்பிச்சதையை நாகச்சத்தின் உச்சமாகச் சொல்கிறது. சிப்பிச்சதை மட்டுமல்லாமல், நத்தைச் சதை, நண்டுக்கறி அனைத்தும் சித்த மருத்துவத்தில் பித்தம் உயர்த்தும் பெருமாள்களாகப் பார்க்கப்பட்டவையே.

`Oyster’ எனும் சிப்பிச்சதை இன்றைக்கும் மேற்கத்திய சீன உணவுகளில் ஏகப் பிரசித்தியான உணவு. சீன இலக்கியங்களில் சிப்பி பெண்ணுறுப்புபோல் இருப்பதால், அது ஆணுக்கான உணவு எனச் சொல்லப்பட்டதாம். இதே மாதிரி கதையைச் சொல்லி ஆணுறுப்பைக் காண்டாமிருகக்கொம்போடு ஒப்பிட்டு, அதன் உறுதியான வடிவத்தில் கிளர்ந்து, `இது ஆண்மைப் பெருக்கி’ எனக் கதையைப் பரப்பி, கணிசமாகக் காண்டாமிருகங்களைக் காலிபண்ணியது ஒரு கூட்டம். சிப்பிகள் பரவாயில்லை. கடல் சூழல் மாசுபடுதலில் கொஞ்சம் குறைந்தாலும், இன்னமும் கணிசமாகக் கிடைக்கின்றன. நாம் இட்லி சாம்பார் சாப்பிடுகிற மாதிரி, இந்தச் சிப்பிச்சதையைச் சகட்டுமேனிக்குச் சாப்பிடும் பழக்கம் சீனர்களுக்கு உண்டாம். அதனால்தானோ என்னவோ, சீனாவின் மக்கள்தொகை எக்குத்தப்பாக ஏறியதுபோல. பல மேற்கத்திய கடற்கரை நாடுகளில், காதலை புரொபோஸ் பண்ணியதும் எதிர்ப்பக்கம் செருப்படி கிடைக்காமல் புன்னகை பூத்துவிட்டது என்றால், உடனே இருவரும் கிளம்பிப்போய் சிப்பிக்கறி சாப்பிடுவது மரபாம். அந்த ஊர்களில் பாட்டு, மியூஸிக், பரபரவெனத் திரிவது எல்லாம் கிடையாதுபோல. நேரே… ம்ம்!

``Oyster சாப்பிட ஒவ்வொரு நாளும் எங்கே போவது? கடையில் கிடைக்கும் Oyster sauce வாங்கிச் சாப்பிடவா?’’ என்போருக்கு ஓர் எச்சரிக்கை. அநேகமாக சீனர்கள் தயாரிக்கும் இந்த Oyster sauce-ல், `மோனோ சோடியம் குளூட்டமேட்’ எனும் சர்ச்சைக்குரிய உப்பைக் கணிசமாகக் கலக்கிறார்கள். ஒருபக்கம் ஹார்மோன் கிளம்பி, இன்னொரு பக்கம் இந்தச் சர்ச்சைக்குரிய உப்பால் மூளை மழுங்கிவிடவும் வாய்ப்பு உண்டு. எனவே, தப்பாகத் தேர்ந்தெடுத்துவிடக் கூடாது. 

விந்தணுக்களின் எண்ணிக்கையை விராட்கோஹ்லி மாதிரி `விரசலா’ அடித்து உயர்த்த, யாராவது இனி `உங்களுக்கு குலேபகாவலி கொண்டு வாரேன்; அதுக்கு நான் மகேந்திர பாகுபலிபோல பல மலை போய் பறிச்சிட்டு வரணும். கொஞ்சம் செலவாகும்’ எனச் சொல்லி, சொத்தை எழுதி வாங்க நினைத்தால், விரட்டி அனுப்புங்கள். `தினமும் கீரைச் சோறும், கீரை சூப்பும், கீரை நெய் பூவாவும் சாப்பிட்டால், அதிலிருந்து கிடைக்கும் ஃபோலேட் (Folate) சத்துகள் விந்தணுக்களின் எண்ணிக்கையை செமையாக உயர்த்திவிடும்’ என்கின்றன ஆய்வு முடிவுகள். எண்ணிக்கை மட்டுமல்ல, Premature ejaculation  மற்றும் Erectile dysfunction போன்ற ஆண்மைப் பிரச்னைகளுக்கும் அன்றைய ப்ரிஸ்கிரிப்ஷனில் முதலிடம் கீரைக்குத்தான்.

