Published:Updated:

சொல் அல்ல செயல் - 14

சொல் அல்ல செயல் - 14
பிரீமியம் ஸ்டோரி
News
சொல் அல்ல செயல் - 14

அதிஷா, ஓவியம்: ஹாசிப்கான்

``அவசியங்களும் விருப்பங்களும் வேறு வேறு விஷயங்கள். ஆப்பிள் பழம் நமக்கு அவசியம்னா, ஆப்பிள் ஐபோன்ங்கிறது விருப்பம். அவசியமானவை மட்டுமே போதும்னு வாழ்ந்தா, நாம இவ்வளவு உழைக்க வேண்டியதே இருக்காது. ஆனால், நாம் வாழ்க்கை முழுக்க ஓடுவது விருப்பங்களின் பின்னால்தான். நம்முடைய விருப்பங்களைத் தீர்மானிக்கிறது நாம் இல்லைங்கிறதுதான் பிரச்னையே!’’ அமர்நாத் ஒவ்வொரு சொல்லாகச் சொல்லச் சொல்ல, அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தபடி அமர்ந்திருந்தேன்.

அமர்நாத் சண்டிகரைச் சேர்ந்தவர். புனேயில் நடந்த ஒரு பயிற்சிப்பட்டறையில் உரையாடுவதற்கென வந்திருந்தார். எல்லோருமே கோட் சூட்டோடு வந்திருந்த அந்த நிகழ்விற்கு, அவர் மிக எளிமையான பழைய உடைகளில் வந்திருந்தார். பரட்டைத்தலையும், நீண்ட தாடியுமாக யோகியைப்போலக் காட்சியளித்தார்.

அமர்நாத், சில ஆண்டுகளுக்கு முன்பு வணிக சேவைகள் வழங்கும் ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலைசெய்துகொண்டிருந்தவர். பஞ்சாப்பின் மிகச்சிறிய கிராமம் ஒன்றில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த முதல் தலைமுறை பட்டதாரி. படிப்படியாக முன்னேறி இன்னும் சில ஆண்டுகளில் ­பணியாற்றிய நிறுவனத்திற்கே சி.இ.ஓ. ஆகக்கூடிய வாய்ப்பிருந்தது. அந்த நிலையில்தான்,  தன்னுடைய வேலையிலிருந்து விலகினார். தன் கிராமத்திற்குச் சென்று இயற்கை விவசாயம் பார்க்க ஆரம்பித்தார். விவசாயம் செய்வதோடு இயற்கை விவசாயம் பயிற்றுவிப்பது, விழிப்புஉணர்வு உண்டாக்குவது, குழந்தைகளுக்குப் பாடங்கள் சொல்லித்தருவது, அவர்களுடைய மேல்படிப்புக்கு வழிகாட்டுவது என இன்னும் பல வேலைகள் செய்துகொண்டிருந்தார். எதைக்கேட்டாலும் அந்தக்  கேள்வியை நன்றாக உள்வாங்கிக்கொண்டு அதைச் செறித்து சிந்தித்துப் பொறுமையாகப் பதில்சொன்னவிதம் மிகவும் பிடித்திருந்தது.

சொல் அல்ல செயல் - 14

‘`இப்ப இதெல்லாம் ஒரு ஃபேஷன் மாதிரி ஆகிடுச்சு இல்லையா பிரதர்... ஐ.டி கம்பெனியில ராப்பகலா வேலைபார்த்து லட்சக்கணக்குல சம்பாதிக்கிறது, அப்புறம் பிரஷர் தாங்கமுடியாட்டி எல்லாத்தையும் விட்டுட்டு விவசாயம் பார்க்க ஊருக்குப் போயிடுறது. ரத்ததானம் பண்ற மாதிரி, புல்லட்ல ஊர் சுத்துற மாதிரி, இயற்கை விவசாயமும் ஃபேஷன் ஆகிடுச்சுல்ல...’’ குதர்க்கமாக அவருடனான உரையாடலைத் தொடங்கினேன். என்னுடைய சொற்கள் அவரைக் காயப்படுத்தக்கூடியவை, கேலிக்குரியவை, எள்ளல் தொனியில் கேட்கப்பட்டவை என்பதை இப்போது உணர்கிறேன். ஆனால், அமர்நாத் என்னுடைய சொற்களை அப்போதுதான் பிறந்த குழந்தை ஒன்றைக் கைகளில் ஏந்திக்கொள்வதுபோல ஏற்றுக்கொண்டார். அதை உச்சிமுகர்ந்து கொஞ்சுவதுபோல பதில் அளித்தார்.
 
