
செ.சல்மான், எம்.புண்ணியமூர்த்தி, ஷோபனா எம்.ஆர், படங்கள்: வி.சதீஷ்குமார், ஸ்ரீனிவாசன், ப.பிரியங்கா
கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கிவிட்டன. பள்ளிக்கு பை பை சொல்லி, ‘பிரேமம்’ ஃப்ரேம்கள் மனதில் மிதக்கக் கல்லூரிக்குச் சென்றிருப்பார்கள் ஃப்ரெஷர்ஸ். எப்படி இருக்கு காலேஜ் கேம்பஸ்?
டேட்டாவை ஷேர் பண்ணுங்க மக்களேய்ய்ய்!
சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவக் கல்லூரியில் வெஸ்டர்ன் நடனப் பயிற்சியில் இருந்தார்கள் ஃபர்ஸ்ட் இயர் லேடீஸ். ‘`காலேஜ்ல சேர்ந்து நாலு நாள்தான் ஆகுது. அதுக்குள்ள அஞ்சு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பிச்சுட்டோம். டீச்சர்ஸ் குரூப், க்ளாஸ் மேட்ஸ் குரூப், பெஸ்டீஸ் குரூப், பஸ் ஃப்ரெண்ட்ஸ் குரூப்னு போயிட்டே இருக்கு’’ என்று அஞ்சனா ப்ளூ டிக் கதைகள் சொல்ல, ‘`இதுல டீச்சர்ஸ் இருக்கிற குரூப்ல மட்டும்தான் நாங்க சைலன்ட் மோட்ல இருப்போம். மத்த குரூப்ல எல்லாம் கலகல கலாய்தான். இப்போ எல்லா குரூப்லயும் ஹாட் டாபிக்... பிக்பாஸ்தான்’’ என்கிறார் மதுமிதா.


‘`டிபி, ஸ்டேட்டஸ் டேர்(dare), ‘டேக்(tag) தட் ஒன் ஃப்ரெண்ட்’ போஸ்ட்னு ஆன்லைன்ல ஃப்ரெண்ட்ஸ் வாழ்க்கை ஜாலியா போயிட்டு இருக்கு. நட்புன்னா என்னன்னு தெரியுமா? தோழின்னா என்னன்னு தெரியுமா?’’ என்று சிந்தியா திடீரென ‘தளபதி’ மாடுலேஷனுக்குப் போக, ‘`தாராளமா டேட்டா ஷேர் பண்றவ’’ என்று மதுமிதா சொல்ல, ‘`எக்ஸாக்ட்லி’’ என்று அதிர்கிறது கோரஸ்.
பிடிச்ச புரொஃபஸரை சப்ஸ்கிரைப் பண்ணலாம்!
அடுத்து கோவை கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி. ``படத்துல வர்ற மாதிரியெல்லாம் காலேஜ் இல்லை. இங்கேயும் படிக்கணும்னுதான் சொல்றாங்க. இது கொஞ்சம் பெரிய ஸ்கூல்... அவ்வளவுதான். 40 வாட்ச்மேன் இருக்காங்க. இங்க ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’’ என்கிறார்கள் மனீஷாவும் ஷிராக்கும். ‘`ஆனாலும் காலேஜ் எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு’’ என்ற பூஜா, ‘`ஒண்ணு தெரியுமா? இங்க செல்போன்லதான் க்ளாஸ் எடுக்கிறாங்க. ஸ்கூல் படிக்கும்போது வீட்டுல மொபைலை எடுத்தாலே நம்மளைத் தீவிரவாதி மாதிரிப் பார்ப்பாங்க. இப்ப வேற வழி இல்லாம, அவங்களே காஸ்ட்லி மொபைல் வாங்கிக்கொடுத்து, ‘நல்ல்ல்ல்லா படிக்கணும்மா’னு அனுப்புறாங்க. திஸ் இஸ் கால்டு பேரென்ட்ஸ் பரிதாபங்கள்.
இன்னொரு விஷயம் சொன்னா நீங்க அசந்தே போயிடுவீங்க. ஸ்கூல்ல நமக்குப் பிடிக்காத டீச்சர் எடுக்கிற சப்ஜெக்ட்டும் நமக்குப் பிடிக்காம போயிடுமில்ல? ஆனா, இங்க அந்தப் பிரச்னை இல்லை. ஏன்னா, நமக்குப் பிடிச்ச புரொஃபஸரை நாமளே சப்ஸ்க்ரைப் பண்ணிக்கலாம். அப்படி அவங்களைத் தேர்ந்தெடுத்த 60 ஸ்டூடன்ட்ஸ் கொண்ட க்ளாஸுக்கு, அவங்க குறிப்பிட்ட பேப்பரை நடத்துவாங்க’’ என்று ஆச்சர்யத் தகவல் சொன்னார் பூஜா.

