Published:Updated:

``நதிக்கு பொன்னி, பிரபாஸுக்கு  செல்வன்னு பொன்னியின் செல்வனா எடுக்கலாம்னு இருந்தோம்!"- மதன் கார்க்கி

"'பாகுபலி' படத்துக்கு 'பொன்னியின் செல்வன்'னு பேர் வைக்கலாம்னு சொன்னாங்க!'' - மதன் கார்க்கி

`பொன்னியின் செல்வன்' நாவலைப் படமாக எடுக்க ஆசைப்பட்டவர் எம்.ஜி.ஆர். ஆனால், கடைசிவரை அது வெறும் ஆசையாகவே இருந்துவிட்டது. தற்போது, தவச்செல்வன் இயக்கத்தில் அனிமேஷன் வடிவில் தொடராக வரவிருக்கிறது. இதில், வந்தியத்தேவனாக எம்.ஜி.ஆரும், குந்தவையாக ஜெயலலிதாவும் அனிமேஷன் கிராஃபிக்ஸ் உதவியுடன் தோன்றியிருக்கிறார்கள். இதுகுறித்து மதன் கார்க்கியிடம் பேசினோம்.

10 ஆயிரத்துக்கு வாங்கிய எம்.ஜி.ஆர், திரைக்கதை எழுத மகேந்திரன்!-`பொன்னியின் செல்வன்' பின்னணிக் கதைகள்

"கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சிருக்கிற என்னுடைய சில நண்பர்கள் பாண்டிச்சேரியில இருந்து வந்திருக்காங்க. `பொன்னியின் செல்வன்' அனிமேஷன் வெர்ஷன் பத்தி சொல்லி, அதற்கு வசனமும், பாடல் வரிகளும் எழுதித் தரச் சொல்லி கேட்டாங்க. அவங்களுடைய படைப்பைப் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. தமிழ்ல இந்தத் தரத்துல இதுவரைக்கும் எந்த அனிமேஷன் சீரிஸும் வந்ததில்லை. ஒன்றரை வருஷமா இந்த டீம்ல வேலைபார்த்திருக்கேன். அவங்களுக்கு நிறைய இன்புட்ஸும் கொடுத்திருக்கேன். அனிமேஷன் வடிவுல எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் பார்த்ததுல எனக்கு சந்தோஷம்.

மதன் கார்க்கி
மதன் கார்க்கி

வந்தியத்தேவனுடைய அறிமுகப் பாடல் ரிலீஸ் ஆகியிருக்கு. நாவலில் இருக்கிற வசனங்களை அப்படியே எடுத்து பயன்படுத்தலை. இது, நாவலின் தழுவல் மட்டும்தான். கிளாஸிக் லுக்குல எல்லோரும் ரசிக்கிற மாதிரி இதை உருவாக்கியிருக்கோம்" என்று உற்சாகம் பொங்கப் பேச ஆரம்பித்தார் மதன் கார்க்கி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொன்னியின் செல்வன் சமீபத்தில் படிச்சீங்களா?

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

"என்னுடைய மகனுக்கு இந்த நாவலை தினமும் படிச்சுக் காட்டுறேன். அவனுக்குப் பிடிச்ச விஷயங்களைப் பார்க்கிறப்போ வித்தியாசமா இருக்கு. எந்த விஷயத்துக்கெல்லாம் அவன் ஆச்சர்யப்படுறானோ... ரசிக்கிறானோ, அதெல்லாம் எனக்கு எழுதும்போது ரொம்ப உதவியா இருக்கு. முக்கியமா அனிமேஷன்ங்கிறதால குழந்தைகளை ரசிக்கவைக்கிற சில ஃப்ளேவரை இதுல சேர்த்திருக்கேன். எம்.ஜி.ஆருக்கு இதுல ஆக்‌ஷன் சீக்வென்ஸ் இருக்கு. அதையெல்லாம் இன்டர்நேஷனல் லெவலுக்கு எடுத்திருக்காங்க. போக, நிறைய மாணவர்களும் இதுல வேலைபார்த்திருக்காங்க."

மணிரத்னம் பொன்னியின் செல்வனைப் படமா எடுக்கிற இந்த நேரத்துல, இந்த அனிமேஷன் வெர்ஷனை எப்படிப் பார்க்கிறீங்க?

மணிரத்னம்
மணிரத்னம்

"ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடியே இந்த புராஜெக்ட் உள்ள போயிட்டேன். அப்போ, மணி சார் இதைப் படமா எடுப்பார்னு நான் நினைக்கவே இல்லை. அதுக்கான அறிவிப்பும் வரலை. ஆனா, மணி சாரோட புராஜெக்ட்கூட இதைக் கம்பேர் பண்ணவே முடியாது. அவருடைய ஸ்டைல், மேக்கிங் எல்லாம் வேற. திரையில அவருடைய படத்தைப் பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கேன். அவருடைய ஸ்டைல் ஆஃப் சினிமாவுல கண்டிப்பா இதை ஒரு கிளாஸிக் லுக்ல கொடுப்பார்னு நினைக்கிறேன்."