‘`உண்மைதான் பிரதர். உங்க கணிப்பு ரொம்பச் சரி. நானும்கூட அப்படித்தான் இதற்குள் வந்தேன். விவசாயத்தை நோக்கித்  திரும்பினேன். ஆனால், விவசாயம் பார்க்கத் தொடங்கியபிறகுதான், வாழ்க்கை புரிந்தது’’ என்றார்.

‘`ஞானம் கிடைச்சிடுச்சா?’’ மீண்டும் கேலியான கேள்வியையே கேட்டேன்.

‘`அதை ஞானம்னு சொல்ல முடியாது. ஆனால், அது உண்மை. நாம் குழந்தைகளாக இருக்கும்போது வாழ்க்கை இவ்வளவு கடினமாக இருப்பதில்லை. அது மகிழ்ச்சியும் துள்ளலும் நிறைந்த உலகமாகவே இருக்கிறது. ஆனால், வளர வளர நம் வாழ்வு ஏன்  இவ்வளவு கடினமாக மாறுகிறதுன்னு யோசிச்சிருக்கீங்களா?’’ என்றார்.

``வாழ்க்கைல ஜெயிக்கணும்னா, அதுக்கு கஷ்டப்பட்டுத்தானே ஆகணும், குழந்தையா இருக்கும்போது நமக்காக உழைக்கப் பெற்றோர் இருப்பாங்க. வளர்ந்தபிறகு நாம்தானே நம்மைப் பார்த்துக்கணும்’’ என்றேன்.

``மகிழ்ச்சியா வாழறதுக்கும் ஜெயிக்கிறதுக்கும் என்ன தொடர்புன்னு யோசிச்சு இருக்கீங்களா? இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. ஆனால், சாகிறவரை அதை நம்புறோம். இங்கே பிறக்கிற ஒவ்வொரு குழந்தைக்கும் வெற்றியைத் தேடி ஓடவே கற்றுக்கொடுக்கிறோம். சுய முன்னேற்ற நூல்கள் அதைத்தான் கற்றுக்கொடுக்குது.நம் பிள்ளைகளுக்கும் அதையே போதிக்கிறோம். வெற்றி ஒன்றுதான் வாழ்வை மகிழ்ச்சியானதாக மாற்றும் எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுக்கும்போதே, தோல்வி நம்மைக் காயப்படுத்தும், வருத்தமுறச் செய்யும், நோகடிக்கும் என்பதும் தானாகவே உருவாகிவிடுகிறது. தோல்விகள் நம்மைக் காயப்படுத்த ஆரம்பிக்கிற இடம் அதுதான்.

ஆனால், நாம் விரட்டுவது வெற்றியை அல்ல என்பதை உணர்ந்திருக்கிறோமா? அவசியங்களைவிட விருப்பங்கள்தான் உயர்ந்தவை என்றே நினைக்கிறோம். இத்தகைய விருப்பங்களை அடையறதைத்தான் வெற்றியாகக் கருதுகிறோம். அதனால்தான், பள்ளியில் அவசியமான கல்வி கிடைத்தாலும், மதிப்பெண்களை வெற்றியாகக் கருதுகிறோம். வளரும்போது அந்த வெற்றி செல்போனாக, பைக்காக, ஜீன்ஸ் பேன்ட்டாக மாறுகிறது. குடும்ப உறவுகளுக்குள் நுழையும்போது அது புதிய வீடாக, நிலமாக, எல்.சி.டி. டி.வி-யாக, காராக,  உயிரற்ற ஜடப்பொருள்களாக மாறுகிறது... வயது ஆக ஆகப் பொருள்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. பொருள்களை வாங்குவதாலேயே மகிழ்ச்சி அடைந்துவிட்டதாக உணர்கிறோம். பொருள்கள் அல்ல வாழ்க்கை என்பதை  உணரும்போது நமக்கு  வயதாகிவிடுகிறது.

