அரசியல்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

உறுத்தல் - சிறுகதை

உறுத்தல் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
உறுத்தல் - சிறுகதை

கேபிள் சங்கர்

பாத்ரூமில் பாவாடையை மார்பு வரை மேலேற்றிக் கட்டிக்கொண்டாள் தமயந்தி. தலையின் ஈரம்போக, துண்டை எடுத்துக் கட்டியபடி, கண்ணாடியில் முகம் பார்த்தாள். `கறுப்பென்னடி கறுப்பு... பெருமாள்கூடக் கறுப்புதான். ஒலகமே அவன் காலடியில கிடக்கலை. அதுபோல என் தமயந்தி காலடியில கிடக்க, ஒருத்தன் வராமயா போயிருவான்?’ செத்துப்போன லட்சுமிப்பாட்டியின் குரல், ஏனோ ஞாபகத்துக்கு வந்தது. வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்க ``சுபா... யாருன்னு பாரு?’’ என்று உள்ளிருந்து ஹாலில் டேபிள் செஸ் ஆடிக்கொண்டிருக்கும் தன் மகளுக்கு, குரல்கொடுத்தாள். பரபரவென நெஞ்சில் இருந்த பாவாடையை இடுப்பில் கட்டி, உள்பாடி, ஜாக்கெட்டைப் போட்டு, சட்டெனப் புடவை கட்டி, மீண்டும் ஒருமுறை கண்ணாடி பார்த்து, ஸ்டிக்கர் பொட்டினை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு திரும்பியபோது, சுபா கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்து, ``யாரோ சுந்தர்னு ஒரு அங்கிள் வந்திருக்காரு’’ என்றாள்.
சுந்தர் என்று கேட்ட மாத்திரத்தில், கதவைத் திறந்து எட்டிப்பார்த்தாள். சுந்தர் மாமாவேதான். நெஞ்சமெல்லாம் படபடவென அடித்தது.

``நல்ல பையன். அற்புதமான நளபாகக்காரன். நல்ல சம்பாத்தியம். அப்பா இல்லாம வளந்தவன். கொஞ்சம் தடித்தனமா வளர்ந்துட்டான். `ஏன்டா இப்படி இருக்கே?’ன்னு கூப்ட்டு கண்டிச்சேன். `எனக்குன்னு ஒருத்தி இருந்தா, நான் ஏன் இப்படி  இருக்கப்போறேன்?’னு அழுதான்.  அதுவும் சரிதான்னு உன்னைக் கண்டுபிடிச்சுட்டேன். நீதான் அவனை வழிக்குக் கொண்டுவரணும். என்னடா நடராஜா, சொல்பேச்சு கேட்டு நடக்குறியா?’’ என்று நடராஜனைப் பார்த்துக் கேட்டபோது, 35 வயது நடராஜன் வெட்கப்பட்டான். அவன் வெட்கத்தைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்.

உறுத்தல் - சிறுகதை

``வாங்க மாமா, எப்படி இருக்கீங்க?’’

``ம்...’’ என்று சொன்ன மாமாவின் குரல், கரகரவென மாறியிருந்தது. 15 வருடம் ஆகிவிட்டது. சுபா, உள்ளேயிருந்து டம்ளரில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். அவளை ஏற இறங்கப் பார்த்தார். பார்ப்பதற்கு தமயந்திபோல் இல்லாமல் நல்ல மாநிறத்தோடு, சற்றே கூர்மையான நாசியுடன் 13 வயதுக்குக் கொஞ்சம் அதிகமாகவே வளர்ந்திருந்தாள். முட்டி வரை த்ரீஃபோர்த்தும், கொஞ்சம் இறுக்கமான டீ-ஷர்ட்டும் வளர்த்தியாகவே காட்டின.

``பேரு சுபாஷினி. பத்தாவது படிக்கிறா.’’

தமயந்தியின் குரல் கேட்டுக் கலைந்து  ``ம்ம்...’’ என்றார். பக்கத்தில் அழைத்து உட்காரவைத்து அவளையே பார்த்தார். தலையைத் தடவி ``நல்லாரு’’ என்றார்.

``ஏதோ வாசனை வர்றதே... குடிச்சிருக்கீங்களா?’’

