பேட்டி - கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

இது பாசக்கார கூட்டம்..!

இது பாசக்கார கூட்டம்..!
பிரீமியம் ஸ்டோரி
News
இது பாசக்கார கூட்டம்..!

‘கே.டி (எ) கருப்புதுரை’ படம்.

``நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஃபீல் குட் படம்” - ‘கே.டி (எ) கருப்புதுரை’ படம் பார்த்த அனைவரிடமிருந்தும் வந்த ஒரு வரி விமர்சனம் இது. இந்த எதார்த்த சினிமாவைக் கொடுத்த ‘கே.டி (எ) கருப்புதுரை’ டீமைச் சந்தித்தேன்.

“இந்தளவுக்கு மக்கள்கிட்ட இருந்து வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கலை. முதல்முறையா படத்தை லண்டன்ல நடந்த திரைப்பட விழாவுலதான் திரையிட்டோம். அங்கே கிடைச்ச வரவேற்புதான் எங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. பெரிய நடிகர்கள் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வர்றாங்க. ஆனா, இந்த மாதிரி படங்களைப் பார்க்க மக்களை தியேட்டருக்கு கூட்டிட்டு வர்றது சிரமமா இருக்கு. இது நல்ல படம்னு முதல்ல அவங்களுக்கு தெரியப்படுத்தணும். அப்போதான் மக்கள் படம் பார்ப்பாங்க. அதனால திரைப்பட விழாக்களுக்கு அனுப்பலாம்னு தோணுச்சு. 11 திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினோம். அதுல ஆறு விழாக்கள்ல படத்துக்கு விருது கிடைச்சது. மும்பையில நடந்த ஜாக்ரான் திரைப்பட விழாவுல சிறந்த நடிகருக்கான கேட்டகரியில ரன்வீர் சிங், ஆயூஷ்மான், விக்கி கெளஷல் இவங்ககூட நாகவிஷாலும் தேர்வாகியிருந்தான்” என்று பெருமிதத்தோடு நாகவிஷாலைப் பார்த்தார் இயக்குநர் மதுமிதா.

“நான் மதுரையில எட்டாவது படிச்சுட்டு இருக்கேன். ஆடிஷன்ல செலக்ட்டாகி பரீட்சை லீவுலதான் ஷூட்டிங்குக்குப் போனேன். 28 நாள் எப்படிப் போச்சுன்னே தெரியலை. தாத்தா செம ஜாலி. நிறைய சொல்லிக்கொடுத்தார்” என்ற நாகவிஷாலைத் தொடர்ந்தார், கருப்பு துரையாகவே வாழ்ந்த பேராசிரியர் மு.ராமசாமி.

மு.ராமசாமி, நாகவிஷால்
மு.ராமசாமி, நாகவிஷால்

“என் பேரனோடு இருக்கிற மாதிரிதான் இந்த பையன்கூடவும் இருந்தேன். ஆனா, எமோஷனைக் கையாளுறதுக்கும் அந்த கேரக்டராகவே என்னை உணர்றதுக்கும் எனக்கு 43 வருட நாடக வாழ்க்கை ரொம்ப உதவி பண்ணுச்சு. டைட்டில் ரோல்ல நடிக்கிறது எப்படி இருந்ததுனு நிறைய பேர் கேட்கிறாங்க. என்னைப் பொறுத்தவரை நாம நல்லா நடிக்கணும் அவ்ளோதான். இந்தப் படத்துல எனக்கு ரெண்டு சீன் மட்டும் இருந்திருந்தாலும் அதையும் சந்தோஷமா நடிச்சிருப்பேன்” என்றார்.