இங்கே பொருள்களை வாங்கினால்தான் மகிழ்ச்சி கிடைக்கும், அதுதான் வெற்றி என்று தொடர்ந்து விளம்பரங்கள் மூலமாக ஊடகங்கள்  சொல்லிக்கொடுக்கின்றன. குறிப்பிட்ட சோப்புப்பொடி போட்டுத் துவைத்த துணியை அணிந்தால்தான், வாசனை திரவத்தை தெளித்துக்கொண்டால்தான் வெற்றி கிடைக்கும் என்பது எவ்வளவு அபத்தம்.

அப்போ வெற்றி என்பது இப்படி வாங்கிக்குவிக்கும் வெறும் பொருள்களில்தான் இருக்கிறதா? இப்படிப்பட்ட வெற்றியால் என்ன மாதிரியான மகிழ்ச்சி நமக்குக் கிடைக்கும்?’’ அமர்நாத் பேசுவது புரிவதுபோலவும் இருந்தது, புரியாதது போலவும் இருந்தது.

என் கையிலிருந்த ஐபோனை வாங்கிப்பார்த்தார். அதன் விலையைக் கேட்டார். அது ஐபோன்கள் அறிமுகமாகி இருந்த நேரம். லோன் போட்டு வாங்கி வைத்திருந்தேன். அதன் பிரமாண்டமான விலையைச் சொன்னேன். என்னுடைய சம்பளத்தையும் கேட்டார். ‘`இந்த ஐபோனை வாங்கவும் பயன்படுத்தவும் நீங்கள் ஆறு மாதங்களுக்கு உழைக்க வேண்டியிருக்கும். 1,440 மணி நேர உழைப்பு. இதையே வேறு மாதிரி சொன்னால், உங்களுடைய ஆறு மாத ஓய்வு காலம்தான் இந்த ஐபோன். சரியா?’’ என்றார். நான் தலையை ஆட்டினேன்.

‘`நாம் வசிப்பதற்கான ஒரு வீட்டைக் கட்டுவதற்காக முப்பது ஆண்டுகள் உழைக்கிறோம். நம் வாழ்க்கையின் முக்கியமான இளமை ததும்பும் உடலாற்றல் முழுவதையும் ஒரு வீட்டுக்காக, முக்கியமான முப்பது ஆண்டுகளின் 86,400 மணி நேரத்தை விற்கிறோம். சொகுசாகப் பயணம் செய்வதற்கான காருக்காக ஐந்து ஆண்டுகள் உழைக்கிறோம். பிராண்டட் உடை ஒன்றை வாங்க ஒரு வாரம் உழைக்கிறோம்.

ஆனால், உலகத்தில் மனிதனைத் தவிர வேறெந்த ஜீவராசியும் தன் வசிப்பிடத்திற்காக, தன் உடைக்காக, தன் உணவுக்காக, தன் ஜீவிதத்திற்காக இவ்வளவு உழைப்பதில்லை. என்றால் நாம் உழைப்பது நம்முடைய அவசியங்களுக்காகவா? விருப்பங்களுக்காகவா?

ஏன் மனிதர்கள் மட்டும் இவ்வளவு உழைக்கிறார்கள்? இவ்வளவு உழைத்தும் ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அதிகமாக உழைத்தால், அதிகமாக மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றால், மிக அதிகமாக உழைக்கிற ஏழைமக்கள் ஏன் எப்போதும் ஏழ்மையிலேயே இருக்க வேண்டியதாக இருக்கிறது?’’ அமர்நாத்தின் உரையாடலை உள்வாங்கிக்கொள்ளவே மிகவும் சிரமமாக இருந்தது.

