Published:Updated:

``ஊர்வசி, கோவை சரளா, அந்த முருங்கைக்காய் மேட்டர்!''- கே.பாக்யராஜ் #37YearsofMundhanaiMudichu

முந்தானை முடிச்சு

'முந்தானை முடிச்சு' திரைப்படம் வெளியாகி 37 வருடங்கள் கடந்த நிலையில், படம் குறித்த நினைவுகளை விகடனிடம் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் கே.பாக்யராஜ்.

Published:Updated:

``ஊர்வசி, கோவை சரளா, அந்த முருங்கைக்காய் மேட்டர்!''- கே.பாக்யராஜ் #37YearsofMundhanaiMudichu

'முந்தானை முடிச்சு' திரைப்படம் வெளியாகி 37 வருடங்கள் கடந்த நிலையில், படம் குறித்த நினைவுகளை விகடனிடம் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் கே.பாக்யராஜ்.

முந்தானை முடிச்சு

''ஏவி.எம் நிறுவனம் தனக்குனு இருக்குற ஆதர்ச எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்கள் கூடத்தான் பெரும்பாலும் வேலை பார்த்திருந்தாங்க. அப்போ வெளியே இருக்குற சிலர் கூடவும் வேலை பார்க்கலாம்னு நினைச்சிட்டு என்னைக் கூப்பிட்டாங்க. இதுக்கு முன்னாடி வரைக்கும் நானும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களோட வேலை பார்த்ததில்லை. முதல் முறையா ஏவி.எம் நிறுவனத்துடன் கைகோத்தேன். அப்போ, ஏவி.எம்-க்கு முதல்ல 'சின்ன வீடு' கதையைத்தான் சொன்னேன். அவங்களுக்கு அந்தக் கதை ரொம்ப பிடிச்சிருச்சு. நானும் அந்தப் படத்தை டைரக்‌ஷன் பண்ணலாம்னு இருந்தப்போ ப்ரிவியூ ஷோக்காக 'கோபுரங்கள் சாய்வதில்லை' படத்தைப் பார்த்தேன். இந்தப் படத்தோட ஒன்லைன் 'சின்ன வீடு' ஒன்லைன் மாதிரியே இருந்தது. அதனால, இந்தக் கதை வேண்டாம்னு ஏவி.எம் நிறுவனத்திடம் சொன்னேன். 'ரெண்டு படத்தோட திரைக்கதை வடிவம் வேற'னு சொல்லி என்னை காம்ப்ரமைஸ் பண்ணாங்க. ஆனா, எனக்கு உடன்பாடில்லைனு சொல்லிட்டேன்.

முந்தானை முடிச்சு
முந்தானை முடிச்சு

அதுக்கு அப்புறம், ஒரு கதை எழுதி சொன்னேன். திரும்ப எல்லோருக்கும் பிடிச்சிருக்குனு சொன்னாங்க. ஊட்டி, கொடைக்கானல்னு எஸ்டேட் ஏரியாவுல நடக்குற கதை. கையில குழந்தை வெச்சுக்கிட்டு மனைவி இல்லாம கஷ்டப்படுற ஒருத்தன் கதை. ஹீரோ, கைக்குழந்தையை வெச்சிக்கிட்டு கஷ்டப்படுறது பார்த்து எஸ்டேட் முதலாளியோட பொண்ணு விரும்பி கல்யாணம் பண்ணிக்குறானு எழுதியிருந்தேன். ஆனா, இந்தக் கதையில ஏதோ ஒரு சென்ட்டிமென்ட் எலிமென்ட் மிஸ்ஸாகுற ஃபீல் இருந்துச்சு. அதனால, இந்தக் கதையும் வேண்டாம்னு முடிவு பண்ணேன்.

ஏவி.எம் நிறுவனம் இந்தக் கதை நல்லாயிருக்கு பண்ணலாம்னு சொல்லியும் கேட்கல. ஒரு 15 நாள் மட்டும் டைம் கொடுங்கனு கேட்டுட்டு எழுதின கதைதான் 'முந்தானை முடிச்சு.'
கே.பாக்யராஜ்

