80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – 'ஒரே ஒரு கிராமத்திலே’.
‘பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும்’ என உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கும் சமகால சூழலில், 1987-ல் வெளியான இந்தத் திரைப்படத்தை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.
இந்தத் திரைப்படம் வெளியான சமயத்தில் பலத்த எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் சந்தித்தது. தமிழக அரசு இந்தப் படத்திற்குத் தடை விதித்தது. ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை தொடர்பான திரிபுகளையும் எதிர்மறைகளையும் இந்தத் திரைப்படம் சித்திரிக்கிறது’ என்பது கண்டனத்திற்குக் காரணம்.
இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பல்ல
இதன் மையம் ‘இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உரையாடுகிறதா?’ என்றால் ஆம் என்பதே பதில். ‘…ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கொடுங்கள். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் முன்னேறிய சமூகத்தில் உள்ள ஏழைகளாகிய நாங்கள் பாதிக்கப்படுகிறோமே... எங்களின் நிலை பரிதாபமானதில்லையா? கல்வி நிலையங்களில், பணியிடங்களில் எங்களுக்கான வாய்ப்பு அருகிப் போகிறதே... அதைப் பற்றி அரசாங்கத்திற்கு அக்கறையில்லையா? ‘சாதியைப் பற்றிப் பேசாதே’ என்று உபதேசம் செய்கிற அரசாங்கமே, சாதிச்சான்றிதழ் கேட்பது முரண் இல்லையா? சாதி அடிப்படையில் அல்லாமல் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்வதுதானே முறை?’ என்றெல்லாம் பல வில்லங்கமான கேள்விகள் இந்தத் திரைப்படத்தில் இடம்பெறுகின்றன.
இட ஒதுக்கீட்டிற்கும் வறுமை ஒழிப்பிற்கும் தொடர்பு கிடையாது. எந்த சாதியைக் காரணம் காட்டி சில சமூகங்கள் பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருந்தார்களோ, அதே சாதியை அடிப்படையாக வைத்து இட ஒதுக்கீடு செய்வதுதான் அதன் நோக்கம். சமூகநீதிதான் இட ஒதுக்கீட்டின் அடிப்படை இலக்கு. முன்னேறிய சமூகங்களுக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கும் உள்ள கணிசமான வித்தியாசத்தைக் குறைத்து சமூகத்தில் சமநிலையை மேம்படுத்த முயல்வதுதான் இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம். எனவே இதைப் பொருளாதார அடிப்படையில் அணுக முடியாது என்பது எளிய தர்க்கம்.
என்றாலும் ஏன் இந்தப் படத்தை நினைவுகூர வேண்டும்? எந்தவொரு கருத்திற்கும் இரண்டிற்கும் மேற்பட்ட தரப்புகள் இருக்கும். அவற்றின் குரலும் பொதுவெளியில் ஒலிக்கவும் விவாதிக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஜனநாயக அணுகுமுறை. அந்த நோக்கில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிரச்னையை, அதன் தரப்பில் உரையாடுவதால் இந்தப் படத்தில் என்னவெல்லாம் நிகழ்கிறது என்று பார்ப்போம்.
கருப்பாயி என்கிற நேர்மையான அதிகாரி
அன்னவயல், தமிழகத்தில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமம். மழை, வெள்ளம் வந்தால் வீடுகள் மூழ்கும். பயிர்கள் நாசமாகும். மக்கள் அவதிப்படுவார்கள். அணை கட்டப்பட்டால் இவர்களின் சுமை சற்றாவது குறையும். உள்ளூர் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இந்த அடிப்படையான பிரச்னையைக் கவனிக்காமல் இருப்பதால், சுயேச்சை எம்.எல்.ஏ., பிரதமரைச் சந்தித்து இதைப் பற்றி கோரிக்கை வைக்கிறார். கருப்பாயி என்கிற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அலுவலரை, ‘சிறப்பு அதிகாரி’யாக அன்னவயல் கிராமத்திற்கு அனுப்புகிறார்கள்.
