Published:Updated:

`லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுறாங்க!' - சுபஸ்ரீ விவகாரம் குறித்து விஜய்

பிகில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

actor vijay
actor vijay ( Twitter/Sony Music South )

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'பிகில்'. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில், நடிகர் கதிர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வழக்கம் போல் இப்படத்துக்கும் பாடலாசிரியர் விவேக் வரிகள் எழுதியிருக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் `சிங்கப் பெண்ணே', `உனக்காக' பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Bigil audio launch
Bigil audio launch
Twitter/Sony Music South

தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்காக பிளக்ஸ் பேனர்கள் என எதுவும் வைக்கப்படவில்லை. பேனரால் பரிதாபமாக சுபஸ்ரீ என்பவர் உயிரிழந்த நிலையில், இந்த விழாவில் பேனர்கள் தவிர்க்கப்பட்டிருந்தது. முன்னதாக ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸார் லேசாக தடியடி நடத்தினர். நிகழ்ச்சியில் விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபனா, `மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஆனந்தராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள நடிகர் சிவா, ரம்யா தொகுத்து வழங்கினர்.

ரஹ்மான் கச்சேரிக்கு பிறகு இயக்குநர் அட்லி பேசுகையில், ``தெறியை விட இரண்டு மடங்கு மெர்சல். மெர்சலை விட மூன்று மடங்கு பெரியது பிகில். என்னை வேற நடிகர்கள் கூடவும் படம் பண்ணுங்கன்னு விஜய் அண்ணா சொன்னார். ஆனால், நான் எந்த கதை எழுதினாலும், எனக்கு மனதில் முதலில் வருவது அவர்தான். மெர்சல் படத்திற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் நிறைய வந்தன. இருந்தாலும் என்னுடய லக்கி நடிகர் விஜய் அண்ணாதான். என் அண்ணன விட்டு நான் எப்படி வெளியே போவேன். அவர் இல்லைனா நான், என்னோட வளர்ச்சி எல்லாம் ஒண்ணுமே இல்லை. கமர்சியல் படமா, விளையாட்டு படமா என்பதைத் தாண்டி உங்களுக்கு பிடிச்ச படமா பிகில் இருக்கும்.

Vijay, atlee
Vijay, atlee
Twitter/Sony Music South

ராஜா ராணி கதை சொல்லும்போது ஒரு சட்டையோட கதை சொன்னேன் ஓகே அயிடுச்சு. அந்த சட்டைதான் ராசின்னு தெறி கதை சொன்னேன். அதுவும் ஓகே அயிடுச்சு. அந்த ராசியான சட்டை மெர்சல் பட கதை சொல்லப்போறப்போ பழசாகிடுச்சு. இருந்தாலும் அண்ணன நம்பி போனேன் மெர்சலுக்கு ஓகே சொன்னார். அப்போதான் புரிஞ்சது, எனக்கு ராசி சட்டை கிடையாது. விஜய் அண்ணன் தான்னு" என்று பேசியவரிடம் அவரது நிறம் குறித்து வெளியாகும் ட்ரோல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``இங்கிலீஷும் ஹிந்தியும் வெறும் மொழிகள் மட்டும்தான்; அதுவே தகுதி இல்ல. அதுமாதிரி கறுப்பும் ஒரு கலர் அவ்ளோதான்" என்றவர் டீசர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் எனக் கூறினார்.

இதையடுத்து மேடையேறிய விஜய், ``லைஃப் ஃபுட்பால் கேம் மாதிரி. நம்மலாம் கோல் அடிக்க ஆசைப்படுவோம். அதைத் தடுக்க ஒருகூட்டம்வரும். நம்மகூட இருக்குறவனே சேம்சைட் கோல் போட்ருவான். யாரோட அடையாளத்தையும் எடுத்துக்கிடாதீங்க. உங்களுக்குனு ஒரு அடையாளத்தை கொண்டுவாங்க. புடிச்சா எடுத்துக்கோங்க; இல்லைனா விட்டுருங்க. உலகத்துலயே உழைச்சவனை மேடையில் ஏத்தி அழகு பார்க்குற முதலாளி ரசிகன்தான். வெறித்தனம் பாட்டுக்காக ஒரு சாம்பிள் பாடி ரஹ்மான் சாருக்கு அனுப்பிவிட்டேன். ஆனால் அவர் மும்பைக்கு போயிட்டார்.

actor vijay
actor vijay
Twitter/Sony Music South

ஒருவேளை நான் பாட வேண்டாம்னு சொல்லிட்டாங்க போலன்னு நான் நினைச்சேன். ஆனால், அட்லி போன் பண்ணி ரஹ்மான் சார் ரெக்கார்டிங்க்கு கூப்பிட்டதா சொல்லும்போதுதான் எனக்கே தெரிஞ்சது. அரசியல்ல புகுந்து விளையாடுங்க; ஆனா விளையாட்டுல அரசியல் பாக்காதீங்க. சுபஸ்ரீ விவகாரத்தில் டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக் கொண்டுவந்திருந்த நல்லா இருந்திருக்கும். யார் மேல பழிபோடுறதுனு தெரியாம லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுறாங்க. யாரை எங்கு உட்கார வைக்கணுமோ... அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும்.." என்று பேசினார்.