லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

எதுக்கும் கலங்கி உட்கார மாட்டேன்!

மஞ்சு வாரியர்
பிரீமியம் ஸ்டோரி
News
மஞ்சு வாரியர்

ஸ்டார்

``எந்த ஒரு விஷயத்திலும், அதிலுள்ள பாசிட்டிவ் தன்மையை மட்டும்தான் எடுத்துக்குவேன். அதனால, எந்த விஷயமும் தனிப்பட்ட முறையில் என்னை பாதிச்சதில்லை. சினிமா, நடிப்புதான் எனக்கான ஸ்ட்ரெஸ் பஸ்டர். தவிர, பயணம் செய்றது, புத்தகம் படிக்கிறது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுறதுன்னு நானும் யதார்த்தமான மனுஷியாகத்தான் வாழ்றேன். நடிப்பு என் தொழில். அதைத் தவிர்த்துட்டுப் பாருங்க. நானும் உங்களில் ஒருத்திதான்!” - இனிமையாகவும் எளிமையாகவும் உரையாடலைத் தொடங்குகிறார், மஞ்சு வாரியர். மலையாள சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் தமிழ்ப் பெண் மஞ்சு, `அசுரன்’ படத்தில் அசுரத்தனமான நடிப்பைத் தந்திருக்கிறார்.

படிப்பிலும் டாப்பரா இருந்திருக்கீங்க. நடிப்பால் படிப்பு தடைபட்டதில் வருத்தமில்லையா?

நல்லா படிப்பேன்! ஸ்கூல்ல என்மேல் எல்லோருக்கும் நல்ல மதிப்பு இருந்துச்சு. பத்தாம் வகுப்பில், என் ஃபேவரைட் கணக்குப் பாடத்தில் 98 மார்க் எடுத்தேன். ஆனாலும், நல்லா படிச்சு உயர்பொறுப்புக்குப் போகணும்னு அந்த வயசுல ஆசை எதுவும் வெச்சுக்கலை. அதுவும் எனக்கு ஒருவகையில நல்லதுதான்னு தோணுது. சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சதால், படிப்பை மிஸ் பண்ற உணர்வே ஏற்படலை.

மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர்

முதல் படமான `சாக்‌ஷ்ய’த்தில் நடிக்கும்போது உங்க உணர்வு எப்படி இருந்தது?

அப்போ சினிமாவைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. ஆனா, நடிக்கப் பயப்படலை. அந்தப் படம் ரிலீஸாகி தியேட்டரில் பார்த்தப்போ, என் நடிப்பு எனக்குப் பிடிக்கலை. `இன்னும் நல்லா நடிச்சிருக்கணும்’னு அது பத்தியே பல நேரங்களிலும் யோசிச்சுக்கிட்டே இருந்தேன். நடிப்பில் நான் செய்த தவறுகளைக் கண்டறிந்து, அடுத்தடுத்த படங்களில் சரி செய்துக்கிட்டேன். இப்போவரை என் படங்களைப் பார்த்து சந்தோஷப்படும் அதேவேளையில், என் நடிப்பில் சில குறைகளைக் கண்டுபிடிச்சுக்கிட்டேதான் இருப்பேன். 100 சதவிகிதம் சிறப்பா நடிச்சுட்டோம் என்ற உணர்வு இப்போதுவரை எனக்கு வரலை. அந்த உணர்வு, இந்த ஆயுள் முடிவதற்குள் கிடைச்சுடும்னு நம்புறேன். அதற்காக வாழ்நாள் முழுக்க நடிக்க ஆசைப்படறேன்.

`அசுரன்’ படத்தில் நடித்த அனுபவம்...

இந்தப் படம் பூமணி சார் எழுதிய `வெக்கை’ நாவலை அடிப்படையா வெச்சு எடுக்கப்பட்டிருக்கு. அதனால், `அந்த நாவலை நான் படிக்கணுமா... இந்தப் படத்துக்காக எனக்கு ஏதாவது ரெஃபரன்ஸ் தேவைப்படுமா’ன்னு ஷூட்டிங் தொடங்குறதுக்கு முன்னாடி, இயக்குநர் வெற்றி மாறன் சார்கிட்ட கேட்டேன். அவர், `எதுவும் வேண்டாம். இயல்பா வாங்க. தனுஷ்கிட்டயும் `வெக்கை’ நாவலைப் படிக்க வேண்டாம்னுதான் சொல்லியிருக்கேன்’னு சொன்னார். நான் இயக்குநர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்கிற ஆர்டிஸ்ட். அதனால், இந்தப் படத்துக்காக எனக்கு எந்த முன்தயாரிப்பும் தேவைப்படலை.

நான் பிறந்துவளர்ந்த நாகர்கோவில் உட்பட தமிழ்நாட்டின் பல ஊர் களுக்கு அவ்வப்போது வருவேன். அப்போதெல்லாம் தமிழ் மக்கள், தமிழ்ப் பெண்களின் செயல்பாடுகளைத் தெரிஞ்சுப்பேன். `அசுரன்' படத்தின் பெரும்பாலான காட்சிகளைக் கோவில் பட்டியில் படமாக்கினோம். அந்த ஊர் பெண்களின் நடை, உடை, பாவனை களைப் பார்த்தும், நேரடியா பேசியும் தெரிஞ்சுக்கிட்டேன். இதெல்லாம் என் நடிப்புக்கு உதவுச்சு.

`அசுரன்’ படத்தின் வெற்றி குறித்து...

