Published:Updated:

அயோத்தி - சினிமா விமர்சனம்

சசிகுமார்
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகுமார்

ஊருக்கு உதவுபவன் என்கிற வழக்கமான வேடம்தான் சசிகுமாருக்கு என்றாலும், இதில் முழுக்கவே தெரிவது வித்தியாசமான சசிகுமார்.

மொழி கடந்து, இனம் கடந்து உயிர்த்திருக்கும் மனிதத்தின் உன்னதத்தை உணர்வுபூர்வமாகச் சொல்கிறது ‘அயோத்தி.'

அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வருகிறது ஒரு வட இந்தியக் குடும்பம். எதிர்பாராமல் ஒரு விபத்தில் சிக்கி தாய் இறக்க, மகனும் மகளும் மொழி தெரியாத ஊரில், செய்வதறியாமல் தவிக்கிறார்கள். பழைமைவாதமும் ஆணாதிக்கமும் நிறைந்த தந்தையோ எல்லோர்மீதும் வெறுப்பை உமிழ்ந்து, பிடிவாதத்தின் உச்சியில் நிற்கிறார். விமானத்தில் அயோத்திக்கு சடலத்தை எடுத்துச்செல்ல ஏராளமான அரசு நடைமுறைகள் இன்னொருபுறம். எல்லாவற்றையும் சமாளித்து இரு தமிழ் இளைஞர்கள் அந்த வட இந்தியக் குடும்பத்துக்கு எப்படி உதவுகிறார்கள் என்பதைச் சொல்கிறது படம்.

அயோத்தி - சினிமா விமர்சனம்

ஊருக்கு உதவுபவன் என்கிற வழக்கமான வேடம்தான் சசிகுமாருக்கு என்றாலும், இதில் முழுக்கவே தெரிவது வித்தியாசமான சசிகுமார். ஒவ்வொரு அரசு நடைமுறை முடியும்போதும் புதிது புதிதாக முட்டுக்கட்டைகள் முளைக்க, அதை நிதானத்துடன் சரிசெய்யும் மனிதாபிமானமும் பொறுப்பும் கொண்ட இளைஞராக சசிகுமார் அசத்தியிருக்கிறார். அதிலும் அவர் பாத்திரத்தின் பெயர் என்ன என்பது தெரியவரும் க்ளைமாக்ஸ் செம. சசிகுமாருக்குத் தோள் கொடுக்கும் தோழனாக புகழ். பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார். படத்தில் தொடக்கம் முதல் இறுதிவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவது வட இந்திய இளம்பெண்ணாக வரும் பிரீத்தி அஸ்ரானி. கதியற்று நிற்கும் நிலையில் அவர் கண்ணீரே ஆயிரம் கதைகளைச் சொல்கின்றன. தன் தந்தைக்கு எதிராகக் கொதித்தெழும் இடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ‘போஸ்ட் மார்ட்டம் நஹி' என்று தன் பழைமைவாதச் சடங்குகளையும் மதநம்பிக்கையையும் வலியுறுத்தும் ஆணாதிக்கவாதியாக யஷ்பால் சர்மா. அப்படியே பிரதிபலித்திருக்கிறார். அவரின் மனைவியாக நடித்திருக்கும் அஞ்சு அஸ்ரானி, மகனாக வரும் குழந்தை நட்சத்திரம் அத்வைத், போஸ் வெங்கட் என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

அயோத்தி - சினிமா விமர்சனம்

மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா, அயோத்தியின் பிரமாண்டத்தையும் மதுரைத் தெருக்களையும் உணர்வுபூர்வமாகப் பதிவுசெய்திருக்கிறது. ரகுநந்தனின் பின்னணி இசை பதற்றம், துயர், வலி என அனைத்தையும் கடத்தி, படத்தில் இன்னொரு கதைமாந்தராகவே மாறியிருக்கிறது.

படத்தின் கதை, திரைக்கதை யாருடையது என்பது குறித்த சர்ச்சைகள் வெடித்துள்ளன. என்றாலும் தொடக்கம் முதல் இறுதிவரை பார்வையாளர்களைத் திரைப்படத்துடன் ஒன்றவைத்ததுடன் ஆணாதிக்க, மதவாத எதிர்ப்பு, மொழி, இனம் கடந்து மலரவேண்டிய மனிதாபிமானம் ஆகிய சமகாலத் தேவைகளைத் துறுத்தாமல் கதையோட்டத்திலேயே வலியுறுத்தியிருக்கும் அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்திக்கு வாழ்த்துகள்.

திணிக்கப்பட்டிருக்கும் மதிச்சியம் பாலா பாடல், ஆங்காங்கே சில நாடகத்தனக் காட்சிகள் போன்ற குறைகள் இருந்தாலும் வரவேற்கத்தக்க படம்.