அமர்நாத் அவருடைய கிராமத்தில் தன் குடும்பத்தினரோடு ஒரு சிறிய வீட்டில் வசிக்கிறார். தன் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் படிக்க வைக்கிறார். உடல் நலமில்லாதபோது அவர் அரசு மருத்துவமனையைப் பயன்படுத்துகிறார். சைக்கிளில் சுற்றுகிறார். சாதாரண உடைகளை அணிந்துகொள்கிறார். தனக்குத் தேவையான உணவை அவரே விளைவித்துக்கொள்கிறவராக இருக்கிறார். தனக்கு எஞ்சியதை விற்கிறார். அதில் கிடைக்கிற தொகையில் ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு உதவுகிறார். தொலைக்காட்சி பயன்படுத்துவதில்லை. சாதாரண செல்போன்தான் வைத்திருக்கிறார். அவருடைய குடும்பத்தினரோடு எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார். ஆனால், மகிழ்ச்சியாக இருக்கிறார்!

``என்னுடைய நேரத்தை நான் என் விருப்பப்படி பயன்படுத்துகிறேன். அதை என்னுடைய மகிழ்ச்சிக்காக யாரிடமும் விற்பது இல்லை. மகிழ்ச்சியாக இருப்பது என்பது பொருள்களில் இல்லை. குடும்பத்தினரோடு, நண்பர்களோடு அதிக நேரம் செலவழிப்பதில்தான் இருக்கிறது என்பதை இந்த நாள்களில் நான் கற்றுக்கொண்டேன்; கூடவே குறைவான பொருள்களோடு வாழ்வதையும் பயிற்சி செய்கிறேன். என் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கிறேன்’’ என்றார். உண்மையான சுதந்திரம் என்பது நம் நேரத்தை யாருக்காகச் செலவழிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறதா?

அதற்குப்பிறகு வந்த சில நாள்களுக்கு ஐபோனைப் பார்க்கும்போதெல்லாம் அது ஐபோனாகத் தெரியவே இல்லை, நான் வாங்கி வைத்திருக்கிற ஒவ்வொரு பொருள்களிலும் விருப்பத்திற்காக வாங்கியவை என்ன, அவசியத்திற்காக வாங்கியவை என்னவென்று தரம் பிரிக்க ஆரம்பித்தேன். அவசியமானவைக் குறைவாகவும், புற உந்துதல்களால் உருவான விருப்பங்களால் வாங்கிக்குவித்தவை அதிகமாகவும் இருப்பதை அறிந்தேன்.

எளிமையாக வாழவேண்டிய வாழ்வை மிகமிகக் கடினமாகக் கஷ்டப்பட்டு வாழ்ந்துகொண்டிருப்பதைப்போல இருந்தது. அவசியமற்ற பொருள்களை வாங்குவதற்காக ஏராளமாக உழைப்பதை உணரமுடிந்தது. ஆனால், நாள்பட அந்த உணர்வு மங்கிப்போய் மீண்டும் நிறையப் பொருள்களை வாங்கவே ஆரம்பித்தேன். அதுதான் நம்மிடம் இருக்கிற சிக்கலே..!

எல்லோராலும் அமர்நாத்தைப்போல நினைத்தவுடன் எல்லாவற்றையும் துறந்துவிட்டு ஆசைகளற்ற ஆன்மிகவாதியாக மாறி வேறொரு வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியாது. விவசாயத்திற்கும் சென்றுவிட முடியாது.

சொல் அல்ல செயல் - 14

நம் விருப்பங்களை நம்மால் கட்டுப்படுத்திக்கொள்ள முடிந்தாலுமேகூட, நாம் பெரும்பாலும் செக்குமாடுபோல உழைப்பதெல்லாம் நம்மைச் சார்ந்து வாழ்கிறவர்களுக்காகத்தான். நம் பெற்றோர் நமக்காக உழைத்தனர், நாம் நம் பிள்ளைகளின் விருப்பங்களுக்காக உழைப்போம்...  பிள்ளைகள் அவர்களுடைய பிள்ளைகளுக்காக என இது நீளும்... அதனால்தான், அவர்களுக்காகவாவது பொருள்களுக்குப் பின்னால் ஓடவேண்டியிருக்கிறது.