`அகத்தியர் குணவாகடம்’ எனும் பண்டைத்தமிழ் நூல், அன்றைக்குப் பிரசித்திப் பெற்ற சித்த மருத்துவ நூல். அந்த நூலில், கீரைக் கூட்டத்தில், சாதாரண அறுகீரை, பசலை, முருங்கை, தூதுவேளை, நறுந்தாளி என அத்தனையும் உடலுறவில் நல்ல நாட்டத்தை ஏற்படுத்தி, அதில் ஏற்படும் சிரமங்களையும் களையும் என்பதை

`தாளி முருங்கை தழைதூ தனம் பசலை
வானிலறு கீரையுநெய் வார்த்துண்ணி லாளியென
விஞ்சுவார் போகத்தில் வீம்புரைத்த பெண்களெல்லாங்
கெஞ்சுவார் பின்வாங்கிக் கேள்”


எனக் குசும்பு கொப்பளிக்கச் சொல்லியிருக்கிறார்கள். `யாளியென விஞ்சுவார் போகத்திலே’ எனும் பாடலில் வரும் யாளி எனும் விலங்கு யானையின் தலை, சிங்கத்தின் உடம்பு என்று கற்பனையில் செதுக்கப்பட்டு, அநேகமாக அனைத்து இந்துக் கோயில்களிலும் தூண்களில் இருக்கிறது. மிக வலிமையான விலங்காக இலக்கியங்களில் பேசப்பட்ட யாளி, ஒரு கற்பனை விலங்கே. `உடம்பே அவ்வளவு வலிமைன்னா, புணர்ச்சியில்..?’ என எசகுபிசகாகச் சிந்தித்து, `வாலிப வயோதிக அன்பர்களே! அந்த வலிமையைப் பெற கீரை சாப்பிடுங்கப்பா’ எனக் கொஞ்சம் லைட்டாக எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் சுதியேற்றிச் சொல்கிறார் அந்த சித்த நூலின் ஆசிரியர்.

`தாதுவை உண்டாக்கும்; தனி மேகத்தைத் தொலைக்கும்’ என்ற வரிகள் எதுகை மோனைக்காக எழுதப்பட்டவை அல்ல. தாது எனும் உயிரணுக்களை உயர்த்தும் ஓரிதழ் தாமரை இயல்பிலேயே, பிறப்பிலேயே சிறுத்து இருக்கும் ஆணின் விதையை (Low sized testicles) பருக்க வைக்கவும், விந்தணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் (Spermatogenesis) செய்வதை நவீன அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மூலிகைகள் இருக்கட்டும். முருங்கை விதை, முருங்கைப்பூ என ஆரம்பித்து, ஜாதிக்காய், லவங்கப்பட்டை, வெந்தயம், பூண்டு, பாதாம், பிஸ்தா, சாரப் பருப்பு, பருத்திப்பால்... என நாம் அன்றாடம் அடுப்பங்கரையில் புழங்கும், கலவி இன்பத்தைக் கணிசமாகத் தரும் உணவுகளும் எளிய மூலிகைகளும் அன்று நிறையவே அடையாளம் காணப்பட்டுள்ளன. வாழ்வின் அவசியமான அந்தப் பித்த உயர்வைப் பற்றிப் பேச அதிகம் சங்கோஜப்பட்டதன் விளைவே, இந்தத் தளத்தில் கொடிகட்டிப் பறக்கும் போலி விளம்பரங்களும் அதில் நடக்கும் அறமற்ற வணிகமும்.