இந்தப் படத்துக்கு மிகப் பெரிய பலமான வசனம் எழுதிய சபரிவாசன் சண்முகம் பேசத் தொடங்கினார். “கதையைப் படிச்சவுடனே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ‘நமக்குப் பிடிச்சவங்களுக்கு நல்லதுனா அவங்களைவிட்டு விலகி இருக்கிறதும் பாசம்தான்’ இந்த வசனத்தைப் பத்தி நிறைய பேர் பேசுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார். “இந்தக் கதையை எனக்கு இரண்டரை வருஷத்துக்கு முன்னாடி சொன்னாங்க மதுமிதா. அப்பவே யார் வேணும்னாலும் டெக்னிஷீயன்களா இருக்கலாம். ஆனா, நான்தான் இசையமைப்பாளர்னு சொல்லிட்டேன்” என்கிறார் இசையமைப்பாளர் கார்த்திகேயா மூர்த்தி. “இந்தப் படத்துல நடிச்சவங்க, டெக்னிக்கலா வேலை செஞ்சவங்க எல்லோருமே அவங்க வீட்டுக் கல்யாணம் மாதிரி வேலை செஞ்சாங்க. ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன்கூட முதல்முறையா வொர்க் பண்றேன். நான் எழுதின கேரக்டரை இவ்ளோ அழகா காட்ட முடியும்னு அவருடைய ஃப்ரேம்லதான் பார்த்தேன்” என இயக்குநர் சொன்னதும், பேச ஆரம்பித்தார் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் கெம்புராஜ்.

கார்த்திகேயா மூர்த்தி, மதுமிதா, நாகவிஷால், மெய்யேந்திரன் கெம்புராஜ், மு.ராமசாமி, சபரிவாசன் சண்முகம்
கார்த்திகேயா மூர்த்தி, மதுமிதா, நாகவிஷால், மெய்யேந்திரன் கெம்புராஜ், மு.ராமசாமி, சபரிவாசன் சண்முகம்

“இந்தப் படத்தை 28 நாள்ல எடுத்தோம். லைவ் சவுண்ட் ரெக்கார்டிங்தான் பண்ணோம். லைட்டிங் நல்லாயிருக்கும், ஆர்ட்டிஸ்ட்டும் சூப்பரா நடிச்சிருப்பாங்க. ஆனா, சவுண்ட் ரெக்கார்ட் ஆகியிருக்காது, இல்ல யாருடைய போனாவது அடிச்சிடும். அதனால செட்டுக்குள்ள வரும்போதே எல்லோருடைய போனும் வாங்கி வெச்சுட்டுதான் உள்ளே அனுமதிப்போம். லைவ் சவுண்ட் எப்பவுமே சவால்தான்” என்று படப்பிடிப்பில் ஏற்பட்ட சிக்கல்களோடு சுவாரஸ்யத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

நாகவிஷாலிடம் அவர் நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பு பற்றிக் கேட்டேன். “என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் படம் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. ‘என் அப்பா அம்மா உன்னைப் பார்க்கணும்னு சொல்றாங்கடா’னு என்கிட்ட வந்து சொன்னாங்க. ‘பேரன்ட்ஸ் மீட்டிங் அன்றைக்கு கூட்டிட்டு வாங்கடா’னு சொல்லியிருக்கேன். ஸ்கூலுக்கு வெளியே எனக்கு பேனர் வெச்சிருக்காங்க, தெரியுமாண்ணே? நேத்துகூட பிரேயர்ல என்னைப் பாராட்டி சால்வையெல்லாம் போர்த்தினாங்க. என்னை எந்தெந்த மிஸ் அடிச்சாங்களோ, அவங்க எல்லாம் என்கிட்ட வந்து பிரியமா பேசினாங்க. இப்பயெல்லாம் ஸ்கூல் போகவே ஜாலியா இருக்கு. நிறைய படங்கள்ல நடிக்கணும்னு ஆசை வந்திருக்கு. ரஜினி சார் படத்துக்கு ஆடிஷன் போயிட்டு வந்திருக்கேன். எனக்கு அஜித்தை ரொம்பப் பிடிக்கும். அவர்கூட நடிக்கலைனாலும் பரவாயில்லை, ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு ஆசையா இருக்கு. ரஜினி சார், விஜய் சார் எல்லோரும் என் படத்தைப் பாருங்க. பிடிச்சிருந்தா டைரக்டர்கிட்ட நம்பர் வாங்கி எனக்கு போன் பண்ணுங்க” என்கிறார் கள்ளங்கபடம் இல்லாமல்.

தம்பி, பெரிய ஜாலி கேடிதான்!