``குடியா... சே... சே! என் கண்ணாட்டி செல்லம். அதெல்லாம் விட்டொழிச்சாச்சு. உனக்காக. ஃபர்ஸ்ட் நைட். லைட்டா சின்ன பாட்டில் பியர் மட்டும்’’ என்றபடி லைட்டை ஆஃப் செய்துவிட்டு, இன்னும் நெருக்கமாய் அவள் அருகில் வந்து உட்கார்ந்தான். அவன் மூச்சுக்காற்றில் வந்த வாசமும் அவனின் நெருக்கமும் ஏனோ தெரியவில்லை, தமயந்திக்கு பயத்தைக் கொடுத்தன. ஜன்னல் கதவு திறந்திருக்க, முகத்தில் நிலவின் வெளிச்சம் விழுந்தது. ``என் கறுப்புக் கண்ணாட்டி ஜொலிக்கிறா’’ என்று அவளின் மீது படர்ந்தான். மூர்க்கமாகி, உடையைக்கூடக் களையாமல் இயங்கினான். கட்டிலின் சத்தம் அந்த இருட்டு அறையில் ஓங்காரமாய்க் கேட்க, ``ஐயோ, சத்தம் கேட்குது... சத்தம் கேட்குது’’ என்று அவன் காதில் கிசுகிசுப்பாய்க் கத்தினாள். அவன் கேட்காமல் மேலும் இயங்க. அவனைத் தள்ளிவிட்டு கட்டிலிலிருந்து எழுந்து கீழே இறங்கி நின்றாள். நடராஜனுக்குக் கோபம் வந்து, மூர்க்கமாய் அவளை அறைந்து, கட்டிலின் மேல் கிடத்தித் தொடர்ந்தான். கட்டிலின் சத்தம், இப்போது இன்னும் அதிகமாய்க் கேட்க, தமயந்தி அழுதுகொண்டே இருந்தாள்.


``15 வயசு இருக்குமா இவளுக்கு?’’

``சரியா 15. வீட்டுல மாமி எப்படி இருக்காங்க?’’

``ம்ம்ம்... அவளுக்கென்ன, வயசுலேயே கோயில் குளம்னு சுத்திட்டிருப்பா. இப்ப கேட்கவா வேணும்.’’

``என்னா கண்ணுடி இவளுக்கு. அப்படியே அப்பனை உரிச்சுவெச்சிருக்கு. என் கண்ணே பட்டுரும்’’ ஆஸ்பத்திரியில் குழந்தையைப் பார்த்த மாத்திரத்தில் சுந்தரின் மனைவி சொல்லியபடி, திருஷ்டி சுற்றினாள்.

``மாமா...’’ என்றழைத்த தமயந்தியின் குரல் பலவீனமாய் இருந்தது.

`என்ன?’ என்பதுபோல திரும்பிப் பார்த்தார்.

``இனிமேலாவது அவரைக் குடிச்சிட்டு வர வேண்டாம்னு சொல்லிப்பாருங்களேன்.’’

``அதெல்லாம் இனிமே தானா குறைஞ்சிடும் பாரேன். `குழந்தைக்கு இன்ஃபெக்‌ஷன் வந்திடும். அது இது’ன்னு சொல்லி பயமுறுத்தினாலே போதும். எத்தனையோ மொடாக்குடிகாரன் எல்லாம் பெத்த பொண்ணுக்காகத் தலைகீழா மாறியிருக்கான். இவன் எம்மாத்திரம்?’’ என்றாள் சுந்தரின் மனைவி.

உறுத்தல் - சிறுகதை

குழந்தையின் கையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தான் நடராஜன். முகமெல்லாம் சந்தோஷம். கையில் வைத்திருந்த காசையெல்லாம் சாக்லேட்டுகளாய் மாற்றி, ஹாஸ்பிடலில் இருந்த அனைவருக்கும் ``எனக்குப் பொண்ணு... எனக்குப் பொண்ணு பொறந்திருக்கு’’ எனச் சொல்லிக்கொண்டே கொடுத்தான்.

``மாறிருவான்தான் போலயிருக்கு’’ என்று தமயந்தியைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னார் சுந்தர். அவர் குரலில் இருந்த நம்பிக்கை, தமயந்திக்கும் தொற்றியது.

குழந்தை வீட்டுக்கு வந்த பத்தாவது  நாள், நடராஜன் மீண்டும் குடித்துவிட்டு வந்தான். குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள். அப்படியே அவளின் மடிமேல் சாய்ந்து பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தையை முத்தமிட வந்தான். அவனை அப்படியே எக்கித் தள்ளினாள் தமயந்தி. போதையில் இருந்ததால் தடுமாறி, சுவரில் மோதி விழுந்தான். கோபத்தோடு எழுந்து ``என் கொழந்தைய நான் தொடக் கூடாதா?’’ என்று அவளின் மடியில் பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தையைப் பிடுங்கினான். அதை எதிர்பாராத தமயந்தி, சட்டென சுதாரித்தபடி குழந்தையைத் தன் பக்கம் இழுக்க, குழந்தை அவ்வளவு வன்முறையை எதிர்பார்க்காமல் வீறிட்டு அலறியது. ``விடுங்க... விடுங்க... குழந்தைய நானே தர்றேன்’’ என்று சொல்லி, அவளின் பிடியை லேசாய் விடுவிக்க, அதை எதிர்பார்க்காத நடராஜன் குழந்தையோடு மடேலென்று மல்லாக்க விழுந்தான். குழந்தை, சுவரில் மோதி அழுகையை நிறுத்தியது. அதன் பிறகு அழவேயில்லை.

``என் குழந்தைய நான்தான் கொன்னுட்டேன். என்னை மன்னிச்சிரு... மன்னிச்சிரு’’ என தமயந்தியின் கால் பிடித்து அழுத நடராஜனைப் பார்க்க, சகிக்கவில்லை. தமயந்தி அவனைப் பார்க்கப் பிடிக்காமல் அங்கிருந்து எழுந்து ``மாமா, எனக்கு இங்கிருக்கப் பிடிக்கலை. உங்க வீட்டுல எனக்கு இடம் இருக்குமா?’’ என்றவளின் கண்களிலிருந்து தாரைதாரையாய் நீர் வந்துகொண்டிருந்தது.

சுந்தர் மாமா நிமிர்ந்து பார்த்து, ``அவளைக் கூட்டிட்டுப் போ’’ என்றார் மனைவியைப் பார்த்து.

``தமயந்தி... செல்லம்... என்னை விட்டுப் போயிடாதடீ... நான் தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிரு’’ என்று மூக்கில் சளி ஒழுக அழுத நடராஜனைப் பார்க்க, அனைவருக்குமே பரிதாபமாய் இருந்தது.

``பெத்த குழந்தையைப் பறிகொடுத்தவ... புருஷனேயானாலும் எப்படிப் பார்ப்பா... வயிறு பதறாது?’’ என்று அவள் போவதையே பார்த்த சுற்றம் உள்ள பெண்கள் பேசினார்கள்.

``எ
ன்ன விஷயம் மாமா? இத்தன வருஷத்துக்குப் பிறகு தேடிக் கண்டுபிடிச்சு வந்திருக்கீங்க?’’

``ம்ம்க்கும்... ம்ம்ம்க்கும்’’ என்று தேவையில்லாமல் கனைத்தபடி சுபாஷினியைப் பார்த்தார்.

``கண்ணு... பக்கத்து ரூமுல இரு. அம்மா பேசிட்டு வர்றேன்’’ என்றவுடன், சுபாஷினி எழுந்து போனாள்.

உறுத்தல் - சிறுகதை

``நான் உன்னை வந்து பார்த்திருக்கணும். இன்னைக்குத் தேடி அலைஞ்சாப்போல தேடியிருக்கணும். தப்பு பண்ணிட்டேன்’’ என்றவரின் கண்களில் நீர் வழிந்தது. தமயந்தி, அவர் அழுவதையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். அவர் அழுகை நிற்கின்ற வழியாய்த் தெரியாததால், அவர் அருகில் வந்து அமர்ந்து மாமாவின் கையைத் தன் கையில் எடுத்து வைத்துக்கொண்டாள்.  ``ஏன், என்ன ஆச்சு திடீர்னு?’’

