பேட்டி - கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

நிரந்தரமான ‘நீர்த்திரை’ கலைஞன்!

Bala Singh
பிரீமியம் ஸ்டோரி
News
Bala Singh

சமீபத்தில் மறைந்த பாலாசிங் தமிழ் சினிமாவில் ‘அவதாரம்’ படத்தின் மூலமாகத்தான் சினிமாவுக்குள் வந்தார்.

வரை அறிமுகப்படுத்திய நாசர், பாலாசிங் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

“நாடகத்திலும் சினிமாவிலும் பாலா எனக்கு சீனியர். பாதல் சர்க்கார் சென்னையில் நடிப்பு பயிற்சிப் பட்டறையை நடத்தியபோது அவரிடம் நடிப்பு கற்ற வித்தகர் பாலாசிங். நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே மேடை நாடகங்களில் பிரபலமான நடிகராகத் திகழ்ந்தார். சென்னை நாரத கான சபாவில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘ஒளரங்கசீப்’ நாடகத்தில் நானும் அவரும் இணைந்து நடித்தோம். தனியாக அறை எடுத்து தங்கும் அளவுக்கு அவருக்குப் பொருளாதார வசதி இல்லை. அதனால் எழுத்தாளர் ஞாநி வீட்டிலும் டாக்டர் ருத்ரன் வீட்டிலும் தங்கியிருந்தார்.

மலையாள இயக்குநர் ப்ரியன் மேனன் இயக்கிய ‘மலை முகலிலே தெய்வம்’ படத்தில் கதாநாயனாக அறிமுகமானவர் பாலா.

நாசர்
நாசர்

பிறகு, யூகிசேது இயக்கிய ‘கவிதை பாட நேரமில்லை’ திரைப்படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக வேலைபார்த்தார். ஒருகட்டத்தில் ‘சினிமாவும் வேண்டாம், சென்னையும் வேண்டாம்’ என்று முடிவெடுத்து சொந்த ஊரான நாகர்கோவில் சென்று அங்கே இருந்த உறவினர் வீட்டுப் பெண்ணையே கல்யாணம் செய்துகொண்டார். ‘அவதாரம்’ திரைக்கதையில் பாசி கதாபாத்திரத்தை எழுதியபோது சட்டென்று பாலாவின் ஞாபகம் வந்தது. ஒரு காரை எடுத்துக்கொண்டு நாகர்கோவில் புறப்பட்டேன். பத்து மணிநேர பயணத்துக்குப் பிறகு, ஒருவழியாக நாகர்கோவிலில் இருந்த பாலா வீட்டைக் கண்டுபிடித்து நடிக்க வைத்தேன்.

சினிமாவில் பிரபல நடிகராக வலம்வந்தபோதும் பாலாவின் பொருளாதார நிலை பெரிய அளவுக்கு உயரவில்லை. சென்னை விருகம்பாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்தபடி சினிமாவில் நடித்துவந்தார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் தன் மகள் திருமணத்தை சிறப்பாக நடத்தினார்.

பாலாசிங்
பாலாசிங்

நான் குடும்பத்தோடு அங்கே சென்று கலந்துகொண்டதில் பாலாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. என் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த தரண், ‘திரைப்படக் கல்லூரியில் படித்த சில நண்பர்கள், சினிமாவில் நடித்து முடித்துவிட்டு இப்போது என்ன செய்கிறார்கள்’ என்பதை மையமாக வைத்து ‘ நீர்த்திரை’ படத்தை உருவாக்கியிருக்கிறார். ‘நீர்த்திரை’யில் பாலா பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுதான் பாலா கடைசியாக நடித்திருக்கும் திரைப்படம். நான், பாலா, தலைவாசல் விஜய், ரோகிணி நடித்திருக்கும் இந்தப் படத்தில் நான் சினிமாவில் நடித்த பிறகு கண்ணாடிக் கடை வைத்திருப்பவராகவும், பாலா சினிமாவைவிட்டு விலகி நாகர்கோவிலில் வசிப்பது போலவும் காட்சியை அமைத்திருக்கிறார் தரண். உண்மையில் ‘நீர்த்திரை’ படத்தில் நடித்துள்ள பாலாவின் நடிப்பை வெள்ளித்திரையில் பார்க்கும்போது கண்களைக் கண்ணீர்த்திரை மறைக்கும்.’’