ஆனால், நம்மால் பொருள்களுக்குப் பின்னால் ஓடுவதைக் கட்டுப்படுத்த முடியும். வசதிகளை நோக்கி ஓடுகிற வேகத்தைக் குறைக்க இயலும். நம்முடைய அடுத்த தலைமுறைக்குப் பொருள்கள் மீதான ஈர்ப்பு உருவாகாமல் தடுத்து நிறுத்த முடியும். எளிமையான வாழ்க்கையை நோக்கி மெதுமெதுவாக நாமும் நகர்ந்து அவர்களைக் கொண்டு சேர்க்கலாம். ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னால் எது அவசியம்? எது விருப்பம்? என்பதைப் பொறுமையாக ஆலோசித்துத் தீர்மானிக்க முடியும். ஆசைகளற்ற புத்தனாக மாற முடியாது என்றாலும், கட்டுப்படுத்தப்பட்ட விருப்பங்களோடு வாழ்வது எல்லோருக்கும் சாத்தியம்தான்.

ஆனால்,இது எல்லாமே நமக்குத் தெரிந்ததுதான். இருந்தும், ஏன் நம்மால் எளிமையான வாழ்வை நோக்கி நகர முடிவதில்லை. ஏன் மீண்டும் மீண்டும் விருப்பங்களுக்குள் விழுந்து அதீத உழைப்பின் சுழலில் சிக்கிக்கொள்கிறோம். ஏன் நாம் எப்போதும் பொருள்கள் மீதான அதீத வேட்கையோடு இருக்கிறோம்?

சில நாள்களுக்கு முன்பு குழந்தைகளோடு பேசிக்கொண்டிருந்தேன். நாம் கற்றதை எல்லாம் வாசலிலேயே விட்டுவிட்டு வந்தால்தான், குழந்தைகளின் உலகத்திற்குள் நுழைய முடியும். கொஞ்சம் நம்முடைய அறிவுஜீவித்தனத்தை சின்னதாக வெளிப்படுத்தினாலும், அவர்கள் விலகி ஓடுவார்கள். அவர்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பற்றி ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தேன். ‘`ஆரோக்கியமாக இருக்கணும்னா, என்ன சாப்பிடணும்?, என்னென்ன செய்யணும்?’’ என ஒவ்வொரு குழந்தையாகக் கேட்க ஆரம்பித்தேன்.

ஒரு சிலரைத் தவிர எல்லா குழந்தைகளும் சத்துபானங்களின் பிராண்ட்களின் பெயர்களாகச் சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்களிடம் காய்கறிகள், பழங்கள் பற்றி எல்லாம் கேட்க ஆரம்பித்தேன். அவர்கள் தெளிவாக இருந்தார்கள்.

``கோதுமையில், அரிசியில், காய்கறி, பழங்களில் இல்லாத விட்டமின்ஸ், மினரல்ஸ், கார்போஹைட்ரேட்ஸ், சி,டி,ஈ,எஃப் விட்டமின்கள் எல்லாம் இதில்தான் இருக்கு, டி.வி-ல டாக்டர்ஸ் சொல்றாங்களே’’ என ஒரு பிராண்டைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். பற்கள் பாதுகாப்பா இருக்கணும்னா குறிப்பிட்ட நிறுவனத்தின் பேஸ்ட்,  எலும்புகள் ஆரோக்கியமா இருக்கணும்னா இது, கண் பார்வைக்கு இது, முடி வளர இது என அவர்களே குட்டி டாக்டர்கள்போல விளம்பரப் பொருள்களால் ப்ரிஸ்கிரிப்ஷன் கொடுக்கத் தொடங்கினார்கள்.