கருப்பாயி மிக நேர்மையானவர். சாதிய, வர்க்க பாரபட்சம் பார்க்காதவர். ஊழலைத் துணிச்சலுடன் எதிர்ப்பவர். அவர் பொறுப்பிற்கு வந்தவுடன் கிராமத்தில் பல நல்ல மாற்றங்கள் நிகழ்கின்றன. செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனைப் பள்ளிக்கு அனுப்புகிறார் கருப்பாயி. அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணின் திருமணப் பிரச்னைக்கு தீர்வு சொல்லி வழிகாட்டுகிறார். விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்கிறார். ஏழை மக்களுக்குப் பட்டா வழங்கி நிலத்தை உரிமையாக்குகிறார். இதன் உச்சமாக, தன் வீட்டில் பணிபுரியும் தேவானையின் மகனைத் தத்தெடுத்துக் கொள்கிறார். இப்படியாக கருப்பாயியின் நற்செயல்களையும் நேர்மையையும் கண்டு ஊரே வணங்கி நன்றி பாராட்டுகிறது.

தன்னுடைய பணியில் சிறப்பாகவும் கம்பீரமாகவும் செயல்படும் கருப்பாயிக்கு எதிர்பாராத ஒரு பிரச்னை வருகிறது. அந்தோணி என்பவர் கருப்பாயியைப் பணம் கேட்டு மிரட்டுகிறார். ஏதோவொரு பழைய ரகசியத்தை வெளியிட்டு விடுவேன் என்பதாக அந்த மிரட்டல் இருக்கிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் கருப்பாயி. இதர விஷயங்களில் மிக நேர்மையாகவும் துணிச்சலாகவும் செயல்படும் கருப்பாயி, அந்தோணி விஷயத்தில் மட்டும் தடுமாறுகிறார். ஒரு கட்டத்தில் அவர் பணியை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
அந்தோணி வெளியிடுவதாக மிரட்டும் அந்த ரகசியம் என்ன, தன் சிக்கல்களை கருப்பாயி எவ்வாறு எதிர்கொண்டார், உண்மையில் அவரது பின்னணி என்ன... என்பதையெல்லாம் மீதமுள்ள திரைப்படம் விவரிக்கிறது.
கவிஞர் வாலியின் கதை, வசனம்; லட்சுமியின் அருமையான நடிப்பு
படத்தின் கடைசியில் வரும் நீதிமன்றக்காட்சியை இந்தத் திரைப்படத்தின் மையம் எனலாம். வசனங்கள் மிக வலுவாக எழுதப்பட்டிருக்கும் பகுதி இது. பாடல்களைத் தவிர, இதற்குக் கதை, வசனம் எழுதியவர் கவிஞர் வாலி என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரமான வசனங்களுக்கு இடையில் வாலிக்கே உரிய நையாண்டியான வசனங்களும் உண்டு. வெள்ள நிவாரணம் கேட்டு வரும் மக்களிடம் “வெள்ளம் வேகமா வரும், நிவாரணம் மெல்லமாத்தான் வரும்” என்று அரசாங்க அலுவலகத்தின் பியூன் சொல்லும் காட்சி ஓர் உதாரணம்.
கருப்பாயியாக லட்சுமி நடித்திருந்தார். அவரின் மிகச்சிறந்த நடிப்பில் வெளியான படங்களில் இதையும் ஒன்றாகச் சேர்க்கலாம். வீட்டுப் பணியாளரான மனோரமாவிடம் காட்டும் பாசம், அவரின் மகனைத் தத்தெடுக்கும் அன்பு, அணைக்கட்டு கான்டிராக்டிற்காக லஞ்சம் தர வரும் ஊழல் ஆசாமியைத் துரத்தியடிக்கும் துணிச்சல், அந்தோணியின் மிரட்டலைப் பயமின்றி எதிர்த்தாலும் உள்ளூர ஏற்படும் மன உளைச்சல், நீதிமன்றக் காட்சிகளில் ஆவேசமான வாதம் என்று கருப்பாயியின் பாத்திரத்தை மிகத்திறமையாகக் கையாண்டிருந்தார் லட்சுமி. இவரின் நடிப்பைத்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பு என்று சொல்ல முடியும்.

கருப்பாயி என்கிற ‘காயத்ரி’யின் தந்தை சங்கர சாஸ்திரியாக பூர்ணம் விஸ்வநாதன் வழக்கம் போல் தனது அருமையான நடிப்பைத் தந்திருந்தார். அந்தோணியைப் போட்டு அடி வெளுக்கும் இடம் ஓர் உதாரணம். தேவானையாக மனோரமா. தனது கணவர் மொழிப் போராட்டத்தில் இறந்ததை உணர்ச்சிகரமாக விவரிக்கும் இடம் அருமை. மூளை வளர்ச்சி குன்றிய மகனை எப்படி ஆளாக்கப் போகிறோம் என்கிற தத்தளிக்கும் உணர்வை நன்கு வெளிப்படுத்தியிருந்தார். ஊழல் கான்டிராக்டராக வி.கே.ராமசாமி. அவரின் உதவியாளராகச் செந்தில். இவர்கள் வரும் நகைச்சுவை டிராக் சுமாராகத்தான் இருந்தது.