``என்னால முடியலை மாமா. அவன் நடவடிக்கைக்கு நானாச்சுன்னு சொல்லித்தான் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்தீங்க. நல்ல சம்பளம். நல்லா ஜம்முனு இருக்கான்னுதான் என் அண்ணன் சரின்னான். அவன் என்ன செய்வான்? அட்டக்கறுப்பியா ஒரு தங்கச்சியை எத்தன வருஷம் வெச்சிக் காப்பாத்துவான்? ஆனா, உங்களைப் பார்த்தப்போ எனக்கு நம்பிக்கை வந்துச்சு. நீங்கதான் சொன்னீங்க. `நான் சொல்றேன் அவன் சரியாயிருவான். நீதான் அவனைத் திருத்தணும்’னு சொன்னப்போ, நான் நம்பினேன். குழந்தை போனப்போ எவ்வளவு அழுகை, மன்னிப்பு, கால்ல விழறது எல்லாம். அந்த ரோஜாப்பூக் கையை விரிச்சு என் மார்ல தடவுன ஸ்பரிசம்கூட மறக்கலை. போயிட்டா.  நீங்க அவ்வளவு சொன்னதனாலதான் வீட்டுக்குப் போனேன். நீங்க சொல்லி நான் கேட்காம இருந்திருக்கேனா? திரும்ப அதே குடி. கேட்டா, பொண்ணு ஞாபகம்கிறான். வலிக்க வலிக்கப் பெத்தவளுக்கு இல்லாத வருத்தம், இழுத்துச் சுவத்துல அடிச்சிக் கொன்னவனுக்கு எங்கேர்ந்து வந்துச்சு? கைநிறையக் காசு இருக்கு. சம்பாதிச்சதைக் குடிக்க, குழந்தைன்னு காரணம் இருக்கு. வீட்டுக்கு வந்தா தெனமும் படுத்து எழ நான் இருக்கேன். வேற என்ன வேணும் இந்த ஆம்பளைக்கு? எனக்குப் பிடிக்கலை, வேண்டாம்னு சொன்னா, செத்துப்போனவளைத் திரும்பக் கொண்டுவரணுமாம். திரும்பவும் சுவத்துல அடிச்சுக் கொல்றதுக்கா?

நான் மட்டும் சுமாரான கலரோடு இருந்திருந்தா, ஒரு மெடிக்கல் ரெப்போ, சேல்ஸ் மேனோடயோ நிம்மதியா ஒண்டுக்குடித்தனத்துலயாவது நல்லா வாழ்ந்திருப்பேனில்லை. கறுப்பா பொறந்து யார் ஏத்துக்குறானோ, அவனுக்குக் கழுத்த நீட்டணும்னு விதி. அனுப்பிவிட்டுறணும்னு உடன் பொறந்தவனுக்குக் கட்டளை. கறுப்பா இருந்தாதான் என்ன? எனக்கு மனசில்லை? கறுப்பா இருக்கிற என்கூடப் படுத்தாலும் சந்தோஷமாத்தானே இருக்கே? முடியலை. என்னைக் கொஞ்சம் சந்தோஷமா வெச்சிருந்தா நான் அவனை எவ்வளவோ சந்தோஷமா வெச்சிருப்பேன்னு அவனுக்குத் தெரியலை. அப்படித் தெரியாதவனோடு, அவன் சந்தோஷத்துக்காக மட்டும் படுத்து புள்ள பெத்துக்க முடியாது. முகத்தை கிட்டப் பார்க்கும்போதெல்லாம் ரத்தமா இருக்கு அவன் முகம். என்னை அங்கே போகச் சொல்லாதீங்க. ப்ளீஸ்...’’ என்று அழுதபடி சுந்தரை அணைத்துக் குலுங்கி அழ ஆரம்பித்தாள் தமயந்தி. சுந்தர், அமைதியாய் அவளின் அழுகை முடியும் வரை காத்திருந்தார்.


``நீ ஏன் யார் கண்காணாம எல்லாத்தையும் விட்டுட்டுப் போனே? என்னாச்சுன்னு எல்லாரும் கேட்டுக்கிட்டே இருந்தாங்க. நடராஜன் உன் அண்ணன் வீட்டுக்கெல்லாம் போய்த் தகராறு பண்ணி, போலீஸ் கேஸ் ஆகி, பெரிய பிரச்னை ஆகியிருச்சு. வடநாட்டுக்கு சமையல் வேலைக்குப் போறேன்னு அவனும் கிளம்பிட்டான். அப்புறம் எனக்கும் டச் விட்டுப்போச்சு. திரும்ப வந்ததுக்கு அப்புறம் எப்பயாச்சும் போன் பண்ணிப் பேசுவான். போன வாரம் குடிச்சுக் குடிச்சே போய்ச் சேர்ந்துட்டான்.  அவனுக்கு ஒரு பொண்டாட்டி இருக்கா? அவளுக்குத் தகவல் சொல்லணுமில்லையா? தேட வேணாமான்னு புலம்பிட்டேயிருந்தா என் பொண்டாட்டி. எதுக்குச் சொல்லணும்னு தோணிச்சு.  யாரும் வேண்டாம்னு இத்தனை வருஷமா கல்லு மாதிரி மனசை வெச்சிட்டு எங்கேயோ நல்லாருக்கான்னு நினைச்சிட்டிருந்தவளை எதுக்கு போய்த் தேடிக் கண்டுபிடிச்சு உன் புருஷன் செத்துட்டான்னு சொல்றதுனால என்ன கிடைக்கப்போவுதுன்னு தோணிச்சு’’ தமயந்தியின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார்.