குழந்தைகள் விதவிதமான வேதியியல் பெயர்களைக் கஷ்டப்பட்டு உச்சரித்தது அழகாக இருந்தது. இது அனைத்தையும் அவர்கள் தொலைக்காட்சியைப் பார்த்துக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

``நோயில்லாமல் வாழ்றதுன்னா என்ன?’’ என்று கேட்டேன். உடனே ஒரு குழந்தை எழுந்து, ஒரு சோப்பின் பெயரைச் சொல்லி அதைப் போட்டுக் குளிக்கணும் என்றது. இன்னொரு குழந்தை அந்த சோப்பைவிட இன்னொரு சோப்பு சிறந்தது என்றது. இன்னொரு குழந்தை எழுந்து, ‘`சன்ஃபிளவர் ஆயில்ல சமைக்கணும்’’ என்றபோது பையன்கள் எல்லோரும் சிரித்தனர். ``ஒரு குழந்தை ...... டீ குடிக்கணும்’’ என்றது. ஆரோக்யமாக வாழ்வதைக் குறித்துப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் கற்றுக்கொடுக்க முடியாததை, இன்று தொலைக்காட்சிகள் நிறையக் கற்றுக்கொடுக்கின்றன.

குழந்தைகள்மீது  தொடர்ச்சியாக  விதவிதமான உணவுப்பொருள்கள் மட்டும் அல்ல, டூத் பேஸ்ட், ஷாம்பூவில் தொடங்கி கார் வரை திணிக்கப்படுகிறது. வேட்டை விலங்குகள் குட்டிகளை இலக்காகக் கொள்வதைப்போல... இங்கே உருவாக்கப்படுகிற விளம்பரங்களில் பெரும்பாலானவைக் குறிவைப்பது குழந்தைகளைத்தான்.

இப்போதெல்லாம் பள்ளிகளிலேயே நிறுவனங்கள் நுழைந்துவிட்டன. வகுப்பறைகளிலேயே தங்களுடைய பொருள்களுக்கு மார்க்கெட்டிங் செய்யத் தொடங்கிவிட்டார்கள். ஆசிரியர்களே விற்பனைப் பிரதிநிதிகளைப்போல `இதை யூஸ் பண்ணுங்க... இதை எல்லாரும் கட்டாயம் வாங்கணும்’ என உத்தரவு போடத்தொடங்கியிருக்கிறார்கள். பெற்றோர்களை கட்டாயப்படுத்துகிறார்கள்.

குழந்தைகள் மட்டும் அல்ல, நாமும்கூட அப்படித்தானே இருக்கிறோம். இல்லையென்றால், தண்ணீரிலேயே சத்தான தண்ணீர் இது, இமயமலையில் இருந்து தருவிக்கப்பட்டது, இதில் விட்டமின்ஸ், அயன், மெக்னீசியம் எல்லாம் இருக்கிறது எனச் சொல்லி பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்றால், அதையும் வாங்கிக் குடிக்கிறவர்களாக இருப்போமா?

ஆரோக்கியம் வேண்டுமா இதை வாங்கு, வெற்றி வேண்டுமா இதை வாங்கு, மகிழ்ச்சி வேண்டுமா இதை வாங்கு எனக் கூவிக்கூவி விற்கப்படும் பொருள்களில் இவை எதுவுமே இல்லை என்பதை எப்போது தெரிந்துகொள்ளப் போகிறோம்? எளிமையாக வாழ்கிறவன் கிறுக்கனாகவும், பொருள்களுக்காக உழைக்கி றவனை அறிவாளியாகவும் மாற்றுவது இந்தத் திணிக்கப்பட்ட விளம்பரங்களால் உருவாகும் கருத்தியல்களால்தான்.