கருப்பாயியை மிரட்டும் அந்தோணியாக வினுசக்கரவர்த்தி சிறப்பாக நடித்திருந்தார். “என் பேரைச் சொல்லிப் பாரு... கருப்பாயி அட்டென்ஷன்ல எழுந்து நிப்பா” என்று பியூன் சார்லியிடம் எகத்தாளமாகச் சொல்லுவது முதல் லட்சுமியிடம் குடிப்பதற்குக் காசு கேட்டு மிரட்டி, பிறகு எறியப்பட்ட பணத்தைப் பம்மி எடுத்துச் செல்வது வரை ஒரு நுட்பமான பிளாக்மெயிலரை தனது பாத்திரத்தில் நன்றாக வெளிப்படுத்தியிருந்தார்.
‘அம்பேத்கர் படம் உங்களுக்குப் பிடிக்கும்’
இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் கே.ஜோதி பாண்டியன். இவர் வேறு திரைப்படம் ஏதும் இயக்கியது போல் தெரியவில்லை. இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்து என்றாலும் தன் தரப்பிற்கு வலு சேர்ப்பது போல் காட்சிகளைத் திறமையாக வடிவமைத்திருந்தார். கருப்பாயி பாத்திரம் அத்தனை கச்சிதமாக உருவாக்கப்பட்டிருந்தது.
புதிய அதிகாரிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் வீட்டைச் சுற்றிக் காட்டும் கிராம அதிகாரி, “உங்களுக்குப் பிடிக்குமேன்னு அம்பேத்கர் படத்தை மாட்டி வெச்சிருக்கேன்” என்று சொல்லும் போது “அம்பேத்கரை எல்லோருக்கும்தான் பிடிக்கும்” என்பார் கருப்பாயி. “உங்க டேஸ்ட்க்கு ஒத்து வரணும்னு உங்க சமூகத்தைச் சேர்ந்த சமையல் பணியாளரையே வேலைக்கு சேர்த்திருக்கேன்” என்று இன்னமும் நீட்டிக்கும்போது, “வாட் யூ மீன்... எனக்கு சாதில எல்லாம் நம்பிக்கை கிடையாது. இந்த மாதிரில்லாம் பேசாதீங்க” என்று கருப்பாயி வெடிப்பார். அப்போது அந்தப் பாத்திரத்தின் மீது நமக்குப் பிரியம் கூடும்.
கருப்பாயி மறைத்து வைத்திருந்த ரகசியம் என்ன, ஏன் அந்தோணி இவரை மிரட்டுகிறார் என்பதையெல்லாம் அறிய வேண்டுமென்கிற ஆவல் பார்வையாளர்களுக்கு ஏற்படும்படி காட்சிகளைத் திறமையாக அடுக்கியிருப்பார் இயக்குநர். ஸ்பாய்லர்தான் என்றாலும் மேலும் விவரங்களைப் பேசுவதற்கு அதை உடைத்தாக வேண்டியிருக்கிறது.
கருப்பாயி – காயத்ரி – பொய் சான்றிதழ் ரகசியம்
‘முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த காயத்ரி, அதை மறைத்து கருப்பாயி என்று மாற்றப்பட்ட பெயரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராகப் பொய் சான்றிதழ் தந்து கல்வி கற்று, அரசாங்க உயர் பொறுப்பில் இருக்கிறார்’ என்பதுதான் அந்த ரகசியம்.
தன் தரப்பு நியாயங்களை இந்தத் திரைப்படம் வலிமையாக முன்வைத்தாலும் சில பல இடங்களில் தர்க்க ஒழுங்கு இல்லை. போலவே சில ஆபத்தான விஷமப் பிரசாரங்களையும் கொண்டிருந்தது. அவை என்னவென்பதை விரிவாகப் பார்க்கலாம்.
படிப்பில் சிறந்து விளங்கும் காயத்ரிக்குப் பொய் சான்றிதழ் பெற்றாவது உயர்கல்வி கற்க வேண்டும் என்கிற ஆதாரமான நெருக்கடி கதையமைப்பின் படி இருக்காது. அவருக்கு இயல்பாகவே அது கிடைத்துவிடும். ‘சாகறதுக்கு முன்னால இவ அம்மா எங்கிட்ட சத்தியம் வாங்கிட்டா... இவளை எப்படியாவது மேற்படிப்பு படிக்க வெச்சு ஆளாக்கணும்னு’ என்று சென்டிமென்ட் காரணத்தைச் சொல்லுவார் சங்கர சாஸ்திரி. காயத்ரி பணிக்குச் சென்றுதான் அந்தக் குடும்பம் முன்னேற வேண்டும் என்கிற அவசியமில்லை. காயத்ரியின் தந்தை ஏற்கெனவே அரசு அலுவலில்தான் இருப்பார்.

பிறகு வருகிற நீதிமன்றக் காட்சியில் “நீங்கள் பொய் சான்றிதழ் மூலம் கல்வி கற்று பணியில் சேர்ந்ததால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய இடத்தைப் பறித்து விட்டீர்கள்" என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் மிகச்சரியாகவே குற்றம் சாட்டுவார். இங்கும் ஒரு சென்டிமென்ட் காரணம் சொல்லப்பட்டிருக்கும். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மனோரமாவின் மகனைத் தத்தெடுப்பதின் மூலம் இந்தத் தவற்றை லட்சுமி கடந்து வர முயன்றதாக விளக்கம் சொல்லப்படும்.
படத்தின் தர்க்கத்தில் உள்ள முரண்கள்
"என் குற்றத்தால் தகுதியான ஒரு நபருக்குக் கல்வியும் வேலையும் கிடைக்கவில்லை, எனவேதான் அதே சமூகத்தைச் சேர்ந்த இன்னொரு பையனைத் தத்தெடுத்தேன். அவனுக்குத்தான் என் சொத்து முழுவதும் சென்று சேரும்" என்று விளக்கம் தருவார் லட்சுமி. இது ஏதோ பாவ மன்னிப்பு கோருகிறேன் என்பது போன்ற சமாச்சாரமில்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ஒருவர் கல்வி கற்று முன்னேறினால் கூட அது அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பலருக்கு முன்னுதாரண உத்வேகத்தை அளிக்கும். இதனால் பல குடும்பங்கள் பலன் அடையும். அந்தப் பாதையை காயத்ரியின் செயல் – அதாவது அவரது தந்தை செயல் – அடைத்து விட்டதாகவே கருத முடியும்.
இதை விடவும் அபத்தமான சித்திரிப்பு ஒன்றிருக்கிறது. தன் மகளை எப்படியாவது உயர்கல்வியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகத் தனது குடும்ப நண்பர் தேவசகாயத்தை அணுகுவார் சங்கர சாஸ்திரி. தேவசகாயம் தாசில்தாராக பணியில் இருப்பவர். அவருக்குக் கல்வி கற்றுத் தந்து வழிகாட்டியது, சங்கர சாஸ்திரியின் தந்தை. எனவே அந்த நன்றிக்கடனுக்காகப் பொய் சான்றிதழ் தந்து காயத்ரியின் கல்விக்கு வழி செய்வார் தேவசகாயம். இது வரைக்கும் கூட சரி.

தேவசகாயத்தின் மச்சான் அந்தோணி. பிறகு காயத்ரியை மிரட்டி பணம் பறிப்பவனும் இவர்தான். எப்போதும் குடியில் மிதப்பவர். குறுக்கு வழியில் கல்வி கற்றாலும் காயத்ரி போன்றவர்களால் சமூகத்திற்குப் பல நன்மைகள் கிடைக்கின்றன, அவர்கள் நேர்மையானவர்கள் என்று சித்திரிக்கப்படும் அதே வேளையில், அந்தோணி போன்றவர்கள் வாய்ப்பு இருந்தாலும் கூட குடியில் மிதந்து கீழ்மையில்தான் உழல்வார்கள், தீயவர்களாக இருப்பார்கள் என்கிற ஆபத்தான செய்தியையும் இந்தப் படம் மறைமுகமாகச் சொல்கிறது.
‘அவங்களுக்கு ஏன் கொடுக்கறேன்னு கேட்கலை. எங்களுக்கு ஏன் தடுக்கறே?’