`தியேட்டரில் ரசிகர்களுடன் இணைந்து நானும் ரசிக்கலாம்’ என்ற உணர்வு ஏற்படும் படங்களை மட்டுமே ஏத்துக்குவேன். அந்த உணர்வு, `அசுரன்’ படக்கதையைக் கேட்கும்போதே எனக்குள் உண்டாகிடுச்சு. மத்தபடி ஒரு படத்தின் வெற்றி தோல்வி பத்தி, முன்கூட்டியே எந்த முடிவையும் மனசுக்குள் ஏத்திக்க மாட்டேன். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் எளிமையா அணுக ஆரம்பிச்சுட்டால், வாழ்க்கை சுவாரஸ்யமாகும்.

டப்பிங் கொடுக்கிறப்போ, என் நடிப்பைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன். `அசுரன்’ ரிலீஸான தருணத்திலிருந்து இப்போவரை பல தரப்பிலிருந்தும் என் நடிப்புக்கும் படக் குழுவுக்கும் நிறைய பாராட்டுகள் வருது. பாராட்டு கிடைக்கும்போதெல்லாம், என் கவலைகளை மறக்கிறேன். இது என் முதல் தமிழ்ப் படம்னாலும், எல்லா வகையிலும் மனநிறைவு கிடைச்சிருக்கு. தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசைப்படறேன். பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த நடிகர்கள்?

நான் நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்பேன்; ரசிப்பேன். எல்லாக் கலைஞர்களும் ஏதாவதொரு வகையில் தனித்துவமான வர்கள்தாம். அவர்களில் பலரும் என் நண்பர்கள். அதனால, எனக்குப் பிடிச்ச ஒரு சிலரை குறிப்பிட்டுச்சொல்றது ரொம்ப கஷ்டம். குறிப்பா... ஜோதிகா, நயன்தாரா, பாவனா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல தமிழ் நடிகைகள் என் தோழிகள்.

பர்சனல் பக்கங்கள்...

அப்பா போன வருஷம் இறந்துட்டார். அம்மா, ஓர் அண்ணன் மற்றும் அவரின் குடும்பத்தினர்தான் எனக்கான உறவுகள். நான் கிளாஸிக்கல் டான்ஸர். ரிகர்சல், நிகழ்ச்சியில் நடனமாடுறதுன்னு நடனத்துக்கும் போதுமான நேரத்தை ஒதுக்குவேன். சும்மா இருக்கிறதுகூட எனக்குப் பிடிக்கும். என்ன நடந்தாலும் அதற்காக வருத்தப்பட்டு, கலங்கி உட்காரமாட்டேன். நடப்பதெல் லாம் நன்மைக்கேன்னு நம்புகிறவள் நான். இதையே என் பலமா நினைக்கிறேன். என் வாழ்க்கையில நகைச்சுவை முக்கிய பங்கு வகிக்குது. யாராச்சும் காமெடியா பேசினா, என்னை மறந்து ரசிப்பேன். மத்தபடி, மக்களிடமிருந்து கிடைக்கும் அன்பு மட்டுமே என்னை இயக்கிட்டிருக்கு.

மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர்

உங்க சிரிப்புப் பத்தி ஸ்பெஷல் பாராட்டுகள் கிடைச்சிருக்கா?

(சிரிக்கிறார்) பலரும் பாராட்டியிருக்காங்க. என் பற்கள் வரிசையா இருக்காது. அதைச் சரிபடுத்தணும்கிற தேவையும் எனக்கு ஏற்படலை. பற்கள் மட்டுமல்ல, என் முகத்துலயும் பல டிஃபெக்ட்ஸ் இருக்கு. அவை எல்லாமே எனக்கு ப்ளஸ்தான். அப்படித்தான் எல்லோருமே தங்களுடைய சின்னச் சின்னக் குறைகளையும் ப்ளஸ் பாயின்ட்டா நினைக்கணும். அந்த எண்ணம் வந்துட்டால், மத்தவங்க என்ன சொன்னாலும் நமக்கு வருத்தம் ஏற்படாது. அப்படி என்னை நானே ஊக்குவிச்சுக்கிறதாலதான், உற்சாகமா நடிக்க முடியுது. இந்த உலகத்துல யாருமே எல்லா விஷயத்துலயும் 100 சதவிகித பர்ஃபெக்ட்டா இருக்க முடியாது. அது, நம் படைப்பு மற்றும் வாழ்க்கை இரண்டுக்கும் பொருந்தும். குறிப்பா, `வரிசையா இல்லாத பற்கள்தான் உங்களுக்கு ஸ்பெஷல் அழகு’ன்னு பலரும் சொல்வாங்க. அப்போது சிரிப்பதுடன், அவங்க சொல்றது உண்மைன்னு நினைப்பேன்.

சமூகப் பணிகளில் செயல்படுவது பற்றி...

புற்றுநோய், தோட்டக்கலை வளர்ச்சி உட்பட பல விழிப்புணர்வு செயல்பாடுகளுக்கு தூதுவரா இருக்கேன். இந்தப் பணிகளில் கேரள அரசின் ஒத்துழைப்பும் இருக்கு. என் தனிப்பட்ட சமூகப் பொறுப்புணர்வு மற்றும் விருப்பத்தினால்தான் இந்தப் பணிகளைச் செய்றேன். ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற சமூகப் பணிகளைச் செய்தால், பெரிய மாற்றங்களுக்கு நாமும் சிறு பங்கு வகிக்கலாம்!