இன்னொரு முக்கிய விஷயம்... விலை உயர்ந்த மருந்து, அதிகம் படிக்கப்பட்ட அதிசயக்கத்தக்க மூலிகை இவையெல்லாம் தராத உயிரணு உயர்வை, ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகையில், அவன் கவனிக்காதபோது சிநேகமாகத் தன் தட்டில் இருந்து எடுத்து அவன் தட்டில் போடும்... அவன் விரும்பிச் சாப்பிடும் வெண்டைக்காய் பொரியலும், ``போதும் போதும்’’ என மறுத்து உண்ணும் அவன் கைகளை விலக்கி, ``ப்ளீஸ்! கொஞ்சூண்டுப்பா’’ என இதழ் குவித்துக் கட்டாயமாகப் பரிமாற, சட்டைப்பையில் தெறித்த அந்த மோர்க்குழம்பை ``ச்சோ!’’ எனப் பதறிக் கையாலேயே துடைத்து, அதை அவன் முன்னே அழகாக அருந்துவதும்கூட, கொஞ்சம் உயர்த்தக்கூடும்... பரிமாறியதில், சோற்றுக்கும் காய்க்கும் இடையே காதல் செருகி இருக்கும்போது!

- பிறப்போம்...

விந்தணுக்களின் உற்பத்திக்கும், அதன் வேகமான நகர்வுக்கும் நவீனம் சொல்லும் பிற மிக முக்கியச் சத்துக்கள்...

L-Carnitine, வைட்டமின் பி 12 மற்றும் வைட்டமின் சி.

உயிர்மெய் - 14

L-Carnitine சத்து, நம்ம ஊர் வெண்டைக்காய் முதலான அநேகக் காய்கறிகளில், கீரை வகைகளில், பாதாம் முதலான வித்துக்களில் நிறைய உள்ளது.

உயிர்மெய் - 14

பி 12 நான்வெஜ்ஜில் மட்டுமே இருந்து கிடைக்கும் சமாசாரம். சிக்கன் லிவர், மீன்கள், கொஞ்சம் பால், முட்டையில் இருந்தும் பெறலாம்.

உயிர்மெய் - 14

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சோ, எலுமிச்சையோ ஏற்கெனவே பிழிந்து பாக்கெட்டில், புட்டியில் அடைக்கப்பட்ட பழச்சாற்றைத் தவிர்த்து, அவ்வப்போது பிழிந்து சாப்பிடுவதுதான் கணிசமாக இந்தச் சத்துகளை நார்ச்சத்தோடு சேர்த்தளிக்கும்.

உயிர்மெய் - 14

`புளிச்ச கீரை’ எனும் கோங்குரா, ஆந்திரா மெஸ்ஸின் ஓர் அசத்தல் உணவு. புளிப்பாகவும் சுவையாகவும் உள்ள இந்தக் கீரை `போகம் விளைவிக்கும் கீரை’ என்று பல ஆயிரம் வருடங்களாகப் பேசப்படும் கீரை. இங்கே மட்டுமல்ல, இதன் இனம் ஆப்பிரிக்க நாடுகளிலும் பர்மாவிலும்கூட பரிமாறப்படுகின்றதாம். ஃபோலிக் அமிலம், பல்வேறு கனிமங்கள், குர்சிட்டின் (Quercetin) முதலான பலவித மருத்துவ குணமுள்ள Flavanoids  நிறைந்த இந்தக் கீரை உயிரணுக்கள் உற்பத்திக்கு ஓர் ஊட்டக்கீரை. இதன் குடும்பத்தைச் சார்ந்த குடம் புளி (கோக்கம் புளி) மாதிரியே இந்தக் கீரை எடையைக் குறைக்கும் என்பது கூடுதல் நற்செய்தி.

உயிர்மெய் - 14

காயகல்ப பயிற்சி

மன வளக்கலை வேதாத்ரி மகரிஷி கற்றுத்தந்த எளிய முறை யோகப் பயிற்சி இன்று கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிகளில் ஒன்று காயகல்ப பயிற்சி. மருந்து, மாத்திரை எனும் வட்டத்தில் சிக்காமல், விந்து நாதம் எனும் படைப்பின் மூலப் பொருள்களைத் தூய்மை செய்து, அவற்றின் வலுவையும் அளவையும் தரத்தையும் உயர்த்துவதாகப் புரியப்படும் இந்தப் பயிற்சியையும் உயிரணுக்களை உயர்த்த, அதன் இயக்கத்தைச் சீராக்கப் பயிற்சி செய்யலாம்.