‘`ப்ரோ... ஃபேஸ்புக், ட்விட்டருக்கு எல்லாம் இப்போ வயசாகிருச்சி, போரடிக்குது. இன்ஸ்டா, வாட்ஸ்அப்தான் ட்ரெண்ட்’’ என்கிறார்கள் பிரசாத்தும் மனிஷாவும். ‘`வீட்டுல ஒரு நாளைக்கு 200 ரூபாய் பாக்கெட் மணி கொடுத்துவிடுறாங்க. காலேஜ்ல இருக்குற ஃபுட் கோர்ட்டுக்குப் ஒருமுறை போயிட்டு வந்தாலே, 200 ரூபாயும் ஸ்வாகா ஆகிடுது’’ என்று ஷிராக் சொல்ல, ‘`எங்களுக்கெல்லாம் 50 ரூபாய் கொடுக்கிறதுக்கே ஆயிரத்தெட்டு கேள்வி கேட்கிறாங்க... கடுப்ப கிளப்பாதீங்க சகோ’’ என்று ஆவேசமாகிறார்கள் தேவதர்ஷனாவும் குருபிரசாத்தும்.
‘`ஜி.எஸ்.டி, எடப்பாடி பற்றியெல்லாம் தெரியுமா?’’ என்றதும், ‘`காலேஜ் ஃபீஸ்ல ‘ப்ளஸ் ஜி.எஸ்.டி’னு வந்துடக் கூடாது பாஸ். எடப்பாடி..? அது ஓர் ஊரு. வெயிட், கூகுள்கிட்ட கேட்போம். யெஸ்... அது சேலத்துக்குப் பக்கத்துல இருக்கு. இதுதான் டிஜிட்டல் இந்தியா’’ என்கிறார்கள் நந்தினியும் கரணும். ‘`இப்போ இளைய சமுதாயத்தோட முக்கியப் பிரச்னை என்ன?” என்றால், ‘`ஜியோ ஆஃபருக்கு என்னைக்கு எண்டு கார்டு போடப்போறாங்களோன்னுதான் திக்திக்னு இருக்கு. உடனே எங்கமேல நம்பிக்கை இழந்துடாதீங்க. ‘நீட்’ பிரச்னையில இருந்து நாட்டுநடப்புகள் வரை அப்போதானே உடனுக்குடன் தெரிஞ்சுக்க முடியும்’’ என்கிறார்கள் கோவை குசும்பர்கள்!

வேலைக்குப் போறோம்... வரி கட்டுறோம்!
மதுரை, பசுமலையிலுள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரிக்குள், முதலாமாண்டு மாணவர்களுக்கான மிரட்சியும் மகிழ்ச்சியுமாக இருந்த அந்த கேங்கை நெருங்கினோம். ‘`ரேகிங் இல்லை. பனிஷ்மென்ட் இல்லை. ஹோம்வொர்க் இல்லவே இல்லை. காலேஜ் லைஃப் சூப்பரா இருக்கு” என்று குஷியாக ஆரம்பித்தார்கள் ஆர்த்தியும் ஸ்வர்ணலதாவும். ‘`நாங்கதான் ஸ்கூல்ல இருந்து காலேஜுக்கு வந்துட்ட சந்தோஷத்துல இருக்கோம்னா, தேர்டு இயர் ஸ்டூடன்ட்ஸ் ஃபைனல் இயர் என்ற சந்தோஷத்துல இருக்காங்க; செகண்ட் இயர் ஸ்டூடன்ட்ஸ் சீனியர்ஸ் ஆகிட்ட சந்தோஷத்துல இருக்காங்க. ஆக, மூணு வருஷமும் இங்க த்ரில்லிங்கான சந்தோஷம் கியாரன்டினு புரியுது’’ என்று, தான் சீனியர்களிடம் செய்த ரிசர்ச்சைச் சொல்கிறார் கார்த்திக்.
‘`காலேஜ்ல சேர்ந்ததுக்கு அப்புறம் போன்ல கான்டாக்ட்ஸ், ஃபேஸ்புக்ல ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட் எல்லாம் கடகடனு கூடுது. நமக்குனு ஒரு வட்டம் உருவாகும்போது, நாம வளர்ந்துட்டோம்கிற கெத்து வருதுல்ல!” என்கிறார் கெளதம்.

‘`முன்னயெல்லாம் ஊருல, உறவுல, வீட்டுலனு எல்லோரும் நம்மளை ‘ஓடிப்போய் ஒரு பாக்கெட் பால் வாங்கிட்டு வா’ பிராப்பர்ட்டியாவேதான் வெச்சிருப்பாங்க. இப்ப, ‘காலேஜ் போற பையன்ப்பா... கருத்தா இருப்பான்’னு நம்புறாங்க. அதைக் கேட்கும்போது நமக்கும் கேப்டன் பட க்ளைமாக்ஸ்ல நாடி, நரம்பெல்லாம் முறுக்கேறுற மாதிரி வேகம் வருது. படிக்கிறோம், பாஸ் பண்றோம், வேலைக்குப் போறோம், எத்தனை வரியைப் போட்டாலும் கட்டுறோம்!”
அட்டகாச அலப்பறை கொடுக்கிறார்கள் `மதுர’ பாய்ஸ்!