`பாகுபலி'க்கு அப்புறம் ராஜமௌலியோட `RRR' படத்துலேயும் வொர்க் பண்றீங்க. அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்க?

ராஜ மெளலி
ராஜ மெளலி

"இந்தப் படம் சம்பந்தமா நான் நிறைய விஷயங்களைப் பேச முடியாது. `இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள் சந்திக்கும்போது என்ன நடக்குது'ங்கிறதைக் கற்பனை வடிவத்துல கொடுத்திருக்கோம். `பாகுபலி' பார்க்கும்போது மெய் சிலிர்த்துப் போவோம்ல; அதே மாதிரி இந்தப் படம் பார்க்கும்போதும் ஒருவித பிரமிப்பு ஏற்படும். ராஜமௌலி ஒரு நல்ல கதை சொல்லி. கொஞ்சமும் சுவை குறையாம படத்தை எடுத்துட்டுப் போவார். இவரோட அப்பா விஜயேந்திர பிரசாத், சொல்ற கதையைக் கேட்டு ரசிப்பார். இந்த ரெண்டு பேர்கூட வொர்க் பண்ணும்போது நிறைய அனுபவங்கள் கிடைச்சது. அரை மணி நேரம் விஜயேந்திர பிரசாத் சார்கூட இருந்தா, நமக்கு இருபது கதை சொல்லிடுவார். `பாகுபலி' சமயத்துல, இந்தப் படம் மாதிரியே பொன்னியின் செல்வனை எடுக்கணும்னு பேசிட்டிருந்தாங்க. உண்மையைச் சொல்லணும்னா, `பாகுபலி' படத்துக்கு `பொன்னியின் செல்வன்'னே தலைப்பு வெச்சிடலாமான்னு விஜயேந்திர பிரசாத் சார் கேட்டார். ஏன்னா, `பாகுபலி' கதை ஒரு நதியில இருந்துதான் தொடங்கும். நதிக்கு `பொன்னி'ன்னு பெயர் வெச்சிட்டு, பிரபாஸுக்கு `செல்வன்'னு வெச்சிடலாம்னு யோசனை சொன்னார். கதையில வித்தியாசம் இருந்ததால வேண்டாம்னு சொல்லிட்டேன்."

சாவித்ரியின் `நடிகையர் திலகம்', இப்போ ஜெயலலிதாவின் `தலைவி'... இந்த மாதிரியான பயோபிக் அனுபவம் எப்படி இருக்கு?

நடிகையர் திலகம்
நடிகையர் திலகம்

"'நடிகையர் திலகம்' படத்தைப் பொறுத்தவரை, ஒருத்தரோட வாழ்க்கையைப் படிச்சிப் புரிஞ்சிகிட்டு வேலைபார்க்கும்போது, அவங்களோட டிராவல் பண்ற மாதிரியான உணர்வைக் கொடுக்கும். என்னுடைய அம்மா, சாவித்ரியின் ரசிகை. அவங்களைப் பத்தி நிறைய விஷயங்களைச் சொன்னாங்க. அதே மாதிரி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடிச்ச படங்களை எல்லாம் பார்த்திருக்கேன். `ஆயிரத்தில் ஒருவன்', `நாடோடி மன்னன்' படம் எல்லாம் எத்தனை தடவை பார்த்தேன்னு கணக்கு இல்லை. இப்போ அவங்களுடைய பயோபிக்குக்கு வசனமும் பாடல்களும் எழுதுறது சொல்ல முடியாத உணர்வைக் கொடுத்திருக்கு. அவங்களுடைய வாழ்க்கை, நதி மாதிரி. அந்த நதியில துள்ளிக் குதிக்குற மீன் மாதிரி நான்."

பயோபிக் படங்களுக்கு வசனம் எழுதும்போது, வரலாறு சம்பந்தமான சந்தேகங்கள் வர்றப்போ அப்பாகிட்ட டிஸ்கஸ் பண்ணுவீங்களா?

"அப்பாவோட டிஸ்கஸ் பண்றதே அபூர்வம்தான். ஏன்னா, படங்கள் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம்தான் அப்பா பார்ப்பாங்க.`பாகுபலி' நேரத்துல அப்பாகூட பேசியிருக்கேன். சில வடமொழிச் சொற்களைத் தமிழ்ல எப்படி இருந்தா நல்லா இருக்கும்னு யோசனை கேட்டிருக்கேன். `பொன்னியின் செல்வன்' அனிமேஷன் வெர்ஷன் பத்தி சொல்லும்போது , `எம்.ஜி.ஆருக்கு பாட்டு எழுதிட்ட... வரிகளும் ரொம்ப நல்லா இருக்கு'னு சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார்."

`என்.டி.ஆர்' முதல் `தலைவி' வரை... அரசியல் தலைவர்களின் பயோபிக்-கள் கிளப்பிய சர்ச்சைகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு