
ஆர்.வைதேகி
டாக்டர் சீமா ராவ். இந்தியாவின் ‘வொண்டர் உமன்’. ஒரே நேரத்தில் பத்து பேருடன் மோதி ஜெயிக்கவும், குறி தவறாமல் சுட்டு வீழ்த்தவும், அநாயாசமாக ஆயுதங்களைக் கையாளவும் முடிந்த கில்லி, சீமா ராவ், இந்தியாவின் ஒரே பெண் கமாண்டோ பயிற்சியாளர்.

7-வது டிகிரி பிளாக் பெல்ட் வாங்கியவர், ஃபயர் ஃபைட்டர், 15 ஆயிரத்துக்கும் மேலான கமாண்டோ படை வீரர்களுக்குப் பயிற்சியளித்தவர்... இவையெல்லாம் சீமா ராவின் வீரம் செறிந்த பக்கங்கள்.
உலக அமைதிக்கான விருது பெற்றவர், மிஸ் இந்தியா வேர்ல்ட் ஃபைனலிஸ்ட் என சீமா ராவுக்கு நேர்மாறான இன்னொரு முகமும் இருப்பது ஆச்சர்யம்.
பாதுகாப்புப் பயிற்சிகளைப் பற்றி இவர் தொகுத்துள்ள என்சைக்ளோபீடியா எஃபி.ஐ, இன்டர்போல், ஸ்வாட் ஆகிய மூன்று முக்கிய அமைப்புகளாலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ராணுவ அதிகாரிகள் உதவியுடன் பயிற்சியளிக்கும் UCCA என்கிற தன்னார்வ அமைப்பில், செயல் இயக்குநராகவும் இருக்கிறார் சீமா ராவ்.
‘`அப்பா ராமகாந்த் சினாரி ஒரு பேராசிரியர். சுதந்திரப் போராட்ட வீரரும்கூட. அவர் சொன்ன சுதந்திரப் போராட்டக் கதைகளும் அவருடைய சிறை அனுபவங்களையும் கேட்டு வளர்ந்த எனக்கு ஒரு கட்டத்துல நாட்டுக்காக உழைக்கணும்ங்கிற எண்ணம் வந்தது.
ஸ்கூல் படிக்கிறபோது நான் ரொம்ப ஒல்லியா, பார்க்கவே அப்பாவியா இருப்பேன். என்னோட பலவீனமான உடல்வாகைப் பார்த்துட்டுக் கூடப் படிச்ச பிள்ளைங்க பயங்கரமா கிண்டல் பண்ணியிருக்காங்க.
மெடிக்கல் காலேஜ்ல அடியெடுத்து வெச்சதும் என் வாழ்க்கை வசந்தமா மாறினது. அங்கேதான் என் வருங்காலக் கணவர் தீபக் ராவைச் சந்திச்சேன். என் மேல என்னைவிட அவருக்கிருந்த அக்கறையும் அன்பும் என்னை அவர் பக்கம் ஈர்த்தது. 18 வயசுலேயே ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.
அதுவரை பலவீனமான பெண்ணா என்மேல பதிஞ்சிருந்த பிம்பத்தை மாத்த நினைச்ச முதல் ஆள் அவர்தான். ஒருமுறை, கடற்கரை ஓரமா நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டே நடந்து போயிட்டிருந்தோம். அப்போ என்னை சிலர் ஈவ் டீசிங் பண்ணினாங்க. கூட அவர் இருக்கிற தைரியத்துல எப்படியும் எனக்கு ஹெல்ப் பண்ணுவார்னு நான் அவர் முகத்தைப் பார்த்துக்கிட்டு நின்னேன். ஆனா அவரோ ‘அவங்களை விடாதே... போய் அடிச்சிட்டு வா’னு சொன்னார். எனக்கு உடம்பெல்லாம் உதற ஆரம்பிச்சிடுச்சு.அவர் சொன்னதால அந்த ஈவ் டீசிங் ஆசாமிகளை விரட்டிக் கிட்டுப் போய், என்னைப் பார்த்துத் தப்பா பேசினவனை அறைஞ்சேன். போருக்குத் தயாராகிற வீரம் அந்த நிமிஷம்தான் எனக்குள்ள வந்தது.
இப்ப, 75 அடிகள் தொலைவுல நிற்கிற ஒரு மனிதரோட தலையில உள்ள ஆப்பிளைக் குறி தவறாம என்னால சுட்டுத்தள்ள முடியும். மிலிட்டரி மார்ஷியல் ஆர்ட்ஸ், இஸ்ரேலி க்ரவ் மகா, மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ்னு எல்லாத்துலேயும் நான் எக்ஸ்பெர்ட். ப்ரூஸ்லீயோட ஜீத் குனேடோவுல உலகத்துலயே சீனியர் இன்ஸ்ட்ரக்டர் நான். இப்படி எனக்கே தெரியாம எனக்குள்ள இருந்த இன்னொரு மனுஷியை வெளியில கொண்டு வந்தவர் என் கணவர் தீபக்.’’ பூ ஒன்று புயலான கதை சொல்கிற சீமா, தொடர் சவால்களைச் சந்தித்தவர்.
‘`கமாண்டோ பயிற்சியாளரோட பொறுப்புகள் என்னங்கிறதைப் பத்தின தெளிவு எனக்குத் தேவைப்பட்டது. தற்காப்புக் கலைகளோ, வீரதீர சாகசத் திறமைகளோ மட்டுமே இந்த வேலைக்கு உதவாது; வேற வேற வாழ்விடச் சூழல்களுக்கும் தட்பவெப்ப நிலைகளுக்கும் தாக்குப்பிடிக்கிற திறமை வேணும்னு புரிஞ்சுது. தண்ணீருக்கடியில தாக்குப்பிடிக்கக்கூடிய திறமையை வளர்த்துக்க பாய்மரக் கப்பல் ஓட்டவும், ஸ்கூபா டைவிங்கும் கத்துக்கிட்டேன். குளிரையும் உயர்ந்த பகுதிகளையும் சமாளிக்க மலையேற்றம் பழகினேன். உயரங்களைப் பார்த்துப் பயப்படக்கூடாதுனு பாரா ஜம்ப்பிங் கத்துக்கிட்டேன்.
திருமண வாழ்க்கையில எங்களுக்குள்ள அன்பும் காதலும் மட்டும்தான் இருந்தது. ஆனா, அதை வெச்சு ஒருவேளைகூட வாழ்க்கையை நடத்த முடியாதே... நானும் என் கணவரும் வேலைக்காக வருஷத்துல எட்டு மாசங்கள் பயணம் செய்வோம். ஊருக்குத் திரும்பும்போது கையில ஒற்றை ரூபா இருக்காது. என் தாலியை வித்திருக்கேன். சேமிப்பெல்லாம் கரைஞ்சு திவாலாகி நின்ன நாள்களும் உண்டு. எனக்குக் குழந்தைன்னா ரொம்பப் பிடிக்கும். ஆனாலும், குழந்தைக்கான நாள்கள் என் வேலைக்குத் தடையாயிடக் கூடாதேங் கிறதாலே தாய்மையைத் தியாகம் பண்ணத் துணிஞ்சேன்... வாழ்க்கைங்கிறது ரோஜாக்களால் போடப்பட்ட பாதை இல்லைங்கிற யதார்த்தம் புரிஞ்சுது’’ வீராங்கனைக்கு வார்த்தைகள் வர மறுக்கின்றன.
