
காதல் பரிசு
‘எருமசாணி’ யூடியூப் சேனல் மூலம் புகழ்பெற்றவர் ஹரிஜா. இப்போது ‘திருவிளையாடல்’ என்ற சேனலைத் தொடங்கி அதகளப்படுத்தி வருகிறார்.
காதல் திருமணம், க்வாரன்டீன், ரசிகர்களுடன் லைவ் உரையாடல் என எந்நேரமும் பிஸியாக இருக்கும் ஹரிஜா - அமர் ஜோடியை போனில் பிடித்தோம்.
“காலேஜ் முடிச்ச பிறகு, அஞ்சு மாசம் வீட்ல இருந்தேன். அதுக்குப் பிறகு, இப்போதான் வீட்ல இருக்கேன். இந்த க்வாரன்டீன் நாள்கள்ல அதிக நேரம் கிடைக்கிறதால குடும்பத்துக்கும் உடற்பயிற்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். அப்புறம் சமைக்கிறது, ஸ்க்ரிப்ட் எழுதுறது, ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் லைவ் வர்றதுன்னு என்கேஜ்டா இருக்கோம்” என்கிற ஹரிஜாவிடம் அவர் காதல் கதையைக் கேட்டோம்.
``கிட்டத்தட்ட ஏழு வருஷ ஃபிரெண்ட்ஷிப். நான் காலேஜ்ல யூஜி படிச்சிட்டிருக்கும்போது, அமர் எனக்கு சீனியர். ஒரே காலேஜ் என்பதால் நிறைய புராஜெக்ட்ஸ்ல சேர்ந்து வேலை பார்த்திருக்கோம். கல்லூரி நாள்கள்ல எனக்கும் அமருக்கும் நிறைய புரபோசல்கள் வந்திருக்கு. அப்போல்லாம் அமரை என் பாய் ஃபிரெண்டா நடிக்கச் சொல்லியிருக்கேன்!
காலேஜ் முடிச்சதும் ஒரு புராஜெக்ட்டுக்காக அமரை மறுபடியும் சந்திச்சேன். அப்போதான் அவரைப் பத்தி முழுமையா தெரிஞ்சுக்க முடிஞ்சது. ரொம்ப இயல்பா எங்களுக்குள்ள காதல் நுழைஞ்சது” என்று சிரிக்கிற ஹரிஜாவை, அவர் பிறந்தநாள் அன்று சர்ப்ரைஸ் ட்ரிப் அழைத்துச்சென்று திக்குமுக்காட வைத்தாராம் கணவர் அமர்.

‘‘என் பிறந்தநாளுக்கான புதுச்சேரி பயணம்தான் மறக்கவே முடியாத அற்புதமான கிஃப்ட். வேற பரிசு கொடுத்திருந்தாகூட அது என் நினைவுல நின்றிருக்குமானு தெரியலை” என்று சிலாகிக்கிற ஹரிஜாவைத் தொடர்கிறார் அமர்.
‘‘என் வாழ்க்கையோட முக்கிய தருணங்களை எல்லாம் சேகரிச்சு, என் பிறந்தநாள் அன்று ஒரு வீடியோவா போட்டுக் காட்டினாங்க ஹரிஜா. பொக்கிஷமான கிஃப்ட்னா அதுதான். பரிசு என்கிறது ஓர் அழகான உரையாடலாவோ, அருமையான வசனமாவோகூட இருக்கலாம். அந்த வகையில, ஹரிஜாவே எனக்குக் கிடைச்ச அற்புதமான பரிசுதான்” என்று ஃபீல் ஆகும் அமருக்கு, ஹரிஜாவின் சமையலில் பிரியாணிதான் ரொம்பப் பிடிக்குமாம்.
‘‘வீட்ல எந்த வேலை இருந்தாலும், அதை நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் பகிர்ந்துக்குவோம். யாரும் யாருக்காகவும் தன்னை மாத்திக்கவும் கூடாது; ஒருத்தரை ஒருத்தர் அடிமைப்படுத்தவும் கூடாதுன்னு நினைக்கிறோம். சில விஷயங்களை அந்த நேரத்துல மாத்திக்கணும்னு தோணும். ஆனா, எங்க இயல்பே அதுதான்கிற தெளிவு இருக்கும்போது எந்தப் பிரச்னையும் பெருசா தெரியாது. ஒருத்தருக்கு ஒருத்தர் அன்போட, ஆதரவா இருக்கணும்கிறதுதான் எங்க கல்யாண வாழ்க்கையோட குறிக்கோள்” என்கிற அமரைத் தொடர்ந்து, `‘ஆமாம் ஆமாம்'’ சொல்லி ஆமோதிக்கிறார் ஹரிஜா!