Published:Updated:

அவிழ்க்கப்பட்ட சுடிதாருக்குப் பதில் லத்தியைக் கையில் எடுத்தாளே அவள்...நன்றி இரஞ்சித்! #Kaala

இரஞ்சித்தின் திரைப்படங்களில், மண் அரசியலுக்கு அடுத்து அதிகம் இருப்பது பெண்ணும் பெண்ணைச் சுற்றியிருக்கும் அரசியல்தான். அப்படிதான் ‘காலா’வின் பெண்களும்!

அவிழ்க்கப்பட்ட சுடிதாருக்குப் பதில் லத்தியைக் கையில் எடுத்தாளே அவள்...நன்றி இரஞ்சித்! #Kaala
அவிழ்க்கப்பட்ட சுடிதாருக்குப் பதில் லத்தியைக் கையில் எடுத்தாளே அவள்...நன்றி இரஞ்சித்! #Kaala

``எங்களுக்குப் போராடவும் தெரியும்; அடிக்கவும் தெரியும்!”

``வீட்டுக்குள்ளே கையப் பிடிக்கவே இடம் இல்லே.. இதுல எங்கே முத்தம் கொடுக்க..!”

``நான் லூஸா, நான் யாருன்னு எனக்குத் தெரியும்!”

``சரி சரி, எனக்கும் திருநெல்வேலிக்கு டிக்கெட் போடுங்க. நானும் பெருமாள்கிட்ட பேசிட்டு வந்துடறேன்!”

- `சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் படத்தில், பெண் கதாபாத்திரங்கள் இவ்வளவு அழுத்தமான, யதார்த்தமான வசனங்கள் பேசி கேட்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், ‘காலா’ திரைப்படத்தில் பெண்களின் உரிமையையும் சமத்துவத்தையும் பேசும் இதுபோன்ற பல வசனங்கள் சாத்தியமாகியுள்ளன. ஏனென்றால், இது நிலம் பற்றி பேசும், ’நீலம்’ பற்றி பேசும் அரசியல்வாதி (அலெஸ்) இயக்குநர் பா.இரஞ்சித் திரைப்படம்!

இரஞ்சித்தின் திரைப்படங்களில், மண் அரசியலுக்கு அடுத்து அதிகம் இருப்பது பெண்ணும் பெண்ணைச் சுற்றியிருக்கும் அரசியல்தான். ‘மெட்ராஸ்’ கலையரசி, ‘கபாலி’ குமுதவல்லி என ஆணை எதிர்த்து நிற்கும் துணிச்சல் இருக்கும். ஓர் முரட்டு ஆணை உருக்கவைக்கும் காதல் இருக்கும். ஓர் அதிரடி ஆண் மகனைப் பணியவைக்கும் அதிகாரம் இருக்கும். அப்படிதான் ‘காலா’வின் பெண்களும். ஆனால், இரஞ்சித்தின் மற்ற திரைப்படங்களில் காட்டிய பெண் கதாபாத்திரங்களைவிடவும், காலாவின் பெண்களிடம் அவ்வளவு அழகு; அவ்வளவு அழுத்தம்; அவ்வளவு அதிகாரம்; அவ்வளவு அன்பு.

இரண்டே காட்சிகளில் கடந்துவிடும் பெண்ணும் நம்மை ஏதோ ஒரு வகையில் பாதிக்கிறார். ``என் புருஷனை முதன்முதலில் சந்தித்தது பப்ளிக் டாய்லெட்கிட்ட!” எனச் சொல்லும் அந்த நடுத்தர வயது பெண்மணி; ``உன் புருஷன் என்ன பண்றாரு?” என காலா கேட்டதும், 'ஐ யம் சிங்கிள் மதர்' என்று கேஷூவலாக சொல்லும் முன்னாள் காதலி சரினா (அங்கே எந்தவிதமான பரிதாபமோ அனுதாபமோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!), முன்னாள் காதலியைப் பார்த்துவிட்டு வந்த கணவனிடம், ``என்னையும்தான் பெருமாளுன்னு ஒருத்தன் சுத்திச் சுத்தி வந்தான். எனக்கும் ஆசைதேன். அதான் நீங்க கட்டிக்கிட்டு வந்துட்டீங்களே. சரி சரி, எனக்கும் திருநெல்வேலிக்கு டிக்கெட் போடுங்க. நானும் பெருமாள்கிட்ட பேசிட்டு வந்துடறேன்” என்று நையாண்டி செய்யும் மனைவி செல்வி, ``துப்பாக்கியைத் தூக்கிட்டு, நீ இங்கிருந்து தைரியமா வெளில போய்டுவியா?” என்று காக்கிச் சட்டையைக் கேள்வி கேட்கும் பெண்மணி, ``அவருக்கு அரசியல் எல்லாம் தெரியாது மாமா; அப்பாதான் தெரியும். இன்னொரு உயிரைப் போக விட்டுடக்கூடாது மாமா” என்று நியாயமான கோபத்துடன் கூறும் காலாவின் மருமகள் என ஒவ்வொரு பெண் கதாபாத்திரங்களுக்கும் அழுத்தமான வசனங்கள். அவர்கள் எல்லோரின் குரல்களிலும் உரிமையும் சுதந்திரமும் ஒட்டிக்கொண்டிருப்பதை உணரமுடிகிறது.

கபாலியில் 'உன் கறுப்பு நிறத்தைத் தொட்டு பூசிக்கணும்' என்று வெள்ளை நிற கதாநாயகி சொல்லும் இடத்தில், ஆண் பார்வையில் சறுக்கியிருந்தார் இரஞ்சித். 'காலா'வில் ஈஸ்வரி ராவின் கறுப்பழகில் அதை நேர்ப்படுத்தியிருக்கிறார். தாதாவின் மனைவி என்றால், வெள்ளை வெளேரென அழகாகவோ, அழகான கண்களில் பயத்தைக் காட்டுபவர்களோ இருப்பார்கள். இல்லையென்றால், அவர்களும் 'ஏய்' என்று தொண்டை நரம்புத் தெறிக்க குரல் கொடுப்பார்கள். 'காலா'வின் லேசாக மஞ்சள் பூசிய கதாநாயகிதான், தோன்றும் இடங்களில் எல்லாம் தன் கணவனைக் காதலுடன் நையாண்டி செய்பவளாகவே வருகிறாள்.

PC: instagram.com/anjalipatilofficial

'காலா' தன் முன்னாள் காதலியை, 'ஏய் லூஸு' என்று கடிந்துகொள்ளும்போது, 'நான் லூஸா, நான் யாருன்னு எனக்குத் தெரியும்' என்று சீறுகிறார் சரினா. காதலித்தவனே என்றாலும் 'லூசு' என்பது பெண்களை வெகுளியாக்க செய்யும். 'வா தலையை முட்டிக்கலாம்' என்று இன்னும் லூசுப் பெண்ணாகவே காட்டிக்கொள்ளும். இங்கே அப்படியல்ல. ஒரு காட்சியில், தன் காலில் விழச்சொன்ன வில்லனுக்கு, மற்றொரு காட்சியில் கை கொடுத்து, 'சம உரிமைன்னா என்னனு கத்துக்கோ'னு சொல்லும் சரினாவின் கதாபாத்திரம் செம்ம மாஸ்!

'ப்யூர் மும்பை' திட்டத்தின் கீழ் உங்களுக்கு வசதியான இருப்பிடம் கட்டித் தருகிறோம். உங்களுக்குத் தேவையானதைச் சொல்லுங்க எனக் கேட்டதும், `வீட்டுக்குள்ளே கையப் பிடிக்கவே இடம் இல்லே. இதுல எங்க முத்தம் கொடுக்க!' என்றும், `எங்களுக்கு படிக்க ஸ்கூல் வேணும்', 'ஆஸ்பத்திரி வேணும்', 'பாத்ரூம் வேணும்', 'வயசுப் பிள்ளைங்க வீட்டுல இருக்கு'னு ஒவ்வொருவரும் சொல்லும் வரிகள் வடுக்களாகப் பதிகின்றன.

தன் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் சாருமதியை (அஞ்சலி பட்டேல்), காவல்துறை குறிவைத்து ஆடையை உருவி எறிகிறது. ஒரு கணம் கூனிக் குறுகி உட்காரும் அவளுக்கு ஒரு பக்கம் அவிழ்க்கப்பட்ட ஆடை, மறுபக்கம் அடித்து நொறுக்க காத்திருக்கும் லத்தி. ஒரு கணம் எதை எடுப்பது என்று யோசித்து, அடுத்த கணம் எடுத்தது லத்தியை. தன்னை அவமானப்படுத்த நினைத்த காவல்துறையை அடித்து துவைக்கிறாள். அடியும் வாங்குகிறாள். அங்கு அவள் அடிப்பதும் அடி வாங்குவதும் விஷயமல்ல, அவள்  எடுத்த முடிவுதான் முக்கியம். அதுதான் ஒரு பெண்ணின் போராட்டத்தின் உச்சம். தன்மானத்தை இழக்கும் சூழ்நிலை வந்தாலும் தன் உரிமையை மீட்டெடுப்பாள் என்பதற்கான உதாரணம் அந்தக் காட்சி. அந்தப் பெண் போராளியை உருவாக்கியதற்கு நன்றி இரஞ்சித். பெண்களின் நிர்வாணத்தின் மீது இனி எந்த ஆணும் தன் வெற்றி வரலாற்றை எழுதமுடியாது என்பதை 'காலா' அழுத்தமாகப் பதிவிட்டிருக்கிறது. 

இதுவரையிலான திரைப்படங்களில், ரஜினி பெண்களை மட்டம்தட்டிப் பேசும்போதெல்லாம், ஆரவாரித்தது ஒரு தலைமுறை. ஆனால், இந்தத் தலைமுறை ’கிளிஷே’ ஹீரோயிசங்களை காலாவின் மனைவியும், முன்னாள் காதலியும் உடைக்கும் இடங்களில் ஆரவாரிக்கிறது. வெல்டன் ரஞ்சித்!

வில்லனின் பேத்தி தன் தாத்தாவிடம் காலாவைப் பற்றி, ``He seems to be a nice man'' என்பாள். அதுபோல, பெண்களின் சார்பில் நாங்கள் உங்களிடம் சொல்கிறோம்...

யு ஆர் எ ஜெண்டில்மேன் இரஞ்சித்!