படத்துல நடிக்க ஆடிஷனுகாக ஊர்வசியோட அக்கா கலாரஞ்சனி வந்திருந்தாங்க. அவங்ககூட துணைக்கு ஊர்வசி வந்து நின்னுட்டு இருந்தாங்க. ஜீன்ஸ், டி-ஷர்ட் போட்டுக்கிட்டு ஓரமா நின்னவங்களைப் பார்த்தேன். உடனே ஒரு நிமிஷம் இந்தப் பொண்ணு நம்ம பரிமளம் கேரக்டருக்கு சரியா இருக்கும்னு தோணுச்சு. உடனே, கலாரஞ்சனிக்கிட்ட 'பாவாடை தாவணியில ஊர்வசியை அழைச்சிட்டு வர முடியுமா'னு கேட்டேன். 'தாராளமா'னு சொல்லிட்டு ஊர்வசிக்கு பாவாடை தாவணி போட்டு கூட்டிட்டு வந்தாங்க.

நடிகை ஊர்வசி
நடிகை ஊர்வசி

கேரக்டர் லுக் சரியா இருந்தது. உடனே, படத்துல கமிட் பண்ணிட்டேன். இந்தப் படத்துல நடிச்சப்போ ஊர்வசிக்கு நடிக்குறதுல பெரிய ஆர்வமில்ல. அதனால, ஒவ்வொரு ஷாட்டும் ஏழு டேக் வரைக்கும் போகும். ஆனா, இந்தப் படத்துக்குப் பிறகு ஊர்வசி பெரிய நடிகையா வந்துட்டாங்க. 'முந்தானை முடிச்சு'க்கு கிடைச்ச பெரிய சொத்து ஊர்வசி. அதே மாதிரி படத்தோட ஷூட்டிங் முழுக்க கோபிசெட்டிபாளையம் பக்கத்துல இருக்குற கிராமத்துல நடந்தது. இந்த ஊர் மக்களும் பெரிய உதவியா இருந்தாங்க. இவங்களுக்கும் படத்தோட டெக்னீஷியன்ஸூக்கும் 37 வருஷம் கடந்தும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.

படத்துல நிறைய சின்ன பசங்க நடிச்சிருப்பாங்க. இவங்க எல்லாரையும் ஒன்னா கூட்டி வேலை வாங்குறதே பெரிய போராட்டமா இருக்கும். ஒரு பையனை மதியம் 3 மணிக்கு ஷாட்டுக்கு கூப்பிட்டா, 'இது நான் தூங்குற நேரம். வர முடியாது'னு சொல்லுவான்.
கே.பாக்யராஜ்

அதேமாதிரி படத்துல நடிச்சிருந்த தவக்களை கேரக்டர் என்கிட்ட முன்னாடியே சான்ஸ் கேட்டு வந்திருந்தார். அப்போ, 'எனக்கு டான்ஸ் ஆடத்தெரியும்'னு சொல்லிட்டு தெலுங்குல பாடிக்கிட்டே ஆடினான். ஏன்னா, அவனோட தாய்மொழி தெலுங்கு. 'தம்பி, தமிழ் பேச கத்துக்கோ... தேவைப்படுறப்போ கூப்பிடுறேன்'னு சொன்னேன். அப்புறம் 'முந்தானை முடிச்சு' ஷூட்டிங் ஆரம்பிச்சப்போ கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தேன்.

தவக்களை
தவக்களை

அப்பவும் கொஞ்சம் தெலுங்கு வாடை வீசும். நான் முதல்ல தெலுங்குல டயலாக்ஸ் சொல்லி பேசிக் காட்டுவேன். அதை தவக்களை புரிஞ்சிப்பான். அப்புறம், அசிஸ்டன்ட் டைரக்டர் டயலாக்கை தமிழ்ல சொல்ல அதைக் கேட்டுட்டு பேசி நடிச்சான். படத்துல நடிச்ச குழந்தை நட்சத்திரம் சுஜியை பார்த்த உடனே பிடிச்சிருச்சு. பெண் குழந்தையா இருந்தாங்க. இருந்தாலும், பரவாயில்லைனு பையனா படத்துல நடிக்க வெச்சேன். இந்தக் குழந்தைக்கும் எனக்கும் பெரிய கெமிஸ்ட்ரி திரையில தெரியணும்னு ஷூட்டிங் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடில இருந்தே குழந்தைகூட நேரம் செலவழிக்க ஆரம்பிச்சிட்டேன். அதனாலதான், ஷூட்டிங்கின்போது குழந்தையைப் பார்த்து கை நீட்டுனாகூட ஓடி வந்துருவா. படத்தோட ஷூட்டிங் 70 நாள் வரைக்கும் நடந்தது.