உறுத்தல் - சிறுகதை

``உன் பொண்ணு போட்டோவை எஃப்.பி-ல பார்க்கிற வரைக்கும். செஸ் டோர்னமென்ட்ல ஸ்டேட் லெவல் வின்னர்னு என் தம்பி பொண்ணு காட்டினா. அவளுக்கு மியூச்சுவல் ஃப்ரெண்டாம். உன்னைத் தேடியிருக்கணும். யாருக்காக இல்லாட்டியும் எனக்காக உன்னைத் தேடியிருக்கணும். தப்பிக்கிறதா நினைச்சு, தள்ளிப் போட்டுட்டேன். அது கில்ட்டா அறுத்துட்டேயிருக்கு. போட்டோவுல உன்னையும் பொண்ணையும் பார்த்ததும் உறுத்தல் தாங்கலை. என்னாலதானா?’’  என்று குலுங்கி அழ ஆரம்பித்தார் சுந்தர்.

``ஸ்…ஸ்... அழாதீங்க. சுபாஷினிக்கு எதுவும் தெரியாது. அவளைப் பொறுத்தவரைக்கும் அவளுக்கு அப்பாவே இல்லை. உறவுன்னு மொத முறை ஒருத்தர் இங்க வந்திருக்கிறது நீங்கதான்.  வளர்ந்து நிக்குற பொண்ணு. அவளுக்குப் புரியும். ஆனா, ஏதும் கேட்க மாட்டா. அழுத்தம், நிதானம், தைரியம், உங்களைப்போல.’’

சுந்தர் கலங்கிய கண்களோடு தமயந்தியை நிமிர்ந்து பார்த்தார்.

``நடராஜன் எனக்குப் பண்ணதுக்கு, உங்களண்ட எவ்வளவு அழுகை, எத்தனை திட்டு, எவ்வளவு வருத்தம். எதுக்காச்சும் `நீ யாருடி, என்னைக் கேள்வி கேட்க?’ன்னு ஒரு பார்வை, ஒரு சுடுசொல் சொல்லியிருப்பீங்களா?  என்ன சொன்னாலும், எது நடந்தாலும் நான் இருக்கேன் உனக்குன்னு அழுது முடியுற வரைக்கும் தோள் கொடுக்கிற ஆம்பள, பொம்பளைக்கு எவ்வளவு தைரியம், பாதுகாப்பு, நம்பிக்கை தெரியுமா? அது அத்தனையும் எனக்கு உங்ககிட்ட மட்டுமே கிடைச்சது. நமக்குள்ள அது நடந்திருக்கக் கூடாது. பட் வருத்தமெல்லாம் இல்லை. என்னைக்கு உங்களோட அன்பு, தைரியம், பாதுகாப்பு, நம்பிக்கை எனக்குள்ள வளர ஆரம்பிச்சிச்சோ, அன்னைலேர்ந்து எனக்குள்ள அசாத்திய நம்பிக்கை. நீங்களே என்கூட இருக்கிறா மாதிரி.

ரெண்டு பேருக்கும் உறுத்தக் கூடாதுன்னுதான் நான் காணாமப்போனேன். நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிற மொத ஆள் நீங்கதான். சுபாஷினியும் நானும் சந்தோஷமா, நிம்மதியா இருக்கோம். அது அப்படியே இருக்கணும்னுதான் நீங்களும் நினைப்பீங்க. நினைக்கணும். அதான் ரெண்டு பேருக்கும் நல்லது. இருங்க காபி எடுத்துட்டு வர்றேன். சாப்பிட்டுக் கிளம்புங்க’’ என்று சுந்தரின் கண்களைத் தன் கையால் துடைத்து, அவரை அணைத்து, பெருமூச்சு விட்டு, சமையல் அறைக்குள் சென்று காபி எடுத்து வந்தபோது சுந்தர் கிளம்பியிருந்தார்.

- ஓவியங்கள்: ஸ்யாம்

உறுத்தல் - சிறுகதை