நாம் என்ன சாப்பிட வேண்டும், நாம் என்ன உடை உடுத்தவேண்டும், நாம் எப்படிப் பயணிக்கவேண்டும்,  நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை எல்லாம் முடிவு செய்கிற உரிமை நிச்சயமாக நம்மிடம் இல்லை. அவை வணிகமயமாகிவிட்டன.  அவை  விளம்பரங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதை நாம் உணர்ந்திருக்கிறோமா? விருப்பங்களை விளம்பரங்கள் கட்டுப்படுத்தும்போது, அந்த விருப்பங்களைச் சமநிலைக்கு இழுத்துவர வேண்டாமா?

எப்போது டென்ஷன் ஆகிவிட்டாலும், சென்னையின் பிரபல மால்களுக்குக் கிளம்பிவிடுவார் கல்பனா. அங்கே சென்று தன் கணவருடைய கிரெடிட் கார்டில் இஷ்டம்போல ஷாப்பிங் செய்யத் தொடங்கிவிடுவார். ஷாப்பிங் முடிந்துவரும்போது அவருடைய டென்ஷன் எல்லாம் தீர்ந்து இயல்புநிலைக்குத் திரும்பிவிடுவார்.

கிரெடிட் கார்ட் பில் பல ஆயிரங்களைத் தொட்டபோதுதான் கணவருக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. ஆனாலும், கல்பனாவின் ஷாப்பிங் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஷாப்பிங் செய்யாமல் இருந்தால், டென்ஷனாக ஆரம்பித்திருக்கிறார். எல்லாமே மூளையின் வேதிப்பொருள்கள் செய்யும் மாயவேலை. பொருள்கள் வாங்குவது நம் மூளையில் சிறிய மகிழ்ச்சியை, ஒரு நிம்மதியை உருவாக்குகிறது. மேலும் மேலும் பொருள்களை வாங்க வாங்க அது அதிகமாகிறது. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களின் மூலதனமே ஷாப்பிங்கிற்கு அடிமையாக இருக்கிற நம் மூளைதான். அளவுக்கதிகமாக அலுவலகத்தில் உழைப்பது, அந்த அழுத்தத்திலிருந்து விடுபட ஆன்லைன் ஷாப்பிங் செய்வது! அந்தக்கடனைக்கட்ட மேலும் உழைப்பது!

ஒரு வாரத்தில் நாம் சராசரியாக ஆறு நாள்கள், எட்டுமணி நேரம் உழைக்கிறோம். அலுவலகத்திற்குச் சென்றுவர என இரண்டு மணி நேரம்  சேர்த்தால், வாரத்திற்கு 60 மணி நேரம். தினமும் எட்டுமணி நேரம் தூங்குகிறோம். வெறும் ஆறுமணி நேரம்தான் நம்மிடம் எஞ்சி இருக்கும் காலம். ஆனால், அந்த ஆறுமணி நேரத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா? நம்மிடம் இருக்கிற பொருள்களோடு நிறைவாக வாழ்கிறோமா? அந்த ஆறுமணி நேரத்தில் டி.வி-யும், மொபைலுமே நான்குமணி நேரத்தைத் தின்றுவிடுகிறது. இதுபோக எந்நேரமும் நமக்கு எதிர்காலத்திற்கான பொருள்களைப் பற்றிய திட்டங்களும், இறந்தகாலத்தில் தவறவிட்ட பொருள்களைப் பற்றிய வருத்தங்களுமாகத்தானே கழிகிறது, ஏன்? பொருள்களை வாங்கி வாங்கிச் சேர்க்கிறோம். அதற்காக முடிந்தவரை நம்முடைய நேரத்தை விற்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், அந்தப் பொருள்களை யாருக்காக   வாங்குகிறோமோ, அவர்களோடு நேரம் செலவழிக்கிறோமா? எப்போதும் பிஸியாகவே இருக்கிறோம்? ஆனால், யாருக்காக எதற்காக?

எங்காவது சுற்றுலா செல்லும்போது, பயணிக்கும்போது நமக்கு ஒரு சிறிய ஹோட்டல் அறையோ, மலைப்பகுதியில் ஒரு சிறிய டென்ட்டோகூட நாள்கணக்கில் மகிழ்ச்சியைத் தந்துவிடுகிறதே எப்படி? அதில்தான் இருக்கிறது எளிய வாழ்வுக்கான திறவுகோல்.