‘`எங்களோட வேலையில விபத்துகளைச் சந்திக்கிறது தினசரி வாடிக்கையானது. ஒருமுறை ஜம்மு-காஷ்மீர் பகுதியில தீவிரவாதிகளோட தாக்குதல்ல நூலிழையில உயிர் பிழைச்சேன். அடுத்து ஒரு தாக்குதல்ல என் முதுகெலும்பு நொறுங்கி ஆறு மாசம் படுத்த படுக்கையா இருந்திருக்கேன். இன்னொரு முறை மண்டையில அடிபட்டு, ஃபிராக்சரானதுல கிட்டத்தட்ட ஒரு மாசம் சுயநினைவில்லாம இருந்தேன். என் உறவினர்களைக்கூட யார்னு தெரியாத நிலை. என் கணவரைத் தவிர யாரையும் அடையாளம் தெரியலை. என் கணவர், ‘இதுக்குப் பிறகும் உனக்கு இந்த வேலை வேணுமா?’னு கேட்பார். ‘இதை விட்டுட்டா, என் வாழ்க்கையில வேற என்ன இருக்கு’னு அவர் தோள்மேல சாஞ்சு அழுவேன். எல்லாமே மறந்த நிலையிலேயும் என் வேலை மட்டும் ஞாபகத்துல இருந்தது ஆச்சர்யம். அதுதான் என்னை மரணப் படுக்கையிலேர்ந்து மீட்டெடுத்தது.’’ சாகச மனுஷியின் தினசரி வாழ்க்கையே திகில் படம் பார்ப்பதுபோல இருக்கிறது.

‘`கமாண்டோ பயிற்சியாளர் என்கிற பொறுப்பு சாதாரணமானதில்லை. காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை பயிற்சி நடக்கும். இரவுப் பயிற்சிகள் அதிகாலை நான்கு மணி வரைக்கும் போகும். ஒரு பெண் நமக்குப் பயிற்சி கொடுக்கிறாங்கிற பார்வையை எதிர்கொள்ளணும்.என்னை நான் அப்டேட்டடா வெச்சுக்கணும். என்கிட்ட பயிற்சி எடுத்துக்கிறவங்களுக்கு நான் உதாரணமா இருக்கணும். அதுக்கோர் அமானுஷ்ய ஆற்றல் வேணும். ஆயுதங்களற்ற போர்ப் பயிற்சிகள்ல ஆண் பயிற்சியாளர்கள் என்கூட வெறுங்கைகளோடு மோதுவாங்க. அதுல அடிகள் விழும், காயங்கள் படும். அங்கே நான் ஒரு பெண்ணாச்சேனு அவங்க மென்மையா நடந்துக்கணும்னெல்லாம் எதிர்பார்க்க முடியாது. தடைகளையும் தயக்கங்களையும் தாண்டிச் சாதிக்கிறபோது, சக ஆண் பயிற்சியாளர்கள்கிட்டேயிருந்து எனக்குக் கிடைக்கிற மரியாதை இருக்கே... அது அசாதாரணமானது. பயிற்சி முடிஞ்சு கிளம்பற கடைசி நாள் ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கும். நன்றியோடும் மரியாதையோடும் விடை கொடுத்துட்டுக் கிளம்புவாங்க. வீரத்துக்கும் தைரியத்துக்கும் அடையாளமான படைத்தளபதிகள்கிட்ட இருந்து ஒரு பெண்ணா எனக்குக் கிடைச்ச அந்த மரியாதையைத்தான் நான் சம்பாதிச்ச மிகப் பெரிய சொத்தா நினைக்கிறேன்’’ என்னும் சீமாராவ் 50 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
‘`வாழ்க்கை ரொம்பச் சின்னது. அது முடியறதுக்குள்ள உங்களால முடியற விஷயங்களை மட்டுமல்ல, முடியாதுனு பயந்த விஷயங்களையும் ட்ரை பண்ணிப் பார்த்துடுங்க...’’ அரை சத வாழ்க்கையிலும் எனர்ஜி குறையாததன் சீக்ரெட் சொல்லி முடிக்கிறார் சீமா.