காயத்ரி மீதும் அவரது தந்தை மீதும் வழக்கு தொடரப்பட்டு, பணி நீக்கத்தை அவர்கள் எதிர்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. ‘நாமே இந்த வழக்கிற்காக வாதாடுவோம்’ என்று முடிவு செய்வார்கள். இருவரும் தங்களின் தரப்பை நியாயப்படுத்தும் விதமாக நீதிமன்றத்தில் சொல்லும் வசனங்கள், கவிஞர் வாலியால் திறமையாக எழுதப்பட்டிருந்தன. “அவங்களுக்கு ஏன் கொடுக்கறேன்னு நாங்க கேக்கலை... எங்களை ஏன் தடுக்கறேன்னுதான் கவர்மென்ட்டைக் கேக்கறோம்” என்று பரிதாபமாக முறையிடுவார் சங்கர சாஸ்திரி.
தன்னுடைய குலத்தை மறைத்து பரசுராமரிடம் கர்ணன் வில்வித்தை கற்றுக் கொண்ட புராணக்கதையை மேற்கோள் காட்டுவார் லட்சுமி. "இந்தியர்கள் அனைவரும் சமம் என்று சொல்லி விட்டு ஏன் சாதி அடிப்படையில் வித்தியாசம் பார்க்கிறீர்கள். பொருளாதார அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்'' என்கிற வாதத்தை ஆணித்தரமாக முன்வைப்பார் லட்சுமி. 'ஜாதிகள் இல்லையடி பாப்பா. குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்கிற பாரதியின் வரியோடு படம் நிறையும்.
இந்தப் படம் வெளியான போது பலத்த எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் சந்தித்தது. எனவே தமிழக அரசு இதற்குத் தடை விதித்தது. ஆனால் இன்னொரு பக்கம் ‘சமூகப் பிரச்னைகளைப் பற்றிப் பேசும் படம்’ என்கிற பிரிவில் தேசிய விருதும் கிடைத்தது. தடையை உச்ச நீதிமன்றம் விலக்குவதற்கு முன்பே ‘திரைப்பட ஜூரிக்களின் முன்னால் படம் திரையிடப்பட்டது’ என்பதைச் சுட்டிக் காட்டி விருதை ரத்து செய்யும் வழக்கொன்றும் நடந்தது. கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி இதன் மீதான தடையை உச்ச நீதிமன்றம் விலக்கியது.

‘க்ளைமாக்ஸ் மாற்றப்பட வேண்டும்’ என்கிற நீதிமன்ற நிபந்தனையைப் படத்தின் தயாரிப்பாளர் ஏற்றுக் கொண்டார். முன்னர் படமாக்கப்பட்ட க்ளைமாக்ஸின் படி, மக்களின் போராட்டம் காரணமாக காயத்ரி மீதான வழக்கு திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுவது போல் சித்திரிக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு காயத்ரியும் அவரது தந்தையும் சிறைத்தண்டனை பெறுவதாகப் படத்தின் முடிவு மாற்றப்பட்டது.
இளையராஜாவின் இசையும் பாடல்களும் இந்தப் படத்திற்குச் சுவாரஸ்யம் கூட்டுவதாக இருந்தன. எஸ்.ஜானகி பாடிய ‘ஓலை குடிசையில...’ என்பது மிக இனிமையான பாடல். நிழல்கள் ரவியும் அருந்ததியும் ஆடிப் பாடும் ‘டூயட்’ பாடலான ‘ரெட்டைக்கிளிகள்’ கேட்பதற்கு இனிமை என்றாலும் படத்தின் நீளத்திற்காகத் துருத்தலாகத் திணிக்கப்பட்டிருந்தது. மலேசியா வாசுதேவன் ஆவேசமாகப் பாடிய ‘ஜாதி என்னடா... ஜாதி’ பாடலில் மனிதம்தான் முக்கியம் என்று வலியுறுத்தும் திறமையான வரிகள் இருந்தாலும் படத்தின் மையத்திற்கு ஆதரவு சேர்க்கிற ஆபத்தையே அதுவும் கொண்டிருந்தது.
சமூகநீதிக்காகப் பல போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில், தற்போது ஒரு தரப்பு முன்வைக்கும் வாதங்கள் பலவற்றை இந்தப் படம் அன்றே பேசியிருக்கிறது. அவ்வகையான வாதங்கள் சமூகநீதிப் பயணத்துக்கு எதிரானவை என்பதை அறிய 'ஜென்டில்மேன்', 'ஒரே ஒரு கிராமத்திலே' போன்ற படங்கள் அவசியமானவைதான்.