உலகெங்கும் குறைவான பொருள்களோடு வாழ்வதைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. மிகச் சிறிய வீடுகளில் வசிப்பது, மிகக் குறைவான எண்ணிக்கையில் பொருள்களோடு இயங்குவது, மிகக் குறைவான செலவில் வாழ்வது என மினிமலிசத்தை நோக்கிப் பலரும் நகர்கிறார்கள். இதற்குக் காரணம் நம் மீது தொடர்ச்சியாக வன்முறையாகத் திணிக்கப்படும் பொருள்கள் மீதான வெறுப்பு! உங்களுக்குத் தேவையோ இல்லையோ, நீங்கள் திரும்புகிற இடமெல்லாம் விளம்பரங்கள் நிறைந்து இருக்கின்றன.

உன் பயணம் இப்படித்தான் இருக்க வேண்டும், நீ இதைத்தான் சாப்பிட வேண்டும், நீ இங்குதான் வசிக்க வேண்டும், உன்னுடைய பொழுதுபோக்காக இதுதான் இருக்க வேண்டும்... இதைப் பின்தொடரவில்லையென்றால் சமூகம் உன்னை மதிக்காது! உன்னால் சமூகத்தின் போக்கில் இருந்து துண்டிக்கப்பட்டு, தோல்வியுற்றவனாக கருதப்படுவாய் என்று எப்போதும் மறைமுகமாக மிரட்டப்படுகிறோம்!

``எங்கெல்லாம் அதிக ஓய்வு நேரம் இருக்கிறதோ, அங்குதான் புதிய கலைகள் வளரும். அங்குதான் அரசியல் குறித்து விவாதிக்கப்படும். அறிவியக்கம் முன்னெடுக்கப்படும். அங்குதான் அதிகாரத்திற்கு எதிரான குரல்கள் ஒலிக்கும். ஆனால், இன்றைக்கு நம்மிடம் குறைந்து வருவது இந்த ஓய்வுநேரம்தான். ஏன்? எதிர்ப்புகளற்ற சமூகத்தையே எல்லா அதிகார மையங்களும் விரும்புகின்றன!’’ என்பார் துப்புரவுத் தொழிலாளராக இருக்கிற நண்பர் மணி.

உண்மையில் நம்மைச்சுற்றி எல்லாமே மிகக் குறைவான செலவில் கிடைக்கிறது. ஆனால், அதைத் தேடிக்கண்டுபிடிக்கவும் அலையவும் நாம் தயாராக இருப்பதில்லை. நம்மிடமே நல்ல பொருள்கள் இருக்கும். அதை மறுசுழற்சி செய்ய முடியும். குறைந்த காலகட்டத்திற்குத்தான் சில பொருள்கள் தேவைப்படும். அதை இரவலாக வாங்க முடியும். ஒரு பொருள் பழுதடைந்தால், அதைப் பழுதுநீக்கிப் பயன்படுத்தலாம். செகண்ட் ஹாண்டில் வாங்க முயற்சி செய்யலாம். அந்தப் பொருள் இல்லாமல் எப்படி வாழ்வது என முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் ஏன் நாம் அதைச்செய்வதில்லை? எப்போதும் புதிய பொருட்களை தேடி ஓடுகிறோம்?

இன்று நாம் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நுழைந்து எதையுமே வாங்காமல் வெளியே வருவதை மரியாதைக்குறைவாக நினைக்கிறோம். அதனால்தான், வெளிநாடுகளில் வால்மார்ட் மாதிரியான பெரிய கடைகளுக்குள் நுழைந்து எதையுமே வாங்காமல் வருவதைப் பயிற்சி செய்கிறார்கள். ஏனெனில், மதுப்பழக்கம், புகைப்பழக்கம்போல பொருள்கள் வாங்குகிற பழக்கமும் மிகவும் ஆபத்தானது.

- கேள்வி கேட்கலாம்...