இந்தப் படத்துல கோவை சரளா அறிமுகமாகியிருந்தாங்க. நான் டைரக்‌ஷனுக்கு முயற்சி பண்ணிட்டு இருந்தப்போ, சரளாவோட அக்கா சினிமாவுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அப்போ, கோவை சரளா 8 வயசு பிள்ளையா அக்காகூட நின்னுக்கிட்டு இருக்கும். 'அக்காவைவிட நடிக்குறதுக்கு ஏத்த பாடி லாங்குவேஜ் உன்கிட்டதான் இருக்கு'னு சொல்லியிருந்தேன். இதை மனசுல வெச்சுக்கிட்டு டைரக்டரா ஆனதுக்குப் பிறகு 'நீங்க எனக்கு நடிக்க சான்ஸ் கொடுக்குறேன்'னு சொன்னீங்கனு பொட்டிப் படுக்கையைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்துட்டாங்க. அப்புறம், இவங்களுக்குனு ஒரு ரோல் படத்துல வெச்சேன்.

கோவை சரளா
கோவை சரளா

படத்துல வர்ற முருங்கைக்காய் காட்சில கோவை சரளாவும் வருவாங்க. இந்த முருங்கைக்காய் காட்சி எடுத்தப்போ இந்தளவுக்கு ரீச் கிடைக்கும்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கல. ஏன்னா, படத்தோட காட்சிக்கு தேவைப்பட்டதனால வெச்சேன். இந்த முருங்கைக்காய் பற்றி வீட்டுல என் பாட்டி சொல்லித்தான் எனக்குத் தெரியும். இன்னைக்கும் உலகளவுல இருந்துகூட இந்தக் காட்சியைப் பற்றி நிறைய பேர் பேசுவாங்க.

படத்துல என்னோட முதல் மனைவி கேரக்டர்ல பூர்ணிமா நடிச்சாங்க. அப்போ, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருந்த 'டார்லிங் டார்லிங் டார்லிங்' படம் ரிலீஸாகியிருந்தது. 'சின்ன ரோல் இருக்கு, நடிக்க முடியுமா'னு கேட்டேன். ஓகேனு சொல்லி நடிச்சு கொடுத்தாங்க.
கே.பாக்யராஜ்

படத்தோட செகண்ட் பார்ட்ல முதியோர் கல்வி பற்றி சொல்ல தீபா தேவைப்பட்டாங்க. என்னோட 'தூறல் நின்னு போச்சு' படத்துல நம்பியார் நடிச்சிருப்பார். அப்போ, ஷூட்டிங்கின்போது அவரோட மனைவி வீட்டுல இருந்து சாப்பாடு சமைச்சு கொண்டு வருவாங்க. வெளி சாப்பாட்டை நம்பியார் சாப்பிட மாட்டார். அதுலயும், முதல் வாய் சாப்பாட்டை அவர் மனைவிக்கு ஊட்டி விட்டுட்டுத்தான் சாப்பிடுவார். அதைப் பார்க்கும்போதே சந்தோஷமா இருக்கும். நெகிழ்ச்சியா இருக்கும்.

தீபா
தீபா

இதே மாதிரி இந்தப் படத்துலயும், ஒரு காட்சில வயசான தம்பதி சாப்பாடு பரிமாறிக்கிட்டா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. அப்போ, என்கிட்ட அசிஸ்டன்ட் டைரக்டரா இருந்த ரங்கராஜன் என் தாத்தா, பாட்டியை நடிக்க வைக்கலாம்னு சொன்னான். இதுலயும், முதல்ல பாட்டி நடிக்க ஒத்துக்கிட்டாங்க. தாத்தா கூச்சப்பட்டுக்கிட்டு நடிக்க மாட்டேன்னு சொன்னார். இந்தப் படம் ரிலீஸாகி எல்லா மொழிலயும் ரீமேக் ஆச்சு. அதே மாதிரி திருவனந்தபுரத்துல 250 நாள்களுக்கும் மேல படம் ஓடுச்சு. வெற்றி விழாவுக்கு நான் போயிருந்தேன்.

இப்ப 37 வருஷத்துக்குப் பிறகு, நான் இருக்கும்போதே இந்தப் படம் திரும்பவும் எடுக்குறது எனக்கு இன்னும் சந்தோஷமா இருக்கு'' என்றார் கே.பாக்யராஜ்.